Tuesday, 7 July 2020

கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை | வறீதையா கான்ஸ்தந்தின்

இப்போதுஅமேசான் கிண்டிலில் கிடைக்கிறது.

கடல்வெளி வெளியீடு | 2020.

கோடிமுனை என்னும் போதிமரம்

அருட்பணி. மாற்கு ஸ்டீஃபன் s.j.
நூல் அறிமுகவுரையில்.
அடித்தட்டு மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும், கடைக்கோடி மனிதனின் குரலும் கேட்கப்பட வேண்டும் என்ற அருட்பணி.எட்வினின் செயல்பாடுகள் எனக்கு முழு திருப்தி அளித்தன. எட்வினின் எளிய வாழ்வு எனக்கு மிகவும் பிடித்தது, அவரது தடத்தில் பயணித்தேன்.
சில கடற்கரைக் கிராமங்களில் பங்குப் பணியாளர் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்தான் தலைவர். மாவட்ட ஆட்சியர், காவலர்கள் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் பங்குப் பணியாளர்களின் தலைமையை அங்கீகரித்தனர். பங்குப் பணியாளர்களோ கிராமத்தில் இருக்கும் ஊச்சாளிகள், பணக்காரர்கள், பரம்பரைத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் பிரதிநிதியாகத்தான் பங்கை நடத்தினர். கடைக்கோடி மனிதனின் குரல் அங்கு எடுபடவில்லை. நிதி முழுவதையும் பங்குப் பணியாளரே கையாண்டார். இந்த இரண்டு போதைகளால் கட்டுண்டவர்களாகப் பல பங்குப் பணியாளர்கள் இருந்தனர். இந்த இரண்டும் அடித்தள சமூகப் பிரதிநிதிகளின் கூட்டு அமைப்பான முழு வளர்ச்சி சங்கம் வழியாக கடைக்கோடி மனிதர்களிடம் கொடுக்கப்பட்டன… இந்த மாற்றத்தைச் சில பங்குப் பணியாளர்களால் சீரணிக்க முடியவில்லை.
மீனவர்கள் பற்றிய எட்வினின் பார்வை மிக முக்கியமானது. விளிம்புச் சமூகமாக இவர்களை எட்வின் பார்க்கவில்லை. இம்மக்களிடம் நாம் அனைவரும் சமம் என்ற பார்வை இருப்பதால் அனைவரும் மனிதர்கள் என்ற உணர்வே இருக்கிறது என்கிறார். இக்கண்ணோட்டத்தில் மீனவர்களைப் பார்க்க இப்புத்தகம் நம்மை அழைக்கிறது.
கோடிமுனையில் பணியாற்றியபோது சில பெற்றோர் என்னிடம் தங்களது மகள்களுக்கு ஏற்ற துணை மற்ற சாதியில் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினர். மனிதர் அனைவரும் சமம் என்ற அவர்களது எண்ணத்தின் வெளிப்பாடாக நான் இதைக் கண்டேன். நானே சில சாதி மறுப்புத் திருமணங்களையும் நடத்தினேன். வேறு எந்தக் கிறிஸ்தவச் சமூகத்திலும் காணப்படாத மிக உயர்ந்த மனித மாண்பு இது.
மதத்தை நிர்வாகத்தோடு இணைத்துப் பார்ப்பது கடற்கரையில் இயல்பானதாக இருக்கிறது… பங்குப் பணியாளர்களது நிர்வாகத்தை முழுவளர்ச்சி சங்கம் செய்கிறது என்ற மடைமாற்றம்தான் நடைபெற்றதே தவிர நிர்வாகம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்ட ஒர் அரசியல் செயல்பாடு என்ற கண்ணோட்டம் இல்லை. ‘அதிகாரம் கீழிருந்து மேல்நோக்கி’ என்ற கருத்தினை (அடித்தளக் கிறிஸ்தவ சமூகங்கள் மூலம்) கடலோர மீனவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற எல்லைக்குள் எட்வின் தனது பணியைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அடித்தள மக்கள் சாதி, சமயம், கட்சி, பொருளாதாரத்தைக் கடந்தும் செயல்பட வேண்டும் என்று எண்ணினார். அதனால் அக்கம்பக்கத்துப் பாராளுமன்றம், சிறார் பாராளுமன்றம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளார். இவையும் உலக மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஐ.நா. சபையில் இக்கருத்து விவாதிக்கப்படுகிறது.
கடலோர மக்களிடம் மாற்றுச் சிந்தனைக்கு அடித்தளமிடுகிறது இந்தப் புத்தகம். அனைவரும் படிக்க வேண்டிய ஓர் அருமையான படைப்பு.
குழுவாக்கமும் பொருளாதார விடுதலையும்.
அருட்பணி.எம்.ஜெ.எட்வின்
கோடிமுனை முயற்சியின் உந்துதலால் இந்தியா முழுவதும் ஒரு இலட்சம் அன்பியங்கள் உருவாகியுள்ளது. கோடிமுனையைப் பின்பற்றிக் கேரளாவில் அன்பியங்கள் உருவாக்கப்பட்டபோது கேரள அரசு அதை முன்மாதிரியாகக் கொண்டு ஏழைப் பெண்களின் அண்டைக் குழுக்களை (Neighbourhood Groups of Poor Women) உருவாக்கியது. அதைப் பல நாடுகளிலிருந்து வந்து படித்துச் செல்கிறார்கள். இதுவரை வாய் பேசாதிருந்த பெண்கள் மூன்று இலட்சம் குழுக்களாக ஒருங்கிணைந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள் விவாதிக்கிறார்கள், திட்டமிடுகிறார்கள். இந்தக் குழுக்கள் வார்டு, பஞ்சாயத்து நிலைகளில் ஒருங்கிணைக்கப் பட்டிருக்கின்றன. இந்த அரசியலாக்கம் எவ்வளவு வலுப்பெற்றிருக்கிறது என்றால் கடந்த இரண்டு உள்ளாட்சிப் பொதுத் தேர்தல்களிலும் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாகத் தெரிவு பெற்றிருக்கிறார்கள். கேரளாவில் இதற்கு அடுத்த கட்டமாக - அக்கம்பக்கத்து சபா, அக்கம்பக்கத்து வார்டு சபா, பஞ்சாயத்து சபா என்று மூன்று அடுக்குளாக இந்தக் கட்டுமானம் மேம்பட்டிருக்கிறது. அயல் சபா என்று அவர்கள் குறிப்பிடுவதை நாங்கள் அக்கம் பக்கத்துப் பாராளுமன்றம் என்கிறோம். கேரளாவில் குடும்பஸ்ரீ அமைப்பு வெற்றிகரமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்த அமைப்பைத் திரும்பிப் பார்க்கின்றன.
பொதுவாழ்வில் பெண்ணின் பங்களிப்புக்கான வாசலைத் திறந்து வைத்த கோடிமுனை முழு வளர்ச்சி சங்கம் (1978).
மேரி தெரெஸ் (65, கோடிமுனை).
ஊர்ப் பிரதானிகளின் கையிலிருந்த அதிகார அமைப்பு உடைபட்டது; சாமியாரிடம் இருந்த எல்லா அதிகாரமும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இது கத்தோலிக்கக் கடற்கரை வரலாற்றில் ஒரு பெரிய மாற்றம்.
முன்பெல்லாம் கோடிமுனை தொடர்பாக 50, 60 வழக்குகளாவது நிலுவையிலிருக்கும்; வாரத்துக்கு ஒன்றிரண்டு வழக்குகள் எப்படியும் காவல் நிலையத்தில் பதிவாகிவிடும். முழு வளர்ச்சி சங்கத்தின் கீழ் ஒரு நீதிமன்றம் (அமைதிக்குழு) இருந்தது. ஊரில் என்ன மோதல் என்றாலும் நீதிமன்றம் அதைச் சமரசமாய்த் தீர்த்துவைத்துவிடும். அந்தக் காலத்தில் ஒரு வழக்குகூட வெளியே போகவில்லை.
கடற்கரை ஊர்களில் ஒரே வீட்டில் நான்கைந்து குடும்பங்கள் சமாளித்துக் கொண்டிருப்பது வழக்கமான பிரச்சினை. வீட்டு வசதி சங்கம் அமைக்கப்பட்டு, ஊர் சேமித்த வருவாயில் நிலம் கொள்முதல் செய்யப்பட்டு, வீட்டுக்கு மூன்று சென்ட் அளவில் வீடற்றவர்களுக்குக் கொடுத்து வீடு கட்ட உதவியது. பணம் வங்கியில் இருந்தது; அதிகாரம் சங்கத்திடம் இருந்தது; சாமியார் கண்காணிப்பாளராக இருந்தார்.
சண்டை போடத் தயார்படுத்தவும் சண்டைக்குப் பிறகு வழக்கு நடத்தவுமே வாழ்நாள் சரியாக இருந்தது என்கிற நிலைமை மாறி ஊரில் சண்டைக்கான சூழல் தவிர்க்கப்பட்டது; ஊரின் வளர்ச்சிக்காகத் திட்டமிடுவது, செயல்படுத்துவது, மீள்பார்வை செய்வது போன்றவற்றில் செலவிட நிறைய நேரம் கிடைத்தது. சண்டைகள் தவிர்க்கப்பட்ட நிலையில் சேமிப்பும் பொருளாதாரமும் மேம்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பாமர மக்கள் எனக் கருதப்பட்டவர்கள் தங்களாலும் திட்டமிடவும் செயல்படுத்தவும் முடியும் என்கிற நம்பிக்கையைப் பெற்றார்கள். இந்தப் படிப்பினைதான் மிகப்பெரிய சாதிப்பு என்று சொல்லவேண்டும். இது தவிர, பொதுவாழ்வில் பெண்ணின் பங்களிப்புக்கான வாசலைத் திறந்து வைத்தது.
கோடிமுனையின் பொற்காலம்... ஒரு இனிமையான கனவு போல…
ஃபெர்னாண்டஸ் (62, கோடிமுனை).
“ஒரு தேன்கூடு போல ஊர் எப்போதும் பரபரவென்று சுறுசுறுப்பாக இருந்தது. ஊரின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டிருந்த ஒவ்வொரு குழுவிலும் எப்போதும் ஏதேனும் ஒரு செயல்பாடு நடந்துகொண்டேயிருந்தது. நீதிக்குழு ஊரிலுள்ள கோஷ்டிச் சண்டைகளுக்கு முடிவு கட்டியிருந்தது. நிலுவையிலிருந்த நீதிமன்ற வழக்குகள் ஏறத்தாழ அனைத்தும் முடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டக் காவல்துறைக்குப் பெருத்த சந்தேகம் ஏற்பட்டது.
கோடிமுனையிலிருந்து மாதம்தோறும் வழக்குகள் வந்துகொண்டேயிருக்கும், ஆண்டுதோறும் ஒன்றிரண்டு கொலைவழக்குகளும் வரும்; மூன்று வருடங்களாக ஒரு வழக்குகூடப் பதிவாகவில்லை. ‘கோடிமுனையில் என்னதான் நடக்கிறது என்று விசாரித்து வாருங்கள்’ என்று மாவட்டத் தலைமையகம் காவல் அதிகாரிகளைக் கோடிமுனைக்கு அனுப்பிப் புலன் விசாரணை செய்தது. ஊரில் சில எதிர்ப்பாளர்கள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் அவர்களும்கூட மாற்கு சாமியார் காலத்தில் ஊரில் கல்லறை இடிப்புப் பிரச்சனை எழுந்தபோது ஊரோடு இணைந்து கொண்டார்கள். அன்றுவரை கோடிமுனை கண்டிராத அளவில் ஊரே ஒன்றுதிரண்டு நின்ற காட்சியை மறக்க முடியாது. உலகுக்கு அது ஒரு படிப்பினை. இந்த ஒற்றுமைதான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அபாயமணியாய் ஒலித்தது என்று நினைக்கிறேன். சரியான முறையில் பயிற்றுவிக்கப்பட்டு, கருத்துத் தெளிவோடு குழுவாக வேலை செய்து கொண்டிருக்கும் மக்களுக்கிடையில் அரசியல் தரகர்களுக்கும் இடமில்லாமல் போனது. திரும்பிப் பார்க்கையில் எல்லாமே ஒரு இனிமையான கனவு போல…”






No comments:

Post a Comment

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...