#சமஸ் #Samas
சமஸ் என்கிற ஆளுமையை நான் முதன்முதலாய்ச் சந்தித்தது 2013இல் என்று நினைவு.
கடல் தொடரை முன்னிட்டு என்னைச் சந்திப்பதற்காகத் தென்னெல்லைப் போராட்ட வீரர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவுடன் வீட்டுக்கு வந்திருந்தார். நெய்தல் வாழ்வைக் குறித்துக் கண்டவர் கண்டபடி எழுதிக் கொண்டிருக்கும் சூழலில் சமசின் தொடர் அதிலிருந்தெல்லாம் மாறுபட்டதாய் இருக்கவேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டேன். வெளியிடப்படும் தரவுகள் துல்லியமாய் இருக்க வேண்டும் என்பதற்காக ஜோ டி குரூசுடனும், என்னுடனும் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்வார். ஆனால் மனிதர் அந்தத் தொடரில் செலுத்திய உழைப்பும் பேணிய அறிவு நேர்மையும் என்னை வியக்க வைத்தது. என்ன வேகம், எத்தனை கூர்மை. எப்படிப்பட்ட பேருழைப்பு! கடலை வாசகர்களின் வரவேற்பறையில் கொணர்ந்த தனித் திறமை. மிகக் குறுகிய காலத்தில் தமிழகக் கடற்கரையைப் பொதுவெளியின் கவனிப்பில் கொணர்ந்த தொடர் அது. தமிழ்ப் பரப்பில் கடற்கரையோடு ஒரு நேர்மையான உரையாடலை முதன்முறையாக நிகழ்த்திய சமவெளி மனிதனாக சமசைப் பார்க்கிறேன். உழைத்து முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு அவர் சரியான முன்னுதாரணம்.
அவரது ‘யாருடைய எலிகள் நாம்’ நூலை நாகர்கோவிலில் அறிமுகப்படுத்திய நிகழ்வில் என்னை ஒரு நண்பர் அவரது துணைவிக்கு அறிமுகப்படுத்தியபோது சிரித்துக்கொண்டே சொன்னார், ‘ஒங்க புக்ஸைத்தான் பரிச்சைக்குப் படிக்கிற மாதிரி எப்பவும் படிச்சுட்டே இருந்தார்’ என்றார். அது அவர் கடல் தொடர் எழுதிய காலமாக இருக்கவேண்டும். இப்படியே ஒவ்வொரு களத்திலும் அவர் இயங்கியிருக்கிறார். இந்தியாவின் வண்ணங்கள், ஐரோப்பியப் பயணக் கட்டுரைகளிலும் அதே தேடலையும் தீவிர வாசிப்பையும் பார்த்தேன். கல்விப்புலத்தைத் தாண்டிய ஸ்காலர்ஷிப், ஓய்வறியாத உழைப்பு- இரண்டும் அவரை இந்த இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது என்றால் பிழையில்லை.
நெய்தல் குறித்து 1990களிலிருந்தே நான் எழுதி வருகிறேன் என்றாலும் தி இந்துவில் எழுத வாய்த்த நடுப்பக்கக் கட்டுரைகள் வாசகர்களுக்கு என்னைப் பரவலாக அடையாளம் காட்டின. மிக முக்கியமாக, எழுத்துச் சுதந்திரத்தைக் காவுகேளாமல் அமைந்த வாய்ப்பு அது. பிற்காலத்தில் உயிர்மூச்சு இணைப்பில் கடல் குறித்து ஒரு தொடரை எழுதுவதற்கும் சமசின் அறிமுகமே தொடக்கமாய் அமைந்தது. வெகுமக்கள் பத்திரிகையில் கட்டுரை எழுதுவதன் நுணுக்கங்களை ஆதி வள்ளியப்பன், ஆசைத்தம்பி உள்ளிட்ட அந்த இளம் ஆசிரியர் குழுவிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வாய்த்தது. பலவற்றில் சமசுடன் முரண்பட்டிருக்கிறேன் என்றாலும் அது தோழமையின் அகக்காழுக்குள் நேர்வது. அவற்றால் எங்கள் உறவில் விரிசல் நேர்ந்ததில்லை. உதாரணமாக, ‘தோழர், இந்துவின் செய்திப் பக்கங்களும் நடுப்பக்கங்களும் இருவேறு அப்பாக்களின் பிள்ளைகள்போல் தெரிகிறதே’ என்று ஒருமுறை அவரிடம் குறைபட்டுக்கொண்டபோது ஒரு புன்முறுவலை மட்டுமே பதிலாக உதிர்த்தார்.
2018 மே 22 ஸ்டெர்லைட் அரச வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் இரண்டு முழுப்பக்கப் புகைப்படங்களோடு அந்த இதழில் செய்திகள் வெளியானபோது நடுப்பக்கத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு என்ன பெறுமதி என்கிற கொதிப்பே ஏற்பட்டது. இவை அந்தந்த இதழ் உரிமையாளரின் கொள்கை நிலைப்பாடாய் இருக்கலாம். அதில் பணியாளர்கள் பெரிதாய்த் தலையிட முடியாது. ஆனால் கார்ப்பொரேட் அச்சு ஊடகங்கள் நீண்டகாலம் இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்க முடியாது. தி இந்து தமிழ் போல, நியூஸ் 18 தமிழ் அலைவரிசையும் இளம் ஊடகர்களின் சிறு குழுவினால் வடிவமைத்து உருவாக்கப்பட்டதுதான். அங்கு என்ன நிகழ்ந்தது என்பது இரகசியம் அல்ல.
செய்தி ஏகபோகம் சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிட வேண்டும். தி வயர், ஸ்க்ரோல் போன்றவை இன்று வெற்றிகரமான மாற்று ஊடகங்களாய்ச் சாதித்திருக்கின்றன. சுதந்திர சிந்தனை கொண்ட, கையில் சரக்கு இருக்கிற ஊடகர் எவரும் பிழைப்புக்காக ஒரு பத்திரிகை நிறுவனத்திடம் பழிகிடக்க வேண்டியதில்லை. துடிப்பான திறமையான பல ஊடகர்கள் ஊடக நிறுவனங்களிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது வெளியேற்றப்படுகிறார்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். சமசின் முடிவை அவற்றோடு முடிச்சுப் போடவேண்டியதும் இல்லை.
இது ஊடகர்களுக்குச் சவாலான காலம்தான். ஆனால் சமஸ் போன்றவர்களுக்கு இது சாலையின் முடிவல்ல.
பிற்பகல் 14.06.2021.
No comments:
Post a Comment