|
|
|
Photo courtesy: Mohamed Rafi Maraikkayar, Maraikkayarpattanam. |
இந்திய அரசியல் சூழலில் பல்வேறு அமைப்புகள்
பாரம்பரிய மீனவர்களின் குரலாக, அரணாகச் செயல்படுவதாக உரிமை கோருகின்றன. நெருக்கடிக்கு
காலங்களில் அவர்களுக்காக, அவர்கள் சார்பில் பல இடையீடுகளை நிகழ்த்துகின்றன. அரசோடு
வாதாடிச் சாதிக்கத் துணிவு காட்டும் இந்த அமைப்புகள்
மீனவர்கள் தரப்பில் எழும் சிக்கல்களை எதிர்கொள்வதில் பின்னடைவு உள்ளது.
தமிழக மீனவர்களின் குரலாக, தலைமையாகத் தம்மை முன்னிறுத்திக் கொள்பவர்களில் பலர் அதிகார மய்யங்களோடு உரையாடும் செல்வாக்குப் பெற்றவர்கள்.
அனால் மீனவர்கள் தரப்பில் நிகழ வேண்டிய மாற்றங்களை யார் முன்மொழிவது? மீனவர்களின் நம்பிக்கையைப் பெற்ற, அறிவுத்தளத்தில் இயங்குகின்ற, காலத்தோடு நேர்மை பேணுகின்ற தலைமைகளுக்கு ஒரு பெரும் வெற்றிடம் நீடிக்கிறது. மீனவர்களுக்குச் சாதகமான கொள்கை இடையீடுகளுக்கு இது பெருந்தடையாய் நிற்கிறது.
uuu
2011இல் ஐந்து தமிழக மீனவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை அரசு மரண தண்டனை விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் மீனவர் அமைப்புகள் ஒருங்கிணைத்திருந்த முழுநாள் ஆர்ப்பாட்டத்தில் தென் தமிழகக் கடற்கரைகளிலிருந்து தலைவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மரண தண்டனைத் தீர்ப்பு இரு தரப்புகளும் நிகழ்த்தும்
நாடகம் என்பதும் அந்தத் தீர்ப்பு நிறைவேற்றுவதற்காக அல்ல, தென் தமிழக மீனவர்கள் மீதும்
தமிழக அரசியல் மீதும் ஒரு புதிய நெருக்கடியை ஏற்படுத்த வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதை
அரசியல் நோக்கர்கள் புரிந்து கொண்டிருந்தோம். 2008இலிருந்து மன்னார்க் கடல் வள அரசியலை
உற்றுக் கவனித்து வருபவன் என்கிற வகையில் இராமேஸ்வரம் மீனவத் தலைவர்கள் மீதான எனது
ஆதங்கத்தை அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே முன்வைத்தேன். பலநூறு கடல் அபலைகள் இராமநாதபுரம்,
புதுக்கோட்டைக் கடற்கரைகளில் உற்பத்தியாவதன் காரணங்களை ஆராயாமல் உள்நோக்கம் கொண்ட முழக்கங்களை
எழுப்பிக்கொண்டிருக்கும் அம்மீனவத் தலைமைகளின் செயல்பாட்டைக் கேள்விக்கு உட்படுத்தியே
தீரவேண்டும் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். தலைமைகளின் கோளாறு ஓர் அடித்தளச் சமூகத்தை
எவ்வளவு பிற்போக்கான நிலைக்குத் தள்ள முடியும் என்பதற்கு இராமேஸ்வரம் மீனவத் தலைவர்களை
உதாரணமாகச் சுட்ட முடியும்.
uuu
ஒக்கிப் பேரிடருக்குச் சில மாதங்களுக்குப் பிறகு தூத்தூர்ப் பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட
கிராமத்து இளைஞர்கள் பேரிடர் அபலைகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளைத் திரட்டி
வழங்கினர். இறப்பு, சேத நிவாரணப் பரபரப்பு
மிகுந்திருந்த அதேவேளையில் கடல் பேரிடர், ஆழ்கடல் பாதுகாப்பு குறித்த தீவிர விவாதங்களை
இவர்கள் முன்னெடுத்தனர். அந்தக் கிராமத்தின்
விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து இவ்விவாதங்கள் நிகழ்த்தப்பட்டன
என்பது முக்கிய செய்தி. பெருந்தொகையான மரணங்கள் கடலில் நேர்ந்ததன் காரணங்கள் அங்கு
ஆராயப்பட்டன. உயர் பாதுகாப்பு முன்னேற்பாடுகள், தகவல் தொடர்புக் கருவிகள் இல்லாமற்போனது
மட்டுமல்ல, விசைப்படகின் வடிவமைப்பும்கூட ஒரு காரணம் என்பதை மீனவர்கள் தரப்பு குறிப்பிட்டது.
அரசு செய்த, செய்யத் தவறிய உதவிகளை விமர்சிப்பதற்கு அப்பால் தம் தரப்பில் தொழில் பாதுகாப்பை
உறுதி செய்து கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டன. அவ்வூரில் ஒரு தகவல் கட்டுப்பாட்டு மய்யம் உருவாக்கப்பட்டது. இன்னும் சில கிராமங்கள் இம்மய்யத்துடன் இணைக்கப்பட்டது.
மீன்வளத் துறையுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. மீனவர்களின் பாதுகாப்புத்
தேவைகள் தலைமையிடத்துக்கு எடுத்துச் சொல்லப்பட்டன. சாதாரணமான சூழலில் இது நடந்திருக்க
வாய்ப்பில்லை என்று நாம் வாதிடலாம் எனினும், ஒரு பேரிடர்ச் சூழலை மேம்பாட்டுக்கான வாய்ப்பாகப்
பயன்படுத்திக் கொள்வதற்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற, அறிவார்ந்த தலைமை தேவை என்பது
குறிப்பிடத் தகுந்தது.
No comments:
Post a Comment