கடலைக் குறித்துப் பேசாதவரை
இயற்கை குறித்த அக்கறைகள் முழுமை பெறாமல் நின்றுவிடும்.
கடலைக்
குறித்துப் பேசாதவரை இயற்கை குறித்த அக்கறைகள் முழுமை பெறாமல் நின்றுவிடும். மலைகளையும் சமவெளி
நிலங்களையும்
வான்வெளியையும்
இணைத்துநிற்கின்ற, உலகின் பருவநிலையைத் தீர்மானிக்கின்ற உப்புநீர்ப் பெருவெளி
பெருங்கடல்கள்தான். நில மையப் பார்வை கொண்ட
வெகுமக்களின் கவனத்தைக் கடலின்மீது திருப்புவது சூழலியல் அக்கறைகளில் முதலிடம்
பெறவேண்டும். வானத்தையும் நிலத்தையும் நீரையும் நாம் கையாளும் முறைகளில்
நேர்ந்துபோன தலைகீழ் மாற்றங்கள், நீரியல் பருவச் சுழற்சியைத் தடம் மாற்றிக்
கொண்டிருக்கின்றன.பருவநிலைப் பேரிடர்கள் தவிர்க்கமுடியாதஅபாயமாக உருவாகியுள்ளது.
கிழக்கு நோக்கிப் பாயும் மேற்கு
மலைகளின் ஆறுகள் தீபகற்ப இந்தியாவின் நெற்களஞ்சியங்களின் உயிர்நாடியானவை.
குறிஞ்சி, முல்லை வனங்களின் சிதைவில் தொடங்குகிறது இந்த ஆறுகளின், கடலின் சிதைவு. இந்த சிக்கல்களின் கண்ணிகள் கடலோடு இணைத்துப்
பார்க்கப் படவேண்டும் என்பது மிக முக்கியமானது.
மேற்குத்
தொடர்ச்சி மலையைக் கொண்டாடும் இந்த ஒன்பதாவது மாநாடு ஒரு பகீரத முயற்சி.
பழங்குடிகளின் அற்புதமான மரபறிவையும் மதிப்பீடுகளையும்
சமவெளிமக்களுக்குக் காட்சிப்படுத்துவது தொடங்கி, வயது, பாலினம், அறிவுக்குழு,
பொருளாதாரத் தட்டுகள் என்பதான அனைத்துத்தரப்பையும் உட்படுத்திய அணுகுமுறை வெகு
சிறப்பு. கண்காட்சி, கள அனுபவம், ஆய்வுரைகள், மக்கள் நாடகம் அனைத்தும் மக்களை
மண்ணுக்கு இணக்கமாகக் கொண்டுசெல்லும் அருமையான உத்திகளாய் அமைந்தது ஏற்பாட்டாளர்களின் இலக்கையும் நீண்டகால
அனுபவத்தையும் வெளிப்படுத்தியது. ஆறு மாநிலங்களை உள்ளடக்கி 2000 கிமீ நீளமும் 1,90,000 சதுர கிமீ பரப்பும் கொண்ட இந்த மலையை மக்களின் பொறுப்பில்
ஒப்படைக்கும் பாரிய இலக்குடன் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவரும் இந்த
இயக்கத்தின் இலக்கும் உழைப்பும் மகத்தானது. எதிர்கால நடவடிக்கைகளில் கடல் குறித்த
கரிசனங்களையும் இந்த இயக்கம் பேசுபொருளாக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதோடு, வன, கடல் பழங்குடிகளின்
வாழ்வியலையும் மரபறிவையும் காத்திடும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய பழங்குடிப்
பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுமாறு இந்திய அரசினை இவ்வியக்கம் வலியுறுத்தவேண்டும்.
வறீதையா
கான்ஸ்தந்தின்
பேராசிரியர்,
நெய்தல் சூழலியல் ஆய்வாளர்.
No comments:
Post a Comment