Thursday, 20 June 2019

கடற்கோள் காலம் | வறீதையா.

கடற்கோள் காலம் | வறீதையா | எதிர் வெளியீடு | ISBN. 978-93-87333-59-8 | 2019 | பக். 134 |₹140/-

அமேசானில் (Amazon.in) பெறுவதற்கு:
https://www.amazon.in/dp/9387333590/ref=mp_s_a_1_1?keywords=9789387333598&qid=1562851051&s=gateway&sr=8-1

பாரம்பரிய மீனவர்கள் கடலையும் கடற்கரையையும் விட்டு வெளியேறிவிட வேண்டும் என்றால் இந்தப் பத்தாண்டு சுனாமி மறுகட்டுமானத்தின் பெறுமதி என்ன? (நிலம் நிகழ்த்தும் சுனாமி).

ஒரு நாட்டின் மிகப்பெரிய பலம் அதன் இராணுவம் அல்ல, வரலாற்று நினைவுகளே. குதிரை ஓடிய பிறகு இலாயத்தைப் பூட்டுவதுதான் நமது பேரிடர் அணுகுமுறையாக உள்ளது. பேரிடர்ப் படிப்பினைகளைக் குடிமைச் சமூகம் எளிதாகப் புறக்கணித்து விடுகிறது (பியான் முதல் ஒக்கி வரை).

இனரீதியான புறக்கணிப்பும் கடைக்கோடி மக்கள் மீதான அலட்சியமும் அதிகார அடுக்குளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; அதுவே, பேரிடர்ச் சூழலில் பெரும் உயிர்ப்பலிகளுக்குக் காரணமாகவும் அமைந்து விடுகின்றன (கஜாப் புயல்- மீள் சந்திப்பு).

“ஒரு திறமையான அரசாங்கம் எங்களைப் பாதுகாப்பாகக் கடலுக்குள் போய் மீன்பிடிக்க வசதி செய்து தரவேண்டும், போகாதே, புயல் வரும் என்று சும்மா மிரட்டிக்கொண்டிருக்கக் கூடாது.” (கடல் பாதுகாப்புக் கரிசனங்கள்).

இயற்கைப் பேரிடர்களை அடித்தள மக்கள் மீதான உளவியல் போராக முன்னெடுக்கும் குரூர மனநிலை, அரசவன்மம் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அடித்தள மக்களுக்குப் போக்கிடமேது?(இயற்கைச் சீற்றமும் கொடை அரசியலும்).

தலைநகரத்துக்கும் மீனவர்களுக்குமான தூரம் என்பது கருத்தியல்களின் இடைவெளி. ஊடகங்கள் அவர்களின் குரலை அதிகாரபீடத்துக்குக் கரிசனத்துடன் எடுத்துச் செல்லவேண்டும் (பேரிடர், ஊடகம், கொள்கைத்தளம்).

மீன்வளப் பொருளாதாரத்தில் சிக்கலான, அபாயம் மிகுந்த வேலை பாரம்பரிய மீனவர்களுடையது; மீன்வளப் பொருளாதாரத்திலிருந்து பாரம்பரிய மீனவர்கள் முற்றிலுமாக விலக்கப்பட்டிருக்கிறார்கள்.

நெய்தல் பெண்களின் நேரடிப் பொருளாதாரப் பங்களிப்பு சூன்யமாகிவிட்ட நிலையில், வாழ்வாதார முதலீடுகளின் வீழ்ச்சி அந்தச் சமூகங்களின் ஒட்டுமொத்தப் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாகிறது. எல்லா ஆறுகளும் கடலில் சேர்வது போல சமூகத்தின் ஒட்டுமொத்த துயரமும் பெண்ணை வந்தடைகிறது (கடல் பேரிடர் அபலைகள்).

ஆறுகள் வீணாகக் கடலில் கலப்பதில்லை. இயற்கை எதையும் இலக்கின்றி நிகழ்த்துவதில்லை. மீன்வளம் சிறக்கத் தேவையான உயிர்ச்சத்துகளைக் கடலுக்குக் கொணர்வது ஆறுகள் (கடலோர வனங்கள் எங்கே?)

கடற்கரைகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பூர்வகுடிகளுக்கு அடிப்படை வசதிகளும் முறையான பாதுகாப்புப் பயிற்சியும் வழங்கி, அவர்களைக் கடற்கரையின் காவலர்களாக அங்கேயே தொடர அனுமதிக்க வேண்டும்.(கடலோடிகளற்ற கடற்கரை!).

மீனவர்கள் தங்கள் எதிர்காலத்தை உறுதிசெய்துகொள்ள, பிரதிநிதித்துவம் சாராத அரசியல் பங்கேற்பும், அரசு இயந்திரத்தில் (கொள்கைத் தளங்களில்) பங்கேற்பும், பொதுச் சமூகத்துடனான உரையாடலும் தேவை. (நெய்தல் அரசியல் இயக்கம்.)

No comments:

Post a Comment

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...