Wednesday, 1 May 2019

பேரிடர் மேலாண்மை- பேசவேண்டிய அரசியல். / அருண் நெடுஞ்செழியன்


நூல் மதிப்புரை:
கஜா புயலும் காவிரி டெல்டாவும்/ வறீதையா கான்ஸ்தந்தின்
••••••••••••••••••••••••••••••••••
கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னைப் பெருவெள்ளம், வர்தாப் புயல், ஓக்கிப் புயல்   தற்போது கஜாப் புயல் என அடுத்தடுத்த நான்கு பேரிடர்களை தமிழகம் எதிர்கொண்டது. இயற்கைப் பேரிடரிலிருந்து தப்பிப் பிழைத்த மக்கள்கூட,  ஆட்சியாளர்களின் செயல்படாத தன்மை எனும் செயற்கை பேரிடரில் சிக்கி துன்புற்றுவருவதை கண்ணுற்றுவருகிறோம்.
சென்னை வெள்ளத்தின்போதும் சரி, ஓக்கி புயலின்போதும் சரி, அரசு, சமூகத்தைக் கைவிட்டதால், தங்களைத் தாங்களே காத்துக் கொள்கிற கையறு நிலைக்கு குடிமைச் சமூகம் தள்ளப்பட்டது. பேரிடர்க் காலச் செய்திகளை நீர்த்துப் போகச் செய்வதற்கு, ஆளும்கட்சி மேற்கொள்கிற பொய் உறுதிமொழிகள் பேரிடர் குறித்த ஊடக விவாதங்களை முடித்துவைக்கிறது. அதற்கடுத்த பேரிடர் வரையிலும் நிலை இதுதான்!

பேரிடர் நிகழ்வை ஆவணப்படுத்துவதில் தமிழ்ச்சமூகம் பின்தங்கியிருப்பது இதற்கொரு  முக்கியக் காரணமாக உள்ளது. பேரிடர்க் கால ஆவணப்படுத்தல் என்பது கடந்த கால தவறுகளை சுட்டிக்காட்டவும் மீளாய்வு செய்வதற்கும் நம்முன் உள்ள வரலாற்று ஆதாரம் ஆகும். அவ்வகையில் 2018 நவம்பர் 15இல் தமிழகத்தின் ஏழு மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கஜா புயல் பாதிப்பு  குறித்து முக்கிய ஆவணமாக தோழர் வறீதையா கான்ஸ்தந்தின்  “கஜா புயலும் காவிரி டெல்டாவும்” என்கிற தலைப்பிலான இந்நூல் முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.

கடற்கரை பேரிடர் மேலாண்மை குறித்து தொடர்ச்சியான பகுப்பாய்வுகளை மேற்கொண்டுவருகிற தோழர் வறீதையாவின், கஜா புயல் பாதிப்பு பற்றின கள ஆவணப் பதிவானது, டெல்ட்டா மாவட்ட மருத நில, நெய்தல்  நில மக்களின் சமூகப் பொருளாதாரத்தை பேரிடர்கள் எவ்வாறு புரட்டிப் போட்டுள்ளது என்பதை ஒருங்கிணைந்த வகையில், உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்துகிறது.

நூலின் பெரும்பகுதியானது (முன்னோட்டம் மற்றும் கொடை அரசியல் தவிர) பேரிடர் பாதிப்பை எதிர்கொண்ட எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளை பதிவு செய்கிறது. நிலத்தில் ஏற்பட்ட பாதிப்பு (குறிப்பாக தென்னை விவசாயம், ஒருங்கிணைந்த பண்ணை), கழிமுகம் மற்றும் கடற்கரையோர மீனவ  கிராமங்களில்  புயல் ஏற்படுத்திய பாதிப்புகளையும் அரசின் மீதான  மக்களின் ஆவேசத்தையும் ஆவணப்படுத்துகிறது.

கடல் நிலம் கஜா, சுடுகாடாகும் டெல்டா நிலம், பாலைவனமாகும் பாக் கடல், இயற்கை சீற்றமும் கொடை அரசியலும் என நான்கு தலைப்புகளில் புயல் பாதிப்பை எதிர்கொண்ட தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள், பேரிடர் மேலாண்மை மீதான பகுப்பாய்வு மேற்கொண்டுள்ளார்.
பேரிடர் ஆயத்தக் கட்டத்தைப் பொறுத்தவரை, கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு துரிதமாக செயல்பட்டாலும் புயலின் திசைபோக்கு குறித்து தெளிவான எச்சரிக்கை விடுக்கப்படாததால் மன்னார்குடி, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட உள்பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டதை இந்நூல் உறுதிப் படுத்துகிறது. கடந்த 2017 ஓக்கிப் புயலின்போது முன்னெச்சரிக்கைக்  கட்டமைப்பின் தோல்வியால் பலநூறு மீனவர்கள் நடுக்கடலில் புயலில்  சிக்கி பலியானதை கருத்தில் கொண்டால் பேரிடர் முன்னெச்சரிக்கை கட்டமைப்பில் அரசு இயந்திரத்தின் பலவீனம் மீண்டுமொருமுறை விமர்சனத்திற்கு உள்ளாகிறது.

பேரிடருக்கு பிந்தைய நிவாரணம் மற்றும் மீள் கட்டமைப்பைப் பொறுத்தவரை, அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதை கள ஆய்வுகளின் அடிப்படையில் இந்நூல் விரிவாக அம்பலப்படுத்தியுள்ளது.

புஷ்பவனம் மற்றும் அதிராம்பட்டினம் கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் பேரிடருக்குப் பிந்தைய நிவாரணக் கட்டமைப்பிற்கும் எதார்த்த இழப்பிற்குமான இடைவெளியை நுணுக்கமாக பகுப்பாய்கிறது. புயலால் சேதமான படகுகளுக்கு (அதுவும் சொற்பமான) இழப்பீடு வழங்குகிற அரசு வலை சேதத்தை இழப்பீட்டுக் கணக்கில் கருத்தில் கொள்ளாமல் இருப்பது, சேத மதிப்பீடு குறித்தான அரசின் தெளிவற்றக் கொள்கையை அம்பலப்படுத்துகிறது.

மேலும் பேரிடர் சேத மதிப்பீடு தொடங்கி, பேரிடர் நிவாரணம் மற்றும்  மீள் கட்டமைப்பு ஆகிய அனைத்து செயல்பாடுகளிலும்  முறையான கண்காணிப்பு அற்ற போக்கால் பெரிய அளவிலான ஊழல் மோசடிகள் வாடிக்கையாகிறது. ஒவ்வொரு பேரிடரின்போதும் பேரிடர் சேத மதிப்பீட்டு அதிகாரி உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினர் பேரிடர்க் கால நிதியை சுருட்டுவதை பரவக்கோட்டை விவசாயி ராஜேந்திரனின் குரலின் வழியே, நூலாசிரியர் அம்பலப்படுத்துகிறார். சேத மதிப்பீட்டில் தெளிவற்ற அரசோ, பேரிடர் மறுகட்டுமான பணிகளுக்கு தனியார் அறக்கட்டளை நிறுவனங்களை கைகாட்டிவிட்டுத் தனது பொறுப்பில் இருந்து நழுவிச் செல்கிறது.
முன்னதாக பசுமைப் புரட்சியின் வன்முறை, தொழிலாளர் பற்றாக்குறை, நீர் பற்றாக்குறை போன்ற சிக்கல்களால் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிற  டெல்டா விசாயிகளுக்கு கஜாப் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை  .விவசாயிகள் நடராஜன் மற்றும் பாலமுருகனுடனான உரையாடல் விவரிக்கிறது.

வெள்ளப்பள்ளம் கள ஆய்வானது கடற்கரைக் கிராமப் பெண்களின் மீதான சுமையை விவரிக்கிறது. குடும்பச் சுமை போக, மீன் விற்க சந்தைக்கு போவது, படகை தள்ளுவது போன்ற பெண்களின் மீது ஆணாதிக்கச் சமூகம் சுமத்தியுள்ள வேலைப் பிரிவினைத் துயரத்தை ஜெயாவின் குரல் வெளிப்படுகிறது.
‘பாலைவனமாகும் பாக் கடல்’ பகுதியில் பாக் ஜலசந்தியின் மீன்வளம் எவ்வாறு இறால் பண்ணைகளாலும் ரேஸ் மடி வலை, இழுவை வலை ஆகிய வலைகளால் சூறையாடப்படுகிறது என்பதை காளிதாசுடனான உரையாடலின் ஊடாகப்  பதிவு செய்கிறது. மீன் வளத்தை மொத்தமாக சூறையாடுகிற வலைகளை தடை செய்யாத அரசுக்கும் சுருக்குவலை- லாஞ்ச் உரிமையாளர்களுக்குமான  அணுக்கமான  உறவுகள் எவ்வாறு நாட்டுப்படகு உரிமையாளர்களுடனான  முரண்பாடுகளுக்கு தோற்றுவாயாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. பேரிடர்க் கால தன்னார்வ உதவிகளைக் கடந்து அப்பகுதியின் சமூகப் பொருளாதார நெருக்கடிகளை ஊடுருவிப் பார்த்தால் சிக்கலின் அனைத்து பரிமாணத்தையும் தொகுத்துக் பார்க்க இந்த உரையாடல் உதவுகிறது.

இறுதியாக ஓக்கி புயல் மற்றும் கஜாப் புயலில் தொண்டு நிறுவனங்கள் கள்ள மௌனத்திற்கு பின்னாலான அரசியல் பொருளாதார காரணிகளை கொடை அரசியல் பகுதியில் விரிவாக ஆய்வு செய்கிறது.

கஜா அல்லது ஓக்கி  புயல் பாதிப்பு என்பது இயற்கைப் பேரிடர் என்றாலும் சிவில் சமூகத்திற்குத் தலைமை தாங்குகிற ஜனநாயக குடியரசின் ஆட்சியாளர்கள் எவ்வாறு இந்தப் பேரிடர்களில் இருந்து சிவில் சமூகத்தை மீட்பதற்கு தனது உபரியை, தொழில்நுட்ப கட்டமைப்பைப் பயன்படுத்தத் தவறுகிறார்கள் என்பதை “கஜா புயலும் காவிரி டெல்டாவும்” என்ற கள ஆய்வின்  மூலமாக தோழர் வறீதையா ஆதாரங்களுடன்  உறுதிபட ஆவணப்படுத்தியுள்ளார். 

இப்படியான ஒரு ஆவணப்படுத்தல் மரபும் அதன் மீதான தொடர்ச்சியான அரசியல் உரையாடலும் அழுத்தங்களுமே அரசின் வர்க்க சார்பான செயல்பாடுகளை மக்களிடம் அம்பலப்படுத்தவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் நம்முள் உள்ள சிறு வாய்ப்பாக உள்ளது. ஒவ்வொரு பேரிடர்களின் போதும் பேரிடருக்கு முந்தைய ஆயத்தக் கட்டம், பேரிடர் கால மீட்பு மற்றும் நிவாரணம்,பேரிடருக்கு பிந்தைய மீள் கட்டமைப்பு/மறுவாழ்வு ஆகிய முக்கிய மூன்று கட்டங்களை ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்வதில் அரசு இயந்திரம் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவதற்கும், அரசு இயந்திரம் எந்த படிப்பினையையும் பெற்று மக்களை காக்க முன்வரவில்லை என்பதற்கும் இந்த பேரிடர் ஆவணமே எதிர்கால சான்றுகளாக அமையும். •

No comments:

Post a Comment

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...