குரல்கள்
நாளை நாங்கடலுக்குப் போயி சம்பாதிச்சிட்டு வருவேன், நீ இண்ணைக்குக் கடன் வாங்கிக் காரியங்களைப் பாரு'ன்னு சொல்ல, ஒரு மாப்பிள இப்ப இல்ல.
-மேரிபுஷ்பம்.
***
கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட கடலோரப் பெண்கள் ஒருங்கிணைவதற்கான சூழலை ஏற்படுத்துவதுதான் இப்போதைய தேவை.
சுனாமியோ, ஒக்கியோ- பெண்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சுமையாக மாறுகிறது என்றால், பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு விலக்கப்பட்டிருக்கிறது.
-மாலதி மைத்ரி.
***
‘கடலும் கடற்கரையும் மீனவர்களின் பாரம்பரிய உரிமைச் சொத்து, கடலோரத்தில் சுதந்திரமாக வாழ்வது அவர்களது உரிமை’ என்பதான கருதுகோளை அரசுக்கு ஊடகங்கள் உணர்த்தியிருக்கவேண்டும்.
- அருள் எழிலன் (ஊடகர்).
***
கடற்கரைப் பெண்கள் வீட்டு வேலையைத் தாண்டிப் பொருளாதாரப் பங்களிப்பில் ஈடுபட வேண்டும். அது நடக்கவில்லை என்பது இந்தப் பேரிடர்ச் சூழலில் முக்கியமான சிக்கல்.
-முத்துச்செல்வி (செயல்பாட்டாளர்).
***
பிளஸ் டூவுல 950/1200 மார்க் வாங்கினேன். ‘நீ மேல படிச்சு எதுக்கு, ஒழுங்காக் குடும்பம் நடத்துற வழியப் பாரு’ன்னாரு என் வூட்டுக்காரர். நான் மேல படிச்சிருந்தா ஏதாச்சும் ஒரு வேலைக்குப் போயி எங்குழந்தைய வளக்கலாம்...
-தீபிகா (22, தேவனாம்பட்டினம்).
***
என் மவன் உசிரோடு இருக்கானோ இல்லியோ தெரியல... 18 வயசில போனது. இப்போ உயிரோட இருந்தா 44 வயசு... கெடய்க்க வேண்டிய நேரத்தில நீதி கெடய்க்கலியே!
-மங்கையர்க்கரசி (72, தங்கச்சிமடம்).
***
ஆம்பளப் புள்ள இருக்கோ இல்லியோ, ஒருத்தி விதவை ஆயிட்டாளா, ஒடனே அவளுக்கு விதவை பென்ஷன் குடுத்துரணும். அது அரசாங்கத்தோட கடமை. எங்கள மாதிரி பெண்களத் தெருவுல பிச்சையெடுக்கிற நெலமைக்கித் தள்ளக்கூடாது.
-ஆஷியா பீவி
.
***
எல்லோரையும் கவர்ந்திழுக்கும் கடல், வரலாற்றுக்கு முன்பே அதனுடன் ஒட்டி உறவாடி வாழ்ந்துவரும் கடலோடிகளுக்கு மட்டும் பேரச்சம் தருவதாகிக் கொண்டிருக்கின்றது.
-வறீதையா கான்ஸ்தந்தின்
***
ஒரு திறமையான அரசாங்கம் நாங்கள் பாதுகாப்பாகக் கடலுக்குள் போய் மீன்பிடிக்க வசதி செய்து தரவேண்டும். போகாதே, புயல் வரும் என்று சும்மா மிரட்டிக் கொண்டிருக்கக் கூடாது.
-பயஸ்.
***
ஒக்கிப் புயல் புலப்படா மக்களின் மீது கவிந்த புலப்படாப் பேரிடர்... பொதுச்சமூகம் பேரிடர்களைப் பெண்ணின் கண்களினூடாகப் பார்க்கத் தொடங்கவில்லை.
-வறீதையா கான்ஸ்தந்தின்.
***
ஒரு ஸ்மார்ட் ஆன மீன்பிடி விசைப்படகு உரிமையாளர் தனது மூலதனத்தையும் படகில் உடன் தொழில் செய்யும் சக மீனவர்களின் உயிரையும் தன்னுயிரையும் பாதுகாத்துக் கரை திரும்புவதற்கான ஏற்பாடுகளை யோசிக்க வேண்டும்.
- சிரில் அலெக்ஸ் (43, மென்பொருள் பொறியாளர்) .
***
கடலின் பக்கத்தில் உட்கார்ந்து, கடலைக் கவனித்துத் தொழிலுக்குப் புறப்பட்ட காலம் போய்விட்டது. கடலரிப்பை முன்னிட்டு அலைவாயில் அடுக்கப்பட்ட இராட்சதக் கற்கள் குழந்தைகளுக்கும் கடலுக்குமான உறவை அறுத்துவிட்டது.
-ரோனல்ட், 26, கன்னியாகுமரி).
***
புயல் எங்கே, எப்போது வீசும், அது எந்தத் திசையில் நகர்ந்துபோகும் என்று எச்சரிக்கை தந்தால்தான் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
-ஷாலோம்.
***
ஒரு உயிர்க்காப்பு மிதவை இருந்தால் நான்குபோ் (கடலில்) உயிர் மீந்து கிடக்கலாம்; ஒரு உயிர்க்காப்பு உடை அணிந்து கொண்டிருந்தால் சில நாட்கள் மிதந்து கிடக்கலாம்.
No comments:
Post a Comment