மீனவர்கள், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இந்தத் தேசத்தின் மக்களாக அணிவகுப்பவர்கள்; இந்த நூலில் உரக்க ஒலிக்கும் கீழ்வரும் கருத்துக்களை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். அவற்றை வரிசைப்படுத்தி அவற்றுடன் நான் கொண்டிருக்கும் உடன்பாட்டை உற்சாகமுடன் வெளிப் படுத்துகின்றேன்.
• “நம் பாதங்கள் தகர்க்கப்படலாம்; நம் பாதைகளை யாரும் தகர்க்க முடியாது” என்னும் கொள்கை விளக்கத் துடனும் வீரமுழக்கத்துடனும் செயல்பட்டு வளர்ச்சி அடைந்த ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் தென்திருவிதாங்கூர் ஈழவர், நாஞ்சில் நாட்டு நாடார் ஆகிய சமூகங்களும் குமரிமாவட்ட மீனவர்களுக்கு எழுச்சி ஊட்டி நிற்கின்றன.
• மீன்வளம் நாளுக்கு நாள் குறைந்து வரும் கடலை நம்பி குமரி மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடித்தொழிலை நிறைவேற்ற இயலாது என்னும் உண்மை புரிந்து கொள்ளப்பட வேண்டும். புதிய தொழில்களில் இவர்கள் காலூன்ற வேண்டுமெனில் கல்வியை முதலீடு செய்யவேண்டும்.
• “மீனவர்களின் வளர்ச்சி மீனவர்களின் கையில் உள்ளது” என்பதில் அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வகையில் அடி மட்டத் தலைமைகள் வளர்க்கப்பட வேண்டும்; பொறுப்புகள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
• கடற்கரைகளில் இயற்கை ஏற்படுத்திய மணல்மேடு கள் கடல் சீற்றத்தின் போது மக்களைக் காக்கும் கோட்டைகளாக விளங்குகின்றன. மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும்; மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
• நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நங்கூரங்களாக விளங்கும் வகையில் மீனவர் சமுதாயத்தின் இன்றைய இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் தலைமைப் பயிற்சிகளும், பொறுப்புகளும் வழங்கப்படவேண்டும்.
• கடல் ஏற்ற எல்லையிலிருந்து ஐநூறு மீட்டர்களுக்கு அப்பால் மீனவர் குடியிருப்புகள் அமைதல் என்பதை அறிவியல் அடிப்படையில் வழங்கப்படும் ஆணை யாகக் கருதி அதை இயன்றவரை கடைப்பிடிக்க முன்வர வேண்டும்.
• குமரி மாவட்டத்தில் இயங்கும் (கோட்டார் கத்தோலிக்க) திருச்சபை மீனவர்களின் தரப்பில் வாதிக்கும் அமைப் பாக உருவாக வேண்டும். தலஅளவில் சமூகத் தலைவர் களையும் பிரதிநிதிகளையும் அடையாளம் கண்டு பொதுப்பிரச்சனைகளைப் பொதுநோக்குடன் கையாளு வதற்கு அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.
• மீனவர் சமூகங்களில் இடம் பெறும் மூடுண்ட நிலை ஒழியவும், பிற சமூகங்களில் நிலவும் பல ஆரோக்கிய மான நடைமுறைகள் மீனவர் சமூகங்களில் ஒளி விடவும் அவர்கள் மத்தியில் கலப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும்.
• மீனவர்கள் மத்தியில் அரிதாகிவிட்ட திட்டமிடுதல், தொலைநோக்குப் பார்வை, காத்திருத்தல் ஆகியவை வாழ்வின் கூறுகளாகப் போற்றப்பட வேண்டும்.
இந்திய குடியரசின் இன்றைய தலைமகன் அப்துல்கலாம் நம்மை எல்லாம் கனவு காணக் கேட்டிருக்கின்றார். அந்தக் கனவு புதிய ஓர் இந்தியாவைக் கட்டி எழுப்பும் கனவாக அமைய வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. இந்த அவரது எதிர்பார்ப்பு நிறைவேற, பூகோள ரீதியாக இந்திய நாட்டைக் கீழிருந்து தூக்கிப் பிடிக்கும் கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றல் மிக்கதாக அமையவேண்டியது அவசியம். ஆற்றல் மிக்கதாக கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்க முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களும் அருட்பணியாளர் ஜோசப் ஜஸ்டஸ் அவர்களும் கண்ட கனவுக்கு நூல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள். இவர்களை நான் எனது இதயப்பூர்வ மாகப் பாராட்டுகிறேன். நல்ல கனவுகள் செயலாக்கம் பெறுவதில் தான் சமுதாய மாற்றமும் முன்னேற்றமும் அடங்கியிருக்கிறது. இந்தக் கனவை நனவாக்க எடுக்கப்படும் முயற்சிகளில் என்னை யும் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
இறைவன் தந்த பத்து கட்டளைகளைக் கடைப்பிடிக் கும் தனி மனிதரும் சமூகங்களும் பண்பாட்டில் செழுமை பெற்று, வளர்ச்சியின் உச்சத்தை எட்டுவதைப் பார்க்க முடிகிறது. அவ்வாறே இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ள பத்து செயல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் மீனவர் சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்கும், வெற்றி வரலாறு படைக்கும் என்பது உறுதி.
நாகர்கோவில்,
24.04.2006
No comments:
Post a Comment