Tuesday, 30 March 2021

பாதையற்ற பெருவெளியில்…/வெ. ஜீவானந்தம்.


நூல் அறிமுகம்

பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் தனது ‘திணைவெளி: நிலம், சூழலியல், பண்பாடு’ நூலுக்கு அறிமுகவுரை கேட்டபோது வியப்பும் தயக்கமுமே உண்டானது. அவரது சில நூல்கள், இந்து நாளிதழில் வெளிவந்த ‘கடலம்மா பேசுறேன் கண்ணு’ தொடரை மட்டுமே படித்த எனக்கு, அவருடனான நேரடிப் பழக்கம் குறைவே. 2016இல் டாப்சிலிப்பில் நடைபெற்ற தமிழகப் பசுமைப் படைப்பாளிகள் சந்திப்பு; கோவை ‘ஓசை’ மாதக் கூட்டத்தில் சில மணிநேர உரையாடல், அவ்வளவே.

அது போலக் கடலுடனான எனது உறவும் மெரினா, கன்னியாகுமரி, இராமேஸ்வரம் கடலில் கால் நனைத்ததுடன் சரி. நகர்ப்புற வாசிகளுக்குக் கடல் காலடியிலிருந்தாலும், அபூர்வக் கற்பனைகளே.

முப்பதாண்டுகளுக்கு முன், தமிழகத்தின் சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகள், இதழியலாளர்களுடன் நீலகிரிக் காட்டினூடே மூன்று நாட்கள் கழித்த சோலை சந்திப்பு நினைவிலாடுகிறது. நமக்கு உயிர்க்காற்றும், நீரும் தரும் காட்டில் பயணித்த அந்த அனுபவம் பலரின் பசுமை எழுத்து, சிந்தனை, செயல்பாடுகளுக்கு முன்னோடியாக அமைந்தது. கடலுக்கும் அத்தகைய சந்திப்புகள் அவசியம். அப்போது கடலுக்கும் ஒரு நம்மாழ்வார் கிடைப்பார்.

வறீதையாவின் ‘திணைவெளி’ எனக்குக் கடலின் மர்ம உலகைத் திறந்து விட்டது. மனிதர் வாழ்விடமான, கடலுடுத்த பூமியின் மூன்றில் இரு பங்கு கடலே என்பதை உணராமலேயே வாழ்ந்து முடிக்கிறோம். டான் குவிக்சாட் சொல்வது போல, மனிதன் பாதம் பதிக்காத, பாதையற்ற பெருவெளியில் பயணிக்கும் உணர்வு தந்தது ‘திணைவெளி’.

நாகரிக மனிதர்களின் ‘நிர்வாணப்’ பேராசையால் வேட்டையாடப்பட்ட அந்தமானின் ஜராவா வனப் பழங்குடிகளின் வாழ்வுப் போராட்டத்தை, இருநூறு ஆண்டுகள் முன் மதத்தின் பெயரால் ஆஸ்திரேலிய அபாரிஜின்கள் மீது நடத்தப்பட்ட நாகரிகக் கொடுமைகளுக்கு மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருடினின் மன்னிப்பு மன்றாடலை, பேரிடர்களைக் காசு குவிக்கும் வாய்ப்பாக்கிக் கொண்ட என்ஜிஒக்களின் போலி முகத்தை, ஃபீனிக்சாய் எழும் குஜராத்திகளின் தன்னம்பிக்கையை, மணக்கும் நெத்திலிக் கருவாட்டுச் சம்பலை, மீனவரிடையே காலம் காலமாக நிலவிவருகிற கரைமடி எனும் சமத்துவத் தாய்மைப் பொருளாதாரத்தை, உயிரின் சூட்சுமமான உப்பின் மகிமையை, உப்பைச் சார்ந்த வாழ்வாதரத்தை விழுங்கும் அயோடின் சதியை, வளர்ச்சி மோகத்திலிருந்து விடுபடாத இடதுசாரிகளின் இயற்கை எதிர்ப்பு நிலைப்பாட்டை, பழங்குடிகளுக்காகவும், வளர்ச்சி அகதிகளுக்காகப் போராடும் பெண் போராளிகளை, மருந்துக்கு மரம் கொல்லா காடோடிகள், காட்டின் இசையை ரசிக்கும் முருட் பழங்குடி ஜோசின் மனதை, கடலிலிருந்து அந்நியப்பட்ட நாகரீக மனிதரின் வாழ்வை… வறீதையா நமக்குப் பாடம் சொல்கிறார்.

‘கற்றது கை நீரளவு, கல்லாதது கடலளவு’ என்பதை இந்நூல் எனக்கு உணர்த்தியது. தடமேதுமற்ற பெருங்கடலில் பயணிக்கும் முக்குவர்களின் கட்டுமரங்கள் மனிதனின் முதல் வாகனம். காடோடிகளும், கடலோடிகளும் ஒன்று போன்றவர்களே. அவர்களின் இருவேறு உலகங்கள், தனிமொழி, தனிப் பண்பாடு, தனிச் சொல்லாடல் கொண்டன. இதில் ஒரே மொழி ஒரே நாடு, ஒரே பண்பாடு என்பது எத்தகைய முட்டாள் கனவு! அவர்களின் உலகம் வேறு. அது நாம் அறியாதது. அறிய முடியாதது. 

காடு நமது மூதாதயரின் முதல் வீடு என்றால் கடல் நமது மூதாதயரின் முப்பாட்டன் வீடல்லவா? பிலியவின் காட்டின் இசைபோல, மூக்குவனின் கடலின் மொழியும் நாம் புரிந்து கொள்ள முடியாததே. காட்டின் வளமண் போர்வை போலக் கடலின் மேல் ஒரு அங்குலநீர் கடலைப் போர்த்திய தோல் என்பதை அறியவருகையில் வியப்பே மேலிடுகிறது. கடலில் கலக்கும் ஆற்று நீரை வீண் எனும் மூடர்கள் நாம்.

காட்டின் விலங்குகள், பறவைகள், நுண்ணுயிரிகள், தாவரங்கள் போலக் கடலின் மீன்கள், பவளப்பாறைகள், கடற்பாசிகள் என எத்தனை அறியாத பெயர்களை அடுக்கி வியக்கச் செய்கிறார். நெத்திலி மீனில் எத்தனை வகை? இன்னும் மனிதன் கண்டிராத, பெயரிடாத எத்தனை கோடி உயிரினங்களோ? அறிதொறும் அறிதொறும் அறியாமைதான்.

மனிதன் தனது பேராசையால் சோறுபோட்ட பூமித்தாயை மலடாக்கிக் கொண்டுள்ளான் எனினும் முன்னைக்கும் முன் அன்னையான கடலம்மா நமது பசி தீர்க்கும் அட்சய பாத்திரத்தைத் தன் மடியில் வைத்துள்ளாள். ஆனால் நாமோ பொன்முட்டையிடும் வாத்தை அறுக்கும் மூடர்களாக வாழ்கிறோம். உயிர்க் காற்றும் நீரும் தரும் காட்டை அழித்து, கழிவு நஞ்சால் நமது ஒரே வீடான பூமியை மூச்சுத் திணறச் செய்து கொண்டுள்ளோம். அலையாத்திக் காடுகளை அழித்து ரிசார்ட்டுகளைக் கட்டி, அரிய கடற்கரைக் காடுகளை அழித்து ராஜ்பவன்களையும், ஏற்றுமதி அறிவுச்சரக்குத் தொழிற்சாலையாக IIT கட்டி மகிழ்கிறோம். ஆனால் மனிதரின்றி வாழ்ந்த பூமி. மனித இனம் டைனாசர் போலப் பூண்டற்று அழிந்த பின்னும் வாழும் என்பதை மறந்து போகிறோம்.

பூமி சூடாகிறது. பருவநிலை மாறுகிறது. பனிமலைகள் கரைந்து உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது. என் உலகை உங்கள் பேராசையால் அழிக்க நினைக்கும் உங்களுக்கு எத்தனை ஆணவம் என உலகத் தலைவர்களை நோக்கி ஒற்றைச் சிறுமி கிரேட்டா துன்பர்க் கொற்றவையென உறுமுகிறாள். வளர்ச்சி மோகினியின் காதுகள் தங்கத்தால் அடைபட்டுக் கிடக்கின்றன. அலிபாபா குகையில் அளவற்ற செல்வக்குவியலின் நடுவே காசிம்களாக ட்ரம்ப்புகள். குகை திறந்து விடுதலை தரும் மந்திரத்தை ‘திணைவெளி’ உச்சரிக்கிறது.

அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் எச்சரிக்கை மணியடிக்கிறது. பசுமைப் புரட்சியாளர் மண்ணை மலடாக்கிய ‘மஹானுபாவா’ கடலுக்கும் இறுதி சாசனம் எழுதுகிறார். வளர்ச்சி ஒட்டகம் தலை நுழைக்க கடலின் குழந்தைகள் வாழ்விடமிழந்து, சொந்த மண்ணில் அகதிகளாக்கப் படுகின்றனர். பெரியவிளைகள் புற்றுநோய் வலையில் சிக்கித் தவிக்கின்றன.

வளர்ச்சி எனும் பெயரில் சதுப்பு நிலங்களை, புல்வெளிகளைப் பாழ்நிலங்கள் என முத்திரை குத்திய பாவிகள் கடற்கரை மணலை வழித்துக் கனிமம் சலித்துக் காசாக்குகின்றனர். பாறைகளை அடுக்கி அம்பானியின் சரக்குப் பெட்டத்துறைமுகம் ஆக்குகின்றனர். கூடங்குளத்தில், கல்பாக்கத்தில் அணுவுலையின்  கொதிநீரில் மீன் சினை முட்டைகளை அவிக்கின்றனர். அவிழ்த்துவிடும் எண்ணெய்க் கழிவில் நெகிழி முகமூடிக்குள் சிக்கியது போல கடலன்னையை மூச்சுத்திணறிச் சாகடிக்கின்றனர்.

மூன்று மைல் தீவு, செர்னோபில், ஃபுகுஷிமா, சுனாமிகள் எதுவும் அவர்களின் காதுகளை எட்டவில்லை. மூன்று விழுக்காடு மின்சாரம் எனும் போர்வையில் அணுகுண்டு உருட்டும் சகுனிகள் அவர்கள். ஆயுதங்களையும், டாலர்களையும் கொஞ்சம் இவர்களுக்கு, இறாலை மஞ்சள் கிழங்காக, திமிங்கலங்களை செல்லப் பிள்ளைகளாக, சீற்றம் கொண்ட சுறாவை மாட்சிமை பொருந்திய கனவானாகக் காணும் எளிய கடலோடிகளின் மனம் புரிவதில்லை.

இடிந்தகரை தேவாலய நிழலில் அந்த வாழ்விழந்த மீனவப் பெண்கள் தலைவிரி கோலமாய், திரெளபதைகளாய் நிற்கின்றனர். தருமத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லுமெனும் நம்பிக்கை இன்னும் மீதமிருக்கிறது. எந்த நம்பிக்கையின் ஊற்றுக் கண்களாக வறீதையா நமக்கு நக்கீரன், தியோடர் பாஸ்கரன், ஜாகிர் ராசா, வெங்கடேசன், குணசேகரன், ராமகிருஷ்ணன், பாமயன், கோபாலகிருஷ்ணன், கி.ரா., தோப்பில் போன்றவர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறார். இளம் தமிழர் வாசித்து மனதில் கொள்ள வேண்டிய படைப்பாளர்கள் இவர்கள்.

வளர்ச்சி மோக இருளில் பயணிக்கும் நமக்கு நம்பிக்கை நட்சத்திரமாக வழிகாட்டுகிறது ‘திணைவெளி’.

அன்புடன்,

வெ. ஜீவானந்தம்.


கடலின் தரிசனம்

 


அறிமுகவுரை


‘கடல் பழகுதல்’ என்கிறார் வறீதையா.

அது என்ன, அத்தனை எளிதாமோ?

என்றோ எப்போதோ, எத்தனையோ யுகங்களுக்கு முன்னால் பிறந்தது இந்தக் கடல். இதன் தொடக்கமும் தெரியவில்லை, முடிவும் தெரியவில்ல.

நம்மைக் கண்டதும் அது வேகவேகமாக ஓடி வருகிறது. ஏதோ ஒரு இரகசியத்தை அது சொல்லத் துடிக்கிறது நம்மேல் தாவித்தாவி விழுகிறது. எனினும் அதை நெருங்கிச் செல்ல நமக்கு பயமாகவே இருக்கிறது.

அது என்ன, நீலநிற இராட்சச மிருகமா, இல்லை பச்சைநிற விஷமா? இல்லை, இரண்டுமல்ல. அதுவே நம் தெய்வம், அதுவே அமுதம்கூட. அது

‘மழை கொளக் குறையாது

புனல் புக நிறையாது’

(பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து, நான்காம் பாடல்).

***

‘கடலின் குழந்தை’ என்று வறீதையாவைச் சொல்கிறார்கள். அவர் கடலின் காதலனும் காவலனும் கூட; கடலின் தரிசனமும் அவரே.

நானும் கடலோரமாகத்தான் பிறந்தேன். ஆனால் வறீதையாவைப் போல ஒரு கடலோடியின் மகனாய்ப் பிறக்கவில்லை. அதனால்தான் அவர் கண்ட கடல் ஒன்றாகவும் நான் கண்ட கடல் மற்றொன்றாகவும் இருக்கிறது. ‘எந்தவொரு மனிதனும் ‘ஒருமுறை கால் நனைத்த நதியில் மறுமுறை கால் பதித்திட முடியாது’ என்பார் கிரேக்க ஞானி ஹெராக்ளிட்டஸ். நதிபோல்தான் கடலும், ஆனால் ஆகப்பெரிய நதி. ‘கடல் ஏதோவொரு வகையில் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கிறது’ (கட்டுரை: கடல் பழகுதல்), இருப்பினும் அது அங்கேதான் இருக்கிறது. ‘நீர் சலம்’ (ஸத்- அதற்கு எந்தக் காலத்திலும் அழிவில்லை); ‘நிலம் அசலம் (அசத்- எல்லாக் காலத்திலும் அது இருப்பதில்லை). கடல் நித்தியம், நிர்மலம், நிரஞ்சனம்.

தமிழ் நாட்டுக் கடலோர மீனவர்கள் எண்ணிக்கையில் வெறும் பத்து இலட்சம்தான் (கட்டுரை: விடுவிக்கும் வரலாறு). அதிலும் இம்மீனவ மக்கள் 1076 கி.மீ. கடற்கரையில், 600 கிராமங்களில் பல சாதிகளாகவும் மதங்களாகவும் சிதறிக் கிடக்கிறார்கள். ‘இவர்கள் பொது நீரோட்டத்தில் பங்கு பெறுவதற்கான அரசியல் எதுவாக இருக்கவேண்டும்?’ வறீதையா அறைகூவல் விடுக்கிறார்- ‘ஆட்சித் தளத்திலும் அரசு இயந்திரத்திலும் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்’.

மாலை நேரத்தில் ‘சும்மா காத்து வாங்கிப் போகவந்தா’ இதையெல்லாமா நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்க முடியும்? ‘கடல் பற்றிய கவலை நமக்கெதற்கு?’

ஆனால் கடலை மனிதர்கள் அப்படிக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. வறீதையாவின் வார்த்தைகளில்-

‘கடலின் இருத்தல் என்பது முடிவற்ற மறுபிறப்புகள், ஓய்வற்ற பயணங்கள். மேகத் திரளாகி, துருவப் பனிப்பாறைகளாகி, பெருமழையாகி, நீர்வீழ்ச்சிகளாகி, கிடக்கும், நடக்கும், ஓடும் நீராகி மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடைவதான  பயணம்; தியானம், நடனம், பிரளயம் எல்லாமுமான முடிவற்ற பயணம்…’ (கட்டுரை: கடல் பழகுதல்).

கடல் மீது வறீதையா கொண்டிருக்கும் காதல் ‘ஞாலத்தின் மாணப் பெரிது’ என்பேன். ஆண்டுதோறும் 80 இலட்சம் டன் நெகிழி கடலில் கலந்துகொண்டிருப்பது குறித்து அவர் மனம் பதைக்கிறார். இந்தப் போக்கு நீடித்தால் கி.பி.2050இல் கடலில் மீன்களைவிட நெகிழிகளே அதிகமாய்க் கிடைக்கும்’ என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.

***

தமிழகக் கடல் நீண்டதொரு வரலாற்றைக் கொண்டது. துறைமுக நகரங்களிலிருந்து கடல் வாணிபம் கொழித்திருந்ததைச் சங்ககால இலக்கியங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. பண்டைத் தமிழகத்தில் மிகச் சிறப்புற்று விளங்கிய பூம்புகார், மகாபலிபுரம் மற்றும் ‘பொதுகே’ (அரிக்கமேடு) போன்ற துறைமுக நகரங்கள் எல்லாம் இப்போது எங்கே போய் மறைந்தன? அவையெல்லாம் இந்தப் பெருங்கடலுக்குள் இருந்த இடம் தெரியாமல் மூழ்கிப் போயின. கடல் அவைகளை விழுங்கித் தீர்த்திருந்தன. கடல் விஞ்ஞான மேதையான வறீதையா உரத்த குரலில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கிறார்:

‘அடுத்த பத்தாண்டு காலம் நாம் தீவிரமாகச் செயல்படவில்லையெனில், புவி வெப்பநிலை இரண்டு டிகிரி உயர்ந்துவிடும்; இதன் நேரடி விளைவாக கடலொட்டிய நிலப்பரப்பைக் கடல் விழுங்கிவிடும் அபாயம் உள்ளது.’

இதனை மனதில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்படவேண்டியது மிக அவசரமானதும் அவசியமானதும் கூட.

***

‘கடல் மர்மங்களின் முடிச்சு. கடலுக்குள் நிகழ்வது எதுவும் நம் பார்வைக்கு வருவதில்லை’ என்கிறார் வறீதையா (கட்டுரை: ஒக்கிப் பேரிடர்- சில குறிப்புகள்). 2017 நவம்பர் 30ஆம் நாள் ஓங்கியடித்த ஒக்கிப் புயல் மீனவச் சமூகத்தை நிலைகுலைய வைத்தது. புயல் குறித்த முன்னெச்சரிக்கை கிடைக்காத காரணத்தால் பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் ‘பொழுதோடே’ கடலுக்குச் சென்றுவிட்டனர். கட்டுமரம், சிறு படகுகளில் மீன்பிடி தொழிலுக்குப் பாதுகாப்பு உபகரணங்களுடன் மீனவர்கள் செல்வதில்லை. புயல் கடலோர மக்களைச் சூறையாடியது. மீனவக் கிராமங்களில் அழுகையும் ஒப்பாரியும் கடல் அலைகளுக்கு மேலாக வீங்கி ஒலித்தது.

என்ன ஒரு கொடுமை! அவர்களது ஓலம் கேட்க அங்கே ஒருவருமே இல்லை! நாதியற்றுப் போனவர்களா இந்த மீனவ மக்கள்? ‘கடலுக்குப் போன மீனவர்கள் என்ன ஆனார்கள் என்றறிய அரசுகள் சிறிதளவேனும் அக்கறை காட்டவில்லை. நிர்க்கதியாக அபயக்குரல் எழுப்பிய மீனவர்களை நமது கடலோர காவல் படையினர் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். ‘சமூக, பொருளாதார அளவில் ஆற்றல் படுத்தப்பட்ட சமூகத்தினால் மட்டுமே பேரிடர்களை எதிர்கொள்ள முடியும்’ என வறீதையா வலியுறுத்துவதுவது இதனால்தானோ?

‘ஒரு பொழுதுபோக்குத் தலம் என்பதற்கு அப்பால் கடற்கரையின் சூழலியல், பொருளியல், பண்பாட்டுப் பெறுமதிகள் ஏராளம்’ என்பதைத் தரவுகளோடு வறீதையா பதிவு செய்கிறார்.

மீனவன் கடலோடுதான் பிறக்கிறான். கடல் அவனுக்குத் தாய்மடி. தினமும் கடலில் மிதக்கிறான், கண்ணீரில் கரைகிறான். கடலின் சலனங்களுக்கு அவன் அஞ்சுவதில்லை. அலையையும் புயலையும் எதிர்த்துப் போராடுகிற அவனது துயரம் யாருக்கும் புரிவதில்லை. ‘நிச்சயமில்லா வாழ்க்கை’யே அவனுடையதாக இருக்கிறது.

‘இருளோடு வெளியேறி வலைவீசினாலும்

இயலாது தரவென்று கடல் கூறலாகும்’

என்றொரு புதுக்கவிதை சொல்கிறது.

கடல் கொடுத்தாலும் கொடுக்காமல் போனாலும் அவன் கடலைக் கைவிட்டு வேறெங்கும் போய்விடமாட்டான். அவனது கடல் எல்லைக்குள் அவனே மகா பெரிய சக்கரவர்த்தி. கடலும் கடற்கரையும் அவனுக்கே சொந்தம். நேற்றுவரை இதுதான் உண்மையாக இருந்தது. இன்று, கடலோடு இயைந்து வாழ்ந்து வந்த இந்தப் பழங்குடி மக்களை அங்கிருந்து அரசு விரட்டியடிக்கப் பார்க்கிறது. அதற்காக எத்தனை கடல் மேலாண்மை அறிக்கைகள், மிரட்டல்கள்? கடலை மீனவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டால், அரசுதானே அவனது வயிற்றுப் பசிக்குச் சோறு போடவேண்டும்?

‘எனது பாரம்பரிய உடை கோவணமே’ (கட்டுரை: நெத்திலி மீனும் கட்டுச் சோறும்) என்று வறீதையா சொல்கிறார். அதில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்திருக்கின்றன. மீனவர்களின் அந்தக் கோவணத்தையும் உருவி வானளாவிய தேவாலயங்களை எழுப்பிக் கொண்டிருந்தது (இருக்கிறது) கத்தோலிக்க சமயம்.

‘கடலோடிகள் கல்வி அறிவற்ற மூடர்கள், அகங்காரம் கொண்டலையும் முரடர்கள்’ என்று சிறு வயது முதலே என் பெற்றோராலும் சக ‘மெனக்கெடர்களாலும்’ (கடல்தொழில் சாராத பரவர்கள்) எனக்குக் கற்பிக்கப்பட்டு வந்தது என்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் இன்று வரையிலும் இம்மீனவர்கள் கல்வியிலும் பொருளாதார நிலையிலும் வெகுவாய்ப் பின்தங்கிப் போனதற்கு அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் கத்தோலிக்க சமயமே காரணம். ‘சமய நிறுவனம் ஒரு கொள்ளைக் கும்பல்’ என்பதை நான் அறிந்து கொண்டது மீசை அரும்பிய காலத்தில்தான். ‘கடற்கரைச் சமூகத்தின் ஆகப்பெரிய சேமிப்பும் முதலீடும் கல்வி சார்ந்ததாய் இருக்கவேண்டும்’ (கட்டுரை: தூண்டல்) என்னும் வறீதையாவின் குறிப்பு இந்தப் பின்னணியில் மிகமிக முக்கியமானது.

நீண்ட நெடுங்காலமாக மீனவ மக்களின் கல்விக் கண்களைத் திறந்துவிட முன்வராத கிறித்தவ சமயம் படைப்பிலக்கியம் குறித்தான எத்தகைய சிந்தனைகளை அவர்களிடம் வளர்த்தெடுக்க முன்வந்திருக்கும்? நெய்தல் இலக்கியம் முளைவிட வழியின்றிக் கடல் சமூகம் கருகிப்போனது குறித்து  வறீதையா மனம் வெதும்புகிறார் (கட்டுரை: கடலை எழுதுதல்).

என்னைப் போன்ற மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியில் ‘இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள முயன்றபோது கத்தோலிக்கப் பாதிரியார்கள் அதை முளையிலேயே கிள்ளிவிடத் தயாராக இருந்தார்கள். பிஷப் ரோச் உயர்நிலைப் பள்ளியில் (இடிந்தகரை) படித்த காலத்தில் (1959-60) நான் ‘கண்ணன்’ என்ற சிறுவர் மாத இதழில் விலங்குகள் பேசுவது போன்ற ஒரு கற்பனைப் படைப்பை எழுதிய ‘மன்னிக்க முடியாத குற்றத்திற்காக’ப் பாதிரியார்களால் மரண அவஸ்தைக்கு உள்ளாக்கப்பட்டேன். அதை எதிர்த்து நிற்க அப்போது எனக்குத் தெரியவில்லை, துணிவும் இல்லை. நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். என் கண்களில் நீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. அந்தப் பள்ளியின் தாளாளராக இருந்த- கிறித்துவின் அன்பையும் கருணையையும் வளர்த்திட வந்த- முரட்டுத் தோற்றம் கொண்ட ஒரு சாமியார் என்னை முழங்காலில் நிறுத்திக் ‘கசை’ கொண்டு அடித்துச் சிதைத்து இரத்தம் சொட்டச் சொட்ட என்னைப் பள்ளியிலிருந்து வெளியேற்றினார். அந்தப் பள்ளியிலிருந்த கத்தோலிக்கக் கிறித்தவ ஆசிரியர்களில் ஒருவர் முதலாய் எனக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முன்வரவில்லை. எனக்காகக் குரல் கொடுக்க முன்வந்த ஒரே ஓர் ஆசிரியர் புலவர் இரா.நாராயணசாமி (பொன்பரப்பி) என்ற தமிழாசிரியர் மட்டுமே. ஆனால் மறு வருடமே அவர் அந்தப் பள்ளியிலிருந்து நீக்கப் பட்டிருந்தார். எதற்காக இதனை இத்தனை விரிவாக இங்கே நான் சொல்ல வேண்டும் என்று உங்களில் சிலர் கேட்கக் கூடும்.

தமிழிலக்கியப் பரப்பில், கடந்த 45 ஆண்டுகால இடைவெளியில் வெளிவந்த ’நெய்தல் புதினங்கள் பத்துப் பன்னிரண்டு இருக்கலாம்’ (பானுமதி பாஸ்கோ எழுதிய ‘நீலநிறப் பறவைகள்’ உட்பட) என்று தமது வருத்தத்தைப் பதிவு செய்கிறார் வறீதையா (கட்டுரை: கடல் பழங்குடியின் குரல்).

நான் பட்ட சித்திரவதைகளையெல்லாம் பார்த்த எந்த ஒரு மாணவன், தனது இலக்கிய உணர்வை வெளிப்படுத்த முன்வருவான்? இதே இலட்சணத்தில்தான் கிறித்தவக் கல்விக் கூடங்கள் அப்போது இயங்கிக் கொண்டி ருந்தன. இப்போதும் கூட மிகப்பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை.

***

வறீதையா கான்ஸ்தந்தின் இதுவரை எழுதியுள்ள  40க்கு மேலான நூல்களில் பலவற்றை நான் படித்தறிந்து வியப்பில் ஆழ்ந்து போனதுண்டு. அவருக்கென்று வாய்க்கப்பெற்ற மிகக் கம்பீரமானதும் அவ்வளவு எளிதில் வேறு எவரும் கைப்பற்ற முடியாததுமான அந்த அற்புதமான நடை யழகில் நான் இலயித்துப் போனதும் உண்டு.

காலமெல்லாம் கடல் சார்ந்தும், கடலோர மக்கள் சார்ந்தும் சிந்தித்துக் கொண்டும் எழுதிக் கொண்டுமான மோனத் தவத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த மேலான மனிதரை நான் என்றும் போற்றுவேன். என்மீது கொண்டிருக்கும் பெருமதிப்பின் பொருட்டு இந்நூலுக்கு என்னிடம் அறிமுகவுரை கேட்டிருக்கிறார் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இது இப்போதும் கூட முடிவடையாத ஓர் அறிமுகவுரையே! இன்னமும் சொல்வதற்கு ஏராளமான சங்கதிகள் என் மனதிற்குள் புதைந்து கிடக் கின்றன.

இப்போது நான் அந்த முதல் கேள்விக்கு வருகிறேன்.

‘கடல் பழகுதல்’- அது என்ன அத்தனை எளிதாமோ?

ஆமாம். அது எளிதாகும். மிகமிக எளிதாகும். அவர் படைத்தளித்திருக்கிற ‘கடல் பழகுதல்’ போன்ற நூல்களைப் படித்து உணர்ந்து கொண்டால் போதும்!

 

பானுமதி பாஸ்கோ

கோயம்பத்தூர்.

 

கோடிமுனை என்னும் போதிமரம்


 அறிமுகம்

முனைவர் வறீதையா கான்ஸ்தந்தினின் ‘கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை’ நூலின் கணினிப் பிரதியை ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். தற்போது அன்பியங்கள் என்று சொல்லப்படும் அடித்தளக் கிறிஸ்தவ சமூகங்கள் கோடிமுனையில் 1977 முதல் 1990 வரை எப்படிச் செயல்பட்டன என்பதையும், அதன்பின் நடந்தவற்றையும் அவர் அற்புதமாகப் பதிவு செய்துள்ளார். அதற்காகக் கள ஆய்வு, கலந்துரையாடல், சரித்திர ஆவணங்களைச் சேகரித்தல் போன்ற யுக்திகளை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். சில உரையாடல்களையும் ஆவணங்களையும் அப்படியே இணைத்திருப்பது நூலில் தனிச் சிறப்பு.

 

பிரதியை வாசித்தபோது 1983-84ல் நான் கோடிமுனையில் பணியாற்றிய ஞாபகம் என்னை நிறைத்தது. 36 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த அனுபவங்கள் இன்றும் என் நினைவில் இளமையாக, பசுமையாக இருக்கின்றன. எனது முதல் பங்கு கோடிமுனை. அனைத்துக் தளங்களிலும் புதிய அனுபவங்கள். எனக்கு முன் அங்கிருந்த பணியாளர் எட்வினின் கருத்துக்களை உள்வாங்கிச் செயல்பட்டேன். அப்பட்டமாகச் சொல்லவேண்டுமானால் எனக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுத்த போதிமரம் கோடிமுனை.

 

ஆயர் உட்பட கோட்டார் மறைமாவட்டப் பணியாளர்கள் அனைவருமே எனக்குப் புதியவர்கள். கோடிமுனை என்னும் பெயரைக்கூடக் கேட்டதில்லை. பங்கு அனுபவம் அற்றவன். ‘பல்மேரா’ என்ற இயேசு சபைக் குழுவினரோடு தேவகோட்டைப் பகுதியில் அடித்தள மக்களோடு இணைந்து பணியாற்றியதே எனக்குத் துணையாயிருந்தது. திருநிலைப்படுத்தப்பட்டவுடன் கோடிமுனை சென்றேன். எல்லாம் தெரியும் என்ற மனநிலை அறவே இல்லை. அடித்தட்டு மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும், அவர்களது எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் திறந்த பாத்திரமாகச் சென்றேன். அந்தப் பங்கிலும் அடித்தட்டு மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும், கடைக்கோடி மனிதனின் குரலும் கேட்கப்பட வேண்டும் என்ற எட்வினின் செயல்பாடுகள் எனக்கு முழு திருப்தி அளித்தன. எனவே அவரது வழித்தடத்தில் நடப்பது எனக்கு எளிதாயிற்று. அரசியல் ஈடுபாட்டிலிருந்து கிறிஸ்தவ நடைமுறைக்கு எனது பணிகளை மடைமாற்றம் செய்துகொண்டேன். முழு வீச்சில் செயல்பட்டேன். மக்களுக்கான பணி என்பதைவிட மக்களோடு இணைந்த பணி எனலாம். அதிகார மையத்திலிருந்து விலகியிருப்பது மக்களோடு நெருங்குவதற்கு மிகவும் உதவும் என்பதை அனுபவத்தின் வாயிலாக அறிந்துகொண்டேன். 

 

எட்வினின் எளிய வாழ்வு எனக்கு மிகவும் பிடித்தது. அடித்தளக் கிறிஸ்தவக் குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொள்வது, அவர்களது செபத்தோடு இணைந்த சமூக விவாதங்களில் பங்கேற்பது, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது, அடித்தளக் கிறிஸ்தவக் குழுக்கள் இணைந்த முழு வளர்ச்சி சங்கம் செயல்படத் துணைபுரிவது, அதன் நிதிக்குழு, அமைதிக் குழு (நீதிமன்றம்), வழிபாட்டுக் குழு எனப் பல குழுக்கள் செயல்படப் பயிற்சி அளிப்பது, வழிபாட்டை அர்த்தமுள்ள விதத்தில் நடத்துவது, பக்த சபைகளுக்குப் புத்துயிர் அளிப்பது, அடித்தளக் கிறிஸ்தவச் சமூகங்கள் மற்ற கடற்கரைக் கிராமங்களிலும் உருவாக அங்கும் பயிற்சி அளிப்பது என்ற எட்வினின் தடத்தில் பயணித்தேன். ஏதாவது திட்டத்தை முழு வளர்ச்சி சங்கம் ஏற்கவில்லை என்றால் அதை அவர் தோல்வியாகப் பார்க்கவில்லை. மாறாக, இன்னும் மக்களுக்குப் போதிய பயிற்சி கிடைக்கவில்லை, அதிகம் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதே அவரது மனநிலை. அடுத்தவர்களைக் குறை சொல்வதில்லை.

 

மறைமாவட்டப் பணியாளர்களில் சிலர் எட்வினின் செயல்பாடுகளை ஏற்காததைக் கண்டேன். அவர்கள் கோடிமுனையைக் கேடிமுனை என்றே அழைத்தனர். அங்கே பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டனர். அங்கு பிரச்சினைகள் இல்லை, பிரச்சினைகள் எழுந்தால் மக்களே தீர்த்துக்கொள்வர் என்றேன். அவர்கள் நம்பவில்லை.

 

சில கடற்கரைக் கிராமங்களில் பங்குப் பணியாளர் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்தான் தலைவர். மாவட்ட ஆட்சியர், காவலர்கள் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் பங்குப் பணியாளர்களின் தலைமையை அங்கீகரித்தனர். பங்குப் பணியாளர்களோ கிராமத்தில் இருக்கும் ஊச்சாளிகள், பணக்காரர்கள், பரம்பரைத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் பிரதிநிதியாகத்தான் பங்கை நடத்தினர். கடைக்கோடி மனிதனின் குரல் அங்கு எடுபடவில்லை. நிதி முழுவதையும் பங்குப் பணியாளரே கையாண்டார். இந்த இரண்டு போதைகளால் கட்டுண்டவர்களாகப் பல பங்குப் பணியாளர்கள் இருந்தனர். இந்த இரண்டும் அடித்தளச் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டு அமைப்பான முழு வளர்ச்சி சங்கம் வழியாக கடைக்கோடி மனிதர்களிடம் கொடுக்கப்பட்டன. அதோடு பெண்களும் முக்கியத்துவம் பெற்றனர். அடித்தளக் கிறிஸ்தவ சமூகங்களின் பிரதிநிதிகளாகப் பெண்களும் முழு வளர்ச்சி சங்கத்தில் பங்கேற்றனர். பொறுப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த மாற்றத்தைச் சில பங்குப் பணியாளர்களால் சீரணிக்க முடியவில்லை.

 

முழு வளர்ச்சி சங்கம் எந்த அளவு சிறப்பாக செயல்பட்டது என்பது புத்தகத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது (அத்தியாயம் 1, 3). ஓர் உதாரணத்தைச் சுட்டிக்காட்டலாம். இறந்தவர்களைப் புதைப்பதற்குக் கல்லறையில் இடமில்லை என்ற பிரச்சினை கோடிமுனையில் எழுந்தது. கல்லறையில் சமத்துவம் வேண்டும் என்று முடிவெடுத்த முழு வளர்ச்சி சங்கம், கட்டியிருந்த பெரிய கல்லறைகளை அகற்றிச் சமத்துவத்தை நிலைநாட்டியது. அது மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடித்தளக் கிறிஸ்தவச் சமூகங்களை மறுத்தவர்களும், பெண்களின் முக்கியத்துவத்தை எதிர்த்தவர்களும் இணைந்து பணக்காரர்களை, பரம்பரைத் தலைவர்களை எதிர்கொண்டனர். இந்நிகழ்வு அடித்தளக் கிறிஸ்தவ சமூகங்களின் வழியாக சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதற்கு ஓர் உதாரணம். கோடிமுனையைப் பின்பற்றிக் கடற்கரைக் கிராமங்கள் அனைத்திலும் கல்லறைகளில் இந்த மாற்றத்தைக் காணமுடிகிறது. புதைக்க இடமில்லை என்ற பிரச்சினை கடற்கரைக் கிராமங்களில் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டது.

 

மீனவர்கள் பற்றிய எட்வினின் பார்வை மிக முக்கியமானது (அத்தியாயம் 2). விளிம்புச் சமூகமாக இவர்களை எட்வின் பார்க்கவில்லை. இம்மக்களிடம் நாம் அனைவரும் சமம் என்ற பார்வை இருப்பதால் அனைவரும் மனிதர்கள் என்ற உணர்வே இருக்கிறது என்கிறார். இக்கண்ணோட்டத்தில் மீனவர்களைப் பார்க்க இப்புத்தகம் நம்மை அழைக்கிறது. கோடிமுனையில் பணியாற்றியபோது சில பெற்றோர் என்னிடம் தங்களது மகள்களுக்கு ஏற்ற துணை மற்ற சாதியில் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினர். மனிதர் அனைவரும் சமம் என்ற அவர்களது எண்ணத்தின் வெளிப்பாடாக நான் இதைக் கண்டேன். நானே சில சாதி மறுப்புத் திருமணங்களையும் நடத்தினேன். வேறு எந்தக் கிறிஸ்தவச் சமூகத்திலும் காணப்படாத மிக உயர்ந்த மனித மாண்பு இது.

 

அதேவேளையில் அடித்தளக் கிறிஸ்தவ சமூகங்கள் அனைத்து மக்களையும் பாதிக்கும் சில பிரச்சினைகளைக் கண்டுகொள்ளவில்லை. உதாரணத்திற்கு மாந்திரீகம், வரதட்சணை போன்றவைகளைச் சொல்லலாம். நான் கோடிமுனையில் பணியாற்றியபோது புதைக்கப்பட்ட செய்வினைத் தகட்டை எடுத்த அனுபவம் எனக்குண்டு. இந்த நிலை தற்போது மாறியிருக்கலாம்.

 

ஆனால் மதத்தை நிர்வாகத்தோடு இணைத்துப் பார்ப்பது கடற்கரையில் இயல்பானதாக இருக்கிறது. அதைப்பற்றி ஆழ்ந்து இந்த அமைப்பு சிந்திக்கவில்லை. இதனால் பங்குப் பணியாளர்களது நிர்வாகத்தை முழு வளர்ச்சிச் சங்கம் செய்கிறது என்ற மடைமாற்றம்தான் நடைபெற்றதே தவிர நிர்வாகம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்ட ஓர் அரசியல் செயல்பாடு என்ற கண்ணோட்டம் இல்லை.

 

சிறப்பாக நடைபெற்ற முழு வளர்ச்சிச் சங்கமும், அடித்தளக் கிறிஸ்தவ சமூகங்களும் கலைக்கப்பட்டன என்று 1990ல் கோடிமுனையில் பங்கு சாமியார் அறிவித்ததும் அதை மக்கள் ஏற்றனர். பிரச்சினையை உருவாக்கவில்லை. இதனை எதிர்த்துப் போராடவில்லை. திருஅவையின் அதிகாரத்தைக் கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு எழவில்லை. பலவற்றைப் பற்றி கேள்வி எழுப்பிய அடித்தளக் கிறிஸ்தவச் சமூகங்களிடம் திருஅவையின் அதிகாரத்தைக் கேள்வி கேட்கவேண்டும் என்ற எண்ணமே எழவில்லை. எழவில்லை என்று சொல்வதைவிட கேள்வி கேட்கலாம் என்ற எண்ணத்தைப் பணியாளர்கள் மக்களிடம் வளர்க்கவில்லை. வளர்க்க விரும்பவில்லை. அதிகாரமும் பணப் பொறும்பும் தங்களிடமே என்பதும், பெண்கள் திருஅவையில் இரண்டாம் தரமாக இருக்க வேண்டும் என்பதும்தான் பெரும்பாலான பணியாளர்களது எண்ணம் என்று சொல்லலாம். கேள்வி கேட்கும் உரிமை பொதுநிலையினரிடம் எழவேண்டும் என்ற கருத்தைப் புத்தகம் வெளிப்படுத்துவதாக உணர்கிறேன் (அத்தியாயம் 4). இது ஆரோக்கியமான கண்ணோட்டம்.

 

‘அதிகாரம் கீழிருந்து மேல்நோக்கி’ என்ற கருத்தினை (அடித்தளக் கிறிஸ்தவ சமூகங்கள் மூலம்) கடலோர மீனவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற எல்லைக்குள் எட்வின் தனது பணியைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அடித்தள மக்கள் சாதி, சமயம், கட்சி, பொருளாதாரத்தைக் கடந்தும் செயல்பட வேண்டும் என்று எண்ணினார். அதனால் அக்கம்பக்கத்துப் பாராளுமன்றம், சிறார் பாராளுமன்றம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளார். இவையும் உலக மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஐ.நா. சபையில் இக்கருத்து விவாதிக்கப்படுகிறது (அத்தியாயம் 1, 2). ஆனால் இங்கு இல்லை. ‘இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.’ (லூக். 4:24) என்ற நிலை இன்றும் தொடர்கிறது.

 

இருப்பினும் அடித்தளக் கிறிஸ்தவச் சமூகங்களின் தாக்கம் கோடிமுனையில் நீடிக்கவே செய்கிறது. சமூகங்கள் கலைக்கப்பட்டாலும் அதன் நல்ல அம்சங்களை மக்கள் தொடரவே செய்கின்றனர். 1977ல் 300 வழக்குகள் என்ற நிலையில் அதன் பிறகு அதன் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. 85க்குப் பிறகும் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் வழக்குகள் இருந்தனவே தவிர முந்தைய நிலைக்குச் செல்லவில்லை. பெண்களும், அடித்தளத்தில் இருப்பவர்களும் பங்குப்பேரவையில் இடம் பெறுகின்றனர்.

 

சுனாமி சமயத்தில் இரட்டைத் தலைமை பற்றிய விவாதம் எழுந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகிறார் (அத்தியாயம் 4). அந்த விவாதம் தொடர்ந்ததா என்று தெரியவில்லை. மதம், கட்சி, சாதிக்கு அப்பால் ஊரில் ஓர் அமைப்பு இருக்க வேண்டும். அதைப் பற்றிய விவாதம் தொடரவேண்டும். கோட்டார் மறைமாவட்டக் கடற்கரைக் கிராமங்களில் கத்தோலிக்கர்களாக ஒரே சமூகத்தினரே இருக்கின்றனர். மற்ற சமூகத்தினரோடு, மதத்தினரோடு வாழ்ந்த அனுபவங்கள் அவர்களுக்கு இல்லை. இதனால்தான் இங்கு பணியாளர்கள் தலைமை ஏற்கின்றனர். பணியாளர்கள் மதக் கடமைகளை மட்டும் நிறைவேற்றட்டும், மற்றதை அவர்களைக் கடந்த ஓர் அமைப்பு செயல்படுத்தலாம், மீனவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு இது அடித்தளமாக அமையும் என்கின்றனர் சிலர். அப்படியானால் பணியாளர்கள் வெறும் பூசாரிகளா என்கின்றனர் வேறு சிலர். இதைப் பற்றிய விவாதம் தொடர இப்புத்தகம் அழைக்கிறது.

 

எனது ஓர் அனுபவத்தைப் பகிர்வது பலனளிக்கலாம். கோடிமுனையிலிருந்து மாற்றலாகி சென்னை மயிலாப்பூர் உயர் மறைமாவட்டத்தில் ஓங்கூர் பங்கின் பொறுப்பை ஏற்றேன் (தற்போது இப்பங்கு செங்கல்பட்டு மறைமாவட்டம்). கோடிமுனை போன்று இங்கு அடித்தளச் சமூகங்களையும் பொதுநிலையினர் தலைமை வகிக்கும் பங்குப் பேரவையையும், அதில் நிதிக்குழு, நீதிக்குழு, கல்விக்குழு, கலைக்குழு, வழிபாட்டுக்குழு என பல குழுக்களையும் உருவாக்கினேன். இப்பகுதியில் தலித் கிறிஸ்தவர்கள் அதிகம். இவர்கள் அரசாலும் குறிப்பாகத் திருச்சபையாலும் புறக்கணிக்கப்பட்டனர். எனவே இவர்களை உயர் மறைமாவட்ட அளவில் ஒருங்கிணைத்துத் தங்களது உரிமைகளுக்காகப் போராடும் ஓர் இயக்கமாக உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். ஓங்கூர் பங்கில் தலித் கிறிஸ்தவ இயக்கம் உதித்தது. இயக்கத்தினரையும் பங்குப் பேரவையில் ஒரு குழுவாக உருவாக்க எண்ணினேன்.

 

ஆனால் பேரவை உறுப்பினர்களில் ஒருவர் இதை வன்மையாக எதிர்த்தார். பங்குப் பேரவையை அடுத்து வரும் பணியாளர் கலைத்துவிடலாம். அல்லது மறைமாவட்டமே கலைத்து விடலாம். அப்போது தலித் கிறிஸ்தவ இயக்கமும் இல்லாமல் போகும். பங்குப் பேரவைக்கு அப்பாற்பட்டு மக்களே தலைமை ஏற்று நடத்தும் தனி அமைப்பாகத் தலித் கிறிஸ்தவ இயக்கம் செயல்பட வேண்டும் என்றார். அவரது கருத்து மிகச் சரியானது. அதன்படியே தலித் கிறிஸ்தவ இயக்கம் பொதுநிலையினர் தலைமையில் தனித்துச் செயல்பட்டது. உயர் மறைமாவட்டம் முழுவதும் பெரும்பாலான பங்குப் பணியாளர்களின் ஆதரவின்றியும் அவர்களது எதிர்ப்பை மீறியும் இயக்கம் பரவியது. தனி இயக்கமாகச் செயல்பட்டு சென்னை- மயிலை மறைமாவட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவரப் போராடியது. பங்குப் பேரவையின் அங்கமாகச் செயல்பட்டிருந்தால் நிச்சயம் அது வளர்ந்திருக்காது. இயக்கமே உருவாகியிருக்காது.

 

இப்படிச் செயல்பட்ட இயக்கம் தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கமாகத் தமிழகம் முழுவதும் பரவியது. இயேசு சபைப் பணியாளர் அந்தோனிராஜ் தலைவரானார். அவரது தலைமையில் தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமைகள் வேண்டும் என்று இயக்கத்தினர் பல மறைமாவட்டங்களில் போராடினர். தமிழக ஆயர்கள் அதை விரும்பவில்லை. உரோம் வரை சென்று அந்தோனிராஜ் தலைமை ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தினர். எனவே அந்தோனிராஜ் பதவியிலிருந்து இறங்கினார். பொதுநிலையினர் தலைமை ஏற்க, போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த நிகழ்வானது மீனவர்களுக்கும் பணியாளர்களுக்கும் என்ன சொல்கிறது? விவாதிப்பது நல்லது.

 

மீனவர்களிடம் சில மாற்றங்கள் வேண்டும் என்பது எனது எண்ணம். சுனாமி சமயத்தில் ஏற்பட்ட மற்றொரு அனுபவத்தைப் பகிர்கிறேன். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றேன். அவற்றில் கோட்டார் மறைமாவட்டத்தில் குளச்சல், கோடிமுனை, கொட்டில்பாடு, புதூர், மணக்குடி, கீழமணக்குடி போன்ற பல கிராமங்களும், தூத்துக்கடி மறைமாவட்டத்தில் பல கடற்கரைக் கிராமங்களும் அடங்கும். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியுமா என்று யோசித்தேன். அப்போது பத்திரிக்கையில் ‘சுனாமி உதவி கேட்டு அருந்ததியர்கள் உண்ணாவிரதம்’ என்ற தலைப்பில் வந்த செய்தியைப் படித்தேன். அருந்ததியர்களுக்கும் சுனாமிக்கும் என்ன சம்பந்தம்? நான் ஆச்சரியப்பட்டு செய்தியின் உண்மையை அறியத் தூத்துக்குடி மறைமாவட்டத்திலுள்ள அந்த ஊருக்கு விரைந்தேன். செய்தி உண்மைதான். சுனாமியால் பாதிக்கப்பட்ட அருந்ததியர்கள் மற்ற மீனவர்களோடு அரசுப் பள்ளியில் தங்கினர். தங்களோடு மற்றவர்கள் தங்கக் கூடாது என்று கிறிஸ்தவ மீனவர்கள் கூறியதால் அருந்ததியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்துக்கள். இந்தச் சமூகத்தினர்தான் சுனாமியால் இறந்துபோனவர்களது உடலை அப்புறப்படுத்தியவர்கள். அவர்களோடு மீனவர்கள் தங்கியிருந்தால் புதிய அனுபவம் கிடைத்திருக்கும்.

 

ஜெர்மனியில் எனக்குத் தெரிந்த நிதி உதவி அளிக்கும் நிறுவனம் வழியாக சுனாமியால் பாதிக்கப்பட்ட அருந்ததியர்களின் மறுவாழ்வுக்கு உதவினேன். அதே நிறுவனம் கோட்டார் மற்றும் தூத்துக்குடி மறைமாவட்டங்களில் இரண்டு கிராமங்களைத்  தத்தெடுத்துக் கோடிக்கணக்கில் பணம் செலவிட்டது. அனைத்து நிவாரணப் பணிகளும் முடிந்ததும் நிதி உதவி அளிந்த நிறுவனத்தினர் கடைசி முறையாகப் பார்வையிட வந்தனர். அவர்களிடம் இரண்டு கிராம மீனவர்களும் இன்னும் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோடிக்கணக்கில் பணம் கேட்டனர். அதன்பின் மிகக் குறைந்த அளவு நிதியளித்த அருந்ததியர்களைப் பார்வையிட்டனர். அருந்ததியர்கள் அவர்களிடம், ‘நீங்கள் எங்களைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் உதவுங்கள்’ என்று வாழ்த்தி, தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையைக் கொடுத்தனர். நிதி அளித்தவர்கள் வியந்தனர். உலகின் எப்பகுதியிலும் கிடைக்காத அனுபவம் என்றனர். கடைக்கோடி மனிதனின் செயல்பாடு இது. சுயதேவையைப் பூர்த்தி செய்த மீனவர்களிடம் அடுத்தவர்களை எதிர்பார்க்கும் போக்கு சுனாமியால் அதிகரித்துள்ளது. பல கடற்கரைக் கிராமங்களில் ‘இன்னும் வேண்டும்’ என்ற குரல் உரத்து ஒலித்ததாகக் கேள்விப்பட்டேன். இது ஆரோக்கியமான போக்கா என்று தெரியவில்லை.

கடந்த காலங்களில் பங்குகளை மக்களே நிர்வகித்தார்கள். ஆனால் மக்கள் என்பது அவ்வூரிலுள்ள பணக்காரர்களே. எனவே அவர் சொல்படிதான் ஊரே நடந்தது. அவர் ஊரின் பொதுப்பணத்தைப் பெரும்பாலும் சுயநலனுக்குச் செலவிட்டதோடு, தனக்குச் சார்பான முடிவுகளையே எடுத்தார். இந்த முறை பற்றி விரிவாக எழுத இயலவில்லை. பங்குப் பணியாளரிடம் நிர்வாகத்தைக் கொடுத்தால் இதில் மாற்றம் ஏற்படும் என்றது திருஅவை. பல போராட்டங்களுக்குப் பின்பே மாற்றம் ஏற்பட்டது. பணியாளர்களிடமும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான பணியாளர்கள் பணக்காரர்களின் இடத்தில் அமர்ந்தார்களே தவிர மக்களின் பிரதிநிதிகளாக அமரவில்லை.

 

பணியாளர்களுக்குப் பங்கின் நிர்வாகம் பற்றி உருவாக்கக் காலத்தில் பயிற்சி அளிப்பது மிகக் குறைவு. பேராசிரியர்களாகக் குருமடத்தில் பணியாற்றுபவர்களிடமும் ஆயர்களிடமும் இதுபற்றிய பார்வை வளர வேண்டும்.

 

தற்போது அன்பியம் என்பது செபிப்பது, பணம் வசூல் செய்வது என்ற எல்லைக்குள் தனது பணியைச் சுருக்கிக் கொண்டது. பொதுத்தளத்தில் தங்களது பணி என்ன என்பது பற்றிய தெளிவு இல்லை. மறைமாவட்டங்களிலும் ஒன்று போல செயல்பட வேண்டும் என்ற கண்ணோட்டம்தான் இருக்கிறதே தவிர ஆங்காங்கே கோடிமுனை போல இயங்கும் சில முற்போக்கு முயற்சிகளுக்கு ஆதரவோ, ஊக்கமோ அளிப்பதில்லை. முன்னெடுக்கும் புதிய முயற்சிகளை அழிக்கவே பார்க்கிறது. அப்படி புதிய முயற்சிக்கு ஆதரவாக ஆயர் செயல்பட்டாலும் அவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறார் என்று பெரும்பாலான பணியாளர்கள் குற்றம் சொல்கின்றனர். தென் அமெரிக்காவில் அமேசான் பகுதியில் ஆதிவாசிகள் வாழும் ஒருசில பகுதிகளுக்கு பணியாளர்களால் செல்ல முடிவதில்லை, அங்கு திருமணம் ஆனவர்களைத் திருநிலைக்கு உயர்த்தலாமா என்று திருத்தந்தை பிரான்சிஸ் யோசிக்கிறார். அதைத் தடுக்கும் நிலைதான் இன்னும் திரு அவையில் உள்ளது.

கடலோர மக்களிடம் மாற்றுச் சிந்தனைக்கு அடித்தளமிடுகிறது இந்தப் புத்தகம். அனைவரும் படிக்க வேண்டிய ஓர் அருமையான படைப்பு. நூலாசிரியர் வறீதையா கான்ஸ்தந்தினுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

 

08-03-2020                                                                 மாற்கு ஸ்டீபன் சே.ச.

மகளிர் தினம்.                                                             சென்னை- 600 034

தமிழக_சட்டமன்றத்தேர்தல்_2021

தேர்தல் காலம் அடிப்படையில் மக்கள் பிரச்சினைகளைக் கவனப்படுத்துகிற காலம். வெற்றிபெறும் பொருட்டாவது அரசியல் தலைமைகள் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அந்த எதிர்பார்ப்பு பொய்த்துக்கொண்டிருக்கிறது. ஊடகங்களும் மக்களின் பிரச்சினைகளைத் தலைவர்களுக்கு நினைவூட்டுவதற்குக் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளவில்லை. இதுவும் ஒரு முக்கியமான சிக்கல்.

கொரோனா பெருந்தொற்றுச் சிக்கல் அரசுகள் உருவாக்கியதல்ல. ஆனால் ஒன்றிய, மாநில அரசுகள் அதைக் கையாண்ட முறைதான் மக்களுக்குப் பெரும் பீதியை, துயரத்தை, பேரிழப்பை ஏற்படுத்தியது. அடித்தட்டு மக்களுக்கு நிவாரணங்களை அறிவித்திருக்க வேண்டிய அந்தக் காலத்தில் அதைச் செய்யாமல் மக்களைத் துன்புறுத்தியது. ஒன்றிய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் தீவிரவாதத்தையும் கருப்புப் பணத்தையும் ஒழித்துவிடலாம் என்கிற அதன் பசப்பலுக்கு ஒத்து ஊதியது. தூய்மையான காற்றுக்கும் நன்னீருக்கும் அகிம்சை வழியில் போராடிய தூத்துக்குடி மக்களின்மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 உயிர்களைத் துள்ளத்துடிக்கக் கொன்றது.
ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை (திருத்த) மசோதா, தேசிய வேளாண் கொள்கை, தேசிய மீன்வளக் கொள்கை, குடியுரிமைத் திருத்த மசோதா, கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை போன்ற கருங்காலிச் சட்டங்களை தமிழக மக்களின் உணர்வுகளோடு இணைந்து நின்று எதிர்ப்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசுக்குத் துணை நின்றது. ஒக்கி, கஜாப்புயல் பேரிடர்க் காலங்களில் உரிய எச்சரிக்கை, நிவாரண, மறுகட்டுமான நடவடிக்கைகளில் தோற்றுப்போனது. ஒக்கிப் புயல் சூழலில் தமிழக மீனவர்களை மீட்பதில் அலட்சியம் காட்டியது. காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்துக்கும் பெங்களூரு சென்னை அதிவிரைவுச் ச்சாலைக்கும் அனுமதி அளித்து, அதன் மூலம் திருவள்ளூர்க் கடற்கரை மற்றும் உள்ளூர்ப் பகுதி மக்களின் பாரம்பரிய வாழிட வாழ்வாதாரங்களை அழிக்கத் துணைபோனது; பழவேற்காடு ஏரி, மாமுனி ஏரி, எண்ணூர் ஓடை, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீராதாரங்களை அழிவின் விளிம்பில் நிறுத்தியது; அதன் மூலம் சென்னைப் பெருநகரைப் பெருவெள்ளப் பேரிடருக்கு இலக்காக்கியிருக்கிறது. சேலம் நான்கு வழிச்சாலைத் திட்டத்தை விவசாயிகளின் மீது திணித்தது. நிலம் தர மறுத்துப் போராடிய விவசாயிகளைத் துன்புறுத்தியது. ஒருபுறம் மேக் இன் இந்தியா என்று கூவிக்கொண்டு மக்களின் வாழிட/வாழ்வாதார மூலங்களான பொதுச்சொத்து வளங்களைக் கார்ப்பொரேட்டுகளுக்குப் பொட்டலம் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீட்டுத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் தனியாருக்குத் தாரைவார்க்கப் படுகின்றன. நாம் அனுபவித்துவரும் துயரங்களின் பட்டியல் மிக நீளமானது என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். இத்தனைச் சேதங்களையும் மக்கள் மீது நிகழ்த்தி முடித்த அரசுகள் மட்டுமல்ல குற்றவாளிகள்; அதற்கு மௌன சாட்சியாகவும் பரப்புரையாளர்களாகவும் ஆதரவளித்த தலைமைகளும்தான். இவர்களை இனம் கண்டு ஒதுக்கும் தெளிவு மக்களுக்கு வேண்டும். ‘உங்கள் வாக்கு புனிதமானது, அதனை வீணாக்காதீர்’ என்று வேதம் ஓதும் இந்தச் சாத்தான்களிடம் நாம் கவனமாய் இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் நீண்ட காலமாய்ப் போராடிப் பெற்ற கல்வி உரிமையைக் காவு வாங்குவதற்கு நீட் போன்ற திட்டங்களைக் கொணர்ந்தும் தமிழ்நாட்டவர்களின் அரசுதுறை வேலை வாய்ப்புகளைத் தந்திரமாய்ப் பறித்தும் அரசியல் சூது நிகழ்த்தும் பிற்போக்குச் சக்திகளையும் அவற்றுக்கு ஆற்றுப்படை பாடும் கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். அரசியல் இலாபத்துக்காக, தேர்தல் அறிவிப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் சட்டவிரோதமாக ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு 10.5% உள்ஒதுக்கீடு கொடுத்து மற்ற சாதியினருக்குப் பெரும் அநீதி இழைத்தது மாநில அரசின்அறமற்ற செயலாகும். மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குக் கட்சிகள் வாக்குறுதிகளை வழங்கினால் மட்டும் போதாது. மேற்குறிப்பிட்டவை உள்ளிட்ட ஒவ்வொரு பிரச்சினையிலும் தங்கள் கொள்கை நிலைப்பாடுகளைத் தெளிவாகப் பேசவேண்டும்.
அடிப்படைவாதம்/பேரினவாதம் / பெரும்பான்மை வாதத்தை முன்வைக்கும் பிற்போக்கு, பாசிசச் சக்திகளுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்கிற நிலை தொடரவேண்டும்; தங்களது கொள்கைகளை வெளிப்படையாகப் பேசுமாறு கட்சிகளைக் கேட்கவேண்டும். இதற்கு முன்பு ஆண்டவர்கள் ஒன்றும் அக்மார்க் யோக்கியர்களல்லர். சேதுக்கால்வாய், கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டங்களின்போது கிடைத்த கசப்பான அனுபவங்களை மறந்துவிட முடியாதுதான். எதார்த்தம் என்ன? நம்மை ஆள்வதற்கு ஆகாயத்திலிருந்து மீட்பர்கள் இறங்கிவரப் போவதில்லை. இன்றைக்குக் களத்திலிருப்பவர்களில் குறைந்த அளவு ஆபத்தானவர்களைத் தேர்ந்தெடுக்கலாம். மக்களாட்சியை விட்டால் நமக்கு வேறு வழி? ஒன்றை மட்டும் நினைவில் வைத்திருப்போம்: அரசியல் என்பது தேர்தலோடு முடிந்துவிடுவதல்ல. விடுதலைக்கு நாம் கொடுக்கவேண்டிய விலை தீவிரக் கண்காணிப்புதான்.
30 மார்ச் 2021

நெய்தல் சிறுகதைகளில் சூழலியல் பதிவுகள்

 

1

கடலே புவிப்பரப்பின் மையமாய்த் திகழ்கிறது. நான்கு திணைகளிலும் கடலே முதன்மையானது. உலகம் முழுவதும் 3,12,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு நிலம் கடலோடு உறவு கொண்டுள்ளது. நீரியல் சுழற்சி மூலம் அனைத்துத் திணை நிலங்களையும் கடல்தான் இணைக்கிறது. உலகின் உணவாதாரமும் பொருளாதாரமும் கடலையே சார்ந்துள்ளது. இத்தனைப் பெரிய திணை நிலம் குறித்த சமவெளி மனிதர்களின் அறிவு மிகக் குறைவானது. கடல் சார்ந்த மக்களைக் குறித்த புரிதலும் அவ்வாறே.

கடல் திணைகளை இணைப்பது போல, இலக்கியம் திணைசார் மக்களை இணைப்பது. பிறிதொரு சமூகத்தின் வாழ்வனுபவத்தை நாம் அறியத்தரும் அற்புதமான கருவி இலக்கியம்தான்.

'சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து

முத்தம் தரும்போதெல்லாம்

துடிக்கத் துடிக்க ஒரு மீனைப்பிடித்து

அப்பறவைக்குத் தருகிறது

இக்கடல்'

என்று ஒரு கவிஞன்1 எழுதிச் செல்லும்போது நெய்தல் வாழ்வின் பிழிவை நாம் பெறுகிறோம். நில அடுக்குகளிலிருந்து பெறப்படும் புதைபடிவங்களிலிருந்து இறந்தகால உயிர்த்தொகைகளின் பரிமாணத்தைத் தொல்லியலாளர்கள் அறியத் தருதல் போன்று, இலக்கியம் முன்னோர்களின் வாழ்வியல் - பண்பாட்டுக் கூறுகளை நமக்குச் சொல்கிறது.

  சூழலியல் என்பது இயற்கையின் இயங்குமுறை குறித்த மனிதனின் அறிவியல் புரிதல் ஆகும். மனிதர்கள் தாம் வாழும் நிலத்தின் தன்மையை, அதன் நெகிழ்வான, நுட்பமான கூறுகளை உய்த்துணர்ந்து, அதற்கிசைய வாழ்வைக் கட்டமைத்துக் கொள்வது சூழலியல் உணர்வு. ஆதித் தமிழ்க் குடிகளின் இத்திணை அறிவினை முதன் முதலாக உலகுக்குச் சொன்னவர் தொல்காப்பியர்.

  குறிப்பிட்ட நிலத்தின் உற்பத்தித் தகுதியைத் தீர்மானிப்பவை இரண்டு காரணிகள்2: நீர் பெறுமதி, நிலநடுக்கோட்டின் அண்மை, மண்ணில் கிடைக்கப்பெறும் உயிர்ச்சத்துகளும் மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறனும் இதனுடன் உப காரணிகளாய்த் தொழிற்படுகின்றன. தாவர வகைமைகளை, பயிர் விளைச்சலைத் தீர்மானிப்பது நிலம்தான். தாவரங்கள் விலங்கின வகை தொகைகளைத் தீர்மானிப்பதும் இவை அனைத்தையும் சார்ந்து மக்களின் தொழில், உணவு, பண்பாடுகள் அமைவதும் கண்கூடு. நான்கு திணைகளின் முதல், கரு, உரிப்பொருட்கள் அமைந்துபடுவது.

மேற்சொன்னவற்றின் அடிப்படையில்தான். நவீன அறிவியல் இதனை உயிர்ச்சூழலியல் கட்டமைவுகளாக (ecological biotopes) இனம் காண்கிறது. இவ்வாறு தமிழ்நிலம் தொல்குடித் தமிழ் மக்களின் இனக்குழு அடையாளங்களை நிறுவிக் காத்து வந்தது. காலப்போக்கில் தமிழ்ச்சமூகம் தனது நிலங்களை இழந்துவிட்டதன் மூலம் மரபான தொழிலறிவையும் இனக்குழு அடையாளங்களையும் துறக்க நேர்ந்தது. இன்றைய சூழலில் நெய்தல் குடிகள் மட்டுமே ஆதித் தமிழ்ச் சமூக மதிப்பீடுகளை வாழ்ந்து வருகின்றன. ஆனால் வனப் பழங்குடிகளைத் தொடர்ந்து, கடல் பழங்குடிகளுக்கும் வாழ்வியல் நெருக்கடிகள் முளைக்கின்றன. வாழ்தலின் பொருட்டு அன்றாடம் மரணத்தின் வாயிலைத் திறந்து பார்த்துவிட்டுத் திரும்பும் இம்மக்கள் இன்று தம் திணை நிலங்களை இழக்கும் நிலையில் உள்ளனர்.

சங்கக் கவிகளின் படைப்புகள் தவிர்த்து, நெய்தல் புனைவு இலக்கியங்கள் அருகியே கிடைக்கப் பெறுகின்றன. நெய்தல் திணைக்  கூறுகளை முன்வைக்கும் சிறுகதைப் படைப்புகளாக பானுமதி பாஸ்கோ, குறும்பனை சி. பெர்லின், செல்வராஜ், வறீதையா கான்ஸ்தந்தின் போன்றோரின் எழுத்துகளைக் குறிப்பிடலாம். தார்சி எஸ். பெர்னாண்டோ, குரூஸ் சாக்ரடீஸ், நாஞ்சில் நாடன், றைசெல், சகேஷ் சந்தியா, போன்றோரும் ஓரிரு படைப்புகளைத் தந்துள்ளனர். நவீன வகைமையில் நெய்தல் சிறுகதைகளின் தொகை சிறிது. இவற்றில் சூழலியலை கவனப்படுத்தும் தன்மை கொண்ட சிறுகதைப் படைப்புகள் வெகு சிலவே.

 

2

 

எல்லையைக் காத்தல் என்பது இயற்கையோடு இசைந்த வாழ்வின் முதன்மைக் கூறுகளில் ஒன்று.3 பழங்குடி வாழ்வைக் கூர்ந்து நோக்கும் எவரும் இதனைப் புரிந்து கொள்ளலாம். எந்த நிகழ்வும், எந்த வரவும் அதன் கண்காணிப்பிலிருந்து விடுபடுவதில்லை. ஒவ்வொரு கடல் பழங்குடியும் நெய்தல் நிலத்தின் காவலாளிதான். தனது நிலத்தை, புழங்கு வெளியை, வாழ்வாதார மூலத்தை மட்டுமின்றித் தனது கலாச்சார வெளியையும் அவன் கூர்ந்து கண்காணிக்கிறான்.3 தனது அன்றாடத் தேவையை முன்னிட்டு மிகக்குறைவாகவே கடல்தாயிடமிருந்து எடுத்துக் கொள்கிறான்.

'இரந்தோர் வறுங்களம் மல்க வீசி

பாடுபல அமைத்து கொள்ளை சாற்றி

கோடு உயர் திண்மணல் துஞ்சும் துறைவ'

என அகநானூறு (பாடல்  30) குறிக்கின்றவாறு, இரப்போர்க்குக் கலம் நிறைய ஈந்துவிட்டு மணல்மேட்டில் அமைதியாகத் துயில்கின்றான். நாளையைக் குறித்த கவலை அவனுக்கு அன்று இல்லாதிருந்தது.4 'பேராசப் படலன்னா தீவுல எல்லாருமே சந்தோஷமா வாழலாம்' என்கிறார் இராமேசுவரம் மீனவர் ஒருவர்.5 இயற்கையின் வளங்கள் எல்லோர்க்கும் உரிமையானவை. அவற்றைத் தனிமனிதர் சிலர் பேராசையால் கவர்ந்து கொள்ள முயலும்போது தாயைக் காக்கப் போரிடும் தனயனாய்ப் பழங்குடிச் சமூகம் போராடுகிறது. இயற்கையின் ஒவ்வொரு அசைவினையும் உற்றுக் கவனித்துத் தன் அனுபவ அறிவாக்கிக் கொள்கிறது. எல்லை மீறுதலை அது சகித்துக் கொள்வதில்லை. கடல் முன்வைக்கும் சமத்துவத்தை அச்சமூகம் கொண்டாடுகிறது. வன்முறைகள் என ஊடகங்களால் சித்தரிக்கப்படும் மோதல்கள் பெரும்பான்மையும் சமத்துவத்தை நிலைநாட்ட இன்றியமையாதவை.

  பானுமதி பாஸ்கோவின் காவல்,6 நீண்ட பகலும் நீண்ட இரவும்7 ஆகிய இரண்டு சிறுகதைகளிலும் வறீதையா கான்ஸ்தந்தினின் அரயநாடு,8 ஏப்பு,9 வாஸ்கோ10 சிறுகதைகளிலும், செல்வராஜின் நண்டு11 மற்றும் சகேஷ் சந்தியாவின்  மணலூர் மலர்க்கொடி12 ஆகிய சிறுகதைகளிலும் சூழலியல் சார்ந்த இப்பழங்குடி மதிப்பீடுகள் பதிவு பெறுகின்றன.

  சூழலியல் சார்ந்து, வளநட்பு பேணி, தேர்ந்தெடுத்த மீன்பிடி முறைகளைப் பின்பற்றிவரும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்துக்குச் சாவுமணி அடிக்கிறது நவீன தொழில்நுட்பமான இழுவைமடி (காவல்). 'மீனவர்கள் அறியாமையினால் புதிய தொழில் நுட்பங்களை எதிர்க்கின்றனர்' என்று கடலுக்குத் தொடர்பில்லாத அதிகாரிகள் பரப்புரை செய்தனர். வரப்போகும் பேரழிவை முன்னுணர்ந்து பழங்குடிச் சமூகம் எதிர்வினை புரிகிறது.6 உயர் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான 'கடல் எல்லை' மீறப்படுகிறது. கடற்கரை கலவர பூமியாகிறது. கடல் மோதல்களைத் தவிர்க்கவே முடியாதா? அருளப்பனிடம் முதிய கடலோடி ஓர் அருமையான தீர்வை முன்வைக்கிறார்.

"இந்தப் பெரிய கடல்ல இடமா இல்ல? கொஞ்சம் தூரமா கடந்துபோயி இவனுவ வல போட்டா என்ன?"

தாய்மை அக்கறையினால் பிணைக்கப்பட்டு, பகிர்ந்து வாழ்ந்து வந்த கடல் பழங்குடிச் சமூகத்தின் ஒரு தரப்பின் மீது பேராசை என்னும் மாயவலை உயர்தொழில் நுட்பத்தின் வடிவில் வீசப்பட்டுவிட்டது.13 இன்று பழவேற்காட்டிலும் இராமேசுவரத்திலும்5 அதன் பகாசுரமான எதிர்விளைவுகளைக் கண்ணுறுகிறோம். நெய்தல் நிலம் காயப்பட்டுக் கொண்டிருப்பதைக் 'காவல்'   முன்னுணர்ந்து பதிவிடுகிறது.

  கடலைக் கொள்ளையிடும் புதிய தொழில் நுட்பங்களும் மீன்பிடி கலன்களின் பெருக்கமும் உருவாக்கும் கடல்வள நெருக்கடியைக் கவனப் படுத்துகிறது வாஸ்கோ (வறீதையா கான்ஸ்தந்தின்).10 வாழ்வாதாரத்தை முன்னிட்டு தீபகற்பத்தின் தென்முனையிலிருந்து ஒவ்வோரிடமாய்ப் புலம் பெயரும் இக்கதை மாந்தர்களின் மீன்பிடிக் களம் வேறெவருக்கும் போட்டியில்லாத தொலைவுக் கடல். உள்ளுர்க்காரர்களின் அறுவடை இலக்கு கரையோர சிறு மீன்களே. ஆனால் பெரிய மீன்கள்தான் அவற்றைக் கரைநோக்கி விரட்டிக்கொண்டு சேர்க்க வேண்டும். கடலுக்குள் தொழிற்படும் இந்த உணவுச் சங்கிலியை நம்பித்தான் உள்ளுர் மீனவர்களின் வாழ்வு அமைந்துள்ளது. 'காவல்', 'வாஸ்கோ' ஆகிய இரண்டு கதைகளிலும் வாழ்வாதார எல்லைகள் மற்றும் கடலின் சூழலியல்; குறித்தான பூர்வகுடி மீனவர்களின் மரபான கடலறிவு வெளிப்படுகிறது.

  மணல் மேடுகள் குறித்த கடவோடிகளின் அறிவு 2000 ஆண்டு பழமையானது. கானல் எனும் கடற்கரைச் சோலைகளில் அமைந்திருந்த அவர்களின் சிறு குடில்களுக்கு (குறுந்தொகை, 228) எக்கர்;   எனும் இம்மணல் மேடுகளே அரணமைத்தன. சோலையின் மறுபுறம் அத்தம் எனும் நன்னீர் நிலைகள் அமைந்திருந்தன. காற்றும் (குறுந்தொகை, 372), திரையும் (நற்றிணை- 15, 35) மணல் மேடுகளை உருவாக்கின என்பதும், அம்மணல் மேடுகளை இழப்பது தங்கள் தொழில், குடிமனைகளை இழக்க ஏதுவாகும் என்பதும் அவர்களின் பழமையான அறிவு.

வாழிடத்தைக் காக்கும் கடலோர சமூகத்தின் முனைப்பில் உள்ளுர் அதிகார அரசியல் கலக்கும்போது அச்சமூகத்தினுள்ளும், இரு சமூகங்களுக்கிடையிலும் ஏற்படும் விளைவுகளைக் காட்சிப்படுத்துவதாக அமைகிறது 'ஏப்பு'.9 கடற்கரை மணல்மேட்டில் திருட்டுத்தனமாக மணல் அகழ்ந்தெடுப்பதனால் கடலரிமானம் நிகழ்கிறது. இதன் விளைவாக தங்கள் குடிமனைகளை இழக்க நேர்கிறது. ஆனால் அதைத் தடுப்பதற்கான முறையான வழிகளை அச்சமூகம் அறிந்திருக்கவில்லை.14 கடலரிப்பினால் கடலோர குடிமனைகள் இழப்பாவதை குறும்பனை சி. பெர்லினின் 'ஆனி ஆடி ஆத்தலும் தூத்தலும்' சிறுகதையும் பதிவு செய்கிறது.15 தென்மாவட்டக் கடலோரங்களில் நீடித்துவரும் கனிம மணல் அழிவினால் கடலோர நன்னீராதாரங்களும் வாழிடங்களும் வாழ்வாதாரமும் பாதிப்புறுவதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. செல்வராஜின் 'நண்டு'9 சிறுகதை இச்சிக்கலை மையமிட்ட பதிவாகும்.

புற்றுநோயானது வயலில் இறங்கும் வெட்டுக்கிளியினத்தின் பெருந்தொகை போன்று, அந்தக் கடற்கரைக் கிராமத்தைத் தின்று கொண்டிருக்கிறது (நண்டு). கூப்பிடு தொலைவில் சிறை மதில்சுவர் போன்ற அரணமைத்து இயங்கிக் கொண்டிருக்கும் கனிம மணல் ஆலையில் கனிமத் தாதுக்களின் ஒரு பகுதியாக அங்கு சேகரிக்கப்படும் கதிர்வீச்சுக் கனிமம். நண்டு நாலாதிசையும் இலாவகமாய் நகர்வது. அதன் இடுக்கிக் கால்களைப் போன்று, கதிர்வீச்சுக் கனிமம் கடலோர மக்களைக் கிடுக்கிப்பிடி போட்டு வைத்திருக்கிறது.16 கதிர்வீச்சுக் கனிமத்தை அகழ்வதில்தான் அம்மக்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. நண்டு இங்கு சூழலியல் சிக்கலின் ஒரு குறியீடு.

  "கஞ்சித் தண்ணிய உறிஞ்சியெடுக்குத பண்ணியப்போல மணல் கம்பெனிக்காரன் எல்லாத்தையும் நக்கி வளுச்சி எடுத்துட்டான். துரத்துல கெடந்த கடலு இண்ணைக்கு வீட்டு முத்தத்துல வந்து கெடக்கு"9 என்பதாக கதைசொல்லியின் வாழிடம் குறித்த ஆதங்கம் வெளிப்படுகிறது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாவுக்குத் தங்களை ஒப்புவித்துக் கொண்டிருக்கின்றனர். வழுக்கம்பிள்ளையால் பொறுக்க முடியவில்லை. ஊரையே தோண்டியெடுத்துக் கொள்வதற்கு இழப்பீடாக அங்கு சமூக அரங்கு கட்டுவதற்கு இரண்டு இலட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. "சுனாமியப்போல ஒரு கொள்ள அழிவு வந்து கூட்டமா செத்தாதான் இது ஒரு அழிவணி எல்லாருக்கும் தெரியும்போல..." 9 என வழுக்கம்பிள்ளையைப் போன்றவர்கள் செய்வதறியாது அங்கலாய்க்கின்றனர். வழுக்கம்பிள்ளை இயற்கையின் மீதான பழங்குடி அக்கறையின் குறியீடு.

  சுற்றுலா, மணல் அகழ்தல் போல தமிழகக் கடற்கரைகள் வணிக தொழில் துறைமுகங்களுக்காகவும் குறிவைக்கப்படுகின்றன. சிக்கல் துறைமுகம் தேவையா என்பதல்ல, அதை நிறுவுவதில் பின்பற்றப்படவேண்டிய பழங்குடிச் சமூகங்கள் குறித்த அக்கறை. இத்தார்மீக அக்கறை பின்தள்ளப்படுகையில் விழிப்பான நெய்தல் சமூகம் ஒன்று அச்சிக்கலை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்கிறது என்பதை மணலூர் மலர்க்கொடி (சகேஷ் சந்தியா) பதிவிடுகிறது.12,17 தமிழகக் கடற்கரை நெடுக இதுபோன்று 12 துறைமுகங்களும் 100 அனல் மின்நிலையங்களும் அமைக்கும் திட்டம் அரசின் கையிலுள்ளது. 2009இல் வெளிவந்த இக்கதையில் கடற்கரை மக்களின் நிகழ்காலச் சிக்கல்கள் என்னும் திரட்சியான பனிப்பாறையின் மேல்முனையாய் மணலூர் என்னும் கடல்துறை முன்வைக்கப்படுகிறது17.

  இரவோடிரவாக வீட்டின் அஸ்திவாரத்தைத் தோண்டிச் சிதைக்கும் பெருச்சாளி போல மணலூரை விழுங்கக் கங்கணம் கட்டி நுழைகிற தொழிலதிபர் கூட்டம.; இக்கூட்டத்தின் அடிவருடிகளாகிக் காசு பார்க்கத் துணியும் சமூக விரோதிகள். ஊரை சுவர்க்கபுரியாக மாற்றும் வழக்கமான வாக்குறுதிகள். மணலூரைப் பாதுகாக்கக் களமிறங்கும் பெண் செயலார்வலர்கள். வீட்டுக்குள் நுழையும் பெருச்சாளி சிக்கலின் படிமம்.

'காவல்' சிறுகதையின் நீட்சியாக 'நீண்ட பகலும் நீண்ட இரவும்' (பானுமதி பாஸ்கோ)7 சிறுகதையைப் பார்க்க முடியும். ஆனால் தங்கள் சிக்கல்களுக்கு வன்முறை ஒன்றையே தீர்வாய்ப் பார்த்துப் பழகிப்போன கடல்பழங்குடிச் சமூகம் இன்று மக்கள் இயக்க அரசியலை நோக்கி நகர்ந்திருக்கிறது13  என்பதையே பின்னைய கதை வெளிப்படுத்துகிறது. தங்கள் வாழிடத்தையும், ஒரே வாழ்வாதாரத்தையும் மட்டுமின்றி தங்கள் சந்ததியின் எதிர்காலத்தை விழுங்கத்துடிக்கும் அணுவுலைத் திட்டத்தை எதிர்த்து பல்லாயிரம் கடல் பழங்குடி மக்கள் ஈராண்டாய் ஒரேயிடத்தில் உட்கார்ந்து சாத்வீகமாய்ப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

வனங்களை, வேளாண் நிலங்களைப் பாதுகாப்போம், நதிகளைப் பாதுகாப்போம் என ஒவ்வொரு திணைசார் சமூகமும் எழுப்பும் போர் முழக்கச் சூழலே நெய்தல்நில சிறுகதைகளிலும் வேர்கொள்வதைக் காணமுடிகிறது.

  அரயநாடு6 இயற்கைக்கான கடல் பழங்குடிகளின் போராட்டத்தை இன்னொரு கோணத்தில் அணுகுகிறது. உயர் தொழில் நுட்பம் மற்றும் பாரம்பரிய மீன்பிடி சார்ந்த இருவேறு பாரம்பரிய கடல் பழங்குடிச் சமூகங்களின் வாழ்க்கைப் போக்குகளைச் சித்தரிக்கிறது. இவர்களுக்கிடையே கடலையும் கடற்கரையையும் வணிகப்பொருளாக்கிப் பெரும் இலாபம் தேடும் நோக்குடன் வரும் பெருமுதலாளிகள் தங்கள் ஆக்கிரமிப்பினால் பாரம்பரிய மீனவர்களின் வாழிடங்களுக்கு நெருக்கடி தருகின்றனர். அரசும் சமய நிறுவனங்களும் கைவிட்டுவிட்ட நிலையில் இம்மக்கள் தங்கள் பாரம்பரிய வாழிடத்திலிருந்து புலம்பெயர நேர்கிறது. நட்சத்திர சுற்றுலா வணிகம் இந்தியக் கடற்கரைகளுக்கு இழைத்துவரும் சேதாரத்தைப் பேசுகிறது 'அரயநாடு'. மீனவப் பழங்குடிகளின் வாழ்வுரிமைதான் (இக்)கதையின் மையம் 14.

கடல் சூழ்ந்த உலகுக்கு வளம் தருதலால் 'மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்' எனச் சிலப்பதிகாரம் (புகார்க் காண்டம், மங்கல வாழ்த்து 6-10) மழையைக் கொண்டாடுகிறது.

'உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே'

என்கிறது புறநானூறு (18:22-24, குடபுலவியனன்). விரிந்து கிடக்கும் கடலானது தனது தூதுவனாக மேகங்களை வானுக்கு அனுப்புகிறது. மலைகளில் மழையாகும் இம்மேகங்கள் வனங்களையும் நிலங்களையும் நனைத்து, நதிகளாகிக் கடலில் சேரும்போது உடன்கொணரும் உயிர்ச்சத்துகளே கடலின் மீன்வளமாய்ப் பெருகுகின்றது. உயிரின் அமுதமாகும் நீரின் இப்போக்குகள் ஊடறுக்கப்படலாகாது. இப்புரிதல் ஆதித் தமிழ்க் குடிகளுக்கு இருந்தது. மீன் வேட்டம் சிறக்க மழை பொய்க்காமல் பெய்தாக வேண்டும் என்று உலோச்சனார் (நற்றிணை, 38:1-2) பாடிய காலத்து நதிநீரை ஊடறுக்கும் அணைகள் இல்லை. வனங்களை அழித்து அணைகள் எழுந்ததன் விளைவாக புகார் (பட்டினப்பாலை), கொற்கை18 துறைமுகங்கள் தூர்ந்துபோயின என வரலாற்றிலிருந்து நாம் பெறுகிறோம். இயற்கையின் போக்குகள் குறித்த சமவெளி மனிதனின் புரிதல் இன்று 'நதிகள் வீணாய்க் கடலில் கலக்கின்றன' என்பதாய்க் குறுகிப் போயுள்ளது.

'மகேசுவரியும் தெக்காறும்' சிறுகதை (செல்வராஜ்)16 இப்பின்னணியில் கடல் பழங்குடியின் நீர்வளம் குறித்த புரிதலைப் பேசுகிறது. சூழலியல்- நன்னீர்- பொதுச்சுகாதாரம் என்பதான பிணைப்பினைப் புனைவின் சுவை ததும்பப் பரிமாறுகிறது இப்படைப்பு. வெள்ளப்பெருக்கு, வறட்சி எனும் பருவநிலை எதிர்வுகளைக் கையாளும் வகையில் அலைவாய்க்கரைக்கு இணையாக ஓடும் ஒரு கால்வாய் கடலைத் தொடுமுன் எல்லா நதிகளும் அதில் இணைகின்றன. ஆற்றின் குறுக்கே அணை கட்டியாகிவிட்டது. 'வீதியாக் கிடந்த' கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகிய சாக்கடையாய் மாறிப்போனது. 'நுளைக்குடி கும்பாயிரி செல்லையனைத் தொடர்ந்து (கதம்பக்குண்டு) தொழில் வாய்ப்புவ கொறஞ்சு வீடுகள வித்துட்டு ஒதுங்கிண்டிருந்தாங்க!'

  தெக்காற்றின் மேலே கட்டிய தடுப்பணை, கடல்விளிம்பில் வாழ்பவர்களின் விதியை மாற்றிவிடுகிறது. ஆற்றகுளத்தில் கொட்டியும் ஆம்பலும் போல இம்மக்கள் கடற்புற நிலத்தோடு ஒட்டிக் கிடக்கிறார்கள்.19 'வயசான காலத்துல பீயும் மோத்துரத்தோடயும் கெடக்க தாயும் தவப்பனையும் வீட்டுல ஏத்தாம ஒதுக்கிவிட்டதப் போலத் தெக்காறு நாத்தம் பிடிச்சு போயி அநாதையாக் கிடந்தது...'

படைப்பாளியின் சூழலியல் குறித்த புரிதல் பவுஸ்தீன்புள்ளயின் குரலாக வெளிப்படுகிறது:

  "டேய், நம்ம உயிரப் பணயம் வச்சு செய்யுத கடல் தொழிலும் ஒரு வெவசாயந்தான்... ஒவ்வொரு பொழியும் (ஆறும்) கடல்லபோய்ச் சேருத எடம்... ஆயிரக் கணக்கான உயிர்வளுக்கு ஜென்மம் குடுக்குத எடம்...."

  காகிநாடாவிலிருந்து ஒஸ்த்தேரி வரை கடலோரம் நெடுக ஓடும் பக்கிங்ஹாம் கால்வாய், 420 ச.கி.மீ பரப்பு கொண்ட பழவேற்காடு ஏரியையும் ஏராளம் ஆறுகளையும் இணைத்துச் செல்கிறது.20 வேளாண் தேவைகளுடன் நன்னீர்த் தேவைகளையும் பிற பொருளாதாரத் தேவைகளையும் நிறைவு செய்யும் இக்கால்வாய், பல்லாயிரம் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. அது போலவே, 'மகேசுவரியும் தெக்காறும்' சித்திரிக்கும் அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாயும்.

  மண்ணின் மனிதர்களின் வாழ்வியல் மகத்துவத்தைப் பிற திணை இலக்கிய வகைமைகள் போலவே நெய்தல் சிறுகதைகள்- எண்ணிக்கையில் குறைவானவை எனினும்-   பிரதிபலிக்கின்றன. அறிவியல் செருக்கு கண்ணை மறைத்துவிடாது நாம் அம்மனிதர்களின் மரபார்ந்த திணையறிவினைப் பின்தொடர்ந்தால் தமிழ்ச் சமூகம் தனது திணை வாழ்வை மீட்டுக்கொள்ள முடியும். இலக்கியத்தின் இலக்கும் அதுவே.

---------

கோயமுத்தூர் நிர்மலா (தன்னாட்சிக்) கல்லூரித் தமிழ்த்துறை 2015இல் நடத்திய ‘தமிழிலக்கியத்தில் சூழலியல்’ என்னும் தேசியக் கருத்தரங்கில் வாசித்த ஆய்வுக்கட்டுரை.

 

துணை நூல் பட்டிகை

 

1.    பிரான்சிஸ் கிருபா, ஜெ. மெசியாவின் காயங்கள். தமிழினி, 2002.

2.    வறீதையா கான்ஸ்தந்தின். Environmental Consciousness in Tamil Literature. A Historical Perspective. 15th Endowment Lecture in the name of Rajah Sir Muthiah Chettiyar of Chettinadu. Dept. Modern Indian Languages and Literary Studies. University of Delhi, 2012.

3.    வறீதையா கான்ஸ்தந்தின். அந்நியப்படும் கடல்.  கீழைக்காற்று, 2012.

4.    வேதசகாயகுமார், எம். பெருநல் ஈகை நம் சிறுகுடிப் பொலிய. நூல்: எக்கர். தொ.ர்: வறீதையா கான்ஸ்தந்தின். உயிர் எழுத்து பதிப்பகம் – நெய்தல் வெளி, 2013.

5.    வறீதையா கான்ஸ்தந்தின். மரண வியாபாரிகளின் தீவு. தீராநதி ஏப், மே இதழ்கள், 2015.

6.    பானுமதி பாஸ்கோ. காவல். நூல்: தூரத்துச் சொந்தங்கள். உயிர் எழுத்து பதிப்பகம் - நெய்தல் வெளி, 2013.

7.    பானுமதி பாஸ்கோ. நீண்ட பகலும் நீண்ட இரவும். நூல்; மேலது.

8.    வறீதையா கான்ஸ்தந்தின். அரயநாடு. உயிர் எழுத்து, செப்., 2011.

9.    வறீதையா கான்ஸ்தந்தின். ஏப்பு. நூல்: வர்ளக்கெட்டு (சிறுகதைகள்). எதிர் வெளியீடு, 2014.

10. வறீதையா கான்ஸ்தந்தின். வாஸ்கோ நூல்: மேலது.

11. செல்வராஜ். நண்டு. நூல்: செள்ளு. பாரதி புத்தகாலயம், 2013.

12. சகேஷ் சந்தியா, மணலூர் மலர்க்கொடி. ஆலைவாய்க்கரையில், செப்., 2009.

13. வறீதையா கான்ஸ்தந்தின். கடல் மணக்கும் கதைகள். நூல்: நெத்திலிக் கருவாட்டின் வாசனை. உயிர் எழுத்து பதிப்பகம், 2014.

14. வேதசகாயகுமார், எம். கடலை எழுதுதல். நூல் அறிமுகம்: வர்ளக்கெட்டு (சிறுகதைகள்). ஆசிரியர்: வறீதையா கான்ஸ்தந்தின். எதிர் வெளியீடு, 2014.

15. குறும்பனை சி. பெர்லின். ஆனி ஆடி ஆத்தலும் தூத்தலும். நூல்: நீந்திக் களித்த கடல் (சிறுகதைகள்). நியூ செஞ்சுரி புத்தகப் பண்ணை, 2009.

16. செல்வராஜ். மகேசுவரியும் தெக்காறும். நூல்: செள்ளு. பாரதி புத்தகாலயம், 2013.

17. வறீதையா கான்ஸ்தந்தின். நெறிப்படுத்தும் எழுத்து. நூல்: காலடியில் கண்ணிவெடி. நெய்தல் வெளி, 2012.

18. தம்பி ஐயா பர்னாந்து. பாண்டியர் பண்பாட்டில் பழைய காயல். நெய்தல் வெளி, 2012.

19. வறீதையா கான்ஸ்தந்தின். நெத்திலிக் கருவாட்டின் வாசனை. நூல்: நெத்திலிக் கருவாட்டின் வாசனை. உயிர் எழுத்து பதிப்பகம், 2014.

20. வறீதையா கான்ஸ்தந்தின். பழவேற்காடு முதல் நீரோடி வரை. எதிர் வெளியீடு, 2014.

 

 

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...