கடல் குறித்த அறிவு சமகாலத் தமிழில் இல்லை. பெரு நகரங்களில் ஒட்டுமொத்த மீன்களின் பெயர்கள் மூன்று அல்லது நான்காகச் சுருக்கப்பட்டுள்ளன. சில நூறு மீன்களின் பெயர்களைத் தமிழ் இழந்துவிட்டுள்ளது. இந்த இழப்பு தொடர் கிறது. இந்த நிலை சமவெளி மனிதர்களிடம்தான் உள்ளது என்பதல்ல. கடலோர மனிதர்களும் கடலுக்கு அன்னியமாகிக் கொண்டிருக்கிறார்கள். கடல் குறித்தான அறிவை அழிவிலிருந்து மீட்டாக வேண்டும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோட்டப் பயிர்கள் தோற்றம் கொண்டன. காப்பி, தேயிலை, ரப்பர் போன்ற பெயர்களைக்கூடத் தமிழன் அறிந்திருக்கவில்லை. அன்றும் பொருளாதார முன்னேற்றம், ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் அன்னியச் செலவாணி போன்றவைதான் காரணங் களாக முன்வைக்கப்பட்டன. காலனி அரசு வனப்பூமியைப் பயிரிடுவதற்குக் குத்தகையாக அளித்தது. சமவெளி மனிதன் வனத்திற்குள் காலடி வைத்தான். கூடவே வனப்பாதுகாப்பு சட்டமாக்கப்பட்டது. அதுவரை வனத்தில் வாழ்ந்து, அதை பாதுகாத்துவந்த ஆதிவாசிகள் ஒடுக்கப்பட்டனர். உணவுத் தேவைக்காக நிலத்தின் சிறுபகுதியை எரியூட்டிப் பயிர் செய்து, பின் இடம் பெயர்ந்து வேற்றிடம் தேடும் ஆதிவாசிகளால் தான் காடு அழிகிறது எனக் கற்பிக்கப்பட்டது. எரியூட்டப் பட்ட சிறுபகுதி மீண்டும் குறுகியகால இடைவெளியில் காடாகி விடும் என்னும் உண்மை மறைக்கப்பட்டது. அதன் விளைவாகக் காடும் அழிந்தது. காட்டின் குழந்தைகளும் அழிந்தனர்.
இப்பேரழிவு நிகழ்ந்து கொண்டிருந்தபோது, வனங்களைக் குறித்த அறிவு தமிழில் இல்லாதிருந்தது. காலனி ஆதிக்கம் வேரூன்றுவதற்கு முன் குறுநில மன்னர்கள் வனங்களிலிருந்து மரங்களை வெட்டுவதை மட்டுமல்ல, இலைகளைப் பறிப்பதைக் கூட குற்றமாகக் கருதினர். ஆதிவாசிகளுக்குத் தெரியும். தாயின் மடியைப்போல் அதைக் கருதினர். ஆதிவாசிகளிடம் மொழியில்லா திருந்தது. சமவெளி மனிதர்களுக்கு வனங்களைக் கற்றுக் கொடுக்க அவர்களால் இயலவில்லை. இதன் விளைவுதான் இன்று நாம் எதிர்கொள்ளும் பேரழிவுகள்.
வனங்களைப் போல்தான் கடலும். அங்கு சமநிலை குலைவு சிறிய அளவில் நிகழ்ந்தாலும் பேரழிவிற்கு வழி வகுத்துவிடும். கடலின் குழந்தைகள் அவர்கள். அவர்களிடமிருந்து கடல் குறித்த அறிவைப் பெற்றாக வேண்டும். அறிவின்மையே அழிவின் ஊற்றுக்கண். இன்றும் பொருளாதார முன்னேற்றம் அன்னியச் செலாவணி போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதிகாரமையங்கள் அன்றும் இன்றும் ஒருபோல்தான் இயங்கு கின்றன. பேரழிவு நிகழ்வதின் முன் விழித்துக்கொள்ள வேண்டும். கடலின் மக்களிடம் உரையாடி, கடலை அறிந்துகொள்ள வேண்டும்.
வறீதையா கடலின் குழந்தை. மரபு ஏராளமான அறிவை அவரிடம் பதிவு செய்துள்ளது. அனைத்தும் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாகத் தங்கள் வாழ்வனுபவத்திலிருந்து பெற்றுக் கொண்டவை. வலைவளம் சிறக்க மழை பெய்தாக வேண்டுமென்ற தமிழனின் அறிவு புறக்கணிக்கக் கூடியதல்ல. வறீதையா ஓர் விஞ்ஞானி, விஞ்ஞானத்தின் மொழியையே அவர் பயன்படுத்துகிறார். மரபு தன்னில் பதிவு செய்த அறிவை விஞ்ஞான அடிப்படையில் அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. கருத்துப் பரிமாற்றத்திற்கான மொழியும் அவருக்குக் கைகூடி யுள்ளது. வரப்போகும் பேரழிவை முன்னுணர்ந்து கடலின் குழந்தை பதைபதைப்புடன் உரத்த குரலில் கூவுகிறது. கடலைப் புரிந்துகொள்ள வேண்டுகிறது. இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கட்டுரைகளிலும் கடல் அலையின் குரலாக இது ஒலித்துக் கொண்டிருக்கிறது. வறீதையா திறந்த மனதுடன் உரையாடுகிறார்; நிலம் சார்ந்த மக்களோடும், கடலோர மக்களுடனும் உரையாடுகிறார்.
‘என்னைத் தீண்டிய கடலில்’ கடலை அறிமுகம் செய் கிறார். பூச்சிகள் கடலில் அமிழ்ந்தவிடாமல் மேலே மிதக் கின்றன. வறீதையா கூறுகிறார், “ஹைட்ரஜன் அயனிகளின் பிணைப்பினால் நீர்த்திரவத்தின் மேற்பரப்பு மெல்லிய தோல் போல் இயங்குகிறது. பூச்சிகள் போன்ற சிறு பொருட்கள் அதனுள் அமிழ்ந்துவிடாமல் மேலே மிதப்பதற்கு இந்த ‘பரப்பு ஈர்ப்பு’ தான் (Surface tension) காரணம். “தன் நேரடி அணுகலில் எழும் கேள்விகளுக்கு அறிவியலில் விடை தேடும்பொழுது அவருடைய அனுபவம் முழுமை பெறுகிறது. வாழ்வின் மீதான நேர்மையான அக்கறை, உணர்வுத்தளத்திலான ஈடுபாடு. வறட்டு அறிவியல் கோட்பாட்டாளர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திவிடுகிறது. ‘மச்சம்’ கடல் மீன்கள்மீது நம் கவனத் தை ஈர்க்கிறது. “ஒமேகா-3-கொழுப்பு அமிலம் மனித மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது”. நிலம் சார்ந்த உயிரினங்களைப் போலவே மீன்களும் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. நாம் இல்லாமல் மீன்கள் வாழ்ந்துகொள்ளும். மீனினமில்லாமல் போனால் மனிதனுக்கு எதிர்காலமில்லை.” மீன்களைக் குறித்து நாம் அறிந்திருக்கலாம். ஆனால் பேருண்மையை வறீதையா வின் மொழி மூலம்தான் அறியமுடியும். ‘கோடரி’ மனிதனுக் கும் இந்த இயற்கைக்குமிடையிலான உறவை ஆராய்கிறது. உயிர் வாழ்தலின் சூட்சுமத்தை அவன் காதில் ஓதிக்கொண் டிருக்கிறது. நாகரிக மனிதன் காதுகளை நிலத்தில் பதித்து உற்றுக் கேட்கத் தவறி விட்டான். தாயுள்ளத்தின் கனிவு. கண் முன்னால் குழந்தைகளின் அறிவின்மையைக் கண்டு பரிவு கொள்ளும் ஒரு தாயின் கனிவு.
மழைக்காலத்தில் அறுவடையாகும் நெத்திலி மீன்கள் உலர்த்த வழியில்லாமல் அழிகின்றன. “பருவப் பயிரான கரும்பு விளைச்சலை நம்பிக் கரும்புச் சாறு பிழியும் ஆலைகளும் சர்க்கரை ஆலைகளும் இலாபகராமாக இயங்குவது சாத்திய மென்றால் அதுபோலவே கடற்கரைப் பகுதிகளில் மீன் பண்ட உற்பத்தி ஆலைகள் ஏன் இயங்க முடியாது?”
“அணியம்” கட்டுரையில் அவர் எழுப்பும் இக்கேள்வியை யார் எதிர்கொள்வது? குமரி முனையில் மீனவச் சமூகம் நேரிடும் கலாச்சார ஒடுக்குதலின் வேர்கள் நெடியவை. ஒரு பூர்வக்குடிச் சமூகம் அங்கே மெல்லச் சாகிறது” என்கிறார். கடலோரச் சமூகத்தின் அழிவு கடலின் அழிவிற்குக் கதவைத் திறந்துவிடக்கூடும். காட்டில் நிகழ்ந்ததும் இதுவே. வறீதையா “கடற்கரைக்கோர் இரங்கற்பா” பாடுகிறார். காதுள்ளவர்கள் கேட்க முடியும் “சுனாமி: ஈவும் இழப்பும்” கட்டுரையில் தமிழகக் கடற்கரையில் சுனாமி தோற்றுவித்த இலாப நஷ்டக் கணக்கு களைச் சரிபார்க்கிறார். பேரழிவில் சில எதிர்கால நம்பிக்கை களும் அவர் கண்களுக்குத் தென்பட்டுள்ளன. அறிவுத் தளத்தில் இயங்கும் சிறு குழுவின்’ தோற்றம் அது. சிறு துளிர்தான். ஆலமரமாக வளர வேண்டும். கடலோரச் சமூகமே அதற்குப் பொறுப்பு.
வறீதையாவின் மனம் இரு துருவங்களில் ஊசலாடுகிறது. “மரணம்” ஒரு துருவம். “வாழ்வின் பெறுமதியை நிர்ணயிப்பது இறப்புதான் . . . கடலோரச் சமூகம் மரணத்துடன் நெருங்கி உறவாடுகிறது. எத்தனை எத்தனை வகையான மரணங்கள்.” இன்று ஒட்டுமொத்த கடலோரச் சமூகமே மாயக்கரங்களால் மரணக்குழியில் தள்ளப்படுகிறது. மீள்வதற்கு அதற்குள்ள வழி ஒன்றுதான். அது “ரௌத்ரம் பழக” வேண்டும் “ரௌத்ரம்” வன்முறையின் முகமல்ல. அது ஆக்க சக்தி.
“கடலுக்கும் உங்களுக்கும் தொப்புள்கொடி உறவு இருக் கிறது. அடுத்த முறை நீங்கள் கடலைப் பார்க்க நேர்ந்தால் கண்ணுக்குப் புலப்படும் தொலைவுக்கு அப்பாலும் உங்களால் பார்க்க முடியும்” வறீதையாவின் எழுத்து நிகழ்த்தும் பெரும் சாதனை இது.
No comments:
Post a Comment