Sunday, 4 June 2006

கடலோர வாழ்வெனும் கட்டுமரம் - எம். வேதசகாயகுமார்


வறீதையாவின் குரலை ஆழிப்பேரலைக்குப்பின் இயேசு சபை யைச் சார்ந்த ஜெயபதி அடிகளார் ஒருங்கிணைத்த கருத்தரங்கு களில் முதன்முதலாக என்னால் கேட்க முடிந்தது. ஆனால் இக்குரலுக்காக வெகுகாலம் நான் காத்திருந்ததான உணர்வு என்னுள் எழுந்தது. வறீதையாவுடனான என் நெருக்கத்திற்கு இதுவே காரணமாகலாம். இதற்கு நான் ஜெயபதி அடிகளார்க்கு நன்றி கூற வேண்டும். ஜெயபதி அடிகளாரின் பணியின் முக்கியத் துவத்தை அவர் சார்ந்துள்ள சமய அமைப்பு எந்த அளவிற்கு உணர்ந்துள்ளது என்னும் ஐயமும் என்னுள் எழுகிறது. கடலோர மக்களின் வாழ்வைக் குறித்து, அறிவுத்தளத்தில் உணர்வு ரீதியாக சிந்திக்கும் ஒரு குரலைக் கருத்தரங்கு எனக்கு அறிமுகப்படுத் தியது. ஒரு சமூகம் குறித்ததான சிந்தனை, அச்சமூகத்திலிருந்து தான் எழ வேண்டும். அச்சமூகம் சிந்திக்கத் துவங்குகிறது என்பதற்கான அறிகுறி இது. சமூகச் சிந்தனை ஒருங்கிணைக்கப் படும்பொழுது செயல்தளம் தானாக உருக்கொள்ளும். எந்த ஒரு மாற்றத்தினையும் வெளியிலிருந்து புகுத்திவிட முடியாது. 


கடலோர சமூகம் காலம்காலமாக பிற சமூகங்களோடு குறைந்த பட்ச உறவுடன் ஒதுங்கி வாழ்ந்த சமூகம். இம்மக்கள் காலத்தின் மாற்றத்தினை அறிந்துகொள்ள முன்வருவதில்லை. அதேசமயம் காலத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் பிற சமூகங்கள் இவர்களோடு உரையாடவும் முன்வருவதில்லை. இதன் காரண மாக புரிதல் என்பது இல்லாததாகிறது. ஆழிப்பேரலை சொல்ல வொண்ணாத் துன்பத்தை இம்மக்களிடம் தோற்றுவித்தபோது, ஒட்டுமொத்த சமூகத்தின் அனுதாபமும் ஒரு பேரலையாக இவர்கள் மீது பாய்ந்தது. ஆழிப்பேரலை தோற்றுவித்த துன்பத்தை விட இந்த அனுதாபப் பேரலை தோற்றுவித்த துன்பம் அதிக மானது. ஜெயபதி அடிகளாரின் நோக்கம் இம்மக்களைக் குறித்த புரிதலைத் தோற்றுவிப்பதுதான். தொடர் கருத்தரங்கு களிலிருந்து குறிப்பிட்ட எல்லை வரை அவர் நோக்கம் நிறை வேறவும் செய்தது. என்றாலும் எல்லாச் சிக்கல்களுக்கும் முன் கூட்டியே முடிவு செய்யப்பட்ட தீர்வுகளைப் புட்டிகளில் அடைத்து கையோடு எடுத்துவரும் விற்பன்னர்களின் இடை யூறும் இருக்கவே செய்தது.

ஆழிப்பேரலை ஓர் இயற்கைப் பேரிடர். மனித சமூகம் இது போன்ற பேரிடர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. மானுடம் தோற்பதில்லை. ஏதோ ஒரு வகையில் அது வென்று விடுகிறது. ஒருபோதும் நிலை தடுமாறுவதில்லை. ஆனால் கடலோர சமூகம் நடுக்கம் கொண்டது. இந்நடுக்கம் ஆழிப் பேரலையினால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. ஒரு வகையில் இந்நடுக்கம் வெகுகாலம் இச்சமூகத்தில் உறைந்திருந்த ஒன்று. ஆழிப்பேரலை வெளி உலகிற்கு அதனை இனங்காட்டியது. அக்கறையுள்ள மக்கள் இது குறித்து சிந்திக்கவும் துவங்கினர். ஆனால் புரிதலின்மை பெரும் இடையூறாக அமைந்தது. இம் மக்களைக் குறித்து அறிவுரீதியான புரிதலைக் கொண்ட இம்மக்களில் ஒருவருக்கான தேவை எழுந்தது. இங்கு வறீதையா என்ற குரல் மட்டுமே இத்தேவையை நிறைவு செய்யும் சக்தி யைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறேன். 

‘அணியம்’ வறீதையாவின் எட்டாவது நூல். அறிவியல் தான் அவர் இயங்குதளம். அடிப்படையில் அவர் ஒரு விஞ்ஞானி. கட்டுப்பாடுடன் கடல்சார்ந்த வாழ்வு குறித்து ஆய்வுகளை நிகழ்த்தியவர். மொழி சார்ந்த அவர் இயக்கம் காலத்தின் கட்டாயத்தால் எழுந்தது. ஆனால் ‘எழுத்து சமூக எழுச்சியின் அடையாளம், எதிர்காலம் குறித்த தரிசனத்தின் வெளிப்பாடு’ என்னும் நிலைப்பாட்டிற்கு அவரால் வரமுடிந்துள்ளது. ஒரு விஞ்ஞானி இந்நிலைப்பாட்டிற்கு வருவது என்பது அபூர்வ மானது. விஞ்ஞானி என்ற ஒளிவட்டம் அவன் தலையைச் சூழும்போது அவன் தன் சமூகத்திலிருந்து வெகுதூரம் அகன்று விட்டிருப்பான். நுண்கலைகளில் ஆர்வம் கொண்ட விஞ்ஞானி கள் பலரைக் காண முடியும். ஆனால் எழுத்துத் துறையில் தடம்பதிக்க ஆர்வம் கொள்பவர்கள் வெகுசிலரே. வறீதையா வின் இந்நூல் முழுமையும் கடல்சார்ந்த வாழ்வு தொடர் பானது. தன்னைச் சூழ்ந்த வாழ்வு குறித்து, அதன் தற்கால நிலை குறித்து, பதைபதைப்புடன் சிந்தித்த நேர்மையான ஒரு மனதின் வெளிப்பாடு. 

ஒவ்வொரு கட்டுரையும் வாசகனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. இந்தியத் துணைக் கண்டத்தின் குடிமக்களுள் ஒரு பிரிவினரை இன்னொரு நாட்டின் கடற்படை தொடர்ந்து வேட்டையாடு கிறது. அவன் தொழில் கருவிகளைப் பிடுங்கிக் கொள்கிறது. அவன் படகுகளை மூழ்கடிக்கிறது. இக்கொடுமையைத் தொடர்ந்து எதிர்கொண்ட ஒரு தலைமுறை இன்று எழுந்துள்ளது. ஆனால் இந்திய அரசிடமிருந்து மட்டுமல்ல, இந்திய மக்களிடமிருந்தும் எவ்விதமான எதிர்வினையும் இல்லை. மிருகங்களைக்கூட இன்று சுட்டுக்கொல்ல முடியாது. ஆனால் இந்த மனிதர்களை மட்டும் வேட்டையாடலாம். இந்தியாவின் ஒரு மாவட்டம் அளவேயான ஒரு நாட்டின் கடற்படை தொடர்ந்து இந்த வேட்டையை நிகழ்த்துகிறது. எல்லை தாண்டி மீன்பிடிப் பதைக் காரணமாகச் சுட்டுகிறது. இந்தியக் கடற்படையும், இந்திய அரசும் இக்காரணத்தைத்தான் சுட்டுகின்றன. இந்தியக் கடல் எல்லைக்குள் இவை நிகழ்ந்ததாக  மீனவர்கள் சுட்டி னாலும், எவ்விதப் பரிசீலனையுமின்றி எல்லைக்கப்பால் நிகழ்ந்த தாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. 

கடல் முழுமையிலும் மீன்கள் நிறைந்திருப்பதில்லை. மீன்கள் விளையும் வயல்கள் கடலில் ஆங்காங்கே உண்டு. அந்த வயல் களில் சென்றுதான் அறுவடையை நிகழ்த்தியாக வேண்டும். கச்சத்தீவு தமிழ் மீனவர்களின் பாரம்பரிய உரிமை கொண்ட மீன்வயல். அதைத் தமிழர்களின் பாரம்பரிய எதிரிகளுக்குத் தாரை வார்த்த இந்திய அரசு, கச்சத்தீவின் மீதான தமிழ் மீனவர்களின் பாரம்பரிய உரிமை கச்சத்தீவு தாரை வார்க்கப் பட்ட பின்பும் உண்டு என்றுதான் கூறியது (சிங்களர்களின் அரசவரலாற்றைக் கூறும் மகாவம்சம் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான பகையை மட்டுமே கூறுகின்றது). அவசர நிலைக் காலத்தின்போது அதிகாரிகளின் அளவில் தமிழக மீனவர்களின் தொழில் செய்யும் உரிமை சிங்களர் களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது என்ற செய்தியும் உண்டு. 

சிங்களப் கடற்படை இந்தியக் கடற்படையால் பயிற்று விக்கப் படுகிறது. ஒருவகையில் இரு தரப்பாரும் வகுப்புத் தோழர்கள். நண்பர்கள். ஆனால் தமிழ் மீனவர்கள் இந்த நண்பர்கள் வட்டத்திற்குள் வருவதில்லை. நடுக்கடலில் மீனவர் களை எதிர்கொள்ளும் இந்தியக் கடற்படையின் விசாரணை மொழி கன்னத்தில் அறைவதுதான் என்கிறார்கள் மீனவர்கள். மொழி தெரியாமை இதன் காரணமாகலாம். தமிழ் மொழி தெரிந்த கடற்படை வீரர் ஒருவரைக் குழுவில் இணைப்பதன் மூலம் தகவல் தொடர்பில் நிகழும் குளறுபடிகளைத் தவிர்த்து விட முடியும். எல்லாவற்றிற்கும் உள்நோக்கங்கள் கற்பிக்க வேண்டியதில்லை. குளறுபடிகளைத் தவிர்ப்பதற்கான அக்கறை அரசியல்  தலைமையிடம் இல்லை. மக்களாட்சியில் சாதாரணக் குடிமகன் அரசியல் தலைமையிடம்தான் முறையிட முடியும். ஒவ்வொரு மீனவன் கொல்லப்படும்போதும் சடங்குகளை மட்டும் நிகழ்த்திவிட்டு, ஒதுங்கிவிடும் அரசியல் தலைமை. எதிர்க்கட்சிகள்கூட இதில் அக்கறை கொள்வதில்லை என்பதே பெரும் சோகம். 

‘தொடரும் துயரம்’ கட்டுரையில் தகுந்த சான்றுகளோடு இச்சிக்கலை முன்வைத்து தன் சிந்தனையை விரித்துள்ளார் வறீதையா. ‘அலையையும், காற்றையும் அன்றாடம் எதிர் கொள்ளும் தொழில் முறையினால் துணிச்சலும் முரட்டுத் தனமும் அவனுக்குள் இயல்பாகவே ஊறிக்கிடக்கிறது. மரணத் தின் தாலாட்டு அவன் காதுகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அடுத்த நாள் உணவுக்கு உத்தரவாத மில்லாத நிச்சயமற்ற வாழ்க்கை முறைக்குப் பழகிப்போனவன் அவன். அதனால் எவ்வித ஒடுக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் அடங்கிப்போகும் தன்மை அவனிடம் இராது.’ கடல் சார்ந்த மக்களைக் குறித்த இப்புரிதலை அச்சமூகத்தில் வாழும் ஒரு வரால்தான் பெறமுடியும். மனிதன் என்ற உயிரினத்தின் தனித் தன்மை-ஒருபோதும் அது ஒடுக்குதல்களை ஏற்பதில்லை என்பதுவே. விடுதலை அதன் உயிர்மூச்சு. சுதந்திரத்திற்கான அதன் போராட்டத்தை அது துவக்கும்போது உலகின் எந்த சக்தியும் அதை அடக்கியதாக வரலாறு இல்லை. தமிழ் மீனவன் தொடர்ந்து தன் உயிரை அந்நிய நாட்டின் துப்பாக்கிக் குண்டிற்கு இரையாகத் தரப்போவதில்லை. வன்முறையை அது தன் ஆயுதமாகக் கொள்ளும்போது கடல்சார்ந்த சமூகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சமூகமும் அலறும். வறீதையா தொலைதூரப் பார்வையில் எதார்த்தத்தை உணர்கிறார். அறிவார்ந்த மொழியில் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார். 

கடலோர சமூகத்தின் வாழ்வியல் சிக்கலைப் பிற சமூகங்கள் ஏறெடுத்துப் பார்க்கத் தயங்குகின்றன. தங்களுக்குத் தொடர் பில்லாதவை என்ற உணர்வும் இருக்கத்தான் செய்கிறது. நடுக்கடலில் அந்நிய நாட்டின் கடற்படைத் துப்பாக்கிக் குண்டு களுக்கு ஒரு மீனவன் பலியாகும்போது, மேலோட்டமான அனுதாபத்தைக் கூட தமிழ்ச் சமூகம் திறந்த மனதோடு முன்வைப்பதில்லை. ஆழிப்பேரலை நிகழ்த்திய அழிவின்போது கடலலையில் சிக்கி மாண்ட மீனவர்களின் பிணங்கள் ‘புல்டோ சரால்’ ஒட்டுமொத்தமாகக் குவித்துத் தள்ளப்பட்டு மூடப் பட்டன. தமிழ்ச் சமூகம் இறந்தவர்களுக்குச் செய்யும் இறுதிக் கடனைப் பல இடங்களில் அப்போது மறந்திருந்தது. இறந்த மனிதனின் பிணத்தைப் புதைக்க மனிதக் கரங்கள் இல்லா திருந்தது. அப்போது இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட தமிழ் நாகரீகமும் ‘புல்டோசரால்’ புதைக்கப்பட்டது. கடல்சார்ந்த சமூகத்தைத் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பாகமாக நாம் உணர்ந்திருந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் ஒருபோதும் நிகழ்ந்திருக்க முடியாது. இதைவிடப் பெரும் சோகம் இதற் கெதிராகக் குரலை எழுப்ப அச்சமூகத்திடம் மொழி இல்லை. அவ்வப்போது அது வெளிப்படுத்தும் வன்முறை முகம் அதன் இயலாமையின் வெளிப்பாடு. இந்த இயலாமை அதன் பலவீனம். இவற்றைத் தொடர்ந்து அதிகார வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது. 

கடற்கரை யாருக்கு சொந்தமானது? நிச்சயமாக அது கடலோர மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிற சமூகம் அது. மாற்றுத் தொழில்களில் அதற்குப் பழக்கம் இல்லை. நாட்டமும் இல்லை. அவர்கள் வாழ்விற்குப் பாதுகாப்பளிப்பது சமூகத்தின் கடமை. வாழ்க்கை அதற்கான ஒழுங்குகளைக் கொண்டுள்ளது. இவ்வொழுங்கு கள் அனைத்தும் மனிதன் காலம் காலமாகப் பெற்ற அனுபவங் களிலிருந்து முகிழ்த்தவை. இவ்வொழுங்குகளைச் சிதைக்கும் போது வாழ்வும் சிதைந்துவிடுகிறது. 

விடுதலைக்குப்பின் உணவுப் பற்றாக்குறையை இந்தியா எதிர்கொண்டது. விவசாயத்தையே முதன்மைத் தொழிலாகக் கொண்ட நாடு தன் உணவுத் தேவைக்கு வேற்று நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. உணவு உற்பத்தியைப் பெருக்கு வது என்ற அரசியல் நிலைப்பாடு எடுக்கப்பட்டது. அரசியல் தலைமையால் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும். அதைச் செயல்படுத்த வேண்டியது அதிகார வர்க்கத் தின் கடமை. பசுமைப்புரட்சி என்ற திட்டம் உருக்கொண்டது. அதற்கு வடிவம் கொடுத்த அதிகாரி பன்முகம் கொண்ட இந்திய விவசாயத்தின் ¢தனித்தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. கூடவே உணவுப் பழக்கம் இந்திய சமூகம் முழுமையிலும் ஒருபோல் அமையவில்லை என்ற உண்மையை யும் எதிர்கொள்ளவில்லை. பார்ப்பன உணவுப்பழக்கம் மட்டுமே அவனுக்குத் தெரிந்த ஒன்று. பார்ப்பன வாழ்வு உடல் உழைப்பை அறியாதது. காலம் காலமாகப் பிறரைச் சுரண்டிச் செழித்த ஒன்று. தென்னாட்டில் அரிசி உணவை மட்டுமே அது அறிந் திருந்தது. உணவில் ருசி அதற்கு முதன்மையானது. தமிழ் நாட்டில், குறிப்பாகத் தென் மாவட்டங்களில் அரிசி ஒரு போதும் முதன்மையான உணவாக அமைந்ததில்லை. கடும் உடல் உழைப்பிற்குத் தேவையான உணவுப் பழக்கத்தை அது கொண்டிருந்தது. அரிசி அதில் இடம் பெறவே இல்லை. விழாக்காலத் தேவைகளுக்கு மட்டுமே அது பயன்படுத்தப் பட்டது. தனக்குத் தேவையான தானியங்களை அச்சமூகம் உற்பத்தி செய்து கொண்டது. விடுதலையைத் தொடர்ந்த காலகட்டங்களைக் களமாகக் கொண்ட தமிழ் நாவல்களிலிருந்து இவ்வுண்மைகளை உணர்ந்து கொள்ள இயலும். இதையெல்லாம் புறக்கணித்த ஓர் அதிகாரியால் பசுமைப்புரட்சி என்ற நச்சு விதை தூவப்பட்டது.

காலம்காலமாக இம்மண்ணின் தன்மைக்கேற்ப, பருவ நிலையின் இயல்பிற்கேற்ப வளர்த்தெடுக்கப்பட்ட விவசாய முறை நசுக்கப்பட்டது. குறைந்த அளவு நிலத்திலிருந்து கூடுதல் உணவு உற்பத்தி என்ற நோக்கம் முன்வைக்கப்ட்டு மண் நஞ்சாக்கப்பட்டது. மண் தாய் என்றால் (அப்படித்தான் இந்திய நாகரீகம் கூறுகிறது). அவள் மடியை அறுத்து, உதிரத்தைப் பாலாகக் குடித்த பெருமை இவ்வதிகாரிக்கு உண்டு. உற்பத்தி பெருகினாலும் பயிரிட்ட விவசாயி கூடுதல் ஆதாயத்தைப் பெற முடியாது என்ற உண்மையையும் அவன் அறிந்திருந் தான். விவசாயி தியாகியாக்கப்பட்டான். இப்போதும் தன்னை மாய்த்துக் கொண்டு அந்த அதிகாரி ஏற்றிவைத்த யாகத்தீயை அணையாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். 

நியாயவிலைக் கடையில் அரிசி வழங்கப்பட்டபோது தானிய உற்பத்தியை மறந்து முன் வரிசையில் நிற்கத் துவங் கினான். ஒரு நேரம் கோதுமை உணவு என அவன் பார்த் தறியாத தானியமும் அவன் மேல் கொட்டப்பட்டது. அரிசியும் கோதுமையும் நன்செய் நிலத்தில் விளைவன. நன்செய் விவசாயம் மட்டுமே இவ்வதிகாரியால் விவசாயமாகக் கருதப்பட்டது. இந்தியா உணவுத் தேவையை நிறைவு செய்தது. ஆனால் தன் குடிமக்களை நோயாளியாக்கியது. மக்களின் விழிப்புணர் வற்ற நிலை ஒட்டுமொத்த அழிவிற்கு வேகமாக இட்டுச் சென்றது. எஸ்.என். நாகராஜன் போன்றோர் உரத்த குரலில் இதற்கு எதிராகக் கூவிக் கொண்டிருந்தனர். ஆனால் அதிகார வர்க்கம் தன் செவியை மூடிக்கொண்டது. பாரம்பரியமான நம் கால்நடைகளை நாம் இழந்ததிலும் கால்நடை என்ற தொடர்புச் சங்கிலி எம்.எஸ். சாமிநாதனால் அறுக்கப்பட்டது. 
இப்போது கடலோர வாழ்விற்கு வருவோம். இந்தியா விவசாயத்தைப் பின்தள்ளிவிட்டு தொழிற்துறையில் முன்னே செல்ல அரசியல் கொள்கை வகுக்கப்பட்டுவிட்டது. தொழில் வளர மூலப்பொருள்கள் வேண்டும். இந்தியத் துணைக்கண்டத் திலுள்ள கனிமங்கள் அனைத்தையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தாக வேண்டும். அதிகாரவர்க்கம்தான் இதற்குத் திட்டங்கள் வகுத்து நிறைவேற்ற வேண்டும். கடற்கரையிலுள்ள, கடலிலுள்ள கனிமங்களையும் விட்டுவைக்க முடியாது. வெள்ளைத்தோல் கொண்டவர்களுக்கு உடலின்பம் அளிக்கும் சுற்றுலாத்துறை யும் ஒரு தொழில்தான். அதற்கும் கடற்கரை வேண்டும். தாயின் மடியை அறுத்து உதிரத்தைப் பாலாகக் குடித்தவர்களின் பெயர்கள்தான் இங்கும் ஒலிக்கின்றன. 
கடற்கரை மேலாண்மை மண்டல வரைவு அறிவிக்கை சாமிநாதன் தலைமையில் தயாரிக்கப்பட்டது. மேலாண்மை என்ற சொல் கவனத்தில் கொள்ள வேண்டியது. இதன் வேறொரு பொருள் உன்னைவிட நான் மேலானவன், கீழடங்கு அல்லது செத்துமடி என்பதுதான். இந்த அறிவிக்கை எந்த அளவிற்குக் கடலோர மக்களின் வாழ்வைப் பொருட்படுத்தியுள்ளது என்ற கேள்வியைக் ‘கடற்கரை வெளியேற்று மண்டலம்’ கட்டுரை யில் வறீதையா எழுப்பியுள்ளார். எஸ்.என். நாகராஜனைப் போல் வறீதையாவும் அடிப்படையில் ஒரு விஞ்ஞானி. மானுடப் பண்பை இழந்துவிடாத விஞ்ஞானி. விரிவாகவே இதுபற்றிப் பேசுகிறார். விவசாயிகளின் மரணத்தில் விவசாய உற்பத்திப் பெருக்கம்! இதற்கு  இணையானது தான் கடலோர மக்களின் வாழ்வைப் புறக்கணித்துவிட்டு கனிமங்களைச் சுரண்டுவது. ஒன்றின் விளைவை நாம் அனுபவித்துவிட்டோம். மற்றொன்றின் விளைவு நிகழாதிருக்க நம்முடைய பங்கு என்ன? நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளாகக் கேட்க வேண்டிய கேள்வி இது. வறீதையாவைப்போல் பல குரல்கள் அன்று ஒலிக்கத் துவங்கியிருந்தால் விவசாயிகளின் இன்றைய தற்கொலை கள் நிகழ்ந்திருக்காது. பல வறீதையாக்கள் கடலோர சமூகத் திலிருந்து மேலெழும்ப வேண்டும். 

தென்மாவட்டக் கடலோரங்கள் இன்று கனிமங்களுக்காகச் சுரண்டப்படுகின்றன. இச்சுரண்டலை விரிவாகவே விமர்சிக் கிறார் வறீதையா. காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவுதான் இன்றைய வறட்சி. இக்காடுகளை அழித்தது காடுகளையே சார்ந்து வாழ்ந்த பழங்குடி மக்களல்ல; அவர்களால் காடுகளை அழிக்கவும் முடியாது. காடு அவர்களுக்குத் தாயின் முலையைப் போல். தேவையான அளவு பாலை அது தன் குழந்தைகளுக்குக் கொடுத்தது. தோட்டத்தொழில் ஊக்குவிக்கப்பட்டபின்தான் காடுகள் அழிந்தன. தேயிலைக்கு ஏற்றுமதி வாய்ப்பு இருந்தது. அதைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டம் வகுக்கப்பட்ட போது காடுகளுக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத சமவெளி மனிதர்கள் காட்டைச் சூறையாடினர். இப்போது தேயிலைக்குச் சந்தை வாய்ப்பு இல்லை. தேயிலைத் தோட்டங்கள் கைவிடப் படுகின்றன. வறட்சி மட்டுமே நமக்கு மிஞ்சுகிறது. 

கடல் கடலோர சமூகத்தின் தாய். குழந்தைக்குத் தாயிட மிருந்து பாலைக் குடிக்கத் தெரியும். முலையை அறுத்து பாலைக் குடிக்கும் பேதமை அதற்கு இருக்காது. காட்டைவிட கடற்கரையின் இயற்கை நுட்பமானது. காலம் காலமாகக் குவிக்கப்பட்ட மணல் மேடுகளே கடலைத் தடுத்து நிற்கும் அரண். இம்மணல் மேடுகளில் நிறைந்திருக்கும் கனிமங்கள் தொழில் பெருக்கத்திற்குத் தேவையானவை எனில் காடுகளை அழித்ததுபோல் கடற்கரையை அழித்து எதிர்காலத்தில் நாம் பெறப்போவது என்ன?

நம் அதிகாரவர்க்கம் உண்மைகளை மட்டும் ஒருபோதும் கூறாது. சில்லரைச் சுரண்டல்காரர்களை ஓரங்கட்டிவிட்டு பெரிய சுரண்டல்காரனான டாடா நிறுவனம் கால் பதிக்கப் போகிறது. நிலம் கொடுத்தவர்களுக்கெல்லாம் வேலை. ஆனால் இதை உரிமையாகக் கொள்ளக்கூடாது என்கிறது உச்சநீதி மன்றம். மத்திய அரசின் நிறுவனங்கள்கூட நிலம் கொடுத்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகளைத் தரவில்லை. விவசாயத் திற்கு மேல்மண் மட்டுமே பயன்படக்கூடியது. மேல்மண் நீக்கப்படும்போது நிலம் விவசாயத்திற்குப் பயன்படாத பாலை யாகும். மீண்டும் மண்ணை வளப்படுத்த வேண்டுமென்றால் டாடா வெட்டி எடுத்த கனிமங்களைவிட செலவு கூடுதலாகும். டாடா தொழிற்சாலைகள் உள்ள இடங்களிலெல்லாம் மயிலிற கால் பெண்களின் இடுப்பை வருடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற ‘உண்மையை’ டாடாவும் ¢கூறுகிறார்.  அரசியல்வாதி களும் கூறிக்கொண்டிருக்கின்றனர். விஞ்ஞானியின் மொழியில் வறீதையா இச்சிக்கலை மேலான ஒரு தளத்தில் எதிர்கொள் கிறார். ‘சர்வாதிகாரத்தின் கொம்பு முளைக்கும்’ ஒவ்வொரு முறையும் ஜனநாயகம் அதைத் தறித்துவிடும்.’ வறீதையாவின் குரல் இளம் தலைமுறையின் குரல். நம்பிக்கையை அது இழந்து விடவில்லை. இழக்கப்போவதும் இல்லை என்பதை நூல் முழுமையிலிருந்தும் உணர முடிகிறது. 

கடலோர வாழ்வின் மற்றொரு சிக்கலாக வறீதையா இனங்காண்பது - கத்தோலிக்க சமயம். ஜெயபதி அடிகளார் ஒருங்கிணைந்த கருத்தரங்குகளில் மிக விரிவாகப் பேசப்பட்ட விஷயங்களுள் ஒன்று இது. சீர்த்திருத்தக் கிறிஸ்தவம் நாடார் இனக்குழு மக்களின் கல்வி உயர்வுக்கும் பொருளாதார உயர்வுக் கும் காரணமாக அமையும்போது, கத்தோலிக்க சமயம் கடலோர மக்களின் கல்வியின் மீது கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கருத்தரங்குகளில் கலந்துகொண்ட கடலோர மக்கள் தங்கள் கோபங்களை அழுத்தமாக வெளி யிட்டனர். ஆனால் கோபத்திற்குப் பின்னால் இருந்தாக வேண்டிய சிந்தனை அவர்களிடம் முற்றிலுமாக இல்லை என்றே இப்போது கூறத் தோன்றுகிறது. சிந்தனையின் அடிப்படையில் பிறக்கும் கோபம் மட்டுமே வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். வறீதையா சமயத்தை எதிர்கொள்ளும் கோணம் தனித்துவமானது.  ‘நான் சார்ந் திருக்கும் கத்தோலிக்கக் கிறிஸ்தவம், வாழ்க்கையை விமர்சனப் பார்வையுடன் அணுகவும். அறிவைக் கேள்விக்கு உட்படுத்த வும் என்னைப் பயிற்றுவித்தது’ என வெளிப்படையாகவே சமயத்துடனான தன் உறவை நினைவுகூர்கின்றார். சமயத்தை வாழ்வின் எதிரிடையான ஒன்றாக, உதறித்தள்ள வேண்டிய ஒன்றாக ஒருபோதும் அவர் கருதவில்லை. ஆனால் கடலோர மக்களின் இன்றைய வாழ்வில் சமயத்தின் நிலை குறித்த ஆழமான கவலை அவரிடமிருந்து எழுகிறது. அவர் கையாளும் ‘இறந்த நாய்க்குட்டியைச் சுமந்து திரியும் குரங்கின்’ படிமம் சக்தி வாய்ந்தது. வறீதையா இப்படிமம் ஒன்றின் மூலமாகவே தாம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடுகிறார். 

குமரி மண்ணில், குறிப்பாகக் கடலோர மக்களிடம் கத்தோலிக்க கிறிஸ்தவம் வந்து சேர்ந்தது ஓர் அரசியல் விபத்தின் காரணமாகத்தான். முத்துக்குளிக்கரையைச் சார்ந்த மீனவர் கள் இஸ்லாமியர்கள் நெருக்குதலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள கொச்சியிலிருந்த போர்த்துக்கீசியர்களின் துணையை நாடினர். கடலோர மக்களுக்கு சேவியர் ஆற்றிய பணி மகத் தானது. ஒரு தந்தையைப்போல் இம்மக்களைப் பாதுகாத்தார். ஒரு நெருக்கடியான அரசியல் சூழலில் சேவியர் இப்பகுதியை ஆண்ட மன்னனுக்கு உதவிய காரணத்தால், குமரிக் கடற்கரை மீனவர்களை தன் சமயத்தில் இணைத்துக்கொள்ளும் அனுமதி யையும் பெற்றார். ஓரிரு நாட்களில் பணி முடிந்துவிட்டது. அக்காலக்கட்டத்தில் ‘முழுமையான விசுவாசமே’ சபையின் இலக்காகக் கருதப்பட்டது. என் பள்ளிப் பருவ நாட்களில் ‘விசுவாசம் கெட்ட தொம்மை’ என்பது வசைச் சொல்லாகவே வழங்கப்பட்டது. சமயப் பணியாளர்கள் இம்மக்களின் விசுவாசத் தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டதில்லை. எப்போதும் சந்தேகக் கண்ணுடனேயே இவர்களை எதிர்கொண்டனர். வெளி உலகுடனான தொடர்பு தங்கள் மூலமாகவே நிகழ வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினர். கடலோர மீனவன் வெளி உலகுடனான தொடர்பை என்றோ இழந்துவிட்டிருக் கிறான். அவனுக்கென்று பிரதிநிதித்துவ அரசியல்கூட இன்றில்லை. காலத்தின் மாற்றத்தைக் கத்தோலிக்க சமயம் உணர மறுத்துவிட்டபோது மீனவன் காலத்தையும் இழக்கும் படியாயிற்று. இன்று கடலோர வாழ்வின் வேதனைகள் அனைத்தும் இதன் வெளிப்பாடுதான். 

சீர்த்திருத்த கிறிஸ்தவம் இங்கு வந்த சூழல் வேறு. கிறிஸ்தவ அறிவைப் பெற்று கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுதல் என்பதே அன்று இலக்காக அமைந்தது. கிறிஸ்துவை அறிந்துகொள்ளு வதற்கு வேதநூலைக் கற்றாக வேண்டும். இதற்கு மொழி அறிவு கட்டாயமானது. புதிய காலச் சூழலில் ஒரு கிறிஸ்த வனுக்கு மறு  உலக வாழ்வு மட்டுமல்ல, இவ்வுலக வாழ்வும் உண்டு. கிறிஸ்தவனான அவனை வாழச் செய்வதும் சமயத்தின் பணியே. கோவில்கள் கட்டப்படும்போது அதன் ஒரு பகுதி யாகக் கல்வி நிலையங்களும் கட்டப்பட்டன. சமூக விடுதலைக் கான போராட்டத்தில் சமயப் பணியாளர்கள் முன்னின்று போராடினர். வளர்ச்சியின் ஒரு கால கட்டத்தில் உலகியல் வாழ்வை அவர்கள் பொறுப்பிற்கே விட்டுவிட்டு ஆன்மீக வாழ்வை மட்டுமே சமயப்பணியாளர்கள் தங்கள் கடமை யாகக் கொண்டனர். இது வரலாற்றடிப்படையில் நிகழ்ந்த ஒன்று. கத்தோலிக்கக் கிறிஸ்தவமும் சீர்த்திருத்தக் கிறிஸ்தவமும் ஒரே காலகட்டத்தில் இம்மண்ணில் கால் ஊன்றவில்லை. முழுமையான விசுவாசமும் அறிவின் அடிப்படையில் அமைந்த விசுவாசமும் வேறானவை. வெவ்வேறு திசைகளில் இயங்குவன. 

என் பள்ளிப்பருவ நாட்கள் ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பள்ளியில் கழிந்தன. வயது முதிர்ந்த ஆசிரியர் ஒருவர் அன்போடு என்னை அணைத்துக் கொண்டு சொல்வார்; ‘வேதநூலை நீ படிக்கக்கூடாது. தவறாகப் புரிந்துகொள்வாய். குருவானவர் படித்து சொல்லக்கேட்க வேண்டும்’. கடலோர வாழ்வின் பெரும் துன்பங்களுக்கு முதன்மையான காரணம் குருவானவர் சொல்லச் சொல்லக் கேட்டதுதான். வானுயர்ந்த கோபுரங் களைக் கொண்ட கோவில்கள் உண்டு-ஒவ்வொரு சிறு கிராமத் திலும். ஆனால் ‘பள்ளிக்கூடங்கள் தேவையானவை; குழந்தைகள் படித்தாக வேண்டும்’ என குருவானவர் சொல்லி மக்கள் கேட்டதேயில்லை. கடலோர மக்களின் வறுமை சொர்க்கத் திற்கான வாயில். 

கத்தோலிக்க சமயம் பல நூற்றாண்டுகள் இறுகிப்போன அமைப்பினைக் கொண்டது. மாறுதல்கள் மிகமிக மெதுவாகத் தான் அதில் தோன்றக்கூடும். ஆனால் மாறுதல்களை எந்த அளவிற்கு வேகமாக சமூகம் ஏற்கின்றதோ அந்த அளவிற்கு அச்சமூகம் முன்னேறும். ஓர் இந்து இயக்கத்தைச் சார்ந்த நண்பர் ஒருவர் சொன்ன இக்கதையை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். குமரிக் கடற்கரையில், ஓர் இந்து இயக்கத்தை இந்தியா முழுமையிலும் கட்டி எழுப்பிய அதன் தலைவர் கடலுக்கு நடுவே இருந்த ஒரு பாறைக்குச் செல்ல ஆசை கொண்டு ஒரு மீனவனை உதவிக்கு அழைத்தார். மீனவன் அவ்வூர்ப் பாதிரியின் அனுமதியைக் கேட்டான். பாதிரியார் விசாரித்துவிட்டு ‘கூடாது’ என்றார். அந்த இயக்கத் தலைவர் கடல் நீரை வாரி இறைத்து சபதம் பூண்டார். குமரி மண்ணில் நிகழ்ந்த பெரும் சமயக் கலவரத்தின் ஆணிவேர் இது. ஆழிப் பேரலையின் கொடுமைக்கு நிகரான அழிவை அது கடலோரத் தில் அன்று நிகழ்த்தியது. 

காலத்தின் மாறுதலை கத்தோலிக்க சமயம் அப்பணி யாளருக்கு உணர்த்தவில்லை. சிலுவைப்போர்க் காலகட்டத் திலிருந்து அப்பணியாளர் அப்போது வெளியேறி இருக்க வில்லை. 

இதில் வறீதையாவின் பார்வை ஆரோக்கியமானது. அவர் பணி சமயத்தை விமர்சிப்பதல்ல. ஆனால் ‘பணியாளர்’, ‘விசுவாசி’ என்னும் இரட்டை நிலை ஒழிந்தாக வேண்டும். உலகியல் வாழ்வில் ‘விசுவாசி’ என்றொருவன் இல்லை. சமூக மனிதன் மட்டுமே இருக்கிறான். வாழ்வின் நிலைநிற்பிற்காக அவன் போராடியாக வேண்டும். தலைமை தாங்க அவன் தலைவர் களைத் தோற்றுவித்தாக வேண்டும். ஆன்மீக வாழ்வைச் செம்மைப்படுத்தும் பொறுப்பை பணியாளர் மட்டுமே வகிக்க முடியும். 

கடலின் இயற்கை மிக நுட்பமானது. மனிதக் குறுக்கீடு களை அது ஒருபோதும் ஏற்பதில்லை. என் கல்லூரி நாட்களில் கன்னியாகுமரி ஒரு சிறு கிராமம்தான். குமரி பகவதி அம்மன் கோவிலும் மலையளவு உயர்ந்த மணல் தேரியும்தான் அன்றைய கன்னியாகுமரியின் அடையாளங்கள். கடலின் நடுவிலிருந்த ஒரு பாறையின் மீது மனிதன் காலுன்ற மேற்கொண்ட முயற்சி யின் துவக்கமே இன்றைய சீரழிவின் தொடக்கம். கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல சில மீட்டர் அளவிலான படகணையும் துறை கட்டப்பட்டபோது காலம்காலமாக இருந்துவந்த மணல்தேரி காணாமலானது. குழந்தையின் காலடிகளை முத்தமிட கரையை மெதுவாக மோதிக்கொண் டிருந்த கடலலைகள் சீற்றம் கொண்டு கரையைத் தாக்கின. கடற்கரையில் கற்பாறைகள் அடுக்கப்பட்டு, குழந்தைகளின் கால்களுக்கும் கடலலைக்குமான உறவு நிரந்தரமாகத் தடுக்கப் பட்டது. கடல் நீரோட்டம் தடைபட்டதே இதன் காரணம். கடல் நீரோட்டம் கடலின் உயிர்மூச்சு. கடல் சார்ந்து வாழும் மீன்கள், மனிதர்கள் என அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் மூச்சு கடல் நீரோட்டம்தான். கடலோர சமூகம் காலம் காலமாக கடலோடு இணைந்து வாழ்ந்த சமூகம். வாழ்வனு பவங்களிலிருந்து கடல்சார்ந்த அறிவைச் சேகரித்து அது சேமித்து வைத்துள்ளது. கடற்கரையில் புதிய திட்டங்களுக்கு இடமேயில்லை என்பதல்ல. திட்டங்களை முடிவு செய்யும் போது கடலோர சமூகத்தின் கடல்சார்ந்த அறிவும் கணக்கி லெடுக்கப்பட வேண்டும் என்பதுதான். 

கடற்பாசி குறித்த வறீதையாவின் பார்வையை இங்குக் குறிப்பிட வேண்டும். கடற்பாசி வளர்க்கும் தொழில் அரசின் மானிய உதவியுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மீனவர்கள் வளர்க்கும் பாசியை அந்நிய நாட்டு நிறுவனமான பெப்ஸிகோ வாங்கிக்கொள்ளும். இதுபோலவே கொக்கோ பயிரிட விவசாயிகள் தூண்டப்பட்டனர். மலையோர கிராமங்கள் கொக்கோ தோட்டங்களாக மாற்றவும் பட்டன. ஆனால் வாங்கிக்கொள்வதாக வாக்குறுதி தந்த அந்நிய நிறுவனங் கள் கைவிரித்தபோது, கொக்கோ விவசாயிகள் அரசாலும் கைவிடப்பட்டனர். காலனி ஆட்சியின் போது நீல அவுரியைப் பயிரிடத் தூண்டி, பின் வெள்ளைத்தோல் மனிதர்கள் வாங்க மறுத்தபோதுதான் இந்திய விடுதலைப்போரே வேர் கொண்டது. கடந்த கால வாழ்வனுபவங்களே மனிதனை வழிநடத்துகின்றன. 

மீன்துறை அமைச்சரான லூர்தம்மாள் சைமனால் நன்னீர் மீன்வளத்தைப் பெருக்கும் பொருட்டு திலேப்பியா மீன் தமிழ் நாட்டு நீர்நிலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாயில் வைத்து தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் திலேப்பியா, பிற மீன்களின் குஞ்சுகளை முற்றிலுமாக அழித்துவிடும். அதன் இயற்கை சூழலில் பிற மீன்கள் அதனோடு இணைந்து வாழும் சக்தியைப் பெற்றிருந்தன. புதிய சூழலில் திலேப்பியா பிற மீன்களை வாழ அனுமதிக்கவில்லை. இன்று நன்னீர் மீன் வளர்ப்பில் திலேப்பியா ஒரு களை. கடற்பாசி இனமான ‘கப்பாஃபைகஸ்’ நம் நாட்டுப் பாசியினம் அல்ல. புதிய சூழலில் இது நிகழ்த்தப்போகும் தாக்கத்தை இன்று கணிக்க இயலாது. திலேப்பியாவை இங்கு அறிமுகம் செய்ய முடிவெடுத்த அதிகார வர்க்கம் இதனால் எவ்விதப் பாதிப்பினையும் எதிர்கொள்ள வில்லை. பாதிப்பு மக்களுக்கு மட்டும்தான். ‘கப்பாஃபைகஸ்’ நாளை பாதிக்கப்போவதும் மக்களைத்தான். கடலோர மக்களின் பாரம்பரிய அறிவு வரப்போகும் ஆபத்தை முன்னுணர் கிறது. வறீதையா என்ற விஞ்ஞானியின் அறிவு, அவர் பிறந்து வளர்ந்த சமூகத்தின் பாரம்பரிய அறிவைக் கணக்கிலெடுத்துக் கொண்டு எச்சரிக்கை செய்கிறது. 

கடலோர மக்களின் வாழ்வே ஒரு கட்டுமரம்தான். மனித அறிவில் தோற்றங்கொண்ட மிக எளிமையான, சக்தி வாய்ந்த தொழிற்கருவி. அதன் அமைப்பு எளிமையானது. ஆனால் காற்றின் சக்தியைத் தன் சக்தியாக வரிந்துகொள்கிறது. அதன் திசையைத் தீர்மானிக்க கருவிகள் உண்டு. கருவிகளை இயக்க கடலோர இளைஞர்கள் முன்வந்தாக வேண்டும். 
இது வறீதையா என்ற விஞ்ஞானியின் கனவு.

No comments:

Post a Comment

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...