Tuesday, 23 July 2019

கஜாப்புயலும்.../ வறீதையா /Ram Gopal (புத்தகம் பேசுது) பதிவு.


கஜாப் புயலும் காவிரி டெல்டாவும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், நல்ல உள்ளங்கள், அரசு இயந்திரம் என பலரும் படிக்க வேண்டிய ஒன்று. 




கடல்புற வாழ்வியல் குறித்து சமீப காலங்களில் எழுத்துக்கள் மூலம் கவனம் ஈர்க்க செய்தவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்கள். இதோ பாரதி புத்தகாலயமும் வறீதையா அவர்களின் படைப்போடு, படைப்பு என சொல்லலாமா, ஆய்வு என சொல்லலாம். கஜாப் புயல் பின்னணியில் டெல்டா மாவட்டங்களின் கடல்புறத்தில் நிகழ்ந்த அழிவை, விவசாயிகளின் வாழ்வை அப்படியே இருபது ஆண்டு காலத்திற்கு சூறையாடிய கொடும் தன்மையை, இயற்கை அறிவு (அல்லது தொழில் சார் அடிப்படை அறிவு), அரசின் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கை மெத்தனங்கள் மட்டுமல்லாது, எளிய மக்களை "லாபம்" என்னும் ஒற்றை இலக்கில் அழித்தொழிக்கும் கார்ப்பரேட் நல கொள்கைகளையும், அதிகாரிகளின் ஈவு இரக்கமற்ற ஊழல்களையும், இறுதியாய் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறித்தும் பதிவிட்டிருக்கிறார்.

MNREGAதிட்டத்தால் கிராமங்களில் மக்கள் (இந்த நூலில் பெண்கள்) வயல் வேலைக்கு வருவதில்லை என்னும் ஒரு குற்றச்சாட்டு பலநாட்களாய் பலரும் சொல்லும் ஒன்று. இந்நூலிலும் ஒரு இடத்தில் ஒரு விவசாயி அப்படி சொல்வதாக வருகிறது. இது குறித்து "என்ன தோழர், இப்படி சொல்றாரு, அதுமட்டுமில்ல, வயலில் வேலை செய்வதையும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரலாம்" எனவும் சொல்கிறாரே என என் நெருங்கிய தோழர் ஒருவரிடம் கேட்ட போது, “ தோழர் . அதுதான் சிபிஐஎம் புதுவையில் கேட்பதும். இது கேரளாவில் நடைமுறையில் இருக்கிறது. விவசாயிகளின் மானியத்தை அரசு இவ்வாறாகவும் ஈடு செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம், விவசாயிகளின் மானியம் அதன் உண்மையான பயன்பாட்டிற்கு பயன்படுகிறது மட்டுமல்லாது விவசாயத் தொழிலில் வேலை செய்ய ஆள் கிடைக்கவில்லை என்ற பிரச்சனையும் சமாளிக்கலாம். என சொன்னார். இது எனக்கு புதிய செய்தி.

இதுபோல கடலாடிகளின் மீனவர்களின் பேரழிவுக் காலங்களின் வாழ்க்கை போராட்டங்கள் பலதும் பதிவாகி இருக்கிறது. அரசு அதிகாரிகளின் போதாமை, செயலின்மை, ஊழல் முக்கியவை பேரிடர் இழப்புகளை விட கொடுமையானதாக இருக்கிறது. ஒரு பக்கம் பேரிடர் மேலாண்மை மீட்பு மையம் பேரிடர் காலங்களில் உயிரழப்புகளை தடுப்பதில் வெற்றி கண்டாலும், ”செண்டரில் தங்க வச்சீங்க, சோறு போடமாட்டீங்களா, எங்க உடமைகளை எப்படி விட்டு வருவது, “ என்ற கேள்விகளுக்கு இன்னும் விடையளிக்கப்படாமல் இருக்கிறது. போட்கள் வலைகள் வாங்கி கொடுப்பதில் உள்ள மெத்தனத்தை ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால், புயல் சூறையாடி நான்கு மாதங்கள் சென்ற பின் பார்க்கையிலும் மாணவர்களின் வீணாகிப் போன புத்தகங்களுக்கு மாற்றுப் புத்தகங்கள் கொடுக்காமல் இருப்பதை எப்படி ஏற்பது?

சுவையான பதிவுகளில் ஒன்று இப்படி இருக்கிறது. ஒரு மீனவரின் மனைவி இப்படி சொல்கிறாள், “பேரழிவோ அல்லது இயல்பு நிலையோ நாம்தான் அலைய வேண்டியிருக்கு. நடு இரவில் மீன் பிடிக்க போய் காலைல வந்துடறாங்க. படகு இழுத்து கடலுக்கு விடுவதில் இருந்து, பின்பு மீனோடு இழுத்தும், வீட்டில் சமைத்தும், துணி துவைத்தும், பெருக்கியிம் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கு. கடலுக்கு போகாத காலங்களில் ஆம்பளைக வீட்டுல ஒத்தாசை செய்ய கூடாதா?" .
இன்னொரு இடம், “இந்த சேதுசமுத்திர திட்டம் மீனவர்களின் வாழ்வில் மண் அள்ளிப் போட இருக்கிறது. எங்க கட்சி இந்த திட்டத்தை ஆதரிபத்தாலும் நான் எதிர்க்கிறேன். அவிங்களுக்கு எல்லாம் தெரியும் என எப்படி நினைக்கிறாங்க என்று தெரியல. மீனவர்களுக்கு அறிவில்லையா என்ன? நல்லகண்ணு அய்யாகிட்டேயே சொல்லிட்டேன், இது சரிவராது என்று" என சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சி மீனவர் ஒருவர்.

பல கோடி ரூபாய்கள் கட்டி உருவாக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு உதவ முன்வந்த ஓ.என்.ஜி.சி நிறுவனம், கஜாப் புயல் பாதித்த இடங்களில் எந்த உதவியும் செய்யவில்லை என்பதும், நடந்த பேரழிவினை ஓரள்விற்கு மட்டுமே வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பின் ஊமையாகிவிட்ட ஊடகங்கள் மற்றும் சுனாமி காலம் போல் அல்லாது மறுவாழ்வு நடவடிக்கைகளைல் ஈடுபடாமல் காணாமல் சென்று விட்ட தொண்டு நிறுவனங்கள் என அனைத்தும் வருகிறது.

இவ்வாறாக பல செய்திகள் இருக்கும் புத்தகத்தில் எனக்கு சிக்கலாக தோன்றும் இடங்கள் சில உண்டு. அவற்றில் ஒன்று. MS சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பசுமைப் புரட்சி ஒரு சதியே என்ற தோரணையில் சொல்வதை எப்படி ஏற்பதென தெரியவில்லை. பசுமைப் புரட்சி ஒரு குறிப்பிட்ட இலக்கில் குறிப்பிட்ட சுருங்கிய காலத்தில் வந்த ஒரு செயல்பாடு அல்லவா, அது மட்டுமல்லாது அந்தக் காலத்து பஞ்சத்தை போக்கியதல்லவா? அதை ஒரேயடியாக மட்டையடியாக தீயதாகவே பார்பப்தில் சிக்கல் இல்லையா? (அதே சமயம், ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலில் வருவது போல், பஞ்சங்கள் உண்டாக்கப்படுவதும் ஒரு கார்ப்பரேடின் நலத்திற்காக என்ற கருத்தும் என் நினைவுக்கு வராமலில்லை). ஆகவே, இந்தக் கேள்வி ஒரு clarityக்காக தானே தவிர, வறீதையாவை குறை சொல்வதற்காக அல்ல.

கஜாப் புயலும் காவிரி டெல்டாவும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், நல்ல உள்ளங்கள், அரசு இயந்திரம் என பலரும் படிக்க வேண்டிய ஒன்று. பேரழிவுக் பின்னால வாழ்விலும், பேரவிழினை ஓரளவிற்கு தடுக்க கூடிய வழிகளையும் ஆலோசனை செய்ய வேண்டிய நேரம் இது. எப்படா பேரழிவு நிகழும், அந்த இடத்தை தங்கள் லாபத்திற்கு பயன்படுத்து காத்து கிடைக்கும் கார்ப்பரேட் கும்பலிலிருந்து இயற்கையும், மக்களையும் காத்திட வேண்டும் என எண்ணுவோரும் அவசியம் படித்தே ஆக வேண்டும்.

எப்போதும் போல் அல்லாமல் எழுத்துப் பிழையல்லாமல் பதிப்பித்த பாரதி புத்தகாலயத்தார் (எங்க நிறுவனம் தான்! 😜பாராட்டுக்குரியவர்கள். Puthagam Pesuthu
+++++++++++++++++++++++++++++++++++

Poppu Purushothaman: மொத்த சாரத்தை அழகாக வடித்துக் கொடுத்துள்ளீரகள் தோழர்.

பசுமைப் புரட்சி குறித்து சிலவற்றைப் பகிர விரும்புகிறேன்.

பசுமைப் புரட்சி க்குப் பின்னரே விவசாயிகளிடம் பணப்பயிர் மோகம் அதிகமானது. அதாவது நிலத்தைப் பற்றியும் சுற்றுச்சூழல் குறித்தும் முன்னர் பல தலைமுறைகளாகக் கொண்டிருந்த அக்கறை அவர்களிடமிருந்து விடை பெற்றது.

பாரம்பரியமான மண்ணுக்கேற்ற நெல் வகைகளும், பயறு வகைகளும், சிறுதானிய வகைகளும் விளைவிக்கும் பண்பு குறைந்து சந்தைக்கேற்ற விளைபொருள் உற்பத்தி மீது மோகம் அதிகரிக்க விவசாயத்தில் வெளி வர்த்தகர்களின், அந்நியரகளின் தலையீடு அதிகரித்தது.

மீண்டும் மீண்டும் குறுகியகால நெல், கரும்பு போன்றவை பயிரிட நீர்த்தேவை நெருக்கடி மிகுந்த நிலைக்கு மாறியது.

ஏரி, குளப் பொது நீர் விநியோக முறையில் இருந்து விலகி வலுத்தவன் போர் போட்டு விவசாயம் செய்யும் புதிய வேளாண் கலாச்சாரம் உருவானது.

இருபதாண்டுகளில் மண்ணும் மண்ணில் விளையும் நெல்லும் மலட்டு நிலையெட்ட அதனை உண்ணும் மக்கள் சோனாங்கிகளாகவும் நோயாளிகளாகவும் ஆகி விட்டனர்.

இன்று இடுபொருள் விலை கூடியதால் நிலமிருந்தால் தண்ணியில்லை, இரண்டும் இருந்தால் விளைகிற பொருளுக்கு விலையில்லை. எல்லாம் இருந்தாலும் உழைக்க ஆளில்லை. வேளாண் கலாச்சாரம் சிதைந்த்து. அதைப். பொருட்டாக்க வேண்டியதில்லை என்றாலும் நாளை தலைமுறையின் உணவுக்கு வழி?

Ram Gopal: Poppu Purushothaman ஆனால் பஞ்சத்தில் கொத்து தொத்தாய் மக்கள் மடிகையில் இந்த திட்டம் பலன் தந்தது தானே... அதைத்தான் ஒரு பொருளாதார அடியளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலில் சொல்லியுள்ளது போல் இதுவும் கார்ப்பரேட் சூதுகளில் ஒன்றோ எனவும் என்ன இடம் இருக்கிறது என்று எழுதியுள்ளேன். நன்றி தோழா.

Poppu Purushothaman: Ram Gopal பழைய பஞ்சங்களுக்கும் பசுமைப் புரடசிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மற்றவற்றைப் போலவே வேளாணமையையும் நவீனப்படுத்த வேண்டும் தான். சுற்றுச் சூழலுக்கும், விவசாயிகளின் வாழ்வாதரத்திற்கும் பங்கம் வராமல். ஆனால் பசுமைப்புரடசியில் நடந்த்தென்ன?

வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்குக் காரணம் விவசாயப்பரப்பு அதிகரித்தது தானே தவிர நவீன மயத்தின் விளைவால் அல்ல. முன்னர் செய்து வந்த பன்மைப் பயிர் முறையைக் கணக்கில் வைக்காமல் நெல் உற்பத்தியை மட்டுமே கணக்கில் வைத்து சாதனையாகத் தம்பட்டம் அடித்து வந்துள்ளார்கள்.
Ram Gopal: Poppu Purushothaman நன்றி தோழர்...
—-----*-------------*--------------*------------*--------
Ram Gopal: சமீப காலமாக என்று தொடங்கியுள்ளேன். அவ்வளவு எளிதாக வேகமாக காலம் கடந்துவிட்டது போலும். 2004 தொடங்கி இன்று வரையிலான 15 ஆண்டுகள் வறீதையா எழுதி வருகிறார். சுட்டிக்காட்டிய தோழருக்கு நன்றி.

No comments:

Post a Comment

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...