Tuesday, 19 April 2022

மீனவர்களின் பொருளாதாரப் பார்வை மாறவேண்டும்- சுரேஷ் (நேர்காணல்)

 லயன்ஸ் டவுன்

 

“மீனுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மீனவர்கள் கைப்பற்றுவது என்பது பொருளாதார அடிமைப் பிணையிலிருந்து விடுபடுவதுதான். சிறு வணிகக் கூட்டமைப்புகளைக் கடற்கரை தோறும் உருவாக்கி சந்தையைக் கைப்பற்றுவதுதான் இதற்குத் தீர்வு.”

 

மார்ச் 2022

தமிழகக் கடலோரத்தின் பாரம்பரிய கடற்குடிகளின் வாழ்வு இயற்கை சார்ந்தது; அன்றாடத் தன்மை வாய்ந்தது. அவர்களது பொருளாதாரம் பழங்குடி மரபுகளால் வழிநடத்தப்படுவது. கடல்தான் அவர்களின் வங்கி. வளம் பேணும் தொழில்முறையினால் அதன் மீன்வளத்தை அவர்கள் பராமரித்துவந்தனர். அவர்களுக்குத் தேவையானதைக் கடல் கொடுத்துக் கொண்டிருந்தது. மீனுக்கான சந்தையின் வீச்சு குறைவுதான் எனினும் உலர்மீனுக்கு நாடுமுழுவதும் சந்தைத் தேவை நீடித்திருந்தது. புழங்குபொருட்களை மறுசுழற்சி செய்யும் பழக்கம் இருந்தது. கடல் புகுந்து மீன்பிடித்தல் என்னும் தொழிலை மையப்படுத்திய தொழில் கருவிகளின் உற்பத்தி, பராமரிப்பு, அறுவடையைச் சந்தைப்படுத்தல், பாடம் செய்தல் ஆகிய அத்தனைத் தொழில்களும் மீனவர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தன. பருவம் தோறும் வருகிற மீன்பாடுகளில் சீர்மை இருந்தது. மீன்பிடி முறைகளில் புலமையும் பன்மைத்தன்மையும் இருந்தன. அறுவடை சார்ந்த சமையல் முறைகள் நிலவின. சமூகத்தில் பணப்புழக்கம் குறைவாகவே இருந்தது; ஆண்டுதோறும் பஞ்சகாலம் என்பது வழமையாக இருந்தது. ஆனால், அந்நெருக்கடிகளுக்குச் சமூகங்கள் பழகிவிட்டிருந்தன. பஞ்சகாலத்தை எதிர்கொள்ளும்பொருட்டு மீனைப் பாடம்செய்து சேமித்துவைக்கும் வழமையும் இருந்தது. கடற்கரை மீனவர்களின் முன்னுரிமைப் பகுதியாக இருந்தது. வளர்ச்சித் திட்டங்கள், கடற்கரைப் பாதுகாப்பு நிமித்தமாய் மீனவர்களுக்கும் கடலுக்குமான உறவு ஊடறுக்கப்படவில்லை. 1960களுக்கு முந்தைய அழகிய காலம் அது.

1950களின் இறுதியில் அறிமுகமான நவீன மீன்பிடி தொழில்நுட்பங்கள் இரண்டு அலைகளை உருவாக்கின: முதல் அலை இழுவை மடிகளை உட்படுத்திய விசை மீன்பிடி; இரண்டாவது அலை, இயந்திரப்படகுகளை உட்படுத்திய இடைநிலை தொழில்நுட்பம். சணல், தென்னைநார், பருத்தியிழை, மரங்களால் ஆன கட்டுமரம், சிறு படகு, மூங்கில் போன்ற இயற்கையில் கிடைக்கப்பெறும் மூலப் பொருட்களைச் சார்ந்திருந்த பிழைப்புமுறை மீன்பிடி தொழில், படிப்படியாக பெருமுதலீடு சார்ந்த ஒன்றாய் மாறிப்போனது. பருத்தியிழையின் இடத்தை நைலான் இழை பிடித்துக்கொண்டது; நைலான் வலைகள் இப்போது வழக்கொழிந்து தங்கூஸ் இழைகளாலான வலைகள் வரவாகிவிட்டன. பயன்பாட்டுக்குத் தகுதியற்ற கருவிகளை பிற தேவைகளுக்கு மறுசுழற்சி செய்யும் வழக்கம் மறைந்துபோனது. மீன்பிடி உபகரண உற்பத்தியும் சந்தையும் பெருமுதலாளிகளுக்குக் கைமாற்றப்பட்டுவிட்டது. நுகர்வைப் பெருக்கி, கொள்ளை இலாபம் சேர்க்கும் பொருட்டு குறுகியகாலப் பயன்பாட்டுக்குப்பிறகு தூக்கியெறியும்  அளவில் தரமற்ற கருவிகளே கடைவிரிக்கப்படுகின்றன. சந்தை இன்று மீனவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. உலக அளவில் விரிவுகண்டுள்ள மீன் சந்தை உள்ளூர் வணிக உறவுகளின் கண்ணிகளை உடைத்துவிட்டது. புதிய தொழில்நுட்பங்களும் பெருஞ்சந்தையும் மீனவர்களுக்கு வளர்ச்சியைத் தந்துள்ளது என்பது மாயை. கட்டற்ற மீன்பிடிநுட்பங்களின் மிகையான பயன்பாடு மீனவர்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்திய அதே வேளையில் ஆழ்கடல்மீன்பிடி கப்பல்கள் மீன்பிடிமுறைகளால் கடலை வழித்தெடுத்துக்கொண்டிருக்கின்றன. மிகை முதலீடும் அதனால் மீன்பிடி களங்களில் ஏற்பட்ட நெரிசலும் மீனவர்களுக்கு நெருக்கடியானது.

கடல் மீன்வளம் வற்றிப்போனதற்கு மீனவர்களே காரணம் என்னும் தந்திரமான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாரம்பரிய மீனவர்களை புராதன மீன்பிடி முறைகளிலிருந்து மீட்டு வளமையான பொருளாதாரத்துக்கு இட்டுச்செல்வதாகச் சொல்லிப் புதிய தொழில்நுட்பங்களை அவர்கள்மீது திணித்த அரசு, கடலின் அழிவுக்கு மீனவர்களே காரணம் எனக் குற்றம் சுமத்துகிறது. கடற்கரைப் பாதுகாப்பு, மீன்வள ஒழுங்காற்று எனச்சொல்லி அவர்களின் பாரம்பரிய வாழித்திலிருந்தும் வாழ்வாதாரத்திலிருந்தும் விரட்டிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஏதுவாக மாநிலத்தின் கடற்கரை நெடுக பெருந்திட்டங்கள் அணிவகுத்துக் கொண்டிருக்கின்றன. அணுமின்நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், சரக்குப் பெட்டக, தொழில்சார் துறைமுகத் திட்டங்கள் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இயற்கைச் சீற்றங்களை விட அரசின் கொள்கைகளும் திட்டங்களுமே அவர்களின் கொடுங்கனவாகி வருகின்றன. மீனவர்களின் மரபான தற்சார்புப் பொருளாதாரம் பெரும் சிதைவுக்கு உள்ளாகியுள்ள நிலையில், ‘இனிமேல் எங்க புள்ளைங்க கடலை நம்பிப் பொழைக்க முடியாதுங்க’ என்று மீனவர்கள் எனது கடற்கரை சந்திப்புகளின்போது மீனவர்கள் வெளிப்படுத்திய அச்சத்தை அத்தனை எளிதாய்க் கடந்துபோய்விட முடியாது.

பேரிடர்கள் சமூகத்தின் பலவீனங்களை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்டிவிடுகின்றன. கடற்குடிகள் இயற்கையைச் சார்ந்து வாழ்பவர்கள்; இடர்கள் அந்த வாழ்வின் பிரிக்கமுடியாத கூறுகள். ஆனால், பேரிடர்களைத் தாங்கும் திறனும், பேரிழப்பிலிருந்து மீண்டெழும் திறனும் அந்தச் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானத்தைப் பொறுத்தே அமைகிறது. பொருளாதாரக் கட்டுக்கோப்பு, வாழ்வாதாரப் பரவலாக்கம், மனிதவள மேம்பாடு போன்ற வளர்ச்சிக் குறியீடுகளைப் பொறுத்தே அச்சமூகத்தின் மீண்டெழும் திறன் அமையும்.

தமிழகக் கடற்கரைகளில் வாழும் பாரம்பரிய மீனவச்சமூகங்கள் சமூக, பொருளாதாரீதியாக எவ்வளவு பலவீனமான நிலையில் உள்ளன என்பதை சுனாமி (2004), சென்னை வெள்ளம் (2015), ஒக்கி (2017), கஜா (2018) போன்ற பேரிடர்கள் வெளிப்படுத்தின.

புதிய தொழில்நுட்பங்கள் கடல்வளத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. கடலை நம்பி தங்கள் தலைமுறைகள் காலம்தள்ள முடியாது என்கிற எதார்த்தம் அவர்களை அழுத்திக் கொண்டிருக்கையில் கடற்கரை ஒழுங்காற்று போன்ற அறிவிக்கைகளும் சாகர்மாலா போன்ற பெருந்திட்டங்களும் கடற்கரையே இனிமேல் அவர்களுக்கு உத்தரவாதமில்லை என்கிற நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

ஒருகாலத்தில் உற்பத்திக் கருவிகள் மீனவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இன்றைக்கு மீன்பிடி தொழிலில் பெருமுதலீடு நுழைந்துவிட்டது. மீன்பிடி கருவி உற்பத்தியும் மீன்சந்தையும் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. மீனவர்கள் கடலைத்தவிர வேறெதையும் சொத்தாக மதிப்பதில்லை; மீன்பிடி கருவிகள் தவிர வேறெதையும் அவர்கள் முதலீடாகப் பார்ப்பதும் இல்லை. பாரம்பரியமாய் அவர்கள் உரிமைகொண்டாடிவந்த கடலும் கடற்கரையும் கைவிட்டுப்போய்க் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கான மாற்று வழிகள் என்ன?

 

சுரேஷ்

மீனவர்களின் நிலவுரிமை பற்றிய பார்வையிலிருந்துதான் பெரும்பான்மையான பொருளாதாரச் சிக்கல்கள் முளைக்கின்றன.

 

நிதிநிர்வாக ஆலோசகராக வேலை செய்யும் சுரேஷ் (51) தூத்துக்குடியைச் சார்ந்த முதல் தலைமுறை மீனவர். ‘கடற்கரைச்சமூகங்கள் மாற்றுத்தொழில் குறித்து மட்டுமல்ல பொருளாதாரம் குறித்த பார்வையையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்கிறார் இவர்.

 

மீன்பிடிக்கும் தொழில் பின்னணியிலிருந்து நிதிநிர்வாக புலமையாளராக மாறிய பின்னணி பற்றி…

“எங்கள் குடும்பம் பரம்பரையாக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்துவந்திருக்கிறது. அப்பா கடலுக்குப் போகிறவர். உடன்பிறந்த நான்குபேரும் அதே தொழிலில்தான் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் பள்ளியிறுதிவகுப்பு தேறியிருந்தும் வேறு தொழில்களுக்குப் போவதைப்பற்றி யாரும் யோசிக்கவில்லை. மூத்த அண்ணன்1997இல் எஸ்எஸ்எல்சி முடித்தபோது போர்ட் ட்ரஸ்டில் ஒரு நல்ல வேலைவாய்ப்பு வந்தது. ‘நம்ம கையில இருக்கிற தொழிலைப் பாத்தாப் போதும், இன்னோருத்தன்கிட்ட கைகட்டி நிண்ணு வேலை செய்யவேண்டாம்’ என்று அப்பா அண்ணனை அந்த வேலைக்குப் போகவிடாமல் தடுத்துவிட்டார். இன்றைக்கு அண்ணன் அதை நினைத்து நிரம்பவே வருத்தப்படுகிறார். அவர் காலத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்களெல்லாம் நல்ல வேலைகளிலிருந்து பணி ஓய்வு பெற்று, நல்ல பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணனுக்கும் எனக்கும் 14 வயது வித்தியாசம். தம்பி தன்னைப் போல ஆகிவிடக்கூடாதென்று என்னைப் பட்டவகுப்புவரை படிக்கவைத்தார்.”

“ஒரு தொழிற்கல்வி நிறுவனத்தில் ஆசிரியராய்ச் சேர்ந்தேன். அது மீனவ சமுதாயத்துக்குச் சொந்தமான நிறுவனம் என்பதால் உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டோடு பத்து வருடங்கள் அங்கே வேலைசெய்தேன். அந்தக் கடற்கரைக் கல்விநிறுவனத்தில் நிலவிய குளறுபடிகளை உரிமையோடு தட்டிக்கேட்க முயன்றபோது ஏற்பட்ட கசப்பும் விரக்தியும் என்னை வெளியேறத் தூண்டியது. வேறு வேலை தேடிப்போகத் தீர்மானித்தேன். ‘யாரிடமும் கைகட்டி வேலை செய்யக்கூடாது’ என்று அப்பா சொன்னது மனதில் ஆழமாய்ப் பதிந்துபோயிருந்தது. கடல்தொழிலுக்கே போய்விடலாம் என்று முடிவுசெய்தபோது ‘உன்னை இதற்காகவா படிக்கவைத்தோம், நீ கரைத்தொழிலுக்குத்தான் போகவேண்டும்’ என்று அண்ணன்கள் தடுத்துவிட்டனர்.

வளர்ந்து வந்துகொண்டிருந்த கணினித்துறையைத் தேர்ந்தெடுத்து ஒரு தொழிலை ஆரம்பித்தேன். அன்றைக்குப் போட்டிகளில்லாத தொழில்; ஆனால் பத்து ஆண்டுகளுக்குள்ளே பெரிதாய் வளர்ந்துவிட்டது; போட்டி மிகுந்தது; தொழில்நுட்ப மேம்பாட்டின் அசுரவேகத்துக்கு ஈடுகொடுத்து முதலீடு போட்டுக்கொண்டிருக்க என்னால் முடியவில்லை; வருவாயும் மிகக்குறைவாகவே வந்துகொண்டிருந்தது. அதனால் அந்தத் தொழிலைக் கைவிடவேண்டியதாயிற்று.”

“கல்விநிறுவனத்திலிருந்து வெளியேறிய பிறகு வேறு சில தனிப்பட்ட தொழில்களைச் செய்துகொண்டிருந்தேன். தூத்துக்குடியை மையப்படுத்தி வேலை செய்துகொண்டிருந்த காலத்தில் இனரீதியான புறக்கணிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறேன். ஒரு கடற்கரைக்காரன் உள்நாட்டு மக்களிடையே வணிகம், தொழிலில் ஈடுபடுவது எவ்வளவு சிக்கலானது என்பதை என்னளவில் உணர்ந்திருக்கிறேன். அதே நேரத்தில் நான் சார்ந்த சமூகமும் என்னுடைய முயற்சிகளைக் கண்டுகொள்ளவில்லை.

அடிப்படையில் என் சமூகத்தின்பால் பெரும் ஈடுபாடு கொண்டவன் நான். அவர்களோடு நீண்டகாலம் நெருக்கமாய்ப் பயணித்திருக்கிறேன். அவர்களை முன்னிட்டுப் பல சேவை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன், பல போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறேன். என் திருமண விழாவில் இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள அத்தனை ஊர்க் கமிட்டித் தலைவர்களும் வந்திருந்தார்கள்.”

“தூத்துக்குடியைப் பொறுத்தவரை இரண்டு பெரும் சமுதாயங்கள் பரஸ்பரப் புரிந்துணர்வோடு வாழுகிற நகரம் என்றாலும் இருதரப்புக்குமிடையே தொழில் ரீதியாகப் பெரும் போட்டி நிலவுகிறது. மீனவர்கள் மாற்றுத் தொழிகளுக்கு நகரமுடியாத சூழலை மறுதரப்பினர் உருவாக்கித் தக்கவைத்துக்கொண்டிருந்தனர். உதாரணமாக, நான் வியாபாரியாக மாறுகிறேன். எனக்கு முன்னால் ஒரு மிகப்பெரிய வணிக சமூகம் அங்கே இருக்கிறது. அங்கே ஒரு தனி நபர் தன் தொழிலில் பின்னடைவைச் சந்திக்கும்பட்சத்தில் அவர்களைத் தூக்கிவிடுகிற புரிந்துணர்வு அவர்களிடம் இருக்கிறது. மீனவச் சமூகத்தில் வணிக ஞானமோ, புரிதலோ இல்லை. இனவுணர்வோடு என்னுடைய வணிக முயற்சியில் பங்கெடுக்கவோ துணைநிற்கவோ அவர்களால் முடியவில்லை.”

 

இது ஒரு பெரும் பின்னடைவு. அறுவடைக்குப் பின்னான தொழில்வாய்ப்புகள், வணிகத்தில் தாங்க்கள் எதுவும் செய்வதற்கில்லை என்று அவர்கள் கருதுகின்றனர். மிகக் கடுமையான உழைப்பைச் செலுத்தி அவர்கள் கரைசேர்க்கும் அறுவடையின் உறுபயனை மற்றவர்கள் கவர்ந்து செல்வதற்கும் இதுவே காரணமாய் இருக்கிறது… உங்கள் வணிக அனுபவங்களைக் குறித்து…

 

“2009இல் நான்குபேர் சேர்ந்து நாகர்கோவிலை மையப்படுத்தி ஒரு தொழிலை ஆரம்பித்தோம். மொபைல் ஃபோன் ரீசார்ஜ் செய்கிற தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டு சேவை வழங்கி வந்தோம். மல்டி-ரீசார்ஜ், ஆன்லைன் தொழில்நுட்பமெல்லாம் அன்றைக்குக் கிடையாது. ஒரேயொரு மொபைலிருந்து இந்தியாவில் எந்த மூலையிலிருப்பவர்களுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் ரீசார்ஜ் செய்வதற்கான எளிமையான தொழில்நுட்பத்தை நாங்களே டிசைன் செய்தோம். ஆண்டுக்கு 37 கோடி அளாவுக்கு வணிகம் நடந்தது. ஏராளமான வணிகர்கள் அதனால் பயனடைந்து கொண்டிருந்தனர்.”

“இந்தியா முழுவதும் வர்த்தகரீதியாகப் பணப்பரிவர்த்தனை நடந்துகொண்டிருந்தது. ஆண்டுக்குச் சில கோடிகள் என்கிற அளவுக்கு இராணுவ வீரர்கள், காஷ்மீர் எல்லைப் பகுதி உட்பட எல்லா இடங்களிலிருந்தும் பணம் வரும். கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. எங்கள் தொழில் பொருளாதாரக் குற்றப்பிரிவின் (Economic Offences Wing) சந்தேகப் பார்வைக்கு இலக்கானது. தொழிலில் ஈடுபட்டிருந்த நால்வரில் நான் தூத்துக்குடி மீனவர் என்பதும் மற்றொருவர் இசுலாமியர் என்பதும்தான் அதற்குக் காரணம் என்று புரிந்தது. அவர்கள் எங்கள் நடவடிக்கைகளை உற்றுக்கவனிக்கத் தொடங்கினர். ஒருமுறை சென்னை அண்ணாநகர் அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்தனர்; பிறகு மதுரை அலுவலகத்துக்கு அழைத்தனர். பிறகு பார்த்தால் வாரத்துக்கு இரண்டு நாட்கள் நாகர்கோவில் அலுவலகத்திலேயே விசாரிக்கத் தொடங்கினார்கள்.”

“விசாரணைகளில் நாங்கள் எப்படித் தொழில் நடத்துகிறோம் என்பதை அவர்களுக்கு  டெமோ செய்து விளக்கினோம். நான்கு வருடக் கணக்குகளைத் தெளிவாக வைத்து இழப்புகளையும் பட்டியலிட்டோம். அந்நேரத்தில் ட்ராய் ஒழுங்குமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தன; தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி குறுஞ்செய்திகளைத் தடைசெய்தார்கள். 2013இல் அந்தத் தொழிலையும் கைவிட்டுவிட்டோம். உடனிருந்தவர்கள் அந்த இழப்பிலிருந்து இன்றுவரை மீண்டெழ முடியவில்லை. நான் முடிந்தவரை அவர்களுக்கு உதவுகிறேன் என்பது வேறு விசயம். தொழிலை நிறுத்திக்கொண்டதோடு அவர்களின் விசாரணையும் நின்றுபோனது. அவர்களுடைய நோக்கம் உண்மையை அறிவதல்ல, வேறு ஏதோவொன்றுக்காக எங்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தனர்.”

“என் அப்பாவின் அன்றைய மனநிலையிலிருந்து இன்றைக்கும் மீனவ சமூகம் முற்றிலுமாக விடுபடவில்லை. என் சகோதரர்கள் நால்வருமே கடலை நம்பித்தான் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். கடல் தொழில் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது; அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தைக் குறித்து யோசிக்கத் தொடங்கினேன். அவர்களுடைய பொருளாதாரப் பாதுகாப்பை முன்னிட்டு ஏதாவது செய்ய வேண்டும்; அவர்களை மாற்றுத்தொழிலை நோக்கி வழிநடத்தவேண்டும் என்று தோன்றியது. அதை நான் செய்யத் தொடங்கவேண்டும். அந்த முயற்சிகள் முன்னுதாரணமாய் அமைந்தால் மட்டுமே வரும் தலைமுறைகள் பின்பற்றும். அவ்வாறு நிலம் சார்ந்த தொழில்களில் ஈடுபட ஆரம்பித்தேன்.”

ஏறத்தாழ பத்து வருடங்களாக அடித்தள மக்களுக்கான பொருளாதார விழிப்புணர்வு என்கிற அடிப்படையில் தமிழகமெங்கும் பயணித்து மக்களுக்குப் பொருளாதார நுணுக்கங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தனிநபர்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கும் மட்டுமல்ல, தொழிலதிபர்களுக்கும் ஆலோசனை சொல்லுகிறோம். வணிக ரீதியான, தொழில்ரீதியான நிதிநிர்வாகச் செயல்பாடுகளுக்கான ஆலோசகராக இன்றைக்கு என்னை அணுகுகிறார்கள்.”

உள்சுழற்சிப் பொருளாதாரத்தைக் கடைபிடிப்பதன் வழி அடித்தளச் சமூகங்கள் தங்கள் பொருளாதாரத்தையும் அரசியலையும் நிறுவிக்கொள்ள முடியும் என்று  வல்லுநர்கள் சொல்கிறார்கள்…

“பொருளாதாரத்தைக் கடன் பொருளாதாரம், சேமிப்புப் பொருளாதாரம். இரண்டுவிதமாய்ப் பார்க்கலாம். வருமானத்தை எதிர்நோக்கிக் கடன் வாங்கி, வருமானம் கிடைத்தபிறகு கடைனைத் திருப்பிச் செலுத்துவது. ஏத்தனம் என்னைக் காப்பாற்றும்- கடன் வாங்கியாவது அதை உருவாக்கவேண்டும், கடல் நமக்கு வருமானத்தைத் தரும் என்றுதான் மீனவர்கள் நம்புகிறார்கள். ஏத்தனம் போடுவதற்குப் பணத்தை முன்கூட்டியே சேமிக்கவேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. அதனால் அந்தச் சமூகம் அடிமைகளின் அடுக்குகளாகத் தவித்துக்கொண்டிருக்கிறது…”

 

மீனவர்களை நம்பி வங்கிகள் கடன்கொடுப்பதில்லை. கடனுக்குப் பணயமாக நிலத்தைத்தான் வங்கிகள் எதிர்பார்க்கின்றன. அரசும் இதைக் கண்டுகொள்வதில்லை. நிலம் அவர்கள் கையில் இல்லை; தொழில் நிமித்தமாய்ப் புலம்பெயர்ந்துகொண்டிருக்கும் இவர்கள் விரைவில் அகதிகளாக மாறும் சூழலை அரசின் கொள்கைகள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன…

 

எந்தச் சமூகத்திலும் பள்ளம் மேடுகளைத் தாண்டி விரிவாக்கத்துக்கு வாய்ப்பிருக்கிறது. கடற்கரை மக்களைப் பொறுத்தவரை கடற்கரையைவிட்டு வெளியேற முடியாத சிக்கல் இருக்கிறது; இதைச் சமவெளி மக்கள் இலாவகமாய்ப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். குடியிருப்பு விரிவாக்கமானாலும் பொருளாதாரப் பரவலாக்கமானாலும் கடற்கரைச் சமூகம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால்தான் ஆயிற்று. உள்சுழற்சிப்பொருளாதாரத்தின் மையம் இதுதான். இதற்கான அமைப்பாண்மை, கட்டுமானம் அங்கே உருவாகவில்லை. மற்ற சமூகங்களைப்போல ஒருங்கிணைந்த தலைமையும் உருவாகவில்லை.

மீனவர்களுக்கு மாற்றுத்தொழில் பெரிதாய்ச் சாத்தியமாகவில்லை. பலர் மீன்பிடி தொழிலை மாற்று இடங்களுக்குப் போய்ச் செய்கிறார்கள், அவ்வளவுதான். தங்கள் பிள்ளைகளுக்கான மாற்றுத்தொழில், அதற்கான கல்வியைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. நிலைமைக்குப் பொருந்தாத பொருளாதார அணுகுமுறை அவர்களை வீழ்ச்சிக்கு இட்டுச்செல்கிறது. பொதுவாக, மிக ஆடம்பரமாகச் செலவழிப்பார்கள்; சீட்டு என்கிற உள்ளூர்ச் சேமிப்புமுறையில் ஈடுபடுவார்கள் என்றாலும்கூட அந்தச் சேமிப்பைத் தொழில் முதலீடாக மாற்றுபவர்கள் குறைவு. திருவிழா, திருயாத்திரைகளில் அதை விரையம் செய்வார்கள். பிள்ளைகளின் கல்வி, தொழில், எதிர்காலம் கருதிச் சேமிப்பவர்கள் மிகக்குறைவு.

ஆனால் இதையெல்லாம்விட முக்கியமாக மீனவர்களின் நிலவுரிமை பற்றிப் பேசவேண்டும். நிலவுடைமைகுறித்த பார்வையிலிருந்துதான் பெரும்பான்மையான பொருளாதாரச் சிக்கல்கள் முளைக்கின்றன.

நான் சார்ந்திருக்கும் கத்தோலிக்க சமயம் வேதநூலை என்கையில் கொடுத்ததில்லை. ‘நிலம் மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை’ என்கிற அறிவு வேதநூலை வாசிக்கும் வாய்ப்பு அமைந்ததால் கிடைத்தது. நீங்கள் குறிப்பிடுவது போல, ‘நிலம்தான் ஒரு சமூகத்துக்கு அடையாளத்தைத் தருகிறது’. இதை மீனவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. நிலத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளத் தவறிவிட்டதுதான் கடலோரச் சமூகங்களின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணம்

கடற்கரைக் கத்தோலிக்க மீனவர்கள் பொதுநிதி, தனிநிதி என்கிற இரண்டுக்கும் இடையில் இருக்கிற வேறுபாட்டை அறியாதவர்கள். மாற்றுச்சமூகங்களின் அணுகுமுறை அப்படியல்ல;  எத்தனைப் பெரிய தலைவராய் இருந்தாலும் சேவை என்று வந்துவிட்டால் தனிச்செலவுக்குப் பொதுநிதியில் கைவைப்பதில்லை. உதாரணமாக- நாடார் சமூகம் கடந்த 50 ஆண்டுகாலத்தில் அசைக்கமுடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது என்றால், பொதுநிதி குறித்த தெளிவோடு அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தனிச்சொத்துகளோடு பொதுச்சொத்துகளையும் உருவாக்கினார்கள்.

உலகின் 70% வணிகச் சொத்துகள் இஸ்லாமியர்கள்- இஸ்ரவேலர் வழிவந்தவர்கள்- கையில் இருக்கின்றன. உலக அளவில் வணிகமையக் கட்டிடங்கள் அவர்களிடம் உள்ளன. அவர்களை யாராலும் அசைக்கமுடியவில்லை. எண்ணிக்கைச் சிறுபான்மையராய் இருக்கும் இடங்களில்கூட அவர்களின் கையிலிருக்கும் நிலம் அவர்களுக்குப் பலம். இந்த பலத்தைத்தான் கடலோரச் சமூகங்கள் இழந்து நிற்கின்றன.

நிலமும் வணிகமும் ஓர் இனத்தின் நிலைநிற்பிற்கு முக்கியமானது.

“சேமிப்புப் பொருளாதாரத்தைப் பெண்களிடமிருந்துதான் தொடங்கவேண்டும். அடிப்படைப் பொருளாதார நுணுக்கங்கள், நிலம் சார்ந்த முதலீடு, புலம்பெயர்ந்து போய்ப் பொருளீட்டுபவர்கள் கூட நிலத்தில் முதலீடு பற்றிய புரிதல் இல்லாமல் சொத்துகளை வாங்கிவிட்டு, அது வளரவில்லையே என்று நொந்துகொள்கிறார்கள். அந்தச் சொத்துகள் அவர்கள் பிள்ளைகளுக்குப் பயன்படாமல் போகின்றன. பிற முதலீடுகளிலும் அவர்களுக்குக் கேள்வி ஞானம் இல்லை; அந்த அறிவைத் தேடிப்பெறுவதில் அக்கறை காட்டுவதில்லை. ”

“ஒரு புதிய செய்தி மனதில் ஆழப் பதியவேண்டுமென்றால் 28 முறை கேட்டிருக்கவேண்டும் என்கிறார்கள். ஆழப்பதிந்துபோகிற விசயங்கள்தான் முடிவெடுக்கையில் முன்னால் வந்து நிற்கும். மீனவர்களைப் புதிய பொருளாதாரச் சிந்தனைக்குப் பழக்குவது பெண்களின் வழியாகச் சாத்தியப்படும்.”

 

பொருளாதாரப் பாதுகாப்பை முன்னிட்டு மீனவர்கள் நிலத்தில் முதலீடு செய்யவேண்டும் என்கிறீர்கள். நிச்சயமற்ற கடல் வருவாயை நம்பியிருக்கும் குடும்பங்கள் இதை எப்படிச் சாத்தியப்படுத்துவது?

 

“மிக எளிமையான ஒரு கணக்கைச் சொல்லுகிறேன். பதினைந்து ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறைக் காலம்; பெரும் பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்துமுடியும் கால அளவு. விலைவாசி உயர்வு, பணவீக்கம் என்பதெல்லாம் இதன் கூறுகள். கடந்த 75 ஆண்டுகாலத்தில் தலைமுறைதோறும் விலைவாசி பத்து மடங்கு உயர்ந்திருக்கிறது. விலைவாசிப் புள்ளிகளின் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உள்ளிட்ட ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. 1960களில் பத்து ரூபாயின் மடங்குகளாயிருந்த அரசு ஊதியம் 2005இல் பத்தாயிரத்தின் மடங்குகளானது. 2020இல் இலட்சத்தை எட்டியிருக்கிறது. விலைவாசிப்புள்ளியின் அடிப்படையிலான ஊதியம் என்பது அரசூழியர், ஆசிரியர் போன்றவர்களுக்கு மட்டுமே. பிற தொழில்களில் ஈடுபடுபவர்கள் வருவாயைப் பெருக்கிக்கொள்வதற்கு அவர்களே வழிதேடிக்கொள்ளவேண்டும். ”

“இதைப் புரிந்துகொள்ளாததுதான் அடித்தள மக்களின் பொருளாதாரம் பிழைத்துப்போகக் காரணம். நில முதலீட்டு வளர்ச்சி இதன் அடிப்படையில் அமைவதுதான். இன்றைக்கு ஒரு இலட்சம் முதலீடு செய்தால் பதினைந்து ஆண்டுகளில் அது பத்து இலட்சமாக வளர்ந்திருக்கும். எங்கே, எப்படி முதலீடு செய்யவேண்டும் என்பது முக்கியமானது. உள்ளூர்ச் சேமிப்பு முறையில் எளிமையான முதலீடுகளைச் செய்வது எல்லோர்க்கும் சாத்தியமே. இதற்கு நிறுவனங்களின் உதவியை நாடவேண்டியதில்லை. தேவைப்பட்டால் நம்பகமான நிறுவனங்களை என்னால் அடையாளம் காட்ட முடியும். ”

“சொத்து என்றதுமே, அது ஒரு கோடி, இரண்டு கோடி என்று கற்பனை செய்து மாய்ந்து போகிறார்கள். நகர்ப்புறத்தில் ஒரு கிரவுண்ட் மனை வாங்குவதற்கு ஐம்பது இலட்சம் வேண்டும் என்பது இன்றைய எதார்த்தம். ஆனால் நாம் அம்மாதிரி முதலீடுகளில் சிக்கிக்கொள்ள வேண்டியதில்லை. எல்லோரும் நகரின் மையப்பகுதியில் நிலம் கொள்முதல் செய்ய ஆசைப்படுகிறார்கள். ஊருக்குச் சற்றுத் தொலைவிலிருக்கும் இடங்கள் காடாக இருக்கின்றன, அவை வளர்ந்த பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்பதுதான் இவர்களின் பார்வை. நான் வாழுகிற தூத்துக்குடி நகரத்தில் 2000த்தில் 10 இலட்சத்துக்குக் கொள்முதல் செய்த நிலம் இன்றைக்கு (2022) 20 இலட்சம்தான்.”

“கடற்கரையிலிருந்து சமவெளிப் பகுதிகளுக்குப் பெயர்ந்து வருகிறவர்கள், வெளிநாடுகளுக்குப் போய் நிறையச் சம்பாதிப்பவர்கள் பலரும் பெரும் முதலீடு போட்டு வளர்ந்த நகரத்தின் மையப்பகுதிகளில் சொத்து வாங்குகிறார்கள். சிலர் கடன்வாங்கியும் கொள்முதல் செய்கிறார்கள்.”

“சமவெளிச் சமூகங்களில் புதுமணத் தம்பதிகளுக்கு ஓர் அறிவுரை சொல்வார்கள்- ‘எவ்வளவு நிலத்தைக் கையகப்படுத்துகிறாயோ, அதுதான் உன் நிலையான மூலதனம்’. புதுப்பெண்ணிடம், ‘ஒருவருடம் கணவனோடு வெளியே போகும்போது சந்தோஷமாய் எல்ல நகைகளையும் அணிந்துகொண்டு போகலாம். உன் கணவனுக்கு ஒரு தொழிலை அமைத்துக் கொள்ளுங்கள்; ஊருக்கு வெளியே, மலிவான விலையில் கிடைக்குமிடத்தில் நிலம் கொள்முதல் செய்து அங்கே ஒரு தொழிலை ஆரம்பியுங்கள்’. பெண்ணுக்குக் கிடைத்த நகைகளை அடகுவைத்துக் கணவர் நிலத்தை வாங்குவார், தொழிலை ஆரம்பிப்பார். சுற்றுப்புறத்தில் கொள்வாரின்றிக் கிடக்கும் நிலங்களை முடிந்த அளவு வாங்கிக் கொள்கிறார். சில காலத்துக்குப் பிறகு சுற்றி வீடுகள் வந்துவிடும், நிலத்தின் மதிப்பு அப்போது 50 மடங்கு உயர்ந்திருக்கும். அவர் ஒரு தொழிலதிபராய் மாறியிருப்பார்.”

 

அடித்தள மக்கள் பார்வையில் இது ஓர் அருமையான முதலீட்டுக் கருத்தியல். கடற்கரை மக்களைப் பொறுத்தவரை இதில் ஒரு முக்கியமான சிக்கல் இருக்கிறது. மீனவர்கள் தொழில் நிமித்தமாகக் கடலுக்கு அருகாமையில் கூட்டமாக வாழ்ந்துவருபவர்கள். நீங்கள் சொல்லுகிற கருத்தியலுக்கு அவர்களை எப்படிப் பழக்குவது? 

 

யாரும் தான் குடியிருக்கும் ஊரைவிட்டு வெகுதூரம் விலகிப்போக விரும்பமாட்டார். ஆனால் ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவுக்குள் அமைந்திருக்கும் நிலங்களுக்கு நகர்ந்துபோவதில் சிக்கல் இருக்காது. 5000 வீடுகள் கொண்ட கிராமம் 20000 வீடுகளாக விரிவடைவது இந்தத் தொலைவுக்குள்ளேதான். 15 வருடங்களில் மையப்பகுதி நிலங்களின் மதிப்புக்கு இந்தப் பகுதிகள் வந்துவிடும். இதுவே நகர்ப்புறமாய் இருந்தால் ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு விரிவடையும்.”

கடற்கரை மக்கள் எல்லோரும் அங்கிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று சொல்ல வரவில்லை. பிள்ளைகளை முன்னிட்டு உருப்படியான முதலீடு செய்யவேண்டும் என்கிறேன் நான். பிள்ளைகளின் நாளைய தேவைக்கு உதவுகிற விதத்தில் முதலீடு செய்யவேண்டும் என்கிற புரிதலை ஏற்படுத்தவேண்டியிருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்னால் தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் 10,000 ரூபாய்க்குக் கொள்முதல் செய்த நிலத்துக்கு இப்போது கோடி ரூபாய் மதிப்பு. அதே 10,000த்தைத்  தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 60,000 கிடைத்திருக்கிறது, அவ்வளவுதான். மீனவர்கள் சிறிய முதலீடுகளில் நம்பிக்கை வைக்கவேண்டும்.”

 

“கட்டமைப்பு ரீதியாக மீனவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்… வங்கியாளர்கள் கூப்பிட்டுக் கடன் தருவார்கள்.” 

 

மீனவர்களின் முக்கியமான சிக்கல்களில் ஒன்றான மீன் வணிகத்துக்கு வருகிறேன். நாட்டுப்படகு, இயந்திரப்படகு, விசைப்படகு எதுவானாலும் பின்னோக்கு ஒருமுகப்படுத்தலில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதுதான் எதார்த்த நிலை. தனது அறுவடைக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் மீனவர்கள் கையில் வரவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?

 

“நீங்கள் குறிப்பிட்டதுபோல, கடற்கரைகளில் ஒரு வகையான அடுக்கு அடிமைத்தனம் நிலவுகிறது. கூலிக்காரர், வலைக்காரர், வட்டக்காரர்,  வியாபாரி என்கிற கடன்பிணையின் வரிசை அடுக்கு. பணத்தைத் திருப்பியளிக்காமல் மேலேயிருப்பவனின் பிணையிலிருந்து வெளியேற முடியாது.

மீனுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மீனவர்கள் கைப்பற்றுவது என்பது பொருளாதார அடிமைப் பிணையிலிருந்து விடுபடுவதுதான். மைக்ரோ ஆர்கனைசேஷன் என்கிற சிறுவணிகக் கூட்டமைப்புகளைக் கடற்கரைதோறும் உருவாக்கி சந்தையைக் கைப்பற்றுவதுதான் இதற்குத் தீர்வு. மீனவர்கள் தரப்பில் முக்கியமாகத் தேவைப்படுவது சேமிப்பு; இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு உதிரிச் செலவினங்களை முழுவதுமாகத் தவிர்த்து சேமிக்கவேண்டும். சமுதாய நிதி உருவாக்கப்படவேண்டும்.”

“கெட்டுப்போகக்கூடிய சரக்கு என்று சொல்லி மீன் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. கெட்டுப்போகக்கூடிய மற்ற உணவுப்பொருட்களுக்கு எப்படி விலை நிர்ணயிக்கிறார்கள்?  சந்தைப்படுத்துகிறார்கள்? மதிப்புக்கூட்டிய பண்டங்களை உற்பத்தி செய்கிறார்கள்? சேமிப்புக்கிடங்குகளை உருவாக்கவேண்டும். அதோடு, சந்தைப்படுத்தலின் முக்கிய கண்ணிகளில் மீனவச் சமூகம் பங்குபெறவேண்டும். அதற்கு, அவர்களில் ஒரு பகுதியினர் சமவெளிப்பகுதிக்கு வரவேண்டும். இதற்கு ஒரு நிறுவனக் கட்டுமானமும் மேலாண்மை முறையும் தேவை. சிறு வணிகக் கூட்டமைப்பாகத் தொடங்கலாம். அதற்கான மனிதவளம் கடற்கரைச் சமூகத்துக்குள்ளேயே இருக்கிறது. மீனவர்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து வெளியூரிலோ வெளிநாடுகளிலோ வேலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். சமூகத்துக்குள்ளேயே அந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கி இந்த மனித வளத்தைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.

 

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் வேணாட்டுக் கடற்கரைகளில் ஒரு புதிய போக்கு தென்பட்டது. பட்டதாரிப்பெண்கள் சாலையோரங்களில் மீன்விற்பனை செய்தார்கள்; பட்டதாரி இளைஞர்கள் இருசக்கர வண்டிகளில் மீனை எடுத்துச்சென்று விற்பனை செய்தார்கள்…

 

“இது ஒரு கட்டமைப்பாக மாறினால்தான் நீடித்து நிற்க முடியும். இல்லையென்றால் மீண்டும் இடைத்தரகர்கள் நுழைந்துவிடுவார்கள். விளைபொருளுக்கு விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் போராடியபோது சேமிப்புக் கிடங்குகளை அமைப்பதுதான் தீர்வானது. எல்லா விளை பொருட்களையும் சுகாதாரம் பேணி ஆறுமாதங்களுக்கு வைத்துக்கொள்ளமுடியும். கரைசேர்க்கிற மீனைக் கடற்கரையிலேயே சுத்தப்படுத்திச் சேமிப்பதற்கான சேமிப்புக் கிடங்குகள்தான் மீனவர்களின் முதல் தேவை. சேமிக்கப்படும் மீன்களை சில்லரைச் சந்தைக்கும் மொத்தவிலைச் சந்தைக்கும் ஏறுமதிச் சந்தைக்கும் அனுப்புகிற ஏற்பாடு இரண்டாவது தேவை. இந்த மூன்று சந்தைத் தேவைகளுக்குமான மீனைத் தரம்பிரிக்கிற, சிப்பமிடுகிற வேலைகளையும் மீனவர்களே செய்யவேண்டும்.  அதற்கான திறனாளர்களை உள்ளிருந்தே பெறவேண்டும். ‘நமக்கு நாமே’ அடிப்படையில் சிலகாலம் இந்த வேலைகளைச் செய்துவந்தால் மீனவர்கள் எதிர்பார்க்கிற அதிகாரம் வசப்படும். சந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது இப்படித்தான் சாத்தியமாகும்… இதைத் தற்சார்புப் பொருளாதாரம் என்றும் சொல்லலாம்.”

 

அரசாங்கத்திடம் தொழில் மானியம் கேட்கவேண்டுமென்றால் கட்டமைப்பு ரீதியாக மீனவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மீனவர்களுக்கு எதை நம்பிக் கடன் கொடுப்பது என்று தயக்கம் காட்டுகிற வங்கியாளர்கள் கூப்பிட்டுக் கடன் தருவார்கள்… 

 

“மீனவர்கள் ஒருகோடி சேமிப்பைக் காட்டினால் 50 கோடி கடன் தருவதற்கு முன்வருவார்கள். முதலில் மீனவர்கள் தங்கள் தகுதியை நிரூபிக்கவேண்டும். இதற்கான ஒரு நிறுவன வகைமாதிரியை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.”

----------------- 

*நூல்: பெருந்துறை வலசை #Vareethiah_Konstantine #கடல்வெளி #Kindle


Monday, 2 August 2021

#நூல்_பேசுவோம் #1000_கடல்_மைல் #மஞ்சுநாத்

 கடல் பழங்குடிகளின் தொப்புள் கொடி உறவு , சாகசம், வாழ்வு, இழப்பு, துயரம் இவைகளை நடைமுறை நிகழ்வுகள் மூலமும் கள ஆய்வுகள் மூலமும் உயிர்ப்பான வரிகளால் உருவான இந்நூல் நம் உணர்வின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இயற்கை எப்போதும் தன்னியல்பில் தான் நகர்கிறது. பல சமயம் மனிதனே அதில் குறுக்கீடு செய்கிறான். இயல்பான வாழ்வு முடங்கினால் இயற்கை சீற்றம் என்கிறான். அதன் விளைவுகளை பேரிடர்கள் என்கிறான். உண்மையில் பேரிடர்கள் மனிதனின் அணுகுமுறையால் தான் உருவாகின்றன.
முல்லை நில மக்களின் துன்பங்களை பதிவு செய்த அளவிற்கு நெய்தல் நில மக்களின் துன்பங்களை நம் இலக்கியங்கள் வலுவாக பதிவு செய்யவில்லை. ஆழ்கடலோடிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் துயரங்களை அழுத்தமாக பதிவு செய்த தமிழ் சினிமாக்கள் எதுவுமில்லை
காரணம் கடல் பழங்குடிகளை பற்றிய நமது அடிப்படை புரிதல் வெகு தொலைவில் உள்ளது.
கரைத் தொடும் புயல்களை பற்றிக் கூட நமக்கு சரியான புரிதல் இல்லை. அதன் பாதிப்புகளை சமவெளி விவசாயிகள் மீதான துயர பிம்பமாகவே மட்டும் பார்த்து பழகி விட்டோம். இதற்கு நமது ஊடகங்களின் அணுகுமுறையும் காரணம்.
ஒரு புயல் வருகிறதென்றால் அதில் முதலில் பாதிக்கப்படுவது கடலோடிகள். அதுவும் உச்சபட்டசமான முதற்கட்ட பாதிப்பை எதிர்கொள்வது
நடுக் கடல் மீனவர்கள். வேனாட்டு மீனவர்கள் சங்கக் காலம் முதலே ஆழ் கடல் மீன் பிடிப்பில் வழி வழியான பாரம்பரிய மரபு நுணுக்கங்களையும் இயல்பான திறனையும் கொண்டிருந்தனர். ஆனால் தற்கால தொழில் நுட்ப வளர்ச்சியின் தாக்கம் அவர்களது விழிப்புணர்வை சூரையாடி விட்டது.
மீனவர்வர்கள் புயலின் போது தொலைந்து போன செய்திகளை பார்க்கும் போது...
"முன்னடியே அறிவிப்பு செய்யறாங்க .இருந்தும் அத மீறி மீனவர்கள் ஆழ்கடலுக்கு ஏன் போறாங்க..? "
என்ற அலட்சியமாக கடந்து போகும் பொதுப் பார்வை தான் நம்மில் பெரும்பாலனோருக்கு இருக்கிறது.
ஏன் கரைக்கடலை தாண்டி போகிறார்கள் ..? ஏனெனில் கரைக்கடலில் மீன்கள் அறுகிவிட்டது. காரணம் அவை சமவெளி தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்படாத ஒட்டுமொத்த ரசாயனக் கழிவுள் சங்கிமிக்கும் இடமாகி விட்டது. மீன்வளத்தை அதிகரிக்கும் விதை நெல் போன்ற "சங்காயம் ", "சாளை ( sardine)" போன்ற சிறு மீன்கள் லிட்டருக்கு குறைந்த பட்சம் நான்கைந்து மில்லி அளவு உயிர்வளி (ஆக்ஸிஜன்) இல்லாமல் சுருங்கி விட்டன. இதனால் கரைக்கடல் மீன் பெருக்கம் வெகுவாக குறைந்து விட்டது.
எனவே ஆழ்கடல் மீன் பிடித்தலுக்கு சட்டத்திற்கு புறம்பாக செல்கிறார்களா..?
" 360 கிலோ மீட்டர் தொலைவு வரை நம்முடைய முற்றுரிமை பொருளாதார மண்டலம் என்பது அதற்கப்பால் 270 கிலோ மீட்டர் பன்னாட்டு கடல் பகுதி வரையிலும் மீன் பிடிக்கலாம் என்பது இந்திய மீனவர்களின் சட்டபூர்வமான உரிமை . 600 கிலோ மீட்டர் தொலைவு வரை நாம் கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொள்ளலாம் என்று UNCLOS பன்னாட்டு விதிகள் அனுமதிக்கின்றன. பல நாடுகள் நடுக்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கின்றன.
360 கி.மீ வரை விரியும் 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் கொண்ட இந்தியப் பொருளாதார கடற்பரப்பில்லுள்ள நமக்கு பாத்தியப்பட்ட மீன்வளம் இந்திய உணவுப் பொருளாதாரத்தையும் பல லட்ச நேரடி மறைமுக வேலை வாய்ப்புகளையும் உள்ளடக்கியது.
ஆனால் அரசு இதற்கு சரியான தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரவில்லை. பாதுகாப்பு மற்றும் தேடுதலை ஐரோப்பிய நாடுகளைப் போல் அமல்படுத்துவதில் முனைப்பு காட்டுவதில்லை.
"வரும்.., ஆனா வராது.., " என்கிற வானிலை அறிவிப்புகளும் "குதிரை ஓடிய பிறகு லாயத்தை பூட்டுவது போன்ற பேரிடர் அணுகுமுறைகளும் " நமது நிர்வாக முறையின் தொடரும் சாபக்கேடுகள்.
புயல் வரும் என்கிற எச்சரிகையோடு மையம், திசை, நகர்வு , காற்றின் வேகம் போன்ற தகவல்களை தருவதில்லை. புயல் எச்சிரிக்கை கூட கடலில் உள்ள மீனவர்களுக்கு சென்று சேர்வதில்லை.
(நடுக்கடல் மீன்பிடிப்பு மாதக்கணக்கில் நடை பெறக்கூடியது) என்கிற அதிர்சியை பதிவு செய்கிறார். ஒக்கிப் பேரிடர் குறித்து "வெதர் மேன்" என்கிற தனி மனிதர் தான் முதல் அறிவிப்பை தந்தார்.
மேம்பாடற்ற நவீன தொழில்நுட்ப அபாய கால எச்சரிக்கை கருவிகளும், நடுக்கடல் மீட்புத்தேடல் நாடகங்களும் இருமுனை தகவல் தொடர்பு சிக்கல்களும் தொடர்வதை போதிய ஆய்வு தரவுகளுடன் முன் வைக்கிறார்.
ஒக்கிப் புயலால் ஆழ்கடலில் தொலைந்து போன 200 மீனவர்கள் பற்றி நிலை பரிதாபகரமானது மட்டுமல்ல. அது நமது கட்டமைப்பின் இயலாமை. இடை தேர்தல் பின்சென்ற ஊடகக் கூட்டமும் , அதிகாரிகளின் அலட்சியமும் ஒக்கிப் புயலின் தீவிரத்தை தமிழக பொதுசன பார்வைக்கு கொண்டு செல்லாத அதே சமயம் கேரள அரசு இந்த நிகழ்வின் போது ஒரளவு திருப்திகரமாக செயலாற்றியது. அதன் பின்பு மீனவர்களுக்கு ISRO உடன் ஒப்பந்து செய்து ஆபத்து கால தகவல் தொடர்புகளை வலுவாக்கியது.
10% அசைவ விரும்பிகளை மட்டும் கொண்ட குஜராத்தின் மீன் பிடி துறைமுகங்களின் மேம்பாட்டினையும் நவீன பேரிடர் கால சாதனங்கள் பற்றிய வியப்பையும் தருகிறார். அதன் உள்கட்டமைப்பு , ஏற்றுமதி முறைகளின் ஒருங்கிணைப்பையும் விவரிக்கிறார். இந்தியாவின் அதிதொழில்நுட்ப மீன்பிடி கிராமமான "விராவல்" குஜராத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
2004 சுனாமி அனுபவத்துக்கு பிறகு தேசம் இயற்றிய தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005) , தேசிய பேரிடர் மேலாண்மைக் கொள்கை (2016) ஆகியவற்றில் நடுக்கடல் புயல் மேலாண்மை பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
உலகமயமாக்கலும் பெரும் கார்பேரேட் நிறுவனங்களும் ஆழ்கடல் மீதான கனிம வளங்களை களவாட கடல் பழங்குடிகளை ஒரு தடையாகவே பார்க்கிறது.
புரிதலற்ற நிபுணர்கள் மற்றும் ஊடகங்களின் மீனவர்கள் மீதான கனிவு என்பது அவர்களை
" கடற்கரைகளிருந்து அப்புறபடுத்துவது அவர்களின் பாதுகாப்புக்காகவே.., " என்கிற புனைவை கட்டமைக்கின்றன. கடற்கரை முழுவதும் ரிசார்ட்டுகளும், பெரும் பணக்காரர்களின் பீச் ஹவுஸ்களும் பெருகி வருவதைப் பற்றிய கேள்விகள் அவர்களிடம் எழுவதில்லை.
நிலத்தில் உழவனின் கால்படுவதைப் போன்று கடல் மீது மீனவனின் கண் எந்நேரமும் இருப்பது அவசியம்.
பேரிடர்களில் போகும் உயிரோடு பிரச்சனை முற்று பெறுவதில்லை. அவர்களை சார்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீது அவலமாக தொடரும் வாழ்வின் பரிதாபத்தை வலி நிறைந்தை வார்த்தைகள் மூலம் நம்மை கலங்க வைக்கிறார்.
முழு முழுக்க ஆணைச் சார்ந்து வாழும் கடற்கரை பெண் சமூகத்தின் பொருளாதார பிரச்சனை, குடும்ப நிர்வாகம், சமூகப் பிரச்சனை இந்த மூன்று சிக்கலில் பிழைத்து வளர்வது பெரும் சாதனையாக உள்ளது. கடலுக்கு சென்ற தன் கணவன் இறந்தாரா இல்லையா என்ற தகவல் கூட இல்லாமல் பண்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளும் பெண்களின் துயரார்ந்த அகத்தையும் நமக்கு தெளிவுப்படுத்துகிறார்.
தனுஷ்கோடி புயல், ஒரிஸா புயல்கள், பியான் புயல், ஒக்கிப் புயல் ஆகியவற்றின் கரையோர தாக்குதல்களை மட்டும் அறிந்த நமக்கு ஆழ்கடலில் ஒரு புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை ஆழமான அனுபவமாக நமக்கு தருகிகிறார்.
இவரது தரவுகளையும் நிகழ்வுகளையும் ஒப்பிடும் போது சென்னை பெருவெள்ளம் என்பது ஒரு சிறுதுளி. அதனைக் கூட கையாளும் திறமையற்ற நிர்வாக கட்டமைப்பு பற்றியும் , நவீன தொழில் நுட்பத்தினை அமுல்படுத்தும் திறன் பற்றியும் நாம் மறுஆய்வு செய்ய வேண்டும்.
கடல் பற்றிய அறிவு என்பதும் நமக்கு கடற்கரையில் நடையிடுவதும் தூரத்தில் உதயமாகும் கதிரவனின் காட்சியோடும் நின்று விட்டது.
மர்மம் நிறைந்த கடலின் மறுபக்கத்தையும் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையேயான கழைக்கூத்தாட்ட சமநிலை அச்சினையும் இந்நூல் புலப்படுத்துகிறது.
மீன் சுவைக்கு நா பழகி மீன் வாடைக்கு முகம் திருப்பும் சமூத்திற்கு சர்வதேச கடல் எல்லையில் இருக்கும் மனித மூச்சின் லயத்தையும் அவனைச் சார்ந்த குடும்பத்தின் உணர்வின் மீதான அடிப்படை புரிதலை இந்நூல் நமக்கு எடுத்தோம்புகிறது.
இனி தொலைக்காட்சியில் புயல் பற்றிய அறிவிப்புகள் வாசிக்கும் போதும் , தெருவில் மீனைக் கூவி விற்றுச் செல்லும் பெண்மணியின் குரல் ஒலியும் நம் மனதை ஆழம் தெரியாத கடல் மீது ஈர்த்து செல்வதை தவிர்க்க முடியாது.
கடல், கடல் பழங்குடிகள், பேரிடர்கள் மீதான ஒரு பரந்துபட்ட தெளிவான புரிதலை ஆவணப்படுத்தியமைக்கு இந்நூலாசிரியர் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
அன்புடன்
மஞ்சுநாத்
25/06/2021

Monday, 26 July 2021

மீனவர் போராட்டங்கள்: பிழைப்பு x பெருமுதலீடு





“எதிர்காலத்தில் மீனவர்கள் சந்திக்கப்போகும் மிக முக்கியமான பிரச்சினைகள்- கடலில் மீன் இருக்குமா
, மீனவர்களுக்குக் கடற்கரை மீந்திருக்குமா
- என்பதுதான்.”

சுனாமி மறுகட்டுமான காலத்தில் (2005) நிகழ்த்திய நேர்காணலின்போது இதழியலாளர் (பாதிரியார்) எட்வின் மரியஜான் இப்படிக் குறிப்பிட்டார் (வறீதையா & ஜஸ்டஸ், 2006). தீர்க்கத்தரிசனமான உண்மை. அமைதியாகத் தோன்றும் மேற்பரப்பின் கீழே கொந்தளித்துக் கொண்டிருக்கும் பெருங்கடல் போல, தமிழக் ககடற்கரைச் சமூகங்கள் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

 

நவீன மடிகளின் நதிமூலம்

மீன்கூட்டங்களைச் சுற்றிவளைத்துப் பிடிப்பது மீனவர்களுக்குப் புதிதல்ல. பெருவலை, கரைவலை போன்றவை அவ்வாறு வளைக்கப் படுவதுதான். சுருக்குமடித் தொழில்நுட்பம் அதன் மாறுபட்ட வடிவமாகும். மேற்கடலில் பெருங்கூட்டமாய்ப் பயணித்துப் போகும் அயிலை, சூரை போன்ற மீன்களைக் குறிவைத்து, சுவர் போல அவற்றை வலையால் சூழ்ந்து, மீன்கள் வெளியேறிவிடாமல் இரு முனைகளையும் மேல் (மிதவை), கீழ் (குண்டு) பகுதிகளிலுள்ள கயிற்றால் சுருக்குப்பை  போல இணைத்து விடுவார்கள். தமிழ்நாட்டுக் கடல்களில் புழங்கும் சுருக்குமடிகள் விசைப் படகுகளுக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் மாறுபட்ட வடிவமாகும்.

இழுவைமடி, சுருக்குமடி தொழில்நுட்பங்கள் இந்தோ- நர்வீஜியன் திட்டத்தின் கீழ் (1953-72) அறிமுகப்படுத்தப் பட்டது. நடுவண் மீன் தொழில்நுட்ப நிறுவனத்தின் (CIFT- ICAR கொச்சி) முனைப்பினால் 1982இல் கேரளாவில் பரவத் தொடங்கிய சுருக்குமடி தொழில், அங்கிருந்து வடமேற்கு, கிழக்குக் கடற்கரைகளுக்குப் பரவியது. கடற்சூழலுக்கும் சந்தைத் தேவைகளுக்கும் ஏற்றவாறு மேல், நடுமட்ட (pelagic waters) கடல்களிலுள்ள பல இன மீன்களை அறுவடை செய்வதற்கென வலையின் கண்ணிகள், மிதவைகள், குண்டுகளில் மாற்றங்களைப் புகுத்தினர்.  எடுத்துக்காட்டாக, பழவேற்காடு மீனவர்களின் சுருக்குமடிகளில் 2மி.மீ தொடங்கி 90மி.மீவரை கண்ணி அளவுகள் மாறுபடுகின்றன (மாரியப்பன் & இதரர், 2017). இவ்வலைகள் பயன்படுத்தப்படும் பகுதியை, காலத்தைப் பொறுத்து  குஞ்சுமீன்கள் வரை அரித்து எடுத்து விடுகின்றன.

 

தொழில்நுட்ப-சமூக-அரசியல் உருமாற்றம்

கடல் பழங்குடிச் சமூகம் காலம்காலமாகக் கூட்டு உழைப்பையும் மரபறிவையும் நம்பியிருந்த ஒன்று. பகிர்வும், பங்கேற்பு மேலாண்மைமையும் அவ்வாழ்வின் அடிநாதமாய் அமைந்திருந்தன. பெருவலைத் தொழிலில் இன்றும் இக்கூறுகளைக் காணலாம். கடல் மீனவர்களுக்குச் சமத்துவத்தைக் கற்பிக்கிறது என்றாலும் தொழில் முதலீடு தனிநபரின் சமூக அடையாளமாகவும் அதிகாரத்தின் ஆதாரமாகவும் இருந்து வந்துள்ளது. பெருவலை, கரைவலை உரிமையாளர்கள் ஊரில் அதிகாரம் மிக்கவர்களாய் இருந்தனர். மீன் வணிகர், இடைத்தரகர், எலக்காரர்கள் போன்றோர் இவர்களோடு சேர்ந்து ஊரில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். நவீனமயமாக்கல் இந்தச் சமன்பாடுகளைக் கலைத்துப் போட்டுவிட்டது.

புதிய தொழில்நுட்பங்கள், பெரும் முதலீடுகள், ஏற்றுமதி சார்ந்த வணிகம் என்னும் மூன்று கூறுகள் மீன்பிடி தொழிலில் புதிய பங்காளிகளுக்கு வாசலைத் திறந்து வைத்தன. இறால் போன்ற கடலுணவுகளின் மதிப்பு நாட்டுக்குள்ளும் பன்னாட்டளவிலும் உயர்ந்தபோது புதிய மீன்பிடி தொழில்நுட்பங்களில் மீனவரல்லாதோரின் முதலீடுகளும் பெருகின. பாரம்பரிய மீனவச் சமூகத்துக்குள்ளேயும் வெளியிலும் புதிய அதிகாரக் கட்டுமானங்கள் உருவாக இது வழிகோலியது. மீனவப் பெண்கள் மீன்தொழிலில் நேரடிப் பங்களிப்பிலிருந்து விலக்கப் பட்டனர். அண்டைச் சமூகங்களுடன் நீடித்துவந்த சந்தை உறவுகள் தடம்புரண்டன. இது பாரம்பரிய மீனவர் வாழ்வில் நேர்ந்த முக்கியமான தொழில்நுட்ப- பண்பாட்டு உருமாற்றம் (Socio- technical transformation). இம்மாற்றம் சமூக-அரசியல் உறவுகளைப் புரட்டிப் போட்டது; அந்தச் சமூகம் மூன்று பொருளாதாரத் தட்டுகளாகப் பிளவுண்டு, சகோதர யுத்தங்களில் இறங்கியது. இந்தியக் கடற்கரை முழுவதும் இதன் பாதிப்புகள் வெளிப்பட்டன. தமிழ்நாட்டில் குளச்சல் (1960கள்), ஜெகதாப்பட்டினம் (1979), தூத்துக்குடி (1970கள்), பழையார் (1990கள்) மோதல்கள் அவற்றில் சில.

 

உள்மோதல்களின் வேர்

குறிப்பிட்ட தொழில் சமூகத்துக்குள்ளே நேரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு சமூக் கொந்தளிப்புகளை ஏற்படுத்துவது இயல்புதான். வலியதுறையில் (திருவனந்தபுரம்) குடியமர்ந்த இனயம்புத்தன்துறை (கன்னியாகுமரி) மீனவர் ஒருவர் 1970களில் இரையில்லாத் தூண்டில் நுட்பத்தைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தொடங்கியபோது, ‘இரை போடாமல் மீனை ஏமாற்றுவது கிறித்தவ தர்மத்துக்கு எதிரானது’ என்று ஊர்க்கமிட்டி தீர்மானம் போட்டு அவரைத் தண்டிக்க முயன்றது.

குளச்சல் படகு எரிப்பு நிகழ்ந்த காலத்தில் இழுவைமடி அறிமுகம் ஆகியிருக்கவில்லை, அப்படகுகள் உட்கடலில் சென்று வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தன (வறீதையா, 2021). ‘விசைப்படகு இயந்திரத்தின் அதிர்வினால் மீன்கள் கரைக்கடலுக்கு வராமல் கலைந்து போய்விடுகின்றன’ என்று மாற்றுத் தரப்பினர் காரணம் காட்டினர். சிறிய மீன்களைக் கரைக்கு விரட்டிவரும் சுறா உள்ளிட்ட பெரிய மீன்களை விசைப்படகுக் கார்கள் பிடித்துவிடுவதால் உள்ளூர் மக்களுக்கு மீன்பாடு குறைந்துபோனது என்று வாஸ்கோ (கோவா) மீனவர்கள் குற்றம் சாட்டினர்; 1990களில் ஐந்து வள்ளவிளை (கன்னியாகுமரி) விசைப்படகுகளை அவர்கள் தீக்கு இரையாக்கினர்.

தமிழ்நாட்டில் இயந்திரப் படகு, கட்டுமர மீனவர்களுக்கு இடையிலான மோதல்களுக்கும் பொருளாதார இடைவெளிதான் முக்கியமான காரணம். இப்படிப் போராடியவர்களில் ஒரு பகுதியினர் காலப்போக்கில் புதிய தொழில்நுட்பங்களைத் தழுவிக் கொண்டனர். ‘எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரை இலாபம்’ என்பதுதான் கரைக்கடலில் நிலைமை. கோதண்டபாணி (மரக்காணம்) குறிப்பிடுவது போல, ‘முன்பு சுருக்குமடியைக் கடுமையாக எதிர்த்தவர்களும் இன்று தில் பெரிய வருமானம் இருக்கிறது, தை திர்த்துக் கொண்டிருப்பதைவிட நாமும் முடிந்தவரை சம்பாதிப்போம்’ என்று இறங்கிவிட்டனர். பழையார் துறைமுகத்தில் 1990களின் இறுதியில் குழுவாகச் சென்று சுருக்குமடிப் படகுகளை எரித்த தேவனாம்பட்டினம் ஊர் மீனவர்கள் (பட்டினவர் சாதியினர்) 2004க்குப் பிறகு ஒருமனதாக சுருக்குமடியில் முதலீடு செய்யத் தொடங்கினர். ஆனால் 23 கிராமங்கள் (பர்வதராஜகுலம் சாதியினர்) சாமியார்ப் பேட்டை கிராமத்தின் தலைமையில் சுருக்குமடிப் பயன்பாட்டைத் தவிர்த்து வருவதோடு அத்தொழிலைத் தடை செய்யுமாறு அரசைக் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றனர். தொழில்நுட்ப-அரசியல்-சமூகப் போக்குகளில் சாதியின் பங்கும் உள்ளது.

 

போலித் தலைவர்கள்

பாரம்பரிய மீனவக் கிராமங்களில் தந்தைவழி அதிகாரக் கட்டுமானங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் அந்தந்த உள்ளூர்க் கடல்களின்மீது உரிமை பாராட்டி வருகின்றன. அங்கு இயங்கிவரும் நாட்டார் பஞ்சாயத்து அமைப்புகள் வழமையாக தாவாக்களுக்குத் தீர்வுகாணுதல், சமூகநலன் பேணுதல், மீன்வளத்தை ஒழுங்காற்றுதல் முதலிய வேலைகளைச் செய்து வந்தன (பவிங்க், 2020). கடற்கரைச் சமூகங்களில் இயங்கிவந்த இந்த கட்டுக்கோப்பான நாட்டார் தலைமைகளின் இடத்தை மீன்பிடி தொழிலுக்குத் தொடர்பில்லாத போலித் தலைவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இவர்கள் ஒருபோதும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கணக்கில் கொள்வதில்லை, அவர்களைக் கலந்தாலோசிப்பதும் இல்லை. மீனவர் அமைப்புகளின் பெயரால் உணர்ச்சிமயமான அறிக்கைகளை அவ்வப்போது ஊடகங்களில் வெளியிடும் இந்த சுயம்புத் தலைவர்கள் அரசு அதிகாரிகளோடும் வணிகர்களோடும் கைகோர்த்துக் கொண்டு மீனவர்களைச் சுரண்டுகிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்கள் ஒற்றை அடையாளத்தில் திரண்டு போராடிவிடாமல் ஒரு கபட அரசியலை நிகழ்த்தித் தங்கள் கஜானாவை நிரப்பிக் கொள்கின்றனர். ஆனால், கோதண்டபாணி (கைப்பணிக்குப்பம்) குறிப்பிடுவது போல, அரசு இப்படிப்பட்டவர்களைத்தான் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. கடைசிவரை அடிமட்ட மீனவனின் குரல் அரசை எட்டுவதேயில்லை.

 

 

சோழமண்டலக் கடற்கரை

இழுவைமடி, சுருக்குமடிகளுக்கு எதிரான குரல்களை வெறும் பொறாமையின் வெளிப்பாடாய்ப் புறக்கணித்துவிட முடியாது. விசைப்படகு- இதரத் தரப்பு மோதல்களின் தொடர்ச்சியாக 1970களின் இறுதியில் இடைநிலைத் தொழில்நுட்பம் (Intermediary Technology) அறிமுகமானது. அதன் ஒரு பகுதியாக இயந்திரமயமாக்கப்பட்ட சிறு படகுகள்/நாட்டுப் படகுகள் சுருக்குமடியை பயன்படுத்தத் தொடங்கின.

2004 சுனாமி மறுவாழ்வு கட்டத்தில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட இயந்திரப் படகுகள் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தொழில் நவீனமயமாவதற்கும் சுருக்குமடிப் பயன்பாடு அதிகரிப்பதற்கும் காரணமானது (பவிங்க், 2020). கடலூரில் 2006 தொடங்கி 20’ கானா (அணியம் உயர்ந்த)  படகுகளில் விஞ்ச் இணைத்து சுருக்குமடி வளைக்கிறார்கள். தொடக்கத்தில் 20 பேர் கூட்டு முதலீட்டுடன் இயங்கிய சுருக்குமடிப் படகுகளின் எண்ணிக்கை படிப்படியாய் உயர்ந்துவிட்டது. இப்போது படகுக்கு அதிகபட்சம் ஐந்து பங்குதாரர்கள்; வழமையான அறுவடைப் பகிர்வு முறை ஏறத்தாழ அழிந்து விட்டது. பங்குதார்கள்/ முதலீட்டாளர்கள் கடலுக்குப் போவதில்லை (பவிங்க், 2020). வெராவல் (குஜராத்) மீன்பிடி துறைமுகம் போல இங்கும் சமவெளிச் சமூகங்களிலிருந்து வருபவர்கள் நாட்கூலி அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.

சுருக்குமடியைப் பயன்படுத்துவதன் முக்கியமான சிக்கலைக் கைப்பணிக்குப்பம் மீனவர் கோதண்டபாணி தெளிவுபடுத்துகிறார்-

அவன் ஒரு மீனுக்கோசரம் வளைப்பான். ஆனா சேத்துக்குள்ள இருக்கற மொத்த ஜீவராசியும் அதில மாட்டி நாசமாப் போயிடும். அப்புறமா மீனு எங்கேருந்து உற்பத்தியாவறது?... காலங்காலமாப் புடிக்க வேண்டிய எறாவ ஒரே நாள்ள புடிச்சிர்றாம். ஒரு எடத்தில ஒரு லச்சம் மீனுங்க இருக்குன்னா, வேற எந்த வல போட்டாலும் மிஞ்சிப்போனா ஒரு இருவதாயிரம் மாட்டும், மிச்சம் தப்பிச்சுப் போயிரும். சுருக்கு வலைன்னா ஒரு லச்சம் மீனும் மாட்டிக்கும், அதோட கீழ சேத்துல இருக்கற குஞ்சுகளும் முட்டைகளும் நாசமாயிடும். சுருக்குவல இழுக்கறத நிப்பாட்டல்லண்ணா எங்க கடல்ல மீனுங்கறதே இல்லாமப் போயிடும்…”

சுருக்குவல புழங்கத் தொடங்கினப்புறந்தாம் இவ்வுளவுக்கு கடல் வத்திப்போச்சு. கடலூரு தேவனாங்குப்பத்திலயிருந்து போயி மகாபலிபுரத்துல புடிக்கிறாம் முப்பது டன்னு! யார் கேக்கறது? எங்களுக்கெல்லாம் தேவனாம்பட்டுதாம் தலக்கிராமம். அவங்கள நாங்க எங்க கட்டுப்படுத்தறது? நாகப்பட்டினத்துல பாத்தீங்கன்னா அக்கரைப்பேட்டைக்காங்க வெச்சதுதாஞ் சட்டம். விழுப்புரத்துல கூனிமேடு, அனுமந்த, எக்கிகுப்பம், முதலியார் சாவடினு நாலு ஊரு கைதாம் ஓங்குது. இந்த நாலு குப்பமும் தலையிட்டு சுருக்கு வலயத் தட பண்ணி வெச்சிருந்தாங்க. அப்புறம் திரும்பவும் சுருக்குவல இழுக்கறாங்க.”

 

பாக் நீரிணை

பாக் நீரிணையின் சூழலியலை பாரம்பரிய மீனவர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றனர். அதிராம்பட்டினம் மீனவர் காளிதாஸ் (61) சொல்கிறார்-

“பாக் நீரிணைப் பகுதி ஆழம் குறைவான இடம், ஆனால் மீன் உற்பத்தியாகுற இடம். காவேரியாத்தோட தண்ணி வர்ற வடிகால்களெல்லாம் இங்கதான்  கடல்ல வந்து சேருது. அரை கிலோமீட்டர் கால் கிலோமீட்டருக்கு பெரியபெரிய வாய்க்காலெல்லாம் நல்லதண்ணியக் கொண்டுவந்து கடல்ல சேக்குது; அலையாத்திக்காடுக இருக்குற சதுப்புநிலம். மீன் தங்கறதுக்கு, குஞ்சு பொரிக்கறதுக்கு, வளர்றதுக்கு ஏத்த இடம். முன்னாடியெல்லாம் மீன் செவல் செவலா (கூட்டம் கூட்டமாக) வரும், இப்ப அப்படி வர்றதில்லை.”

‘ரேஸ்மடி’ எனப்படும் இரட்டை(ப்படகு)மடி (otter trawl), இழுவைமடியின் மற்றொரு வடிவம். மடியின் வாய்ப் பகுதியின் இரண்டு பக்கங்களையும் இரண்டு படகுகளின் கொம்போடு இணைத்துக் கொண்டு 12  கடல்மைல் வேகத்தில் மடியை இழுக்கிறது. சிறு கண்ணிகள் கொண்ட கடைமடி, கிளறு பலகைகளால் (otter board) விரிந்தும், அதிவேக இழுவிசையினால் உயர்ந்து நிற்கும் வாய்ப்பகுதியுடன் நகரும் இரட்டைமடியானது, குஞ்சுமீன், முட்டைகளோடு பெருவாரியான மீனை வாரிக் கொண்டு வருகிறது என்பது முக்கியமான சிக்கல். இழுவைமடிப் பயன்பாடு பாக், மன்னார்க் கடல்களின் மீன்வளத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ‘பாக் நீரிணைப் பகுதியில் மீன் உற்பத்தி அழிந்து போனதற்குக் கடற்கரையில் இயங்கும் இறால் பண்ணைகளும் கடலில் இயங்கும் இழுவைமடி, ரேஸ்மடி, சுருக்குமடிகளும்தான் காரணம்’ என்கிறார் காளிதாஸ்:

“ரேஸ்மடி, செவலாப் போயிட்டிருக்கிற மீனோட வேகத்தை மிஞ்சி ஓடி மொத்த மீனையும் அள்ளியெடுக்கிறாங்க. இந்த மடிகளுக்கு எந்த அளவுகோலும் கிடையாது, விதியும் கிடையாது. நூறு மீனப் புடிக்கிறதுக்கு லட்சம் மீனைக் கொன்னுடுறாங்க…”

சுருக்குமடியை அரசாங்கமே ஊக்குவிக்கிறது என்பது உண்மையா? காளிதாஸ் சொல்கிறார்-

“ஒரு முறை தமிழ்நாடு மீன்துறை எங்களைக் கேரளாவுக்கு டூர் கூட்டிட்டுப் போயி, ஒரு ஊர்ல எங்களுக்கு சில வீடியோ போட்டுக் காட்டினாங்க. சுருக்குவலை இழுத்து எப்படி மீன் பிடிக்கிறது என்று காட்டும் படம். அதிகாரி கேட்டார்- உங்களுக்கு எல்லாம் புரிந்ததா என்று. நான் மட்டும்தான் கேள்வி கேட்டேன்- ‘சார், தமிழ்நாட்டில் சுருக்குவலைக்குத் தடை விதித்திருக்கிறார்கள், நீங்கள் எங்களுக்கு சுருக்குவலை இழுக்க ட்ரைனிங் கொடுக்கிறீர்களே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?’ அந்த அதிகாரி சமர்த்தாகப் பதில் சொல்கிறார்- ‘எப்படி மீன் பிடிக்கலாம் என்று காட்டுவதுதான் எங்கள் வேலை, எங்கே போய்ப் பிடிப்பது என்று சொல்வது எங்கள் பிரச்சினை அல்ல’.

‘மீனும் தேனும் கண்ட அன்னிக்கு’ என்கிறார்கள் தஞ்சாவூர் விசைப்படகு மீனவர்கள். ‘நாங்க புடிக்காம வுட்டுட்டம்னா அந்த மீனு திரும்ப வராது' என்கிற வாதம் கடலைப் புரிந்து கொண்ட பூர்வகுடியின் குரலல்ல; பெருமுதலீட்டுக்கும் பிழைப்புக்கும் இடையில் சிக்கிக்கொண்ட நிகழ் தலைமுறையின் தவிப்பு.

தஞ்சாவூர் விசைப்படகுகளைப் பொறுத்தவரை இழுவைமடிதான் ஒரே மீன்பிடி கருவி. இறால்தான் முக்கிய அறுவடை. டெல்டாத் தண்ணீர் சதுப்புநிலத்தில் வந்துசேர்ந்த காலத்தில் நல்ல இறால் பாடு கிடைத்துவந்ததை நினைவு கூர்கிறார் தாஜுதீன் (62, கள்ளிவயல்தோட்டம்). ‘உவர்நீர் இறால் பண்ணைகள் பாக் கடல்பகுதியின் மீன்வளம் அழிந்துபோனதற்கு மற்றொரு முக்கியமான காரணம்’ என்கிற இந்தியன் கணேசனின் (56, மணமேல்குடி) கருத்தையே அர்ஜுனனு (61, மணமேல்குடி) வழிமொழிகிறார். ‘கிழக்குக் கடற்கரை முழுவதும் வனங்களை அழித்து இறால் பண்ணைகள் அமைக்க அரசு உடந்தை’ என்கிறார் இவர்.

 ‘பாக் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் இழுவைமடி, சுருக்குமடி, தங்கூஸ் வலை, சலங்கை வலை பயன்படுத்தி எல்லை தாண்டிப் போய்ப் பல நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிப்பவர்கள்தான், சொல்லப்போனால் விசைப்படகு மீனவர்களைவிட நாட்டுப்படகு மீனவர்கள் அதிக மீன் பிடிக்கிறார்கள்' என்று வாதிடுகிறார் தாஜுதீன். ‘மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, ரேஸ் மடி, சுருக்குமடிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதால் மீன்வள நெருக்கடி பெரிதாகி உள்மோதல்களும் அண்டைநாட்டுக் கடற்படையினரின் தொல்லைகளும் அதிகரித்தன’  என்பதை ஒப்புக் கொள்ளும் இவர், ‘அரசின் தவறான முடிவுகள் காரணமாக (மீன்பிடி) தொழில் பெரும் சரிவைச் சந்தித்தது’ என்கிறார்.

 

மன்னார் வளைகுடா

‘இராமேசுவரம் பகுதியில் (தமிழக அரசு) அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 200க்கு மேற்பட்ட விசைப் படகுகள் ஜனவரி முதல் டிசம்பர் வரை கள்ளத்தனமாக இரட்டை மடி இழுக்கின்றன’ என்கிறார் அருளானந்தம் (69, பாம்பன்):

“ஈழத் தமிழ் மீனவர்கள் கூடு, வலைகளை வைத்து மீன் பிடிக்கிறார்கள். அல்லது கழிவுப் பொருட்களால் கடலில் செயற்கை மீன்வளத் திட்டுகளை (artificial reefs) உருவாக்கி, அந்தப் பகுதியில் மடிவலை இழுத்து கணவாய் பிடிக்கிறார்கள். ஆனால் இங்கிருந்து போகும் விசைப்படகுகள் அந்தப் பகுதியில் தாராளமாய்க் கிடைக்கும் மீன்களை மொத்தமாக அள்ளிக் கொண்டுவரும் பேராசையில் இரட்டைமடி இழுக்கின்றன.”

‘அரசு நெனச்சா ரெட்டமடி, சுருக்குமடிய ஒடனேயே நிப்பாட்டலாம்’ என்று சொல்லும் மோகன்தாஸ் (62, ஓலைக்குடா), இன்றைய மோசமான நிலைமைக்குக் காரணம் நேர்மையற்ற அரசு அதிகாரிகள்தான்’ என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்:

“ஒரு முறை நாட்டுப்படகு மீனவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, இரட்டைமடி, சுருக்குமடி இழுப்பதை முழுமையா அரசு தடை பண்ணனும்னு ஒரு போராட்டத்த அறிவிச்சோம். எல்லாரும் சேந்து தாசில்தார் ஆபீசுக்குப் போயிட்டோம். ‘மேற்கொண்டு இரட்டைமடி, சுருக்குமடி இழுத்தா எங்களுக்குப் பொழைப்பு இல்ல, அதனால எங்க ரேஷன் காடுகளயெல்லாம் தாசில்தார் கிட்ட ஒப்படச்சிட்டு அகதிகளா வாழ்றோம்’ அப்படின்னு சொன்னோம். பெரிய கூட்டம் கூடியிருந்துச்சு. தூத்துக்குடியில இருந்தெல்லாம் வந்திருந்தாய்ங்க. ஆனா விசைப்படகு வெச்சிருக்கவங்களோட சொந்தக்காரங்க பின்வாங்கினாங்க. தாசில்தார் ஒரு பொட்டிய அங்க கொண்டு வச்சிட்டு, ‘ரேசங்காடப் போடத்தான வந்திய, போட்டுட்டுப் போயிடுங்க. போராட்டம் பண்ணினீங்கன்னா போலீஸ் அரஸ்ட் பண்ணிடும்’னு மிரட்டுறாரு. நாங்க என்ன செய்யிறதுன்னு மிரண்டுபோனோம். இதுதான் எங்க நெலம.”

 

மேற்குக் கடற்கரை

 சீசன்தோறும் வந்து கொண்டிருந்த மீன்கள் சரியாய் வரவில்லை. இது ஒரு மோசமான அறிகுறி’ என்கிறார் மீன்பிடி கப்பல் ஸ்கிப்பர் மெல்கியாஸ் (67, கோடிமுனை):

1977இல் விசாகப்பட்டினம் போனபோது எங்கே போனாலும் மடி நிறைய மீன் கிடைத்தது; இப்போது அந்தக் கடலில் மீன்வளமே அற்றுப் போய்விட்டது. கடந்த 20 வருடங்களில் இந்தியாவில் மீன்பிடி கப்பல்கள் மொத்தமாகக் காணாமல் போய்விட்டன. விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட நிலைமை மேற்குக் கடற்கரையிலும் சீக்கிரம் உருவாகும். கன்னியாகுமரிக் கடலில் ஒன்றுமே இல்லை. விசைப்படகுகள் எல்லாம் பெரும் நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது. இராமேஸ்வரம் கடலைப் போல இழுவைமடி விசைப்படகுகள் இங்கும் தரையை வழித்துக் கொண்டிருக்கின்றன. மீன் உற்பத்தியாகும் இடங்களெல்லாம் சேதமாகி மீன்வரத்தும் குறைந்துவிட்டது. அட்வான்ஸ்ட் டெக்னாலஜிகளைப் பயன்படுத்தி நிறைய மீன்பிடிப்பது மட்டுமே அவர்களுக்கு முக்கியம். முதலாளிகளுக்கு இந்தத் தொழில் இல்லையென்றால் வேறு தொழில்; மீனவர்கள் எங்கே போவார்கள்?” (வறீதையா, 2021).

மெல்க்கியாஸ் முன்வைக்கும் இந்தக் கேள்விதான் தமிழ்நாட்டு மீனவர் போராட்டங்களின் மையப்புள்ளி. 1948-2015 காலகட்டத்தில் இந்தியாவில் மீன் அறுவடை எட்டுமடங்கு பெருகியது (47000 – 3583000 மெட்ரிக் டன்) (ஒன்றிய அரசு புள்ளிவிவரம், 2017) எனினும் மீன்வளம் வீழ்ச்சியடைந்து மீன்பஞ்சம் தலைகாட்டத் தொடங்கியது. இழுவைமடி, சுருக்குமடி தொழில்நுட்பங்களின் தொடர்ந்த பயன்பாடு கடற்சூழலியலில் உணவுச் சங்கிலியின் வேர் வரை அழித்துவிட்டிருக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரங்களை சுதர்சன் குழு (1994) உள்ளிட்ட பல்வேறு ஆய்வாளர்கள்  முன்வைக்கின்றனர்.

 

பன்முனைத் தாக்குதல்கள்

கடல் மீன்வள வீழ்ச்சிக்குக் காரணம் இழுவைமடி- சுருக்குமடிதான் என்பது தட்டையான பார்வை. வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் நமது கடல்களில் நாசகரமான முறைகளில் மீன்பிடிக்கின்றன. அறுவடையை நடுக்கடலில் தாய்க் கப்பல்களுக்குக் கைமாற்றும் இந்தக் கப்பல்களுக்கு இந்திய அரசு மானிய எரிபொருள் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது. தடை செய்யப்பட்ட மடிகளைப் பயன்படுத்துவதால் கடல் மீன்வளம் அழிகிறது என்று உரக்கப் பேசுபவர்கள் பன்னாட்டு மீன்பிடி கப்பல்களின் அத்துமீறல்களைக் குறித்துப் பேசுவதில்லை. கடற்கரை இறால் பண்ணைகள், மாசுபடுத்தும் ஆலைகள், குறைந்துவரும் நன்னீர் வரத்து எல்லாமாக மீன்வளத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். இந்தச் சிக்கல்களுக்கு அரசும் முகம் கொடுப்பதில்லை.

ஒன்றிய அரசு செயல்படுத்திவரும் ‘சாகர் மாலாதிட்டத்தின் மதிப்பீடு எட்டு லட்சம் கோடி என்கிறார்கள். ‘பெருவணிகத்தை முன்னிட்டுக் கடலோரத்தில் அதிவிரைவுச் சாலை அமைப்பது, துறைமுகங்களை மேம்படுத்துவது, மீன்பிடி தொழிலைத் துறைமுகமயமாக்குவது உள்ளிட்ட பெருந்திட்டத்துடன் அரசு காய்களை நகர்த்துகிறது’ என்கிறார் செயல்பாட்டாளர் அருணபாரதி (38, புதுச்சேரி). துறைமுக மீன்பிடி தொழில் பெருமுதலீட்டாளர்களுக்கு உரியது; பாரம்பரிய மீனவர்களுக்குப் போக்கிடமேது? ‘கடற்கரைகளில் கிட்டத்தட்ட 40 அனல் மின்நிலையங்கள் வருகின்றன. இவ்வளவு அனல் மின்நிலையங்கள் வெளியேற்றும் மாசுகளும் அமில வாயுக்களும் கரைக்கடலுக்கு மட்டுமல்ல, கடற்கரைப் விவசாய நிலங்களையும் பாழாக்கிவிடும்’ என்கிறார் இவர்.

இறால் பண்ணை, தொழிற்சாலைன்னு வந்து கடக்கரய நாசம் பண்ணிடுச்சி’ என்கிறார் பராசரன் (32, மரக்காணம்): “விழுப்புரம் மாவட்டத்துல 30000பேர் வாழறாங்க. இந்த 19 குப்பங்கள்ளயும் இறால் பண்ணைங்க இருக்குது. பண்ணைலயிருந்து வர்ற கழிவுகளும் இரசாயனங்களும் எங்க மண்ணையும் நிலத்தடி நீராதாரத்தையும் மட்டுமில்லாம கடலையும் கால்வாயையும் அழிச்சுக்கிட்டிருக்கு.”  கடந்த 25 வருடங்களாக பிச்சாவரம் - கிள்ளை கழிமுகப் பரப்புகளைச் சூழ்ந்துள்ள நிலப்பகுதிகளில் இறால் பண்ணைக் குளங்களை தோண்டி, ஆற்றுநீர் உள்ளே வருமாறு சட்டவிரோதமாசிறு வாய்க்கால்களால் இணைத்தனர். வேளாண் நிலங்கள் உவர்நீர் ஏற்றத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு  அவர்கள் அகதிகளாகி நகர்ப்புறங்களுக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர்.

நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டைக் கடற்கரைகளிலும் எராளமான உவர்நீர் இறால் பண்ணைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. தூத்துக்குடி வேதிமத் தொழிற்சாலைகள், திருநெல்வேலி அரிய மணல் ஆலைகள், கடற்கரை நெடுக நிறுவப்படும் தொழிற்பேட்டை உள்ளிட்ட பெருந்தொழிற்சாலைக் கட்டுமானங்கள், பெரும் துறைமுகங்கள் அனைத்தும் மீனவர் வாழ்வாதாரத்துக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதற்கு அண்மைக்கால சான்று காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகத்தின் பத்து மடங்கு விரிவாக்கத் திட்டம். மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களில் பெருந்தொழிற் கட்டுமானங்களை அனுமதிக்கக்கூடாது என மீனவர்கள் போராடிய காலம் போய்விட்து. இன்று, ‘தங்கள் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடைசெய்ய வேண்டும்’ என்று துறைமுக நிர்வாகம் அரசை நிர்பந்திக்கிறது.

 

சட்டங்கள் உருவாக்கும் சிக்கல்

இந்தியக் கடலோரம் முழுவதும் மீனவர்களுக்கிடையே மோதல்கள் வலுக்கத் தொடங்கியபோது இழுவைமடி, சுருக்குமடி தொழிலை ஒழுங்குபடுத்தும் பொருட்டு கடலொட்டிய மாநில அரசுகள் சட்டங்களைக் கொண்டுவந்தன. 1983இல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மீன்வள ஒழுங்காற்றுச் சட்டம் 2017இல் திருத்தியமைக்கப் பட்டது. எல்லாவகையான இழுவைமடி, சுருக்குமடிகளுக்கும் 2000த்தில் தடை விதித்து அரசாணை வெளியிட்டது; அத்தடையைச் சென்னை உயர்நீதிமன்றம் 2018இல் உறுதிப்படுத்தவும் செய்தது.

ஆனால் 12 கடல்மைலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பின் வளங்கள் தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்கிற ஒரே காரணத்தை முன்வைத்து ஒன்றிய அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது  புதிய நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. கடல் மீன்வளத்தை மேம்படுத்தி, மீனவர் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு’ ஒன்றிய அரசு மீன்வள மசோதாவை (2021-வரைவு) முன்வைக்கிறது. கடலுக்குள் போகும் விசைப்படகுகள் உரிமம் பெறவேண்டும், மீன்பிடிக்கும் இடத்துக்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறது (பகுதி 7). முந்தைய மாநில அரசு 20017இல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட சீரமைத்த மீன்பிடி ஒழுங்காற்றுச் சட்டமும் (தமிழ்நாடு கடல் மீன்வள ஒழுங்காற்று விதிகள்-2020) இதே விதிகளை வைத்துள்ளது என்பது அதிர்ச்சியூட்டுகிறது.

மீன்வள மசோதாவிலும், மாநில அரசின் மேற்சொன்ன சட்டத்திலும் இடம்பெறும் மற்றொரு பொதுவான கூறு, இச்சட்டங்களை நடப்பாக்கும் அதிகாரத்தைக் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்திருப்பது. ‘ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் (TN Coastal Security Group) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது; அதோடு 2020இல் 112 காவல் அதிகாரிகளுடன் கடல்சார் நடப்பாக்கப் பிரிவும் (Marine Enforcement Wing) நிறுவப்பட்டுள்ள நிலையில் மீன்பிடி தொழிலை ஒழுங்காற்றும் அதிகாரத்தைக் கடலோரப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைப்பதன் நோக்கம் என்ன?’ விஜோ ரொசாரியோ (28, கூட்டப்புளி) எழுப்பும் இக்கேள்வி நியாயமானது. 

 

என்ன தீர்வு?

கடல் பல்லாயிரம் ஆண்டுகளாக மீனவர்களின் வாழ்வாதாரமாக இருந்து வருவது. ‘வனங்களை அரசு நாட்டின் தற்சார்பு ஆதாரமாகப் பார்க்கவேண்டுமே ஒழிய, வருவாய் ஆதாரமாக அல்ல’ என்பார் காந்தியப் பொருளாதார வல்லுனர் ஜே.சி.குமரப்பா. கடலுக்கும் இது பொருந்தும். காயப்பட்டுக் கிடக்கும் கடல் சூழலியலைக் குணப்படுத்துவதற்கு அரசுத் தரப்பில் மூன்று வகையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன:

(1) நில மேலாண்மை:

மீன்வள ஆதாரம் என்பதற்கு அப்பால், கடல் மிக முக்கியமான சேவைகளை வழங்குகிறது. கடல் பருவநிலையின் அச்சாணி, வேளாண்மையின் ஆதாரம். பருவநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, பருவமழைப் போக்குகளில் கோளாறு போன்ற முக்கியமான சிக்கல்கள் உருவெடுத்துள்ள நிலையில் கடல் பாதுகாப்பு கூடுதல் கவனம் பெறும் களம். இந்நிலையில் கடல் சூழலியலுக்கு ஊறு செய்யும் சமவெளி சார்ந்த கூறுகளை-  கடலுக்கு நன்னீர் வரத்து, தொழிற்சாலை மாசுகள், துறைமுக நடவடிக்கைகள் உள்ளிட்டவை- கட்டுப்படுத்தினால் கடல்மீன்வளம் மேம்பட வாய்ப்பிருக்கிறது. இது கடினமான தொலைதூரப் பயணம்தான்.

(2) கரைக்கடல் மேலாண்மை:

முற்றிலுமாக அழிந்துபோன மீனினங்களை இனிமேல் ஒருபோதும் திரும்பப் பெறமுடியாது என்பது கவலையளிக்கும் செய்தி. ஆனால் கடல் எப்போதும் நகர்ந்து கொண்டிருப்பது; அதன் சுயதூய்மைப் படுத்தும் திறன் அபாரமானது. குறிப்பிட்ட கடற்பகுதிகளில் ஐந்தாண்டு காலம் நாசகார மீன்பிடிமுறைகளைத் தவிர்த்துவிட்டால் போதும், மீன்வளம் மீள உருவாகும். சில நாடுகளில் இதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.

கடலில் மீன்பிடி எல்லைகளையும் காலத்தையும் தெளிவாக வரையறுத்துச் சட்டமாக்கி சமரசமில்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். அது அரசின் கையில் இருக்கிறது.” என்கிறார் ஜேசையா (மேனாள் மாநகராட்சித் தலைவர், குளச்சல்). கடலைக் காக்க பிற கடற்கரைகளில் மீனவர்கள் முன்வைக்கும் தீர்வையே சுப்பிரமணியனும் (தொண்டி, 66) வழி மொழிகிறார்: இந்தக் கடல்ல எத்தன பேருன்னாலும் என்ன தொழில் வேணுன்னாலும் செய்யலாம், ஆனா இழுவைமடி போட்டு இழுக்கக்கூடாது- அப்படின்னு ஒரு சட்டத்த இந்த அரசாங்கம் கொண்டு வந்துச்சுன்னு வையுங்க, மீனவன்- இனிமே பொறக்கப் போற மீனவன் எல்லாருமே தப்பிச்சுக்கிர்லாம்.”

கடல்பகுதிகளில் மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்துவது என்பது பாரம்பரிய, இயந்திரப் படகு, விசைப் படகு மீனவர்கள் என்னும் மூன்று தரப்பினரின் தொழில் முறைச் சிக்கல்களையும் பரிசீலிப்பதாய் அமைய வேண்டும். மைய கடல் மீன்வள ஆய்வு நிறுவனத்தின் மேனாள் இயக்குனர் சைலஸ் (1980) ‘இந்த நாசகரமான மீன்பிடி முறை கிழக்குக் கடற்கரையின் மீன்வளங்களை ஒட்டுமொத்தமாய் அழித்துவிடும் சுருக்குமடித் தொழிலை ஒழுங்குபடுத்த மேம்பட்ட அணுகுமுறைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்’ என்று 1980இலேயே எச்சரித்திருந்தார்.

சுருக்குமடிகளை அரசு கட்டுப்படுத்தத் தாமதித்து விட்டது என்கிறார்  கடல்பொருள் ஏற்றுமதி வளர்ச்சி முகமையின் (MPEDA) முன்னாள் இயக்குனர் சக்திவேல்  (பவிங்க், 2020).

’டிராலிங்கை உடனடியாக, ஒட்டுமொத்தமாக நிறுத்திவிடுவது சாத்தியமல்ல. அரசு முனைப்போடு படிப்படியாக மாற்று ஏற்பாடுகளுடன் கையாளவேண்டிய சிக்கல் இது’ என்கிறார் இழுவைமடி விசைப்படகு உரிமையாளராயிருந்த பேரின்பம் வாஸ் (63, தங்கச்சிமடம்) (வறீதையா, 2014):

…ஆனால் உடனடியாக விசைப்படகுகளின் குதிரைத் திறனைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும்; டிரால் மடிகளில் தூர்மடிக் கண்ணிகளை சிறுமீன்கள்/ குஞ்சுகள் எளிதில் தப்பித்துப் போக வசதியாகப் பெரிதாக்கியாக வேண்டும்; கண்ணிகளின் சாய்சதுர வடிவத்தைச் சதுரமாக்க வேண்டும். விசைப்படகுகளின் எண்ணிக்கையைக் குறைத்தாக வேண்டும். டிராலிங் செய்யும் நாட்களைக் குறைத்துவிட வேண்டும். மீதி ஆறு மாதங்களில் கூடு தாழ்த்தலாம், தூண்டில் போடலாம், வலை போடலாம்.”

தமிழ்நாட்டுக் கடல்களைப் பொறுத்தவரை இழுவைமடி, சுருக்குமடிகளை ஒழுங்குபடுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதுதான் கடந்த 40ஆண்டு அனுபவம் தரும் பாடம். உள்மோதல்களுக்கும் வெளிநாட்டுத் தாக்குதலுக்கும் கூட இம்மீன்பிடிமுறைதான் காரணமாய் உள்ளது. இந்நிலையில் மீன்வளத் துறையின் தடைப் பட்டியலிலுள்ள எல்லா மீன்பிடிமுறைகளின் மீதான தடைகளையும் கண்டிப்புடன் நடப்பாக்குவதும் தகுந்த மாற்று ஏற்பாடுகளை மீனவர்களுக்குச் செய்து தருவதும்தான் சரியான பாதையாக இருக்கும்.

(3) ஆழ்கடல் மேலாண்மை:

இந்திய முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பகுதியில் அந்நிய முதலீட்டுக்கு முற்றிலுமாய்த் தடைபோட வேண்டும்; வெளிநாட்டுக் கப்பல்கள்/ படகுகளுக்கு வழங்கப்பட்ட மீன்பிடி உரிமம்/ அனுமதிகளைத் திரும்பப் பெறவேண்டும்; இப்பகுதிகளில் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு மீன்பிடி கலன்களைக் கண்காணித்து அப்புறப்படுத்த வேண்டும்.

குமரி முனையின் தெற்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் பல்லாயிரம் ச.கி.மீட்டர் பரப்பு கொண்ட மீன்வளத் திட்டில் தமிழக விசைப்படகுகள் சென்று மீன்பிடிக்க அரசு ஏற்பாடு செய்யலாம். அந்தமான் நிக்கொபார் தீவுகளுக்கும் இந்தியப் பெருநிலத்துக்கும் இடையே இருக்கும் பரந்த கடல், வளங்கள் நிறைந்தது. சீன, கொரிய, இந்தோனேஷியக் கப்பல்களும் விசைப் படகுகளும் கவர்ந்து செல்லும் அக்கடல் வளங்களை இந்தியப் படகுகள் அறுவடை செய்ய ஏதுவாக தாய்க் கப்பல்களின் உதவியுடன் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். சுருக்குமடி, இழுவைமடி மீன்பிடியைத் தமிழ்நாடு அரசு தடைசெய்துள்ள நிலையில் மீனவ்ர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருவதாக மீன்வளத் துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்: ‘சுருக்குமடி வலையைக் கைவிடும் மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்துடன் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் அரசால் வழங்கப்படும். 50 விழுக்காடு மானியத்துடன் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசுத் திட்டத்தின் கீழ் வலை மற்றும் தூண்டில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்படும். தற்போது பயன்பாட்டில் உள்ள இழுவலைப் படகுகளை 15 லட்சம் ரூபாய் மானியத்துடன் வலைப் படகுகளாக மாற்றும் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

கடல் சூழலியல் சிதைவினாலும் அரசுகளின் கொள்கைப் போக்கினாலும் மீனவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியிருக்கும் சூழலில் வாழ்வாதார உரிமையை மீட்டுக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்; கடல் சூழலியலைப் பாதுகாக்கும் நடைமுறைகளுக்குத் திரும்ப வேண்டும். உள்மோதல்களுக்கு உள்ளூர் அதிகாரக் கட்டுமானங்களுக்குள்ளே தீர்வு காணும் வழிமுறைகளை நடப்பாக்க வேண்டும்.

------------------------

பார்வை:

 

D’Cruz, T, 1998. The Ring Seine: Evolution and Design Specifications. South Indian Federation of Fishermen Societies. Thiruvananthapuram.

Mariappan, S et al., 2017. A present scenario of seine net fishing gear of Pulicat Coast, Tamil Nadu, India. International Journal of Fisheries and Aquatic Studies, 5(3):208-212.

Marten Bavinck, 2020. The Troubled Ascent of a Marine Ring Seine Fishery in Tamil Nadu. <http://wwww.epw.in/journal/2020/14/special-articles/troubled-ascent -marine-ring-seine-fishery-tamil.html>

Silas, E.G, et. al., 1980. Purse Seine Fishery—Imperative Need for Regulation,” MFIS—Technical and Extension Series, CMFRI, Vol 24, pp 1–9.

வறீதையா கா., 2014. மன்னார்க் கண்ணீர்க் கடல். தடாகம்.

வறீதையா கா., 2017. வேளம். கடல்வெளி (2020 கிண்டில் பதிப்பு).

வறீதையா கா., 2020. கடல் பழகுதல். கடல்வெளி. கிண்டில் பதிப்பு.

வறீதையா கா., 2021. பெருந்துறை வலசை (தமிழகக் கடற்கரைப் பயணக் குறிப்புகள்). கடல்வெளி. கிண்டில் பதிப்பு.

பதிவு 250721

 

 

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...