அறிவியல் ஓர் அறிவுத் தேடல்; உலகின் கூறுகளை ஒட்டு மொத்தமாகவும் நுண்கூறுகளாகவும், புரிந்துகொள்ள உதவும் தேடல். நாம் வாழும் உலகு, மண்ணாகவும் நீராகவும் காற்றாகவும் நம்முடைய அன்றாட வாழ்வனுபவங்களை ஒட்டிய மனப் படிமங்களாகவும் உள்ளன. ஆனால் இவை அத்தனைக்கும் எல்லை கட்டியபடி இருப்பது கடல். உலகம் ஆழியால் சூழப் பட்டுக் கிடக்கிறது.
நாம் வாழும் பூமிக்கோளத்தின் 80 விழுக்காடு கடலே. இக்கடலைத் தினந்தோறும் அனுபவித்த ஒருவரின் கவிதை நயம் கொண்ட பதிவுகளாகவும் கடலோடிகளின், கடல் சார்ந்த மக்களின் வாழ்க்கையையும் கலாச்சாரத் தனிச்சிறப்புகளையும் நமக்கு நெருக்கமாய்க் கொணரும் படைப்புகளாகவும் இக் கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒரு கடலோடி தன்னைத் தீண்டிய கடலனுபவத்தை, அக்கடலின் அறிவியலை எளிய தமிழில் நமக்குப் பிட்டுப்பிட்டுத் தருவதாய் அமைகின்றன இக்கட்டுரைகள். இவற்றினூடே கடலின் இரகசியங்கள் சொல்லோவியங் களாக உருவெடுக்கின்றன.
தொல்காப்பியர் நெய்தலின் உரிப்பொருள் ‘இரங்கலும் இரங்கல் நிமித்தமும்’ எனக் குறிப்பிட்டார். அழுகையை நெய்தல் நிலத்துக்கே உரிய தனி இராகமாக அவர் சொல்லிச் சென்றுள்ளார். மரணம் கடற்கரையில் எதிர்கொள்ளப்படும் விதமும் அது கொண்டாடப்படும் தனித்தன்மையும் மரணத்தின் உள்ளர்த்தத் தை இன்னொரு வெளிச்சத்தில் நமக்குக் காட்டுகிறது.
பூமிக்கு எல்லை கடல்; பூமியின் விளிம்பில் வாழும் மக்கள் விளிம்புநிலை மக்கள். அவர்களைச் சமூகத்தின் விளிம்பு நிலையில் வைத்துப் பார்ப்பது பரவலான ஒரு கண்ணோட்டம். அம் மக்களில் சிலர் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களின் பொருட்டு ரௌத்ரம் பழகி வாழ்ந்து காட்டிய விந்தையை சர்வசாதாரண மாகக் கதையாய்த் தருகிறது.
இளைய தமிழ்ச் சமுதாயத்துக்கு இக்கட்டுரைகள் புதிய புரிதலைத் தருகின்றன; மேன்மையான வாழ்க்கை மதிப்பீடு களை முன்னிறுத்துகின்றன; அறிவியலையும் அனுபவத்தையும் கலந்து புதுமையான சொல்லாக்கத்தைத் தமிழ் மொழிக்குத் தருகின்றன; நேர்த்தியுடனும் மனித நேயத்துடனும் நம் மனதைத் தொட்டு, சவால்களை எதார்த்தமாய்ச் சந்திக்கத் தூண்டுகின்றன.
வறீதையாவுக்கு என் வாழ்த்துகள்.
பிரான்சிஸ் செஜயபதி.சே.ச
No comments:
Post a Comment