Thursday, 22 July 2021

சமஸ் என்னும் ஊடகர்

 #சமஸ் #Samas 

சமஸ் என்கிற ஆளுமையை நான் முதன்முதலாய்ச் சந்தித்தது 2013இல் என்று நினைவு. 

கடல் தொடரை முன்னிட்டு என்னைச் சந்திப்பதற்காகத் தென்னெல்லைப் போராட்ட வீரர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவுடன் வீட்டுக்கு வந்திருந்தார். நெய்தல் வாழ்வைக் குறித்துக் கண்டவர் கண்டபடி எழுதிக் கொண்டிருக்கும் சூழலில் சமசின் தொடர் அதிலிருந்தெல்லாம் மாறுபட்டதாய் இருக்கவேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டேன். வெளியிடப்படும் தரவுகள் துல்லியமாய் இருக்க வேண்டும் என்பதற்காக ஜோ டி குரூசுடனும், என்னுடனும் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்வார்.  ஆனால் மனிதர் அந்தத் தொடரில் செலுத்திய உழைப்பும் பேணிய அறிவு நேர்மையும் என்னை வியக்க வைத்தது. என்ன வேகம், எத்தனை கூர்மை. எப்படிப்பட்ட பேருழைப்பு! கடலை வாசகர்களின் வரவேற்பறையில் கொணர்ந்த தனித் திறமை. மிகக் குறுகிய காலத்தில் தமிழகக் கடற்கரையைப் பொதுவெளியின் கவனிப்பில் கொணர்ந்த தொடர் அது. தமிழ்ப் பரப்பில் கடற்கரையோடு ஒரு நேர்மையான உரையாடலை முதன்முறையாக நிகழ்த்திய சமவெளி மனிதனாக சமசைப் பார்க்கிறேன். உழைத்து முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு அவர் சரியான முன்னுதாரணம்.


அவரது ‘யாருடைய எலிகள் நாம்’ நூலை நாகர்கோவிலில் அறிமுகப்படுத்திய நிகழ்வில் என்னை ஒரு நண்பர்  அவரது துணைவிக்கு அறிமுகப்படுத்தியபோது சிரித்துக்கொண்டே சொன்னார், ‘ஒங்க புக்ஸைத்தான் பரிச்சைக்குப் படிக்கிற மாதிரி எப்பவும் படிச்சுட்டே இருந்தார்’ என்றார். அது அவர் கடல் தொடர் எழுதிய காலமாக இருக்கவேண்டும். இப்படியே ஒவ்வொரு களத்திலும் அவர் இயங்கியிருக்கிறார். இந்தியாவின் வண்ணங்கள், ஐரோப்பியப் பயணக் கட்டுரைகளிலும் அதே தேடலையும் தீவிர வாசிப்பையும் பார்த்தேன். கல்விப்புலத்தைத் தாண்டிய ஸ்காலர்ஷிப், ஓய்வறியாத உழைப்பு- இரண்டும் அவரை இந்த இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது என்றால் பிழையில்லை.  


நெய்தல் குறித்து 1990களிலிருந்தே நான் எழுதி வருகிறேன் என்றாலும் தி இந்துவில் எழுத வாய்த்த நடுப்பக்கக் கட்டுரைகள் வாசகர்களுக்கு என்னைப் பரவலாக அடையாளம் காட்டின. மிக முக்கியமாக, எழுத்துச் சுதந்திரத்தைக் காவுகேளாமல் அமைந்த வாய்ப்பு அது. பிற்காலத்தில் உயிர்மூச்சு இணைப்பில் கடல் குறித்து ஒரு தொடரை எழுதுவதற்கும் சமசின் அறிமுகமே தொடக்கமாய் அமைந்தது. வெகுமக்கள் பத்திரிகையில் கட்டுரை எழுதுவதன் நுணுக்கங்களை ஆதி வள்ளியப்பன், ஆசைத்தம்பி உள்ளிட்ட அந்த இளம் ஆசிரியர் குழுவிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வாய்த்தது. பலவற்றில் சமசுடன் முரண்பட்டிருக்கிறேன் என்றாலும் அது தோழமையின் அகக்காழுக்குள் நேர்வது. அவற்றால் எங்கள் உறவில் விரிசல் நேர்ந்ததில்லை. உதாரணமாக, ‘தோழர், இந்துவின் செய்திப் பக்கங்களும் நடுப்பக்கங்களும் இருவேறு அப்பாக்களின் பிள்ளைகள்போல் தெரிகிறதே’ என்று ஒருமுறை அவரிடம் குறைபட்டுக்கொண்டபோது ஒரு புன்முறுவலை மட்டுமே பதிலாக உதிர்த்தார். 


2018 மே 22  ஸ்டெர்லைட் அரச வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் இரண்டு முழுப்பக்கப் புகைப்படங்களோடு அந்த இதழில் செய்திகள் வெளியானபோது  நடுப்பக்கத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு என்ன பெறுமதி என்கிற கொதிப்பே ஏற்பட்டது. இவை அந்தந்த இதழ் உரிமையாளரின் கொள்கை நிலைப்பாடாய் இருக்கலாம். அதில் பணியாளர்கள் பெரிதாய்த் தலையிட முடியாது. ஆனால் கார்ப்பொரேட் அச்சு ஊடகங்கள் நீண்டகாலம் இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்க முடியாது. தி இந்து தமிழ் போல, நியூஸ் 18 தமிழ் அலைவரிசையும் இளம் ஊடகர்களின் சிறு குழுவினால் வடிவமைத்து உருவாக்கப்பட்டதுதான். அங்கு என்ன நிகழ்ந்தது என்பது இரகசியம் அல்ல. 


செய்தி ஏகபோகம்  சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிட வேண்டும்.  தி வயர், ஸ்க்ரோல் போன்றவை இன்று வெற்றிகரமான மாற்று ஊடகங்களாய்ச் சாதித்திருக்கின்றன.  சுதந்திர சிந்தனை கொண்ட, கையில் சரக்கு இருக்கிற ஊடகர் எவரும் பிழைப்புக்காக ஒரு பத்திரிகை நிறுவனத்திடம் பழிகிடக்க வேண்டியதில்லை.  துடிப்பான திறமையான பல ஊடகர்கள் ஊடக நிறுவனங்களிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது வெளியேற்றப்படுகிறார்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். சமசின் முடிவை அவற்றோடு முடிச்சுப் போடவேண்டியதும் இல்லை. 


இது ஊடகர்களுக்குச் சவாலான காலம்தான். ஆனால் சமஸ் போன்றவர்களுக்கு இது சாலையின் முடிவல்ல. 


பிற்பகல் 14.06.2021.

Tuesday, 20 July 2021

ஏடிஎம் கட்டணம்

வங்கி என்பது ஒரு சேவையளிக்கும் நிறுவனம் என்றால், அதன் இலக்கும் மையமும் வடிக்கையாளர் என்றால் வங்கிப் பரிவர்த்தனைக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் வாடிக்கையாளரின் பங்கேற்பு வரையறுக்கப்பட்டுள்ளதா?

================================

இந்திராகாந்தி ஒன்றிய அரசின் தலைமை அமைச்சராயிருந்த காலத்தில் பல அதிரடி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவற்றில் முக்கியமான இரண்டு- மன்னர் நிதிநல்கை ஒழிப்பு, வங்கி அரசுடைமையாக்கம் (#Nationalisation_of_Banks). வங்கிகள் வணிக வளர்ச்சியைக் கடந்து மக்களுக்குப் பயனளிக்கும் பொருட்டு அவற்றை அரசுடைமையாக்குவது தேவை என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர். அண்மைக் காலங்களில் தேசிய வங்கிகளின் செயல்பாடுகள் அந்த இலக்கையே கேள்விக்குறியாக்கி வருகிறது. முன்னணித் தனியார் வங்கியின் ஒரு கிளையில் பணத்தை வங்கியில் போடுவதற்கு இலட்சத்துக்கு ரூ.500 கையாளும் கட்டணமாய் (#handling_charges) செலுத்த வேண்டும். ‘கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமைகள் அம்மணமாய் ஆடிக்கொண்டிருந்த’ கதையாக அரசுடைமை வங்கிகள் டிஜிற்றல் ஈட்டிக்காரன்களாய் (#pawn_brokers) மாறிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கொடுமை இந்திய ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் ஏடிஎம்/ வங்கிப் பணப் பரிவர்தனைக்கான (#ATM_charges) உபரிக்கட்டண அறிவிப்பு. ‘மாதத்துக்கு நான்கு முறைக்கு மேல் வாடிக்கையாளர் ஏடிஎம் இல்/ வங்கியில் பணம் எடுத்தால், முறைக்கு ரூ.15/- கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படும் ’. தொடக்கத்தில் வங்கிப் பரிவர்த்தனைகளை இயந்திரமயமாக்கினால் இரு தரப்பும் பயன்பெறலாம் என்கிற புரிதல் உருவாக்கப்பட்டது. வங்கியில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. ஏடிஎம் சேவைக்காக அட்டைதாரர்களிடம் ஆண்டுதோறும் சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமலே அன்றாடம் ரூ.40000வரை ஏடிஎம் இல் எடுத்துக் கொள்ளலாம் என்றனர். பிறகு அது 20,000ஆகக் குறைக்கப்பட்டது. ’பயணத்தின்போது பணத்தை உடனெடுத்துச் செல்லவேண்டியதில்லை’ என்கிற வசதி பலருக்கும் ஆறுதலாய் இருந்தது. இந்தப் புதிய அறிவிப்பு அதில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. பணமில்லாப் பரிவர்த்தனையை நடைமுறைப் படுத்தும் நோக்கில் தனியார் முகமைகள் நடத்தும் டிஜிடல் பரிவர்த்தனை (#e_pay) முறையில் நுகர்வோர் ஏமாளிகளாகிறார்கள். ஒவ்வொரு முறை நூறு ரூபாய் பரிவர்த்தனை நடைபெறும்போதும் குறிப்பிட்ட விழுக்காடு தொகை கட்டணமாய்க் கழிக்கப்படுகிறது. வெளித் தோற்றத்துக்கு வசதியாய்த் தெரிந்தாலும் இது ஒரு பெரும் மோசடிதான். அரசு- வங்கி- தனியார் பரிவர்த்தனை முகமைகள் இணைந்து நடத்தும் பகல் கொள்ளை. நமக்குத் தொடர்பில்லாத எவனோ ஒருவன் எங்கோ ஓரிடத்தில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்துகொண்டு நாம் செய்கிற ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையிலிருந்தும் குறிப்பிட்ட விழுக்காட்டை நாமறியாமல் விழுங்கிக் கொண்டிருக்கிறான்; நம் வியர்வையின் பெறுமதியை உறிஞ்சிக் கொண்டிருக்கிறான். இதை அறியவரும்போது உங்களுக்கு வலிக்கவில்லையா? பணமதிப்பிழப்பு (#demonitistion) உட்பட, அரசு மேற்கொண்டுவரும் இதுபோன்ற பொருளாதார நடவடிக்கைகளும் ஒரு புள்ளியை நோக்கி மக்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் ‘பணமில்லாப் பரிவர்த்தனை’யை (#cashless_transaction) நடைமுறைப் படுத்துவது என்பது சிறுதொழில்/ சிறுவணிகம் சார்ந்த பெரும்பான்மை மக்களின் சுதந்திரமான பொருளாதார இயக்கத்தை ‘ஒழுங்குபடுத்துதல்’ என்கிற பெயரில் ஒழித்துக் கட்டிவிட்டுப் ‘பெருவணிக ஏகபோக’த்துக்கு (#business_monopoly) வழிவகுத்துவிடும். நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? வங்கி என்பது ஒரு சேவையளிக்கும் நிறுவனம் என்றால், அதன் இலக்கும் மையமும் வடிக்கையாளர் என்றால் வங்கிப் பரிவர்த்தனைக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் வாடிக்கையாளரின் பங்கேற்பு வரையறுக்கப்பட்டுள்ளதா? என் கேள்விகள் பாமரத்தனமாக இருக்கலாம். இவை அடிப்படைப் புரிதலுக்காக மட்டுமே. வங்கி நடைமுறை குறித்த புரிதல் கொண்டவர்கள் சொன்னால் எங்களைப் போன்றவர்களுக்குத் தெளிவு கிடைக்கும்.

மீன்வள மசோதா: இலக்குத் தவறிய தோட்டா


 1960கள் தொடங்கி, ஒன்றிய அரசு நவீன தொழில் நுட்பங்களில் காட்டிவந்துள்ள தாராளவாத அணுகுமுறையும், வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களைக் கையாள்வதில் காட்டிவரும் அலட்சியமும்தான் கடல்மீன்வள வீழ்ச்சிக்கும் மீனவர் வாழ்வாதார இழப்புக்கும் முக்கியமான காரணங்கள்.

==================================

2021 மழைக்காலப் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு ஒப்புதல் பெறத் திட்டமிட்டுள்ள  23 மசோதாக்களில் ஒன்றான கடல் மீன்வள (ஒழுங்காற்று) மசோதா (2021) மீனவர்களிடையே மீண்டும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது. இம்மசோதா ஏற்கனவே இருமுறை (2009, 2019) வெளியிடப்பட்டு, மீனவர்களின் பரவலான எதிர்ப்பினால் கைவிடப்பட்ட ஒன்று.

 

புரத உணவுத் தேவையின் பொருட்டு இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் ஒன்றிய அரசு விசைப்படகு, இழுவைமடி தொழில் நுட்பங்களை மீனவர்களுக்குக் கொடுத்தது. இயந்திரங்களின் உதவியின்றி எளிமையான கலன்களில் சிறு தொலைவுக்குள்ளே மீன்பிடித்துத் திரும்பிய காலங்களில் பெருமுதலீடுகள் தேவைப்படவில்லை; இயக்குச் செலவுகளும் ஏற்படவில்லை.

 

முதலீடு/ தொழில்நுட்ப அடிப்படையில் கட்டுமர/ நாட்டுப் படகு, இயந்திர நாட்டுப்படகு/ இயந்திரப் படகு, விசைப்படகு என்னும் மூன்று பிரிவினர் கடல்மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். ஏறத்தாழ 90,000 விசைப்படகுகள் இந்தியக் கடல்களில் இயங்கிவருகின்றன. கரைக்கடலில் குறைவான கடற்பரப்பில், குறைந்துவரும் மீன்வளங்களை அறுவடை செய்வதில் மீனவர்களுக்கிடையில் கடும் போட்டியும் மோதல்களும் எழுகின்றன. நவீன தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை பெருமுதலீடு, எரிபொருள், பராமரிப்பு உள்ளிட்ட அன்றாடச் செலவினங்கள் புதிய நெருக்கடிகளாகும்.  முதலீடுகள் அதிகரிக்க அதிகரிக்க, அதிக அறுவடையைக் குறிவைத்து உட்கடலுக்குப் போகும் நிர்பந்தம் ஏற்பட்டது.

 

இந்தியாவின் முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பரப்பு 20.2 இலட்சம் ச.கி.மீ. கரைக்கடல் பகுதிகளின் மிகை முதலீடும் தொழில் நெரிசலும் ஏற்பட்டிருக்கும் அதேவேளையில் ஆழ்கடலிலுள்ள மீன்வளம் யாரால் அறுவடை செய்யப்பட்டு வருகிறது?

 

ஒன்றிய அரசு இந்தியக் கடல்களில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பொருட்டு ஆழ்கடல் மீன்பிடி கொள்கை (Deep sea Fishing Policy- 1977), இந்தியக் கடல் மண்டலங்கள் (வெளிநாட்டுக் கப்பல் மீன்பிடி ஒழுங்காற்றுதல்) சட்டம் (1981), வரன்முறைக் கொள்கை (Charter Policy- 1986) ஆகியவற்றை வெளியிட்டது. நடைமுறையில் இவையனைத்தும் தோல்வியைத் தழுவின. தேசிய மீன்தொழிலாளர் பேரவையின் எதிர்ப்பு காரணமாக வரன்முறைக் கொள்கை திரும்பப் பெறப்பட்டது. தொடர்ந்து, தேசிய மீன்வளக் கொள்கையின் (National Fisheries Policy) கீழ் (1991) கூட்டு மீன்பிடி திட்டத்தில் (Joint Ventures) நரசிம்மராவ் அரசு வெளிநாட்டுக் கப்பல்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கியது. இதற்கு எதிராக மீனவர்கள் நாடுதழுவிய போராட்டத்தில் இறங்கினர். இந்தப் பின்னணியில் ‘சுதர்சன் குழு’ (1994) முக்கியமான பரிந்துரைகளை வழங்கியது; அவற்றில் சில:

 

(1) குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் கண்காணிக்கப்பட வேண்டும்;

(2) (கூட்டு) மீன்பிடி திட்டத்தின் கீழ் 100 விழுக்காடு வெளிநாட்டு முதலீடு கொண்ட இந்தியக் கப்பல் உள்ளிட்ட அனைத்துக் கப்பல்களிலும் இருப்பிடம் காட்டும் தொழில்நுட்பம் நிறுவப்பட வேண்டும்;

(3) முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பகுதியில் இயங்கும் மீன்பிடி கலன்களுக்கு அறுவடை அறிக்கை முறையை கட்டாயமாக்க வேண்டும்;

(4) பாரம்பரிய/ சிறுதொழில் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் பயிற்சி அளிக்க வேண்டும்; ஆழ்கடல் மீன்பிடித்தலில் இம்மீனவர்கள் இறங்கும் வண்ணம் மீனவர் கூட்டுறவு அமைப்புகளுக்கு உதவவேண்டும்.

 

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதன் காரணமாக இந்தியக் கடல்களில் மீன் பஞ்சம் நேர்ந்துள்ளது’ என முராரிக் குழு, அதன் அறிக்கையில் (1996) சுட்டிக்காட்டியது. முக்கியமாக, ‘ஒன்றிய அரசு பன்னாட்டுக் கப்பல்களின் மீன்பிடி உரிமங்களைத் திரும்பப் பெறவேண்டும்எனப் பரிந்துரைத்தது. ஆனால் சுதர்சன் குழு, முராரி குழு பரிந்துரைகளை அரசு நடைமுறைப் படுத்தவேயில்லை.

 

உயர் அதிகார கடல் மீன்வள நிலைக்குழு (High Powered Committee on Marine Fisheries) அனுமதிக் கடிதத் திட்டத்தின்படி (Letter of Permit- LoP, 2004) இரண்டு நிபந்தனைகளுடன் பன்னாட்டுக் கப்பல்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கியது:

 

(அ) கப்பல்கள் கடல் பயண விவரங்களை இந்திய மீன்வள அளவைதளத்தில் (மும்பை) முன்கூட்டிச் சமர்ப்பிக்க வேண்டும்;

(ஆ) காலாண்டுதோறும் அறுவடையை அறிக்கையிட வேண்டும்.

 

ஆனால் திட்ட நிபந்தனைகளைக் கப்பல்கள் பின்பற்றவில்லை. இது தொடர்பாக  நடுவண் குற்றப் புலனாய்வுக் குழு (CBI) அளித்த அறிக்கையை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், ‘(இந்தியக் கடல்களில்) எத்தனை (மீன்பிடி) கப்பல்கள் இயங்கின, எந்தக் கப்பல்கள் என்னென்ன முறையில், எவ்வளவு அறுவடை நிகழ்த்தின, எவ்வளவு அறுவடையை நடுக்கடலில் (தாய்க்கப்பல்களுக்கு) மடைமாற்றின என்கிற தரவுகள் இந்திய அரசிடம் இல்லைஎன்று குறிப்பிட்டது. இது குறித்து 03.05.2012 நாளிட்ட இந்து நாளிதழ்கடலைக் கொள்ளையிட ஓர் அனுமதித் திட்டம்என்று தலைப்பிட்டுச் செய்தி வெளியிட்டிருந்தது. ஐயப்பன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒன்றிய அரசு அரசு 2017இல் அனுமதிக் கடிதத் திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

 

‘வளரும் நாடுகள் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு வழங்கிவரும் மானியங்களும் சலுகைகளும்தான் ஆழ்கடல் மீன்வளங்களை அவைகள் கொள்ளையிட வழிவகுக்கின்றன; அம்மானியங்களை நிறுத்திவிட வேண்டும்’ என்று உலக வாணிப அமைப்பு (World Trade Organisation) கடந்த வாரம் வலியுறுத்தியுள்ளது. இவ்வமைப்பு ‘செயல்திட்டம் 2030’இன் கீழ் (WTO Agenda 2030) வளரும் நாடுகளுக்கு வழங்கியுள்ள சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியா வெளிநாட்டுக் கப்பல்களுக்குத் தாராளம் காட்டுகிறது. இது ஒருபுறமிருக்க, சீனா, தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேசிய மீன்பிடி கப்பல்கள் இந்தியக் கடல்களில் சட்டவிரோதமாக ஊடுருவி மீன்பிடிக்கின்றன. தொலைகடல் மீன்பிடிக்கு அனுப்பப்படும் 2,600 சீனக் கப்பல்களில் 500க்கு மேற்பட்டவை இந்தியப் பெருங்கடலின் மீன்வளங்களை அறுவடை செய்து கொண்டுபோகின்றன (ஷைலேந்த்ரா யஷ்வந்த்/ ஸ்க்ரோல்/15.07.2021).

 

1960கள் தொடங்கி, ஒன்றிய அரசு நவீன தொழில் நுட்பங்களில் காட்டிவந்துள்ள தாராளவாத அணுகுமுறையும், வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களைக் கையாள்வதில் காட்டிவரும் அலட்சியமும்தான் கடல்மீன்வள வீழ்ச்சிக்கும் மீனவர் வாழ்வாதார இழப்புக்கும் முக்கியமான காரணங்கள் என்பதை இவ்விவரங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். ஆனால் அரசு முன்வைக்கும் மீன்வள (ஒழுங்காற்று, மேலாண்மை) மசோதா இந்திய மீனவர்கள் 12 கடல்மைலைத் தாண்டிச் செல்வதற்கு  ஏராளாம் கட்டுப்பாடுகளையும் கட்டணங்களையும் விதிக்கிறது. வாழ்வாதார உரிமைக்கான மீனவர்களின் வலி மிகுந்த போராட்டம் முடிவற்று நீள்கிறது.

 

காந்தியப் பொருளாதார வல்லுநர் ஜே.சி.குமரப்பா, ‘அரசின் வேளாண் உற்பத்திக் கொள்கை இலாபம் சார்ந்ததாய் இராமல், இயற்கையையும் அதைச் சார்ந்த மக்களையும் முன்னிறுத்த வேண்டும்’ என்பார். ‘மீன்வள மேலாண்மையில் உலகநாடுகள் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு முன்னுரிமை தரவேண்டும்’ என உலக உணவு, வேளாண் அமைப்பின் ஆவணமான ‘பொறுப்பார்ந்த மீன்வள நடத்தை விதிகள்’ (1995) வலியுறுத்துகிறது.

 

ஒன்றிய கால்நடை, மீன்வள அமைச்சர் இம்மசோதா குறித்து  உறுப்பினர்களின் கருத்தைக் கேட்பதற்காக ஜூலை 15இல் ஓர் இணையவழிக் கலந்தாய்வை ஏற்பாடு செய்திருந்தார். குஜராத் முதல் மேற்கு வங்கம் வரை 82 கடலோரப் பாரளுமன்றத் தொகுதிகள் உள்ளன. மீனவர்கள் வாழிட, வாழ்வாதாரச் சிக்கல்கள் குறித்து கடலோர பாராளுமன்ற/ சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து உரையாடுவதன் வழி கொள்கை வகுக்கும் தளங்களில் அவற்றை எடுத்துச்சென்று தீர்வுபெற வாய்ப்புண்டு.

 

மீன்வளம் மாநிலப் பட்டியலின்கீழ் அமைந்த துறை. 12 கடல்மைலுக்கு உட்பட்ட கடலில் நேர்ந்துள்ள மிகைமுதலீடு, நாசகார மீன்பிடி போன்ற சீர்கேடுகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு அந்தந்த மாநில அரசினுடையதாகும். ‘மீன்வளம் தொடர்பான சட்டங்களை உருவாக்குவதில் மாநிலங்கள் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்’ என்று கனிமொழி எம்.பி. குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

 

நமது சட்டங்கள் நம் கடல்களின் மீன்வளங்களை நம் நாட்டு மக்களுக்குக்  கரைசேர்க்கும் வகையில் வடிவம்பெற வேண்டுமேயன்றி, சிறுதொழில் மீனவர்களைக் கடலிலிருந்து வெளியேற்றும் ஆயுதமாகிவிடக் கூடாது. நாட்டுக்கு உணவளிக்கும் அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை.

-----------------------

நன்றி: தி இந்து தமிழ்திசை/ 21.07.2021

மேலும் விவரங்களுக்கு:

1.  வறீதையா கான்ஸ்தந்தின், 2010. மீன்வள மசோதா (2009)- அடித்தள மக்கள் நோக்கில். மணிமொழி பதிப்பகம்.

2. வறீதையா கான்ஸ்தந்தின், 2013, கரைக்கு வராத மீனவத் துயரம். உயிர் எழுத்து- நெய்தல்வெளி.

3. வறீதையா கான்ஸ்தந்தின், 2021. கன்னியாகுமரி முக்குவர் (பண்பாட்டியல் வரலாறு). கடல்வெளி (விரிவுபடுத்திய மறுபதிப்பு). அமேசான் கிண்டில.


D மீடியா நேர்காணல் 21.07.2021

Sunday, 13 June 2021

புதை சங்குகுளி என்னும் புதைமணல் சாகசம்

 கி.பி.1822- 1858 காலத்தில் முத்துக்குளித்துறையில் பிரித்தானியரின் முத்து வருவாய் வீழ்ச்சியடைந்தது காலனியப் பேராசையின் கதை. முத்துச் சிப்பிகளிலிருந்து பரவிய காலராத் தொற்று, ஆயிரக்கணக்கான குளியாளிகளையும் அவர்களின் குடும்பத்தினரோடு கொன்றழித்தது.

==============================================================


உயிர்ச்சங்குப் படுகைகள் மன்னார் வளைகுடாப் பகுதியில் அருகிவருகின்றன. இந்தச் சூழலில் 2007இலிருந்து தூத்துக்குடி சங்கு குளியாளிகள் பழங்காலப் படுகைகளில் புதையுண்ட சங்குகளைச் சேகரிக்கும் தொழிலுக்கு  நகர்ந்துள்ளனர். மாவட்டத்தின் வடயெல்லையான வேம்பாருக்கும் தூத்துக்குடி துறைமுகத்துக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் 8 - 13 கடல்மைல் தொலைவில் அதிகபட்சமாக 20மீட்டர் ஆழம் வரை கம்ப்ரெசர் உதவியுடன் முக்குளித்து புதை சங்கு சேகரித்து வருகின்றனர். ஒரு படகுக்கு ஏழு குளியாளிகள், நான்கு உதவியாளர்கள். படகில் இணைக்கப்பட்டிருக்கும் கம்ப்ரெசரிலிருந்து ஒவ்வொரு குளியாளிக்கும் ஒரு குழாய் மூலம் செலுத்த வேண்டியை காற்றின் அழுத்தைத்தைக் கண்காணிப்பது, எதேனும் சிக்கல் நேர்ந்தால் குளியாளிகளை எச்சரித்து மேலே வந்துவிடுமாறு அழைப்பதும் உதவியாளர்களின் வேலை.  

‘இன்றைக்கு தூத்துக்குடியில் 600 படகுகளில் 4000 குளியாளிகள் புதை சங்கு குளித்தலில் ஈடுபடுகிறார்கள்' என்கிறார் பாலமுருகன் (32, மாதவநாயர் காலனி, தூத்துக்குடி). 12 வயதில் தன்மூச்சு சங்குகுளிக்க இறங்கிய இவர், இப்போது புதை சங்கு குளிக்கிறார். புதை சங்குகுளி தொழிலின் பின்னணியை விவரிக்கிறார் பாலமுருகன்: ‘2007இல் இரண்டேயிரண்டு படகுகள் புதை சங்கு குளித்தலுக்குப் போய்க் கொண்டிருந்தன. கல்கத்தா வியாபாரிகள் புதை சங்குகளின் தரத்தைப் பார்த்து அதிகப் பணம் கொடுத்தபோது. தூத்துக்குடி சங்கு வணிகத்தின் போக்கே தலைகீழாகிவிட்டது. புதை சங்குக்குக் கிடைக்கும் விலையில் 25%தான் உயிர்ச்சங்குக்குக் கிடைத்தது’.

2007 தொடங்கி இன்று வரை புதை சங்குகுளி தொழிலில் 85 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். உயிர் தப்பியவர்களில் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களால் பீடிக்கப்பட்டோர் 40க்கு மேல். நீண்ட காலம் சங்கு தொழிலில் ஈடுபட்டதன் காரணமாக ஏற்பட்ட தீவிர உடல் உபாதைகளால் தொழிலை விட்டு வெளியேறியவர்கள் 500க்கு மேற்பட்டோர். 

கடலுக்குள் இயங்கியவாறு அதிகபட்சம் ஒரு மணித்துளிதான் மனிதன் மூச்சுப்பிடிக்க முடியும். செயற்கை மூச்சு உபாயமின்றி இந்த ஒரு மணித்துளி நேரத்தைக் கையாளும் அபாரத் திறமைதான் தன்மூச்சு குளியாளியின் தனித்துவம். ஆனால் புதை சங்குகுளியைப் பொறுத்தவரை அப்படியல்ல. செயற்கை சுவாச உபாயத்துடன் 15- 20மீட்டர் ஆழத்தில் முக்குளித்து (அரைமணிநேர இடைவெளியுடன்) ஐந்து மணி நேரம் வேலை செய்கிறார்கள். கம்ப்ரெசர் இயந்திரத்தின் உதவியுடன் புதை சங்கு சேகரிக்கும் தொழில்முறை தற்கொலைக்கு நிகரான சாகசமே. கடலாழத்தில் நீண்டநேரம் தங்கியிருக்கையில் நைட்ரஜன் குமிள்கள்  வெளியேறி இரத்தக்குழாய்களை அடைத்துக்கொள்ளும் அபாயமுண்டு. மூட்டுகள் செயலற்றுப்போவதும், உடல்வலி ஏற்படுவதும் பக்கவாதம் ஏற்படுவதும் இதன் விளைவுகளாகும். இது தவிர காற்றழுத்த மாற்றத்தினால் செவித்திறன், கண்பார்வை, நினைவுத்திறன் இழப்பு நேர்வதும் உண்டு.  

தொழில்முறைக் குளியாளிகளுக்கு உடல்தகுதி சார்ந்து ஏற்படும் உயிர் அபாயங்களைப் பட்டியலிட்டால் நீண்டுகொண்டே போகும். வலிப்பு நோய், சுவாசக் கோளாறு, இதயநோய், புற்றுநோய் உள்ளவர்கள் தொழில்முறைக் குளியலுக்குத் தகுதியற்றவர்கள். நீரிழிவு நோயாளிகள் 30மீட்டருக்குக் கீழே முக்குளிப்பதற்கு மேலைநாடுகளில் தடை விதித்துள்ளனர். அங்கே பொழுதுபோக்குக் குளியாளிகள், தொழில்முறைக் குளியாளிகள் எவரானாலும் உடல்தகுதிச் சான்று பெற்றாகவேண்டும். இந்தியாவில் முக்குளிக்கும் தொழிலாளிகளுக்கு இவை குறித்த அடிப்படை விழிப்புணர்வு கிடையாது. அரசுத் தரப்பும் இதுகுறித்து இன்றுவரை அக்கறைப் பட்டதாய்த் தெரியவிவில்லை. 

உயிரற்ற சங்குகளின் இருப்பு நீண்ட காலத் தொழிலுக்குத் தாக்குப் பிடிக்கும் என்று மாரிலிங்கம் (34, திரேஸ்புரம், தூத்துக்குடி) குறிப்பிடுகிறார். ‘ஒருநாள் குளியலில் அதிக பட்சம் 35, 40 சங்குகள் வரை எடுத்திருக்கிறேன். பத்தாயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைத்துண்டு’ என்கிறார் இவர். தடையற்ற தொழிலும் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு பெரிய வருமானமும்தான் உயிருக்கு ஆபத்தான சாகசத்தில் அவர்களை ஈடுபடவைக்கிறது.

கி.பி.1822- 1858 காலத்தில் முத்துக்குளித்துறையில் பிரித்தானியரின் முத்து வருவாய் வீழ்ச்சியடைந்தது காலனியப் பேராசையின் கதை. முத்துச் சிப்பிகளிலிருந்து பரவிய காலராத் தொற்று, ஆயிரக்கணக்கான குளியாளிகளையும் அவர்களின் குடும்பத்தினரோடு கொன்றழித்தது. அடிப்படை வசதிகளற்ற, சுகாதாரமற்ற சூழலில் 15000 முதல் 30000 சங்குகுளியாளிகளைக் குடும்பத்தினருடன் முகாம்களில் அடைத்து வைத்திருந்தனர்.  கொள்ளைநோய் பரவிக்கொண்டிருந்த சூழலிலும் அவர்களை முத்துக்குளிக்குமாறு அச்சுறுத்தினர். 

தன்மூச்சு சங்கு குளியாளியான பரமசிவன் (62, மேட்டுப்பட்டி) 2008இல் புதை சங்குகுளித்தலுக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்து தடையாணையும் பெற்றார். உள்ளூர்க் குளியாளிகளின் எதிர்ப்பின் காரணமாக வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்ட இவர், இறுதியில் தானும் புதை சங்கு குளியாளியானார். பரமசிவனின் கதை கடலோடிகளின் பேராசையின் அடையாளமா அல்லது, அவர்கள் ஆட்பட்டிருக்கும் வாழ்வாதார நெருக்கடியின் வெளிப்பாடா?

1975இல் தன்மூச்சு சங்குகுளி விபத்து உதவிக்கென ‘வலம்புரி’ என்கிற விசைப்படகு கடலில் தயார்நிலையில் நிறுத்தப்பட்டிருந்ததை நினைவு கூர்கிறார் தூத்துக்குடி முத்து, சங்கு குளியாளி மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் இசக்கிமுத்து (65, திரேஸ்புரம்). புதை சங்குகுளி விபத்தில் சிக்கி, ஒருவாறு கரைசேர்க்கப்படும் குளியாளியை இன்று நகரத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலில், மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் மரணம் நேர்ந்துவிடுகிறது. ‘விபத்தில் சிக்குபவர்களை மீட்பதற்காகக் கடலில் ஒரு விரைவுப்படகும் கரையில் ஒரு சிறப்பு மருத்துவமனையும் அரசுத் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்’ எனக் கேட்கிறார் இசக்கிமுத்து.  அது மட்டும் போதுமா?

2007 தொடங்கி இன்று வரை நேர்ந்துள்ள கடல் மரணங்கள், விபத்துகளைக் கணக்கில் கொண்டு மீன்வளத்துறை இத்தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டும். தடை நிரந்தரத்  தீர்வாகாது. புதை சங்கு குளித்தலால் எழ வாய்ப்புள்ள சூழலியல் மீன்வளச் சிக்கல்களை அரசு ஆய்ந்து கூடிய விரைவில் கொள்கை முடிவெடுக்க வேண்டும். அதுவரை சங்குகுளி உரிமம் வழங்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக, மேலும் இரண்டு விதிகளை இணைத்து,  நீக்குப்போக்கின்றிச் செயல்படுத்த வேண்டும்: ஒன்று- குளியாளிகளின் உடல்தகுதிச் சான்றிதழ், இரண்டு குளியாளிகள் பயன்படுத்தும் கம்ப்ரெசர் குறித்த கண்காணிப்பு.

Thursday, 3 June 2021

‘கன்னியாகுமரி முக்குவர்/ நூல் அறிமுகம்/ ச.டெக்லா

 தொலைநோக்குப் பார்வையோடு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இம்மீனவர்களின் கடந்தகால, நிகழ்கால, வாழ்வை படம்பிடித்துக் காட்டி, எதிர்காலத் திசையைக் கோடி காட்டுகிறது. மீனவர்கள் கடலிலிருந்து அந்நியர் ஆக்கப்படுகின்றார்கள் என்ற உண்மை நூல் முழுவதும் இழையோடுகிறது.

-------------------------------------------------------------------


அறிமுகம்


‘கன்னியாகுமரி முக்குவர்’ என்ற தலைப்பில் முனைவரும் பேராசிரியருமான வறீதையா கான்ஸ்தந்தின் மிக நேர்த்தியான ஒரு நூலை வெளிக் கொண்டு வருகிறார். பல நூல்கள், கட்டுரைகள் வழியாகத் தமது படைப்பாற்றலைக் கூர்மையாக வெளிப்படுத்தி, மீனவ சமுதாயத்தைக் கடல் தாயிடமிருந்து துண்டிக்க எடுக்கப்படும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக நிலைநாட்டி வருபவர் இவர். அந்த வரிசையில் விரைவில் வெளிவரவிருக்கும்  முக்குவரைப் பற்றிய இந்த நூல் பல பரிமாணங்களைக் கொண்டு ஒளிர்கின்றது. இந்த ஒளி தரும் வெப்பம் வாசிப்போர் அனைவரையும், குறிப்பாக நலிந்துவரும் சமுதாயத்தைத் தூக்கிப் பிடிக்கும் அக்கறை கொண்டோரையும், இயற்கையைப் பேணிக்காக்கத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டோரையும் ஆற்றல்படுத்தும் பெருநெருப்பாக மாறும் என்பதில் ஐயமில்லை. இந்நூலின் ஆசிரியர் வறீதையாவுக்கு உளம் நிறைந்த பாராட்டுகள்.

***


’கன்னியாகுமரி முக்குவர்’ என்ற இந்தப் புதிய படைப்பு எட்டு அத்தியாயங்களைச் சுமந்து வருகிறது. இலங்கையிலும் இந்தியாவின் ஒருசில பகுதிகளிலும் வாழ்ந்துவந்த முக்குவர்களின் வரலாற்று வேர்களைத் தேட முனைகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த இந்த மீனவ சமுதாயம், கத்தோலிக்க சமயத்தைத் தழுவுவதற்கு முன்பும் பின்பும் நிலவிய சமூக, பொருளாதார நிலை பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. கடலின் காற்றோடும் அலையோடும் நீரோட்டங்களோடும் பின்னிப் பிணைந்த மீனவ மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்வியல் சடங்குகள் அனைத்தும் உணர்வுப் பூர்வமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. நவீன மீன்பிடி தொழில்நுட்பங்களின் இரண்டு அலைகளையும் அவற்றின் நேர்மறை, எதிர்மறை விளைவுகளையும் ஆசிரியர் உறுதியுடன் பதிவு செய்கிறார்.

முக்குவர்களின் போராட்ட வாழ்வு மிகுந்த வேதனையுடன் விவரிக்கப்படுகிறது. 1982 மண்டைக்காடு நிகழ்வு, ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் கடல் வளங்களை வழித்தெடுக்கும் கொடுமை, உள்ளூர்த் தொழிலில் நவீன முறைகளைப் புகுத்தும்போது சொந்த இனத்துக்குள் ஏற்படுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசின் கடல்சார் கொள்கைகளை எதிர்த்துப் போராடவேண்டிய சூழல், வேணுகோபால் அறிக்கையின் அம்சங்களை எதார்த்தமாக்க இன்னும் தோழமைக் கரங்கள் வலுப்படுத்தப்படாமல் இருக்கும் நிலைமை போன்றவை இம்மக்களின் போராட்ட வாழ்வின் கூறுகள் என ஆசிரியர் ஆதங்கப்படுகின்றார். இம்மக்கள் 2004ஆம் ஆண்டு முதல் இன்று வரை சந்தித்த நான்கு பேரிடர்கள் இவர்களை அன்றாட மீன்பிடி தொழிலிலிருந்து அந்நியப்படுத்துவதை அனுபவப் பூர்வமாக முன்வைக்கின்றார். இந்தப் பேரிடர்கள் மக்களுக்குக் கற்றுத்தந்த பாடம், மற்றும் அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமயம் ஆகியவற்றின் செயல்பாடுகளை விமர்சனப் பார்வையோடு அலசுகின்றார். நிறைவாக, ஒருசில மாதிரிகைகள் வழியாக, முக்குவர்களின் எதிர்கால வாழ்வு எப்படி அமையவேண்டும் என்பதையும், பலவகையான தளங்களில் இம்மக்களின் பங்கேற்பும் ஈடுபாடும் தேவை என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

தொலைநோக்குப் பார்வையோடு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இம்மீனவர்களின் கடந்தகால, நிகழ்கால, வாழ்வை படம்பிடித்துக் காட்டி, எதிர்காலத் திசையைக் கோடி காட்டுகிறது. மீனவர்கள் கடலிலிருந்து அந்நியர் ஆக்கப்படுகின்றார்கள் என்ற உண்மை நூல் முழுவதும் இழையோடுகிறது. பேராசிரியர் விலங்கியல் துறையைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் வரலாறு, வழக்காறு, கடல்சார் கொள்கைகள் பற்றிய தெளிவு அவரது புலமையை எண்பிக்கின்றது. சற்றே உயர்ந்த நடையோடு எழுதப்பட்டிருந்தாலும் வாசிப்பதற்கும் சிந்திப்பதற்கும் ஏற்ற ஒரு அருமையான நூல். நீண்ட துணைநூல் பட்டியல் ஆசிரியரின் ஆய்வுப் பார்வையைக் காட்டுகிறது. இறுதியில் இணைக்கப்பட்டுள்ள இம்மக்களின் முக்குவர் மொழிவழக்கு இம்மக்களின் இனக்குழு மொழிவளத்தைப் புரிந்துகொள்ள பெரிதும் துணைபுரிகிறது.

***


ஒரு கடலும், அதன் கடற்கரையும் தங்களின் கதையைச் சொல்வது போன்ற ஒரு அனுபவம் இந்நூலைப் படிக்கும்போது எனக்கு ஏற்படுகிறது. சங்ககாலத்தில் நெய்தல் நில ஆண்களும் பெண்களும் கடற்கரைக் குருத்து (வெள்ளை) மணலில் அமர்ந்தும் ஆடியும் பாடியும் விளையாடியும் அயிலைமீன் சூப்பை அருந்தி மகிழ்ந்ததின் நீட்சியைப் பல வடிவங்களில் மீனவர்கள் அனுபவித்து வந்துள்ளனர். கட்டுமரம், கரைமடி, தட்டுமடி போன்ற பரம்பரையான மீன்பிடி ஏத்தனங்கள் சார்ந்த பழங்குடிச் சமூகத்தின் கூட்டு மனநிலையும் கூட்டுச் செயல்பாடும் இக்கடற்கரையில் நிலவின. அனைவருக்கும் தேவையானது கிடைத்தது. வேண்டியதை மட்டும் இயற்கையிடமிருந்து பெற்றுக்கொண்ட  மனநிறைவு நிலவியது. கடல் வளங்களை அனுபவித்தும் பாதுகாத்தும் மகிழ்ந்தனர். இந்த வாழ்வாதாரங்கள் அனைவருக்கும் உரியது என்ற ஆழமான உணர்வைக் கொண்டிருந்தனர்.

இச்சூழலில் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் இலாப நோக்குடன் அதிக மீன் விளைச்சலைப் பெற உள்ளூர் மக்கள் பரம்பரையான ஏத்தனங்களிலிருந்து விசைப்படகு, இயந்திரப்படகு, மீன்பிடி கப்பல் என்று ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து செல்கின்றனர். மற்றொருபுறம் ‘உலகமயமாதல்’, தாராளமயமாக்குதல்’ என்னும் கொள்கைகளுடன் அயல்நாட்டு மீன்பிடி கப்பல்கள் கடலின் வளங்களை அழிக்கத் தொடங்கின. ஒருசில பணமுதலைகள் நிறைய மீன்களைக் கரைக்குக் கொண்டுவந்தனர். ஆனால் சமூகம் பிளவுண்டது. ஏழை- பணக்காரன் என்ற பொருளாதார ஏற்றத்தாழ்வு உருவானது. பரம்பரை, நவீன மீன்பிடி முறைகளின் மோதல் கடலில் உண்டாகி, மீனவர் வாழ்வு கடலிலும் கரையிலும் ஒரு போராட்ட வாழ்வாக மாறியது. இதை ஆசிரியர் ‘சகோதர யுத்தம்’ என்று அழைக்கின்றார்.  இந்த சமுதாய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைவருக்கும் கடல் சொந்தம் என்கிற சித்தாந்தத்தை மெல்ல உடைக்கத் தொடங்கியது. ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் அனைத்து வகையான மீன்களையும் அவற்றின் குஞ்சுகள், முட்டைகளோடு கடல் அன்னையிடமிருந்து வழித்துச் சென்றன. கடலின் உரிமைக்குடிகள் வாழ்வாதாரங்களற்று நிற்கின்றனர்.

‘வளர்ச்சி’ என்ற பெயரில் அரசுத் தரப்பில் துறைமுக விரிவாக்கம், கடலின் நடுவே பாலங்கள் அமைத்தல், சுற்றுலாத் தலங்கள் நிறுவுதல் போன்ற திட்டங்களால் மீன்பாடு மேலும் அருகிப்போகவும், கடல் மாசுபடவும், கடற்கரைச் சூழல் பாதிக்கப்படவும் காரணமாகின. கடல்மணல் கொள்ளை போனது, கடற்கரையற்ற கடல் உருவானது.

வளர்ச்சிக்கு இரண்டு முகங்கள் இருப்பதைப் பார்க்கிறோம். இதைக் கருத்தில் கொண்டவராய் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ‘மக்களை மையப்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள் உருவாக வேண்டும்’ என்று பரிந்துரைக்கிறார். ‘மக்கள்’ என்று அடித்தட்டு மக்களையே அவர் குறிப்பிடுகிறார். வளர்ச்சி தேவையில்லை என்று யாரும் சொல்வதில்லை. ஆனால் அதன் பெயரால் ஒருசிலர் செல்வம் சேர்ப்பதும், இயற்கை வளங்களை அழிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே, அனைவரையும் உள்ளடக்கிய, வாழ்வாதாரங்களைப் பாதுகாத்து வளர்க்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்கள் கடலிலும் கரையிலும் உருவாக வேண்டும் என்பதை மீனவர்களின் வாழ்வனுபவத்திலிருந்து  அறியவருகிறோம்.

‘தண்ணீர்ப் பஞ்சம் என்றாலும் வெள்ளம் என்றாலும் இரட்டைப் பாதிப்புக்குள்ளாவது பெண்ணே’ என்று சுற்றுப்புறவியலாளர் வந்தனா சிவா கூறுவார். இதைப் போன்றே தொழில்நுட்ப வளர்ச்சியினால் கட்டுமரம் பரிணாம வளர்ச்சியை நோக்கிப் பயணித்தபோது அடித்தட்டு மீனவப் பெண்கள் அநேகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மீன்பாடு இல்லாத காலங்களில், மீன்பிடி தடைக் காலங்களில், இப்பெண்கள் கடன், வட்டி என்ற சுமைகளையும் சுமக்க வேண்டியிருக்கிறது.  நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வளர்ச்சி இப்பெண்களை உட்படுத்தவில்லை என்பதுதான் இன்றைய எதார்த்தம். கடல் பேரிடர்களின் காலத்தில் இப்பெண்கள் சந்தித்த துன்பங்களை ஆசிரியர் விவரமாகக் கூறுகிறார். பெண்களைப் பற்றிப் பேசும்போது மற்றொரு முக்கியமான கருத்தும் இங்கு வைக்கப்படுகிறது: கடற்கரைப் பெண்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும்  கடற்கரையிலும் சந்திக்கும் சவால்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப் படவேண்டும். இது முற்றிலும் சரியானது. பெண் எழுத்தாளர்கள் இந்தத் தளத்தில் அக்கறை காட்டவேண்டியது காலத்தின் தேவையாகும்.

‘வளர்ச்சி’ என்ற பெயரில் மீனவ சமுதாயமும், பெண்ணும், கடற்கரையும் சந்திக்கும் பிரச்சினைகள் இந்நூலில் ஆழமாக அலசப்படுகின்றன. ‘இன்னும் சில ஆண்டுகளில் தான் பிறந்து, தவழ்ந்து வளர்ந்த கடலும் கடற்கரையும் மீனவனுக்குச் சொந்தமில்லாமல் போய்விடுமோ’ என்ற ஆதங்கம் ஆசிரியருடையது மட்டுமல்ல, நம் அனைவரின் கவலையும் கூட. இத்தகைய சிந்தனைகளை வாசிப்போர் மனதில் உருவாக்கி, அவை உறுத்திக் கொண்டிருக்க ஒரு சிறந்த படைப்பைச் சமுதாயத்திற்கு வழங்கும் பேராசிரியர் வறீதையாவை நன்றியுடன் பாராட்டுகிறேன்.

 

ச.டெக்லா

(மேனாள் முதல்வர் செயின்ட் மேரீஸ் கல்லூரி, தூத்துக்குடி)

வரலாற்றுத்துறைப் பேராசிரியர், ஆய்வாளர்

பணகுடி,

21.04.2021

கண்ணீர்

கண்ணீர்

 

யேசுவின் கால்களில் மதலேன் மரியா வார்த்த கண்ணீர்

உயிரற்ற மகனின் உடலை மடியில் போட்டபடி மரியா உகுத்த கண்ணீர்

பெஞ்சமினைக் கட்டியணைத்துக்கொண்டு யோசேப்பு வடித்த கண்ணீர்

திருப்பாடல்களில் பெருகியோடும் தாவீதின் கண்ணீர்

கண்ணீர் கரைத்ததும் படைத்ததுமாய் எத்தனை எத்தனை வரலாறுகள்!

காத்திருப்பு, நினைவு, காட்சி, பிரிவு, கூடல், கலக்கம், துரோகம், வெதும்பல், இரணம்…

வெங்காயம் தொடங்கி எத்தனையோ காரணங்கள் மனிதக் கண்ணீருக்கு.

உணர்வுகளின் வெளிப்பாடாய் வடியும் கண்ணீர்

சில நேரங்களில் மனிதத்தின் அடையாளமாகவும் உயர்ந்துவிடுகிறது…

கண்ணீர் வற்றி உணர்வு மரத்துவிட்ட கடல் அபலையர் முகங்களைக் கடற்கரை நெடுகப் பார்த்திருக்கிறேன்.

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் ஒக்கும் என்பார்கள்.

போலியாய்க் கண்ணீர் வடிப்பதை நீலிக்கண்ணீர், முதலைக் கண்ணீர் என்பார்கள்.

முதலைக்கு ஏது கண்ணீர்?

உடலில் எஞ்சுகிற உப்புக் கழிவுகளைக் கண்கள் வழியாய் வெளியேற்றுகிறது முதலை.

தன் மொத்த உடலின் வியர்வையை நாய் நாக்கின் வழியாய் வெளியேற்றுவது போல.

 

அம்மாவுக்குக் கண்கள் புரை கட்டி, அறுவை சிட்சை செய்துகொண்டார். கண்ணாடி போட்டுக்கொள்ள ஒப்பவில்லை. கண்ணீர்ப்பைகள் பழுதுபட்டுப்போனதால் கண்ணீர் நேரடியாக வெளியேறும்படி செய்துவிட்டார்கள். பத்து ஆண்டுகளிலேயே பார்வை மீண்டும் மங்கத் தொடங்கிவிட்டது. ஒரு முறை என் மூத்த மகளுக்கு மருந்துக்குப் பதிலாய் ஷாம்பூவைக் கொடுத்துவிட்டார். உடனடியாக அதைச் சரிசெய்துவிட்டோம் என்றாலும் மூன்று நாட்களாய்ப் புலம்பிக்கொண்டே இருந்தார்- ஐயோ, கண்ணத்த பாவி என் பிள்ளைக்கு நஞ்சைக் கொடுத்துவிட்டேனே’ என்று.  93 வயது வரை வாழ்ந்த அவர் கடைசி நாட்களில் அரற்றுவார்- ‘ஒன்னப் பாக்க முடியில்லை மக்கா; அதத் தவிர எனக்கு ஒரு குறையும் இல்ல…’ ‘கையால என்னைப் பாருங்கம்மா’ என்று அருகில் உட்கார்ந்து கொள்வேன். அப்போதெல்லாம் குரல்தான் அவருக்குக் காட்சி.

 

கண்ணீர் என்கிற சங்கதி மட்டும் மனிதனுக்குச் சுரக்காமற்போயிருந்தால் என்னவாகியிருக்கும்?

இது பெருங்கேள்விதான்.

பரிணாமத்திலும் வரலாற்றிலும் என்னென்னவாகியிருக்குமோ, எனக்குத் தெரியாது, என் வாழ்க்கை தடம்புரண்டுபோனது. பகல் வெளிச்சத்தில் ஒரு சிறுபங்கைத்தான் கண் பெறுகிறது, அதனால்தான் பார்வைப் புலன் சாத்தியமாகிறது. அதை ஒழுங்காற்றுபவர் திருவாளர் விழித்திரை. கண்பரிசோதனை முடிந்து பகல்வெளிச்சத்தை எதிர்கொள்ள முடியாமல் கூசியபோது 40 வயதைக் கடந்திருந்தேன்.

கண்ணீர் அழுத்தக் கோளாறு சோதனை நிமித்தமாய் ஆண்டுக்கு ஓரிருமுறை விழித்திரையை வேதிமத்தால் விரித்துவைப்பார்கள். நான்கைந்துமணிநேரம் ஆனால் இயல்பாகிவிடும்தான்.

12 வருட கண்ணீர் அழுத்தச் சிகிட்சை மருந்துகள் கண்ணீர்ச் சுரப்பிகளைப் பாதித்துவிட்டன.

இரண்டு திரவங்கள் விழியின் மேற்பரப்பை நனைத்துக்கொண்டிருக்கும்- கண்ணீர், மெழுகு – இரண்டும் பழுதுபட்டுப் போயிற்று.

கண்புரை அறுவைக்குப் போனபோதுதான் அதைக் கண்டுபிடித்தார்கள். இரண்டு மணிநேரத்துக்கொருமுறை செயற்கைக் கண்ணீர்த் துளியால் கண்களை ஈரமாக்கிக் கொள்ளவேண்டும். பழைய நினைப்பில் பயணம், வேலை என்று சாகசத்துக்குத் துணிந்துவிடக் கூடாது. சுருங்கச் சொல்வதென்றால், கண்ணீர் என் வாழ்க்கையைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுவிட்டது.

என் கண்கள் இப்போது ஒரு பருவநிலை சுட்டி!

வெப்பநிலை, காற்றின் ஈரப்பத்தில் நேரும் சிறு மாற்றம் கூடக் கண்களைப் பாதித்துவிடும்.

 

ஒரு முடிச்சை அவிழ்க்கப் போனால் புதிய முடிச்சு விழுகிறது.

ஒன்றையொன்று பெரிதாக்கிப் பெருமுடிச்சாய் நிற்கிறது வாழ்க்கை.

பின்னோக்கிப் பார்த்தால் வியப்பாய் இருக்கிறது- கண்ணீரழுத்தச் சிக்கல்களோடு பணிக்காலத்தைக் கடந்துவிட்டேன். விபத்து நேர்ந்தாலும் தாமதமாய்த்தான் நேர்ந்திருக்கிறது.

காலத்துக்கு நன்றி சொல்லவேண்டும்.


சென்னை, 03.06.2021


Saturday, 1 May 2021

கவனம் பெறாத நெய்தல் திணை/ ஐந்திணை சங்கமம், சென்னை, 2013.

உரையின் காணொலியைக் காண இணைப்பைச் சொடுக்கவும்:

 https://youtu.be/JiOLc-PUnWo

மாற்றுத் தலைமை [கோடிமுனை… நூல் மதிப்புரை]

 


அண்மையில்  ஒரு பிரச்சினை வந்தது. நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத் திருச்சபையின் நிலைப்பாட்டுக்கு மாறாக ஒரு சில குருக்கள் அறிக்கைகள் விட்டார்கள். அதற்குக் கண்டனக் குரல்கள் எழுந்த உடன் திருச்சபை மேலிடம் அதன் கருத்தைத் தெளிவுபடுத்திற்று. அப்போது ஒரு கேள்வி எழுந்தது: தனிப்பட்ட ஒரு அரசியல் பணியாளருக்கு தனிப்பட்ட அரசியல் பார்வை இருக்கக்கூடாதா? இருக்கலாம்; ஆனால் அது பெரும்பாலோர் மக்கள் நலனுக்காக எடுத்த ஒரு முடிவுக்கு எதிராக இருக்கக் கூடாது. அரசியல் கட்சி ஒன்றில் ஒரு குரு சேர்ந்து செயல்படலாமா?

பெரும்பாலும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் தேர்தல் சமயத்தில்தான் எழும். ஆகவே அதுபற்றிய விவாதம் தீவிரமாக நடத்தப்பட வேண்டியது அவசியமில்லை.  ஆனால் ஒரு அருட்பணியாளர் சமூகப் பிரச்சனைகளில் தலையிடலாமா, ஆக்டிவாக ஈடுபடலாமா என்பது ஆராயப்பட  வேண்டிய கேள்வி. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உரியது இல்லை; தொடர்ந்து சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு பங்குக் குருவிற்கு அன்றாடம் அவர் நிறைவேற்ற வேண்டிய திருப்பணிகள் இருக்கும். அவற்றோடுகூட அவர் பள்ளிகளின் நிர்வாகியாக இருந்தால் அவை சம்பந்தமான வேலைகள் இருக்கும். அவற்றை மட்டும் நிறைவேற்றினால் போதுமா, அல்லது மக்களுக்கு ஆற்ற வேண்டிய பொதுத் தொண்டுகளிலும் தன்னை இணைத்துக் கொள்ளலாமா? இணைத்துக் கொள்ள வேண்டுமா?

சுனாமியின்போதும் கஜாப் புயலின்போதும் குருக்கள் பலரும் களத்தில் இறங்கிப் பணியாற்றியதைப் பார்த்தோம். இவை இயற்கைச் சீற்றங்களின் போதும் பேரிடர்களின்போதும் அவசரநிலையின் அவசரச் செயல்பாடுகள். ஆனால் எப்போதுமே சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. பொதுவான சமுதாயப் பிரச்சினைகள். ஒரு உள்ளூர் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்று பலவகைப் பிரச்சினகள். உள்ளூர் பிரச்சனைகள் பலவும் பல கிராமப் பங்குகளில் பங்குத் தந்தையிடம் கொண்டு வரப்பட்ட காலம் இருந்தது. இது பரவலாக இன்றும் தொடர்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் பங்குகளில் அன்பியங்களும் பங்குப் பேரவைகளும் செயல்படுகின்றன. அவை பக்திமுயற்சிகள், விழாக் கொண்டாட்டங்கள், அவற்றிற்கான நிதி திரட்டல் ஆகியவற்றில் மட்டும் ஈடுபடுகின்றனவா? அவற்றில் அதிகாரம் பங்குத்தந்தையிடமும் ஒரு சில மேல்மட்டத்தவரிடம் மட்டுமே குவிந்திருக்கிறதா? அடித்தள மக்களைப் பாகுபடுத்துவதும், அடிமைப் படுத்துவதும் தொடர்கின்றனவா? பெண்களை அடிமைப்படுத்துவதுபற்றி எண்ணிப் பார்க்கிறோமா? இத்தகைய சமுதாயப் பிரச்சனைகளைக் களைய யார் முயற்சி மேற்கொள்ள வேண்டும்?

இந்தக் கேள்விகளெல்லாம் எழக் காரணம் அண்மையில் நான் வாசித்த ஒரு நூல். அது பேராசிரியர் வறீதையா கான்ஸ்ததந்தின் எழுதிய கோடிமுனை முதல் ஐ.நா. சபை வரை என்ற ஒரு வித்தியாசமான புத்தகம். நகரங்களில் வாழ்வோருக்கும் கடற்கரையைத் தாண்டி நிலப்பகுதியில் வாழ்வோருக்கும் தெரியாத ஒரு சமூகமும் ஒரு வாழ்க்கையும் இருக்கின்றன என்பதை அவருடைய நூல்களைப் படித்த  பிறகுதான் நான் அறிந்து கொண்டேன். அவருடைய ஒரு நூலை The Gordian Knot என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். Kindle இல் கிடைக்கும்.

கோடிமுனை கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்திற்கு வடமேற்கே உள்ள ஒரு கடல்கரை கிராமம். நானூறு ஆண்டுப் பழமை வாய்ந்த கிறிஸதவர்களின் உறைவிடம். வன்முறைக்குப் பெயர்போன கிராமமாக இருந்த கோடிமுனை முழுவளர்ச்சி சங்கம், அக்கம்பக்கத்துப் பாராளுமன்றம் முதலான அமைப்புகளால் முற்றிலும் மாறிப்போன வரலாறு இந்த நூலின் அடித்தளமாக அமைந்திருக்கிறது.

ஆசிரியர் தனது நூல்களுக்கு ஆதாரமாகத்  தனது கள ஆய்வுகளின் தரவுகளைப் பயன்படுத்துவார். குமரிமுனைமுதல் இராமேஸ்வரம் வரையிலும் அதற்கப்பாலும் உள்ள கடற்கரை வாழ் மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன அவரது நூல்கள். இந்த நூலிலும் கோடிமுனைக் கடற்கரையில் பெரும்பான்மையாக வாழும் கத்தோலிக்க மக்களின் பிரச்சனைகளை ஆராயப்பலரை நேர்காணல் செய்திருக்கிறார். குறிப்பாக அருட்பணியாளர்கள் எட்வினும், மாற்கு ஸ்டீஃபனும் தங்களது கள அனுபங்களை விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும் பங்குமக்கள் பலரும் தங்கள் கருத்துகளை முன்வைக்கிறார்கள். ஆசிரியரும் இடையிடையே தனது கருத்தியலுக்கு அவற்றை ஆதாரமாகப் பயன்படுத்துகிறார்.

ஆசிரியரின் கருத்தியல் என்ன? கடற்கரையோரப் பங்குகளில் பெரும்பாலும் பொதுநிலையினர் பங்குத் தந்தையரைச் சார்ந்தே இருக்கிறார்கள். அப்போது பங்குத் தந்தையரின் மேலேயே பொறுப்பும் தலைமையும் சுமத்தப்படுகின்றன.  இதனால் பொதுநிலையினருக்குத் தலைமை ஏற்கப் பயிற்சி கிடைப்பதில்லை. பங்குத் தந்தையர் இடமாற்றம் செய்யப்படுவதால் எந்தப் புதுமுயற்சிக்கும் புது அமைப்பிற்கும் தொடர்ச்சி கிடைப்பதில்லை. நன்றாகச் செயல்பட்டுவந்த கோடிமுனை முழுவளர்ச்சி சங்கம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மேலும் தலைமையும் அதிகாரமும் ஒருவரிடத்தில்- சமூகத்தில் மேல் மட்டத்தினரிடத்தில் மட்டுமே குவிந்திருக்கின்றன. எனவே தலைமையில் மாற்றம் வேண்டும். அதேசமயம் சமூக நலனில் பங்குப் பணியாளர்கள் அக்கறை காட்டுவதும் அவசியமாகிறது.

பொதுநிலையினர் பங்குத் தந்தையரையும், மறைமாநிலம் நடத்தி வரும் நிறுவனங்களையும் சார்ந்திருப்பது எல்லா இடங்களிலும் காணப்படுகின்ற ஒன்றுதான். இப்போது இது நகர்ப்புறங்களில் மாறி வந்தாலும் முற்றிலுமாக இதை மாற்றுவது எப்படி? தலைமைப் பயிற்சி முகாங்கள் நடத்தப்பட்டு வந்தன. இப்போது நடத்தப்படுகின்றவா என்பது தெரியவில்லை. பங்குத்தந்தையர் தலைமைப் பொறுப்பை ஏற்காமல் தலைமை பற்றி மக்களுக்கு எப்படிக் கற்றுதருவது? அடித்தள மக்கள் குழுவாக்கம் அதற்கு ஒரு வழி என்பது வறீதையாவின் கருத்து.

கடற்கரைக் கிறிஸ்தவ சமுதாயத்தில் சில பிரச்சனைகள் சுட்டிக்காட்டப் படுகின்றன. குழந்தைகளைக் கல்விக்கூடம் அனுப்ப மறுக்கும் பெற்றோர், மதுப்பழக்கம், சாதிச் சண்டைகள் (கல்லறைத் தகர்ப்பே அவசியமாயிற்று), எதற்கெடுத்தாலும் வன்முறையில் ஈடுபடுவது முதலியவை அவற்றில் அடங்கும். எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்தக் கோட்பாடுகளையும், கிறிஸ்துவைப் பற்றியுமே அறியாத மக்கள்; தியாகம், அனுசரித்துப்போதல், பிறர்க்கு உதவுதல் முதலான விழுமியங்களும் இல்லாமை. இதற்குத் தீர்வு நல்ல கல்வியும் சமுதாய விழிப்புணர்வும்தாம். சிறுகுழுக்களில் பயிற்சி தருதல், அன்பியங்களின் நோக்கங்களை மாற்றுதல் ஆகியவை உதவும்.

இவற்றை அருட்பணியாளர் தலைமை ஏற்று நடத்தாமல் இவை நடப்பதற்கு

‘ஊக்கிகளாகச் செயல்படவேண்டும்’. ஆனால் இதில் பல பிரச்சினைகள் உள்ளன. எல்லாக் குருக்களுக்குமே சமூகத் தொண்டில் நாட்டமிருக்காது; இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு அருட்தந்தை அப்படியே ஆர்வமுடன் ஈடுபட்டால் அதற்கு எதிர்ப்புகள் பங்கு மக்களிடமிருந்தும், பிற குருக்களிடமிருந்தும் வரும். மேலிடம்கூட ஆதரவு தராமல் போகலாம். அவதூறுகளுக்கும், புறம்பேசுதலுக்கும் ஆளாகலாம்.

அருட்பணியாளர்கள் பொதுத்தொண்டிலும் ஈடபட வேண்டும். ஆனால் அவர்கள் வழிகாட்டிகளாக, ஊக்கிகளாக இருக்க வேண்டுமே தவிர தலைவர்களாக இருக்கக்கூடாது என்றால் அது முள்ளின்மேல் நடக்கும் கதை தான்.

இந்தக் கட்டுரை தீர்வு எதையும் கொடுக்கவில்லை. பேராசிரியர் வறீதையாவின் நூல் சொல்கின்ற கருத்துகளின் அடிப்படையில் பரவலான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்; ஆசிரியரின் நோக்கமும் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். 

[கோடிமுனை முதல் ஐ.நா. சபை வரை: புலம் வெளியீடு. 9840603499; விலை ரூ 150; கடல்வெளி பதிப்பாகக் கிண்டிலிலும் கிடைக்கும்].

--------------------------------

குறிப்பு: பணிநிறைவு பெற்ற பேராசிரியர் ச.வின்சென்ட் (80, மதுரை) ஆங்கிலத் துறையைச் சார்ந்தவர். கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். பாவ்லோ கொய்லோ, ஃப்ரான்ஸ் காஃப்கா, ஜோனதன் லியர், கிட்டி ஃபெர்குசன், வாங்காரி மாத்தாய் உள்ளிட்ட ஆங்கில எழுத்தாளர்களின் 15க்கு மேற்பட்ட நூல்களைத் தமிழுக்குப் பெயர்த்திருக்கிறார்.  

Tuesday, 30 March 2021

பாதையற்ற பெருவெளியில்…/வெ. ஜீவானந்தம்.


நூல் அறிமுகம்

பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் தனது ‘திணைவெளி: நிலம், சூழலியல், பண்பாடு’ நூலுக்கு அறிமுகவுரை கேட்டபோது வியப்பும் தயக்கமுமே உண்டானது. அவரது சில நூல்கள், இந்து நாளிதழில் வெளிவந்த ‘கடலம்மா பேசுறேன் கண்ணு’ தொடரை மட்டுமே படித்த எனக்கு, அவருடனான நேரடிப் பழக்கம் குறைவே. 2016இல் டாப்சிலிப்பில் நடைபெற்ற தமிழகப் பசுமைப் படைப்பாளிகள் சந்திப்பு; கோவை ‘ஓசை’ மாதக் கூட்டத்தில் சில மணிநேர உரையாடல், அவ்வளவே.

அது போலக் கடலுடனான எனது உறவும் மெரினா, கன்னியாகுமரி, இராமேஸ்வரம் கடலில் கால் நனைத்ததுடன் சரி. நகர்ப்புற வாசிகளுக்குக் கடல் காலடியிலிருந்தாலும், அபூர்வக் கற்பனைகளே.

முப்பதாண்டுகளுக்கு முன், தமிழகத்தின் சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகள், இதழியலாளர்களுடன் நீலகிரிக் காட்டினூடே மூன்று நாட்கள் கழித்த சோலை சந்திப்பு நினைவிலாடுகிறது. நமக்கு உயிர்க்காற்றும், நீரும் தரும் காட்டில் பயணித்த அந்த அனுபவம் பலரின் பசுமை எழுத்து, சிந்தனை, செயல்பாடுகளுக்கு முன்னோடியாக அமைந்தது. கடலுக்கும் அத்தகைய சந்திப்புகள் அவசியம். அப்போது கடலுக்கும் ஒரு நம்மாழ்வார் கிடைப்பார்.

வறீதையாவின் ‘திணைவெளி’ எனக்குக் கடலின் மர்ம உலகைத் திறந்து விட்டது. மனிதர் வாழ்விடமான, கடலுடுத்த பூமியின் மூன்றில் இரு பங்கு கடலே என்பதை உணராமலேயே வாழ்ந்து முடிக்கிறோம். டான் குவிக்சாட் சொல்வது போல, மனிதன் பாதம் பதிக்காத, பாதையற்ற பெருவெளியில் பயணிக்கும் உணர்வு தந்தது ‘திணைவெளி’.

நாகரிக மனிதர்களின் ‘நிர்வாணப்’ பேராசையால் வேட்டையாடப்பட்ட அந்தமானின் ஜராவா வனப் பழங்குடிகளின் வாழ்வுப் போராட்டத்தை, இருநூறு ஆண்டுகள் முன் மதத்தின் பெயரால் ஆஸ்திரேலிய அபாரிஜின்கள் மீது நடத்தப்பட்ட நாகரிகக் கொடுமைகளுக்கு மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருடினின் மன்னிப்பு மன்றாடலை, பேரிடர்களைக் காசு குவிக்கும் வாய்ப்பாக்கிக் கொண்ட என்ஜிஒக்களின் போலி முகத்தை, ஃபீனிக்சாய் எழும் குஜராத்திகளின் தன்னம்பிக்கையை, மணக்கும் நெத்திலிக் கருவாட்டுச் சம்பலை, மீனவரிடையே காலம் காலமாக நிலவிவருகிற கரைமடி எனும் சமத்துவத் தாய்மைப் பொருளாதாரத்தை, உயிரின் சூட்சுமமான உப்பின் மகிமையை, உப்பைச் சார்ந்த வாழ்வாதரத்தை விழுங்கும் அயோடின் சதியை, வளர்ச்சி மோகத்திலிருந்து விடுபடாத இடதுசாரிகளின் இயற்கை எதிர்ப்பு நிலைப்பாட்டை, பழங்குடிகளுக்காகவும், வளர்ச்சி அகதிகளுக்காகப் போராடும் பெண் போராளிகளை, மருந்துக்கு மரம் கொல்லா காடோடிகள், காட்டின் இசையை ரசிக்கும் முருட் பழங்குடி ஜோசின் மனதை, கடலிலிருந்து அந்நியப்பட்ட நாகரீக மனிதரின் வாழ்வை… வறீதையா நமக்குப் பாடம் சொல்கிறார்.

‘கற்றது கை நீரளவு, கல்லாதது கடலளவு’ என்பதை இந்நூல் எனக்கு உணர்த்தியது. தடமேதுமற்ற பெருங்கடலில் பயணிக்கும் முக்குவர்களின் கட்டுமரங்கள் மனிதனின் முதல் வாகனம். காடோடிகளும், கடலோடிகளும் ஒன்று போன்றவர்களே. அவர்களின் இருவேறு உலகங்கள், தனிமொழி, தனிப் பண்பாடு, தனிச் சொல்லாடல் கொண்டன. இதில் ஒரே மொழி ஒரே நாடு, ஒரே பண்பாடு என்பது எத்தகைய முட்டாள் கனவு! அவர்களின் உலகம் வேறு. அது நாம் அறியாதது. அறிய முடியாதது. 

காடு நமது மூதாதயரின் முதல் வீடு என்றால் கடல் நமது மூதாதயரின் முப்பாட்டன் வீடல்லவா? பிலியவின் காட்டின் இசைபோல, மூக்குவனின் கடலின் மொழியும் நாம் புரிந்து கொள்ள முடியாததே. காட்டின் வளமண் போர்வை போலக் கடலின் மேல் ஒரு அங்குலநீர் கடலைப் போர்த்திய தோல் என்பதை அறியவருகையில் வியப்பே மேலிடுகிறது. கடலில் கலக்கும் ஆற்று நீரை வீண் எனும் மூடர்கள் நாம்.

காட்டின் விலங்குகள், பறவைகள், நுண்ணுயிரிகள், தாவரங்கள் போலக் கடலின் மீன்கள், பவளப்பாறைகள், கடற்பாசிகள் என எத்தனை அறியாத பெயர்களை அடுக்கி வியக்கச் செய்கிறார். நெத்திலி மீனில் எத்தனை வகை? இன்னும் மனிதன் கண்டிராத, பெயரிடாத எத்தனை கோடி உயிரினங்களோ? அறிதொறும் அறிதொறும் அறியாமைதான்.

மனிதன் தனது பேராசையால் சோறுபோட்ட பூமித்தாயை மலடாக்கிக் கொண்டுள்ளான் எனினும் முன்னைக்கும் முன் அன்னையான கடலம்மா நமது பசி தீர்க்கும் அட்சய பாத்திரத்தைத் தன் மடியில் வைத்துள்ளாள். ஆனால் நாமோ பொன்முட்டையிடும் வாத்தை அறுக்கும் மூடர்களாக வாழ்கிறோம். உயிர்க் காற்றும் நீரும் தரும் காட்டை அழித்து, கழிவு நஞ்சால் நமது ஒரே வீடான பூமியை மூச்சுத் திணறச் செய்து கொண்டுள்ளோம். அலையாத்திக் காடுகளை அழித்து ரிசார்ட்டுகளைக் கட்டி, அரிய கடற்கரைக் காடுகளை அழித்து ராஜ்பவன்களையும், ஏற்றுமதி அறிவுச்சரக்குத் தொழிற்சாலையாக IIT கட்டி மகிழ்கிறோம். ஆனால் மனிதரின்றி வாழ்ந்த பூமி. மனித இனம் டைனாசர் போலப் பூண்டற்று அழிந்த பின்னும் வாழும் என்பதை மறந்து போகிறோம்.

பூமி சூடாகிறது. பருவநிலை மாறுகிறது. பனிமலைகள் கரைந்து உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது. என் உலகை உங்கள் பேராசையால் அழிக்க நினைக்கும் உங்களுக்கு எத்தனை ஆணவம் என உலகத் தலைவர்களை நோக்கி ஒற்றைச் சிறுமி கிரேட்டா துன்பர்க் கொற்றவையென உறுமுகிறாள். வளர்ச்சி மோகினியின் காதுகள் தங்கத்தால் அடைபட்டுக் கிடக்கின்றன. அலிபாபா குகையில் அளவற்ற செல்வக்குவியலின் நடுவே காசிம்களாக ட்ரம்ப்புகள். குகை திறந்து விடுதலை தரும் மந்திரத்தை ‘திணைவெளி’ உச்சரிக்கிறது.

அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் எச்சரிக்கை மணியடிக்கிறது. பசுமைப் புரட்சியாளர் மண்ணை மலடாக்கிய ‘மஹானுபாவா’ கடலுக்கும் இறுதி சாசனம் எழுதுகிறார். வளர்ச்சி ஒட்டகம் தலை நுழைக்க கடலின் குழந்தைகள் வாழ்விடமிழந்து, சொந்த மண்ணில் அகதிகளாக்கப் படுகின்றனர். பெரியவிளைகள் புற்றுநோய் வலையில் சிக்கித் தவிக்கின்றன.

வளர்ச்சி எனும் பெயரில் சதுப்பு நிலங்களை, புல்வெளிகளைப் பாழ்நிலங்கள் என முத்திரை குத்திய பாவிகள் கடற்கரை மணலை வழித்துக் கனிமம் சலித்துக் காசாக்குகின்றனர். பாறைகளை அடுக்கி அம்பானியின் சரக்குப் பெட்டத்துறைமுகம் ஆக்குகின்றனர். கூடங்குளத்தில், கல்பாக்கத்தில் அணுவுலையின்  கொதிநீரில் மீன் சினை முட்டைகளை அவிக்கின்றனர். அவிழ்த்துவிடும் எண்ணெய்க் கழிவில் நெகிழி முகமூடிக்குள் சிக்கியது போல கடலன்னையை மூச்சுத்திணறிச் சாகடிக்கின்றனர்.

மூன்று மைல் தீவு, செர்னோபில், ஃபுகுஷிமா, சுனாமிகள் எதுவும் அவர்களின் காதுகளை எட்டவில்லை. மூன்று விழுக்காடு மின்சாரம் எனும் போர்வையில் அணுகுண்டு உருட்டும் சகுனிகள் அவர்கள். ஆயுதங்களையும், டாலர்களையும் கொஞ்சம் இவர்களுக்கு, இறாலை மஞ்சள் கிழங்காக, திமிங்கலங்களை செல்லப் பிள்ளைகளாக, சீற்றம் கொண்ட சுறாவை மாட்சிமை பொருந்திய கனவானாகக் காணும் எளிய கடலோடிகளின் மனம் புரிவதில்லை.

இடிந்தகரை தேவாலய நிழலில் அந்த வாழ்விழந்த மீனவப் பெண்கள் தலைவிரி கோலமாய், திரெளபதைகளாய் நிற்கின்றனர். தருமத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லுமெனும் நம்பிக்கை இன்னும் மீதமிருக்கிறது. எந்த நம்பிக்கையின் ஊற்றுக் கண்களாக வறீதையா நமக்கு நக்கீரன், தியோடர் பாஸ்கரன், ஜாகிர் ராசா, வெங்கடேசன், குணசேகரன், ராமகிருஷ்ணன், பாமயன், கோபாலகிருஷ்ணன், கி.ரா., தோப்பில் போன்றவர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறார். இளம் தமிழர் வாசித்து மனதில் கொள்ள வேண்டிய படைப்பாளர்கள் இவர்கள்.

வளர்ச்சி மோக இருளில் பயணிக்கும் நமக்கு நம்பிக்கை நட்சத்திரமாக வழிகாட்டுகிறது ‘திணைவெளி’.

அன்புடன்,

வெ. ஜீவானந்தம்.


விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...