Tuesday, 30 August 2022

மணலில் புதையும் அழிக்கால்

 











2022 ஜூலை 2 அழிக்காலுக்குக் கருப்பு நாள். இரண்டு நாட்களாக நிகழ்ந்த கடல் சீற்றம் கிழக்கு ஊரைக் கடல் மணலால் மூடிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக கடற்சீற்றமும் கடலரிமானமும் தொடர்வதுதான் எனினும் இவ்வாண்டு அதன் தாக்குதல் மிக உக்கிரமாய் இருப்பதாய் ஊர்மக்கள் சொல்கிறார்கள். காரணம் என்ன என்கிற நம் கேள்விக்கு, முட்டம் மீன்பிடி துறைமுகத்தைக் கை காட்டுகிறர்கள். இது ஒரு நகைமுரண்.




இரண்டு நாட்களுக்குப் பிறகு பிரிட்டோ ஆன்றனி (50, அன்னைநகர்) என்னை அழிக்காலுக்கு அழைத்துச் சென்றார். மீனவர் ஒருங்கிணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் கேப்டன் ஜான்சன்திருவாளர்கள் சா.யூஜின் (67, மேலத்துறை), யூ டியூபர் விஷான் (34, சைமன் காலனி) ஆகியோர் உடன் வந்தனர்.
இது இரண்டாவது சுனாமி!

 இரண்டே நாட்களில் கிராமத்தில் கடல் டன் கணக்கில் மணலைக் குவித்திருந்த வினோதமான காட்சிகள் அதிர்ச்சியூட்டின. தனுஷ்கோடியில் வந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. இரவில் சீற்றம் தீவிரப்பட்டிருந்த நிலையில் மக்கள் வீடுகளைக் காலிசெய்து ஓடித் தப்பித்ததை நடுக்கத்தோடு நினைவுகூர்ந்தனர். ‘எங்களுக்கு இது இரண்டாவது சுனாமி என்றார் ஒரு மூதாட்டி. எங்கும் நிறைந்து கிடந்த சங்குமணல் எனக்கு ஆச்சரியம் அளித்தது. கடந்த வருடக் கடல் கொந்தளிப்பில் ஒருவர் இறந்துபோனார்இம்முறை பலர் மயிரிழையில் தப்பித்திருக்கிறார்கள். 75க்கு மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டுவிட்டுத் தற்காலிகத் தங்குமிடங்களுக்குப் பெயர்ந்துள்ளனர். ஆண்டுதோறும் இரவுபகல் பாராமல் இப்படி வீட்டைக் காலிசெய்துகொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடுவதும், கடல் அமைதியான பிறகு மீண்டும் வந்து குடியமர்வதும் வழக்கமாகிப் போனது என்கிறார்கள்.

 ஊடக வெளிச்சப் பயித்தியங்கள்

கடலரிப்புத் தடுப்புச்சுவரில் அவ்வப்போது ஓங்காரத்துடன் மோதிக்கொண்டிருத அலைகள் எங்களைப் பயமுறுத்தின. பாதுகாப்பாக அதிலிருந்து சற்று விலகி, கிழக்கு நோக்கி நடக்கத் தொடங்கினோம்.  வழியில், ஒரு நட்சத்திரக்கல்லில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த முதியவரைச் சந்தித்தோம். தடுப்புச்சுவருக்கு வெளியே கடலை நோக்கிக் கையை நீட்டி, ‘இதுக்கு அங்க ஒரு றோடும், ரெண்டு தெருவும் இருந்தது பாத்துகிள்ளுங்க; அதுக்கு அங்…க நெறைய கடப்புறம் இருந்தது’ என்றார். குரலிலும் கண்களிலும் வெறுமை நிரம்பியிருந்தது. அந்தக் காலத்தில் திறமையான தொழிலாளியாய் இருந்திருக்க வேண்டும். ஒரு புன்முறுவலை மட்டும் அவருக்குப் பதிலாகத் தந்துவிட்டு ஊரின்  விளிம்பை நோக்கி நடக்கலானோம். ஒரு மணி நேரத்தைச் செலவிட இவ்வளவு எச்சரிக்கை பேணுகிறேன். அதன் பிறகு வீடு திரும்பிவிடுவேன். என் வீடு பத்திரமான இடத்தில் இருக்கிறது. இந்த ஏதிலிகள் கடற்கரையை விட்டால் எங்கே போவார்கள்? அவர்களுக்கு ஏது புகலிடம். 2014இல் சதுரங்கப்பட்டினம் போன ஞாபகம் வந்தது.

அலைவாய்க்கரைக்கும் கிராமத்துக்குமிடையில் மிக விசாலமான கடற்கரை அமைந்திருந்தது எனக்கும் நன்றாக நினைவிருக்கிறது. அழிக்கால்பிள்ளைத்தோப்புமேலத்துறை கிராமங்களை இணைக்கும் கடற்கரை இணைப்புச்சாலையில் நான் வாகனத்தில் சென்றிருக்கிறேன். அந்தச் சாலை இருந்த இடத்தை ஏற்கனவே கடல் விழுங்கிவிட்டிருந்த நிலையில்ஏறத்தாழ 100 மீட்டர் தொலைவு வரை நான்கைந்து அடி உயரத்துக்கு மணல் மூடிவிட்டிருக்கிறது. கடல் வெள்ளம் கிராமத்தையே மூழ்கடித்திருக்கிறது.

 புதைந்து கிடந்த கடலரிப்புத் தடுப்புச் சுவருக்கருகில் மணல் குவித்திருந்த பகுதியில் ஒரு தென்னை மரநிழலில் நான்குபேர் சீட்டாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அதில் ஒருவர்- 55 வயது மதிக்கலாம்- குதிரை மேலிருந்தார். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி அவர் பேசத் தொடங்கினார். இந்த சீசனில் சில டிவிக்காரர்களுக்குப் பேட்டி கொடுத்து, ஊருக்குள் பிரபலமாகியிருக்கிறார். எங்களை அரசு அலுவலர்களாக அவர் கற்பனை செய்துகொண்டு அவர் பாட்டுக்கு சம்மந்தா சம்மந்தமில்லாமல் கத்த ஆரம்பித்தார். அவர் ஸ்டாக் வைத்திருந்தைக் கொட்டித் தீர்க்கும் வரை எங்களை அங்கிருந்து நகர விடவில்லை என்பதுதான் சுவாரஸ்யம். தொடக்க வேகம் கொஞ்சம் தணிந்த பிறகு, ‘நான் நாலங்கிளாஸ்தாம் படிச்சிருக்கேன், ஆனா இங்கிலீஷ்ல பேசினா நீங்க பதில் சொல்ல முடியாது, அப்புடிப் பேசுவேன்’ என்றார். உண்மைதான், கடைசிவரை, அவர் என்ன பேச வருகிறார் என்பது எனக்குப் புரியவேயில்லை- இங்கிலீஷ் உட்பட. ஒருவேளை, இப்படிப் பேசுவதனால்தான் கடற்கரை மக்களின் சிக்கல்கள் வெளியுலகுக்குப் புரியாமல் போனதோ என்னவோ.






சிங்காரவேலர் குடியிருப்பு

அழிக்காலிலிருந்து இம்முறை கடலரிப்பினால் பாதிக்கப்பட்டிருந்த மற்றொரு பகுதியான சிங்காரவேலர் காலனிக்கு கேப்டன் ஜான்சன் என்னை அழைத்துப் போனார். கடலரிப்பினால் பாதிக்கப்பட்டிருந்த மிடாலம் கடற்கரைக்கும் போகவேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தோம், கருக்கலாகிவிட்தால் அது நடக்கவில்லை. குளச்சல் துறைமுகத்தைத் தொட்டமைந்த இந்தக் கடற்கரை, கொட்டில்பாடு கிராமத்தைப் போலவே 2004 சுனாமியில் பேரழிவைச் சந்தித்திருந்தது. குளச்சல் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலைத்தடுப்பு சுவர் அமைக்கப்பட்ட பிறகுதான் இங்கு அரிமானம் கடுமையாக உள்ளதாக ஜான்சன் குறிப்பிட்டார். மேற்கு அலைத்தடுப்பு சுவரை மேலும் நீட்டிக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும், அவ்வாறு நீட்டித்தால் சிங்காரவேலர் காலனி பாதுகாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிறகு அதற்குக் கிழக்கே அமைந்திருக்கும் கொட்டில்பாடு, மண்டைக்காடு புதூர் கிராமங்களின் நிலைமை என்னாகும்? இது சிங்காரவேலர் காலனி, அழிக்கால் கிராமங்களின் கேள்வியல்ல, ஒட்டுமொத்தத் தமிழகக் கடற்கரையும் எழுப்பும் கேள்வி.

 சுற்றுச்சூழல், சமூகத் தாக்க ஆய்வு

 அலைவாய்க்கரையில், நான்கு செங்குத்துத் தடுப்புச் சுவர்கள் கடலரிப்புத் தடுப்புச்சுவரோடு இணையுமிடத்தில் கடல் ஊடறுத்துக் கற்களைச் சிதறடித்துள்ளது கடல் சீற்றத்தின் தனித்துவமான தன்மையைச் சுட்டுகிறது. இவ்வகையான அரிமானம் தீவிர ஆய்வுக்குரியது.

 மணல் குவிப்பதும் மணல் அரிமானமும் கடலின் வழமையான வேலைகள்தான். ஆனால் இங்கு நடந்திருப்பது மிகவும் வித்தியாசமானது. அதற்குக் காரணம் மேற்கே அமைந்திருக்கும் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலைத் தடுப்புச் சுவர். முன்பு இந்த மூன்று கிராமங்களையும் அரணாய் நின்று பாதுகாத்துவந்தது முட்டம் முனை. இன்றோ இந்தச் சுவர் இக்கிராமங்களையே விழுங்கத் தொடங்கிவிட்டது. அலைவாயில் எவ்விதமான பெரும்கட்டுமானத்தை நிறுவுவதாய் இருந்தாலும் அதன் சுற்றுச்சூழல்-சமூகத் தாக்கம் குறித்த மதிப்பாய்வும்அத் தாக்கங்களை எதிர்கொள்ளும் திட்டமும் வேண்டும். அது முட்டம் துறைமுகத் திட்டத்தில் நடந்திருந்தால் அழிக்காலுக்கு இத்துயரம் நேர்ந்திராது.

 பேரிடர்கள் தரும் படிப்பினைகள்

 கஜாப் புயல் பாதிப்புக்குப் பிறகு நாகைதிருவாரூர்தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு சிறு ஆய்வுப் பயணம் மேற்கொண்டிருந்தேன் (வாசிக்க: கஜாப்புயலும் காவிரி டெல்ட்டாவும். வறீதையா கான்ஸ்தந்தின்பாரதி புத்தகாலயம், 2019). வெள்ளப்பள்ளம்புஷ்பவனம் போன்ற தாழ்ந்த நிலப் பகுதிகளில் கடலின் ரவுத்திரத்தைக் கண்டு அதிர்ந்தேன். சுனாமியைவிடக் கொடுமையானது கஜாப்புயல் என்று அந்த மக்கள் சொன்னார்கள். அலைவாய்க் கரையிலிருந்து 150 மீட்டர் விலகியிருந்த வீடுகளின் கூரைக்குக் கீழே முழுவதுமாக சேறு நிரம்பியிருந்தது. கடல் ஒரே இரவில் குவித்து ஓய்ந்த அந்தச் சேற்று மலையை 85 நாட்களாகியும் புல்டோசர்களால் கூட ஒன்றும் செய்ய முடியாமல்மீனவர்கள் சேற்றுமலையைக் கடந்து படகுகளைக் கடலுக்குக் கொண்டுபோகவும் முடியாமல் புஷ்பவனம் உறைந்துபோய் நின்றது. தெற்கே திருமறைக்காடு (வேதாரண்யம்) வரை, வேட்டைக்காரன் இருப்பு உள்ளிட்ட ஏராளம் கிராமங்களைக் கஜாப்புயல் வெள்ளம் மூழ்கடித்திருந்தது.

 அலையாத்திகள் நிறைந்த கடற்கரைப் பகுதியான முத்துப்பேட்டை (திருவாரூர்)அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) பகுதிகளில் கடல் வெறியோடு உட்புகுந்து படகுகள்வலைகளைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழித்துச் சென்றுவிட்டன. கடற்கரைக்கான அணுகு சாலைகள் மொத்தமாச் சிதைந்துபோயின. அதிராம்பட்டினத்தில் ஏராளம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிடஅக்குடும்பங்கள் பாதுகாப்பு முகாம்களில் குடிவைக்கப்பட்டனர்.

2004 சுனாமி கீழ மணக்குடியில் நிகழ்த்திய கோரத் தாண்டவத்தையும் இங்கு நினைவுகூரலாம். கொட்டில்பாடுசிங்காரவேலர் குடியிருப்பு உள்ளிட்ட குளச்சல் நகராட்சிப் பகுதிகளில் சுனாமி இழைத்த பாதிப்புகளுக்கு இன்னொரு காரணமும் உண்டு: இங்குள்ள கரைக்கடல் இயல்பிலேயே ஆழமானது (குளச்சல் தமிழ்நாட்டின் ஒரே இயற்கைத் துறைமுகம்). மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் பயணித்த ஆழிப்பேரலைஆழமான கரைக்கடலிலிருந்து சட்டெனக் கரையைத் தொட்ட நேரத்தில்பெருவெள்ளத்தின் வேகம் மட்டுப்பட்டு, பெருவிசையாய் மாறிவிட்டதன் விளைவு அப்பேரழிவு.

அழிக்கால் மணல் மூடல் பேரிடரைப் பொறுத்தவரைசிதிலமான செங்குத்துச் சுவர் ஊடறுக்கப் பட்டிருக்கும் விதமும்அதனருகில் அலைகள் உயரும் இடமும் விதமும் சில செய்திகளைச் சொல்கின்றன. கரையை மட்டும் மணல் மூடவில்லை. கடல் நீரோட்டம் அலைவாய்க்குச் சற்று உட்புறமாகசெங்குத்துச் சுவர்களின் தலைப்பகுதிகளுக்கு (Vertical Groyne Heads) நேராக பெரும் மணல்திட்டுகளை உருவாகியிருக்கிறது.








மேற்குக் கடற்கரையின் தீபகற்ப விளிம்பு

 கடந்த 50 வருடங்களில் கன்னியாகுமரிக் கடற்கரைகளில் கடலரிப்பைப் பொறுத்தவரைசில அடிப்படை உண்மைகளைக் கவனப்படுத்த வேண்டும்:

 தென்தீபகற்ப விளிம்பில் அமைந்த மேற்குக் கடற்கரை என்கிற வகையில், இங்கு கடல் சீற்றம் இயல்பாகவே அதிகம். கீழ்மேல் மிடாலம்கீழமணக்குடிசிங்காரவேலர் காலனிஅழிக்கால்பிள்ளைத்தோப்பு போன்ற தாழ்ந்த நிலப்பகுதிகளில் ஆண்டுதோறும் கடலரிமானம் அதிகமாய் உள்ளது. கடலரிமானத்தைத் தடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைகளில் நிறுவப்பட்டுவந்த பலவகையான தடுப்புச் தடுப்புச்சுவர்கள் கரைக்கடல் நீரோட்டம் தொடர்பான கடலரிமானத்தின் போக்கை மாற்றியுள்ளது. 1970களில் நிறுவப்பட்ட கற்சுவர்கள் அலைச்சீற்றத்தைத் தாக்குப்பிடிக்கவில்லை; 1990களின் இறுதியில் 18மீட்டர் அகல தடுப்பரண்கள் அமைக்கப்பட்டன. மேற்குக் கடற்கரைக்கென்றே தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட சுவர். குமரிமுனையில் விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலாப் படகுப் போக்குவரத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட அலைத்தடுப்புச் சுவர் கிழக்குக் கடற்கரை நெடுக தீவிரமான அரிமானத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் செங்குத்துத் தடுப்புச் சுவர்கள் (vertical groynes) அமைக்கப் பட்டிருக்கின்றன.

 பெரும் கட்டுமானங்களின் விளைவுகள்

 2004 சுனாமிக்குப் பிறகு கோவளம் உள்ளிட்ட சில கிராமங்களில் தூண்டில் வளைவுகளும் நிறுவப்பட்டன. ஓரிடத்தில் அமைக்கப்படும் தடுப்புச்சுவர் நீரோட்டத்தின் திசையில் அண்மைக் கிராமங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கூர்ந்து கவனித்தால் அப்பாதிப்புகளின் காரணங்களைப் புரிந்துகொள்ள முடியும். 1978இல் நிறுவி முடிக்கப்பட்ட விழிஞ்ஞம் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலைத்தடுப்புச் சுவரானது, கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு எல்லையான நீரோடி தொடங்கி, குறும்பனை வரையுள்ள கடற்கரைக் கிராமங்களில் கடுமையான கடுமையான கடலரிமானத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. விழிஞ்ஞம் மீன்பிடி துறைமுகத்துக்கு தென்கிழக்காக நிறுவலாகிவரும் பன்னாட்டுப் பெட்டக முனையத்தில் 3.5கிமீ. நீளத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள மேற்கு அலைத்தடுப்புச் சுவரில் 1.5கி.மீ. அளவே அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் மேற்கே சங்குமுகம், பூந்துறை கிராமங்களில் மிகக் கடுமையான கடலரிப்பு ஏற்பட்டு தெருக்களே காணமல் போய்க்கொண்டிருக்கின்றன. அத்திட்டம் முழுமை பெறநேர்ந்தால் கன்னியாகுமரிக் கட்ற்கரைகளின் கதி என்னவாகும் என்று சிந்திக்க முடியவில்லை.

 அழிக்கால் பேரிடர் நமக்குச் சில செய்திகளைச் சொல்கிறது: தாழ்ந்த நிலங்கள் கடலின் சீற்றத்துக்கு எளிதில் இரையாகிவிடுகின்றனகரைக்கடல் நீரோட்டங்களின் வரலாற்றுத் தன்மையைக் கணக்கில் கொள்ளாமல் துறைமுகம் போன்ற பெரும் கட்டுமானங்களை அமைப்பது கடலை நம் வீட்டுக்குள் வரவழைப்பதாகும்; தவிரவும், செயற்கையான கட்டுமானங்களால் நேரும் கடலரிப்பைத் தடுப்பதற்குச் செயற்கையான தடுப்பரண்களே உபாயமாகும்.

 

தரகு முகமும் அறிவு முகமும்

 

சென்னையிலிருந்து நியூஸ்க்ளிக் இணையவழி இதழாளர் நீலாம்பரன் தொலைபேசியில் என்னை நேர்காணல் செய்து அழிக்கால் பேரிடர் குறித்து 9 ஜூலை 2022 அன்று விரிவான செய்தி வெளியிட்டிருந்தார். திருவனந்தபுரம் கடலோர சமூக செயல்பாட்டாளர் சிலரைத் தொடர்புகொண்டு, அழிக்கால் பேரிடர் குறித்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து தீர்வுகளைப் பரிந்துரைக்க  ஒரு நிபுணரை ஏற்பாடு செய்யமுடியுமா என்று கேட்டிருந்தேன். இந்திய நிலவியல் படிப்புகள் மையத்திலிருந்து பணிநிறைவு பெற்ற பேராசிரியர் கே.வி.தாமஸ் தலைமையில் அவ்வாய்வை மேற்கொள்ள ஏற்பாடு செய்யலாம் என அவர்கள் உறுதியளித்தனர். ஆண்டுதோறும் கடலரிப்பைத் தொடர்ந்து அதிகாரிகள் அழிக்காலுக்கு வருகிறார்கள், மேலோட்டமாக எதையோ செய்கிறார்கள், ஆனால் சிக்கல் வருடம் தோறும் தீவிரமாகிக் கொண்டிருக்கிறதே ஒழிய குறைந்தபாடில்லை.

 

இச்சூழலில் மக்கள் தரப்பில் ஒரு நிபுணர் குழுவை வெளியிலிருந்து வரவழைத்து, ஆய்வு நிகழ்த்தி தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அவ்வூர் மக்களிடம் இது குறித்து நாம் பேசலாம் என்று ஒரு நலவிரும்பி வழியாக ஊர்ப்பாதிரியார் வழியாக செய்தியனுப்பினேன். அங்கிருந்து எந்தப் பிரதிவினையும் இல்லாது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. கடற்கரைகளில் நிலவும் உள்ளூர் அரசியல் நீரோட்டம் எனக்குப் புரியாதது அல்ல. ஊர்க் கட்டுக்கோப்பு என்கிற பெயரில் பிரச்சினைகளை வெளியுலகம் அறியாமல் உள்ளேயே புதைத்துவிடுவதுதான் அவர்களின் பொதுவான அணுகுமுறையாக இருக்கிறது. இப்படிப்பட்ட அணுகுமுறையினால் இலாபம் அடைபவர்கள் சில கமிட்டி உறுப்பினர்களே. பிரச்சினைகளை மூடிமறைப்பதுதான் அரசியல் தரகு வேலைகளுக்கு வசதியானது. மறுபுறம், ‘கடற்கரை மக்கள் விவரம் தெரியாதவர்கள், அவர்களுக்குச் சொன்னால் புரியாது’ என்று பழைய கற்பிதங்களையே மீளத் திணித்துக் கொண்டிருக்கும் அரசு அலுவலர்களே பத்தாம்பசலித்தனமான தீர்வுகளை முன்வைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

 

ஆனால், மக்களின் நெடுந்துயருக்கு என்னதான் தீர்வு? அவர்களுக்கு ஓர் அறிவுமுகம் உண்டு. என் கடற்கரைப் பயணங்களில் நான் கண்டுணர்ந்த எதார்த்தம் இது. மூட மேட்டிமை காட்டி, செக்குமாடு போலச் சுற்றிவந்து கொண்டிருக்கும்  அதிகாரிகளை எப்படிப் புரியவைப்பது? சிக்கலின் காரணங்களை அறிவியல்பூர்வமாய்க் கண்டறிந்து, அரசிடம் தீர்வு கேட்கும் அறிவுத்தெளிவு அதன் இளைய தலைமுறையிடம் உள்ளது என்பதை எங்காவது ஒரு முறை நிறுவிவிட்டால் போதும், பிறகு அதுவே ஒரு வழமையாகிவிடு, மற்ற கிராமத்தினர் எளிதாய்ப் பின்பற்றும் வகைமாதிரி ஆகிவிடும்.



எனக்கு மண்ட கனக்குது!

 

14 ஆகஸ்ட் 2022இல் சூழலியல் செயல்பாட்டாளர் நாக்கீரனை முட்டத்துக்கும் அழிக்காலுக்கும் அழைத்து வந்திருந்தேன். கடலின் போக்கில் குறுக்கிட்டால் என்ன நிகழ்கிறது என்பதை துறைமுக அலைத்தடுப்புச் சுவர்களைக் காண்பித்து பேசிக்கொண்டிருந்தோம். இரண்டு இளைஞர்கள் படகணையும் தளமொன்றில் நின்று சிறு தூண்டில் வீசி மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு எங்கள் உரையாடல் எரிச்சலை மூட்டியிருக்க வேண்டும். ‘எனக்கு மண்ட கனக்குது’ என்று ஜாடையாய்ச் சொன்னார். சற்று நேரத்துக்குப் பிறகு என்னை நோக்கி, ‘நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும்’ என்றார். ‘நான் தவறாய்ச் சொல்கிறேன் என்றால், நீங்கள் சரியாய்ச் சொல்லுங்கள், நான் திருத்திக்கொள்கிறேன் தம்பீ’ என்றேன். கடைசிவரை அந்த இளைஞர் பதில் தரவில்லை. அவரது எரிச்சலுக்குக் காரணம் புரிந்தது. ‘அழிக்காலுக்கு நேர்ந்திருக்கும் சேதம் முட்டம் துறைமுகத்தால் வந்ததல்ல’ என்று  பிடிவாதமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் தரப்பினர் அவர்.

 

நாங்கள் அங்கிருந்து கிளம்பி, அழிக்காலுக்குப் போனோம். அங்குள்ள கடலரிப்புத் தடுப்புச்சுவர்களைக் காண்பித்தேன். அதன் பிறகு மணல் மூடிக்கிடக்கும் தெருக்களைப் பார்வையிட்டோம். நக்கீரன் தற்செயலாக அங்கிருந்த சில முதிய மீனவர்களுடன் உரையாடினார். தன் உணர்வுகளை என்னுடன் பகிர்ந்துவிட்டு தன் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்:

 

இயற்கையின் விதிகளை மீற முடியாது என்பதை நாம் கற்றுக்கொள்வதே இல்லை. துறைமுகங்கள் பெரியதோ சிறியதோ அறிவியல் சிந்தனையற்ற கட்டுமானங்கள் பாதிப்புகளையே ஏற்படுத்தும். முட்டம் மீன்பிடி துறைமுகத்தின் மிக நீண்ட அலைத்தடுப்புச் சுவரால் அதன் அருகிலுள்ள அழிக்கால் என்னும் கடற்கரை சிற்றூர் கடல் அரிப்பால் உள்வாங்கி அழிவுக்கு ஆளாகியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் கடந்த 2-7-2022 அன்று ஊருக்குள் புகுந்த அலைகள் மணலை வாரிக்கொண்டு வந்து மீனவ மக்களின் வீடுகளை மூழ்கடித்துள்ளன. கள ஆய்வுக்காக எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின் அழிக்காலுக்கு அழைத்துச் சென்றபோது அதிர்ச்சி அடைந்தேன். இராணுவத் தடுப்பு போல பாதுகாப்புக்கு மணல் மூட்டை அடுக்கப்பட்ட வீடுகள்அறவே காலி செய்யப்பட்டுவிட்ட வீடுகள் என்று பார்க்கும்போதே மனம் நடுங்கியது. கடலுக்குள் அலைத் தடுப்புச்சுவர் கட்டப்படுவதற்கு முன்பு இந்நிலைமை ஏற்பட்டதில்லை என்று மீனவ மக்கள் தம் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினர். தோழர் வறீதையா என்னிடம் கேட்டார்: ‘இதுதான் காலம் காலமாக ஒலிக்கும் கடற்கரை மக்களின் குரல். இது எப்போது அதிகாரத்துக்குக் கேட்கும்?’ என்னிடம் பதில் இல்லை.

மறந்துபோன வாக்குறுதிகள்

 நக்கீரனுடன் வந்திருந்த இயற்கை ஆர்வலர் திருமாலின் (30, இருளப்பபுரம்) வழியாக அழிக்காலைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஜோசஃப் அலெக்சின் (32) தொடர்பு கிடைத்தது. சென்னையில் மென்பொருள் துறையில் பணிபுரியும் அவரது குடும்பம் அழிக்காலிலேயே உள்ளது. ‘ஆரம்பத்தில் இது ஒரு பெரிய இஷ்யூவாகத் தெரியவில்லை’ என்கிறார் அலெக்ஸ்:

 “நீங்கள் இப்போது பார்த்த கடற்கரைக்கு அப்பால் சுனாமிக்கு முன்னால் இரண்டு தெருக்கள் இருந்தன.  அதற்கு அப்பால் கரை இன்னும் நிரம்ப நீண்டிருந்த து. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் ஊரைத் தொடாது. அப்போதெல்லாம் எங்கள் ஊரில் முதன்மையான தொழில் கரைமடித் தொழில்தான். சுனாமிக்குப் பிறகு, முட்த்தில் ஒரு ஹார்பர் வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாய் எழுந்தது. அழிக்கால்- பிள்ளைத்தோப்பு, முட்டம், கடியப்பட்டணம் மீனவர் யூனியன்களும் சேர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். சென்னைக்குப் போவது, திட்ட வரைவுகளை முன்வைப்பது, ஜேப்பியாரைப் பார்ப்பது எல்லாவற்றுக்குமான செலவுகளையும் இம்முன்று யூனியன்களும் பகிர்ந்து கொண்டன.  அழிக்கால் கிழக்கில் அமைந்திருக்கிற கிராமம்; நீரோட்டம் கிழக்கு நோக்கி ஓடுகிறது; அதனால் வரப்போகிற துறைமுகத்தினால் எங்கள் கிராமத்துக்குப் பாதிப்பு வரும் என்கிற கவலை அப்போதே மக்களுக்கு இருந்தது. முட்டம் துறைமுகத்தினால் வருகிற பாதிப்பிலிருந்து அழிக்காலைப் பாதுகாக்க, இங்கு ஒரு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அழிக்கால் கிராமத்தினர் கோரிக்கை வைத்தார்கள். அதைச் செய்து தருவதாக ஜேப்பியார் வாக்களித்திருந்தார். இயந்திரப் படகுகள் இத் தூண்டில் வளைவில் அணைவதற்கு வசதி செய்து தரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.”

ஆனால் அது நடக்கவில்லையே?

“அமாம். அதனால் அழிக்கால் சில போராட்டங்களையும் நத்தினார்கள். கருப்புத்துணி கட்டிப் போராட்டம், மறியல் போராட்டம், இப்படிப் பல போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தின் ஒரு பகுதியாக அழிக்கால் சிறுவர் சிறுமியர் முதல்வருக்கு அஞ்சல் அட்டையில் கடிதம் அனுப்பினார்கள். ஆண்டுதோறும் வெள்ளம் வரும், மக்கள் போராடுவார்கள்.”

 உள்ளூர் அரசியல் தரகர்கள்

“இந்த நேரத்தில் தனிப்பட்ட அளவில் நான் சில வேலைகளைச் செய்தேன். முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு ஒரு புகார் அனுப்பினேன். கடல் வெள்ளம் ஊருக்குள் புகுவதைத் தடுக்க ஒரு தூண்டில் வளைவு போடவேண்டும் என்பது ஒரு புகார். இரண்டாவது புகார்- பருவமழைக் காலத்தில் ஊரை வெள்ளம் சூழ்ந்துகொள்கிறது, அதைத் தடுக்க ஊருக்கு இருபுறமும் அமைந்திருக்கும் வாய்க்கால்களைச் சீரமைத்து வழங்கவேண்டும் என்பது. ஊருக்கு மேற்கேயிருந்த ஓடை ஆக்கிரமிக்கப் பட்டிருப்பதால் மழைவெள்ளம் நேரடியாக ஊருக்குள் வந்துவிடுகிறது. சுனாமி மறுகட்டுமான காலத்தில் கடற்கரையில் குடியிருந்தவர்களை நகர்த்தி, சற்று கிழக்காக மாதாநகர் என்றொரு குடியிருப்பு அமைக்கப்பட்டது. கிழக்குப் பகுதியில் பொழிக்கரையில் (பன்றிவாய்க்கால்) ஒரு தடுப்பணை போட்ட பிறகு, மழைவெள்ளம் எதிர் திசையில் ஓடி, மாதாநகர், அதனருகிருள்ள புதிய குடியிருப்புகளைச் சூழ்ந்துவிடுகிறது. கனமழையென்றால் மக்கள் அங்கிருந்து வெளியேறி ஊரிலிருக்கும் மண்டபத்துக்கு வந்துவிடுவார்கள். பன்றிவாய்க்காலிலும், மேற்கு ஓடையிலும் ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை அரசு ஆவணத்தில் உள்ளபடி மீட்டெடுத்து, தூர்வாரி பழையபடி சீர்படுத்தி வழங்கவேண்டும் என்று புகாரில் விண்ணப்பித்திருந்தேன்.

கிராம அலுவலர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். சென்னையிலிருந்து மறுநாள் ஊருக்குவந்து அவரைச் சந்தித்தேன். ‘என்ன பிரச்சனை?’ என்று கேட்டார். பாதிப்புகளை மட்டும் சுருக்கமாய்ச் சொல்லிவிட்டு, ‘பிரச்சனைக்கான காரணங்களை நீங்களே கண்டுபிடித்துத் தீர்வு தாருங்கள்’ என்றேன். ‘ஓடை, வாய்க்காலை அகலப்படுத்தித் தூர்வாரும் அதிகாரம் பொதுப்பணித் துறையின் கையில் இருக்கிறது, இதில் நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை’ என்றார் அவர்.

‘இதில் எந்தெந்த துறைகள் சம்மந்தப் பட்டிருக்கின்றன என்கிற அளவுக்கெல்லாம் நான் நுணுக்கம் தெரிந்தவனல்ல; உங்கள் வரம்புக்குள் வருகிற வேலையல்ல என்றால், சம்மந்தப்பட்ட துறைக்கு நீங்களே புகாரை அனுப்பி வையுங்கள், இல்லையானால் கம்ப்ளெய்ண்டைக் க்ளோஸ் பண்ணுங்கள், நான் வேறு வழியைப் பார்க்கிறேன்’ என்றேன். கிராம அலுவலர் வேறொருவரை ஊருக்கு அனுப்பிவைத்தார். எதுவும் நடக்கவில்லை. தூண்டில் வளைவு தொடர்பாக மேலும் ஒரு புகாரை அனுப்பினேன். நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம், சீக்கிரம் வேலை ஆரம்பிப்போம் என்று பதில் வந்தது, ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. சாலை, தெருவிளக்குகள் தொடர்பாக இதற்கு முன் அனுப்பிய புகார்களுக்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஆனால் தூண்டில் வளைவு விஷயத்திலும், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிற விஷயத்திலும் அரசும் அலுவலர்களும் பாராமுகமாகவே இருக்கிறார்கள்…”

‘ஊருக்குள் நல்லது நடப்பதற்குத் தடையாய் இருப்பது உள்ளூர் அரசியல்வாதிகள்தான்’ என்கிறார் அலெக்ஸ்:

“இங்கே லோக்கல் பாலிட்டிக்ஸ் பயங்கரம் சார். அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சிக்காரர்கள் ஊர்க் கமிட்டியில் இருக்கிறார்கள். பிஜேபிக்காரர்களும் கொஞ்சம்பேர் இருக்கிறார்கள். தேர்தல் நேரம் தவிர எந்தப் பிரச்சினையையும் அவ்ர்கள் கண்டுகொள்வதில்லை. மக்கள் போராடுவார்கள், எதிர்கட்சி சார்பில் தலைவர்கள் வருவர்கள்,  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்து தருவோம் என்பார்கள். அதோடு போராட்டம் நின்றுவிடும். ஆட்சிக்கு வந்தபிறகு எதுவும் நடக்காது. போராட்டங்களைத் தலைமையேற்று நத்தும் இடத்தில் இருப்பவர்கள் பொலிடிக்கல் மைலேஜ் கிடைத்தும் அதிலிருந்து கழன்றுகொள்வது மட்டுமன்றி, மற்றவர்கள் போராட்டத்தைக் கையிலெடுக்காமல் பார்த்துக் கொள்வார்கள்…”

கடல் மணலைக் குவித்து ஊரை மூழ்கடித்த இப்போதைய நிலையிலும் கூட ஊர்க்கமிட்டி மௌனம் சாதிப்பதன் மர்மம் சட்டென்று விலகியது. நாங்கள் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறோம், நீங்கள் பாட்டுக்கு எதையாவது செய்து குழப்பிவிடாதீர்கள் என்கிறது ஊர்க்கமிட்டி. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது அவ்வூர் முதியவர்களின் பேச்சில் வெளிப்பட்டது.

ஊரில் கிழக்குத் தெரு, மேலத்தெரு, நடுத்தெரு என்று மூன்று பகுதிகள் இருந்தன; ஒரு காலத்தில் கிழக்குத் தெருக்காரர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள் என்பது உண்மை என்றாலும், 2004 சுனாமி எல்லாவற்றையும் சமன் செய்துவிட்டது. மறுகட்டுமானத்தின் ஒரு பகுதியாக புதிய குடியிருப்புகள் உருவான பிறகு இளைஞர்கள், பெரியவர்கள் எல்லோரும் ஒன்றுகலந்துவிட்டனர். கடல் சீற்ற பாதிப்புகள் கிழக்குப் பகுதியில் மட்டுமே ஏற்பட்டுவரும் நிலையில் மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் அதைக் குறித்துப் பெரிதாய் அக்கறைப் படவில்லை. ஊரைப்பதுகாப்பது குறித்த பொதுக்கருத்தை எட்டுவதற்கு இதுவும் ஒரு தடையாய் இருப்பதாய்ச் சொல்கிறார் அலெக்ஸ்.

அலெக்சுடன் உரையாடியபோது எனக்குள் எழுந்த முக்கியமான கேள்வி- முட்டம் மீன்பிடி துறைமுகம் அனுமதியளிக்கப்பட்ட அசல் வரைவின்படிதான் அமைக்கப்பட்டுள்ளதா என்பது. மேற்கு அலைத்தடுப்புச் சுவரின் நீளமும், அதன் கடல் நோக்கிய பகுதியின் கோணமும் வரைவை மீறியிருப்பதாகவே எனக்குத் தோன்றியது. அழிக்கால் பேரிடரின் காரணமும் இதுவாக இருக்கலாம்.


வாழ்வாதாரம் x வாழிடம்

2022 ஜூலை அழிக்கால் பேரிடரில் ஏராளம் வீடுகள் கடல் நீரில் மூழ்கிய நிலையில் மக்கள் அவ்வீடுகளை நிரந்தரமாய்க் கைவிடும் நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட வீடுகள் குடியிருப்புக்குத் தகுதியற்றுப் போய்விட்டன; தகுந்த பாதுகாப்பு கட்டமைவுகள் கடற்கரையில் நிறுவப்பட்டிராத நிலையில் அப்பகுதியில் புதிதாய் வீடுகள் கட்டிக் கொள்வதிலும் சிக்கலுள்ளது;  இதன் சமூக, பொருளாதாரத் தாக்கங்களை அரசு படித்தறிய வேண்டும்.

அழிக்காலில் கடலரிப்புத் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டபோது வாழ்வாதார ரீதியாகவும் புதிய சிக்கல் உருவானது. கரைமடி (அரைவலை) இயக்குவதற்கான கடற்புற மணல்வெளிகள் காணாமலானதோடு, ஆண்டில் பாதிக்காலம் அங்கு படகுகளும் புழங்க முடியாமலானது.

முட்டம் துறைமுகம் நிறுவப்பட்ட பிறகு, அழிக்கால் மீனவர்களின் இயந்திரப் படகுகளின் எண்ணிக்கை கணிசமாய் உயர்ந்துள்ளதும், சாதகமற்ற பருவநிலை நிலவும் ஆண்டின் ஆறு மாதங்களில் முட்டம் துறைமுகத்தைச் சார்ந்தே மீன்பிடி தொழிலை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகறிந்த செய்தி. அழிக்கால் மீனவர்களின் போராட்டம் முட்டம் துறைமுகத்துக்கு எதிராகத் திரும்புவதில்லை; அவர்களது கோரிக்கை, முன்னதாக துறைமுக நிர்வாகம் வாக்களித்திருந்தவாறு, ‘ஒரு தூண்டில் வளைவு நிறுவி வழங்க வேண்டும்’ என்பதே. ‘தனியார் கட்டுமானத்தினால் நேரும் பாதிப்புக்குத் தீர்வு தருவது அந்நிறுவனத்தின் தட்டிக்கழிக்க முடியாத கடமை’ என்கிற அடிப்படை உண்மை இம்மீனவர்களுக்குப் புரியவில்லையா, அல்லது அதைப் பேசக்கூடாது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. ஊர்ப் பெருமையைத் தாண்டி அவர்கள் யோசிக்கவில்லை போலும்.

அரச அறம்

 நெதர்லாந்து நாடு கடல் மட்டத்துக்குக் கீழே இருக்கும் நாடுதான்; நிலப்பகுதியில் கடல்நீர் புகுந்துவிடாமல் உரிய தொழில்நுட்பத்தின் துணை கொண்டு அந்த நாட்டை இன்றுவரை பாதுகாத்து வருகிறார்கள். டைக்குகள் என்னும் ஒருவகைத் தடுப்பணைத் தொழில்நுட்பத்தால் உலகப் புகழ் பெற்ற ராட்டர்டாம் துறைமுகத்தையும் இயக்கிவருகிறார்கள். அழிக்கால் பேரிடர் தனித்துவமானது என்பதால் அதை எதிர்கொள்வதற்குத் தனித்துவமான தொழில்நுட்பம் வேண்டும் (வழக்கமான உயரத்தில் தடுப்பரண் அமைப்பது கதைக்கு உதவாது). அதை நோக்கிய நேர்மையான ஆய்வுதான் முதற்படி.

 அரசுக்கு மக்கள் முக்கியமானவர்கள் என்றால், செக்குமாட்டுப் பார்வையை விட்டு, நடப்பில் வருகிற புது நுட்பங்களை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்; போர்க்கால துரிதத்தில் செயல்பட்டு அழிக்கால் மக்களின் ஆண்டாண்டுத் துயருக்குத் தீர்வுகாண வேண்டும்.

-------------------------

புகைப்படங்கள்: வறீதையா கான்ஸ்தந்தின்


Wednesday, 29 June 2022

 April 2022

மூன்று சந்திப்புகள்


கன்னியாகுமரி மாவட்டத்தின் பெருமைமிகும் அடையாளங்களில் ஒன்று நாஞ்சில் பால் நிறுவனம் நேற்று காலையில் அதன் நிர்வாக இயக்குநர் ஜஸ்டின் ஜெரால்டைச் சந்திக்க வாய்த்தது. இரயுமன்துறையில் என் நண்பர் ஜான் போஸ்கோ துவங்கவிருக்கும் பால்பொருள் வணிகம் தொடர்பாக என்னை அங்கு அழைத்துச் சென்றிருந்தார். ஆனந்தில் (குஜராத்) குரியன் இடையீட்டில் உருவான பால் கூட்டுறவுக்கு (அமுல் பால் பொருட்கள்) நிகராகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கும் சாதனை இது.
வேளாண் தொழில் சார்ந்த சமவெளி மக்களின் வாழ்வில் பண்பாட்டு எழுச்சியை நிகழ்த்திய இம்முன்னெடுப்பின் வரலாற்றை ஆவணப்படுத்தப்படுவதன் தேவையை அவரிடம் வலியுறுத்தினேன். எனது நூல்களில் சிலவற்றை அவருக்கு நினைவுப் பரிசாய்க் கொடுத்தேன்.
பால், மதிப்புக்கூட்டிய பால்பொருள், வேளாண்பண்டங்களின் விற்பனையில் நேரடி வேலைவாய்ப் தவிர சிலநூறுபேருக்கு வணிக, வேலைவாய்ப்புகளையும் சாத்தியப்படுத்தியிருக்கிறது நாஞ்சில் பால். கடற்கரையில் அடித்தள மக்களின் பங்கேற்புடன் மீன், மதிப்புக்கூட்டிய மீன்பண்டங்களுக்கான உற்பத்தி, வணிகத் திட்டம் நடைமுறைச் சாத்தியமானது. பின்னோக்கு ஒருமுகப்படுத்தலில் (backward integration) நாஞ்சில் பால் நிறுவனம் மிக
அருமையான
முன்னுதாரணம். மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம் மோன்ற முற்போக்குப் பார்வை கொண்ட அமைப்புகள் இதன் சாத்தியக்கூறுகளைப்
பரிசீலிக்கவேண்டும்.

பிற்பகலில் கேப்டன் ஜான்சன் (பி.1969, குளச்சல்) என் வீட்டுக்கு வருகை தந்தார். எனது கடற்கரைப் பயண நூலுக்கான நேர்காணல் சந்திப்பு. மீன்பிடி கப்பல், சரக்குக் கப்பல், எண்ணைத் துரப்பணப் பணியில் இயங்கும் டைனமிக் பொசிஷன் கப்பல் (DP vessel) பணிகளின் செறிவான பன்னாட்டு அனுபவங்களுடன் இப்போது சில முன்னணிக் கப்பல் நிறுவனங்களின் கலந்தறிவாளராகப் பணியைத் தொடர்கிறார். டைனமிக் பொசிஷன் கப்பல் பணி அரிதினும் அரிதாக வாய்ப்பது; மீனவ இளைஞர்களுக்கு எட்டாக்கனியாய் இருந்த அந்தத் துறையில் ஜான்சனை அடியொற்றி இன்று கன்னியாகுமரிக் கடற்கரையிலிருந்து மேலும் நான்குபேர் பணியாற்றுகின்றனர்.
ஒக்கிப் பேரிடரில் ஆழ்கடலில் நேர்ந்த இருநூற்றுக்கு மேற்பட்ட உயிரிழப்பின் பின்னணியில் பொதுவாழ்வில் இறங்கிய ஜான்சன், அதில் எதிர்கொண்ட சவால்கள், அனுபவங்கள், படிப்பினைகளை விரிவாய்ப் பகிர்ந்துகொண்டார்.
கடற்பாதுகாப்பு, தகவல்தொடர்பு, மீனவர் மீட்பு, மீனவர்களின் அரசுதுறை வேலைவாய்ப்பு உள்ளிட்ட முதன்மைக் களங்களில் குறுகிய காலத்திலேயே (2017 – 2022) பொருட்படுத்தத் தகுந்த பங்களிப்பைத் தந்துவரும் ஜான்சன், இளைய தலைமுறைக்கு முன்னுதாரணமாய் நிற்கிறார். அவர் என் மேனாள் மாணவர் என்பது மேலும் பெருமையளிக்கிறது.


தூத்துக்குடியைச் சார்ந்த திரு. சுரேஷ் உடன் (பி.1970) கடந்த மார்ச் 29, 30இல் குற்றாலத்தில் ஒரு நேர்காணல் நிகழ்த்தியிருந்தேன். பத்தாண்டுகள் ஒரு தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனத்திலும் பின்பு பல்வேறு தொழில்முனைவுகளிலும் ஈடுபட்ட அனுபவங்களோடு இன்று ஒரு முன்னணி நிதி நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார் சுரேஷ். கடற்கரை மக்களின் பொருளாதாரப் பார்வை குறித்த தனது நுட்பமான அவதானிப்புகளைப் பகிர்ந்துகொண்ட அவர், 'நிலம் சார்ந்த முதலீட்டில் கவனம் செலுத்தாதவரை மீனவர்கள் நிலைத்த பொருளாதாரத்தை நிறுவிக்கொள்ள முடியாது' என்கிறார்.
நிலத்தை உரிமைகொள்ளாத சமூகம் தன் அடையாளத்தை இழந்துவிடும். மீனவர்கள் கடலைத்தான் சொத்தாய்க் கருதுகின்றனர். முத்துக்குளித்துறை, கன்னியாகுமரிக் கடற்கரைக் கத்தோலிக்க சமூகங்கள் ‘கோவில் நிலத்தில்’ கூட்டமாய்க் குடியிருப்பவர்கள். நிலத்தின் மீது அவர்களுக்கு உரிமையில்லை என்னும் பாரிய எதார்த்தம் இன்னும் பல போதாமைகளுக்குக் காரணமாகிறது.
சீரற்ற வருவாயை நம்பியிருக்கும் கடற்கரை மக்கள் எப்படி நிலத்தை உடைமையாக்கிக்கொள்வது என்பதன் நடைமுறைச் சாத்தியங்களை சுரேஷ் இந்நேர்காணலில் விவரித்தார்.
#பெருந்துறை_வலசை (தமிழகக் கடற்கரைப் பயணக்குறிப்புகள்) #வறீதையா_கான்ஸ்தந்தின் #கடல்வெளி #கிண்டில்

Friday, 27 May 2022

மீனவப் பழங்குடிகளின் துயர வாழ்வியல் | கடற்கோள் காலம் | வறீதையா கான்ஸ்தந்தின் | எதிர் வெளியீடு, கடல்வெளி- கிண்டில்.

 சுனாமி, ஒக்கி, கஜா என்ற பேரிடர்களுக்கு பின்னணியில் நெய்தல் நில மக்களான கடலோடிகளின் வாழ்வியல் துயரங்களையும் இனியாவது அரசுகளின் பாராமுகம் முடிவுக்கு வரவேண்டும், அதற்கு அவர்கள் அணிதிரள்வதும்  அரசியல் பங்கேற்பும் அவசியம் என்பதை இந்நூல் கட்டுரைகள் உணர்த்துகின்றன. இவற்றிலுள்ள 12 கட்டுரைகளில் பெரும்பாலான கட்டுரைகள் ‘இந்து தமிழ் திசை’யில் வெளியானவை. தமிழக நெய்தல் பழங்குடிகளான மீனவர்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள், சூழலியல் எனப் பல தளங்களில் இயங்கி வரும் நூலாசிரியர் ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர்.

கரைக்கு வந்த சிற்றலையில் கால் நனைத்துவிட்டு கடலைப் பார்த்துவிட்டதாக கற்பிதம் செய்துகொண்டிருப்பவர்களின்”, எண்ணிக்கை அதிகம் என்பதை அறிமுகத்தில் உணர்த்துகிறார் ஆதவன் தீட்சண்யா. மீனைப் பற்றிப் பேசுவது, உண்பதையும் தாண்டி கடலோடிகளைப் பற்றி அறிவதும் அவர்களையும் உழைப்பாளிகள் வர்க்கம்  என்பதைப் பொதுச்சமூகம் உணர வேண்டிய தேவையையும் இது வலியுறுத்துகிறது.

2004 சுனாமி மறுகட்டுமானம் பெருந்தொல்வியடைந்தது. அதிலிருந்து மீள்வதற்கு அரசே அனுமதிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். சுனாமி மீனவர்களை கடலைவிட்டு அப்புறப்படுத்த ஆதிக்கங்களுக்கான கருவியாகப் போனதுதான் மிச்சம். சுனாமி மட்டுமல்ல, கடற்கரை மேலாண்மை அறிவிக்கை (2007), மீன்வள ஒழுங்காற்று மசோதா (2009), பாரம்பரிய மீனவர்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு மசோதா (2009), மீன் இறக்குமதிக் கொள்கை, ஒருங்கிணைந்த மீன்வளக் கொள்கை அறிக்கை (2014), கடல் உயிரின வளர்ப்பு மசோதா (2018)  என மீனவர்களுக்கான சுமத்தப்பட்டப் பேரிடர்கள் அளவைல்லாதவை. (பக்.24)

சுனாமி, ஒக்கி, கஜா உள்ளிட்ட எந்தப் பேரிடர்களிலிருந்து நமது அரசுகள் பாடங்கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் எந்த முகமையும் சுனாமிப் பேரிடர் சூழலை பண்பாட்டுப் புரிதலுடன் அணுகவில்லை; மக்கள் பங்கேற்பிற்கு முழுதும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நமது தோல்விகள் தொழில்நுட்பப் போதாமையினால் அல்ல; அணுகுமுறைக்கோளாறுகளால் நிகழ்கிறது. இது குடிமைச் சமூகத்தின் தோல்வியாகவே பார்க்கப்பட வேண்டும். (பக்.30)

டெல்டா மாவட்டங்களில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திருக்கும் தாக்கங்களை ‘கஜா மீள்சந்திப்பு’ கட்டுரையில் விவரிக்கிறார். 1964 தனுஷ்கோடி புயலிலிருந்து அரசுகள் ஏதேனும் பாடம் கற்று, அதன்மூலம் மக்களைத் தயார்படுத்தியுள்ளதா என்றால், இல்லை என்பதே ஒற்றைப் பதிலாக இருக்கமுடியும். நிலநடுக்கங்கள் வரும்பொது (பூஜ்) ஓடுவேய்ந்த வீடுகளை அமைத்துக் கொள்கிறோம். கஜா போன்ற புயல்களின்போது இவை கடும் சேதத்தைச் சந்தித்தன. வேதாரண்யம் கோடியக்கரை வனப்பகுதியும் முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் அலையாத்திக்காடும் பேரழிவைச் சந்தித்தன. மான்கள், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அழிந்தன. தென்னை, மா, முந்திரி, வாழை, பலா போன்ற பலவகையான தாவரங்கள் உருக்குலைந்தன. இதிலிருந்து படிப்பினைகள் பெறவில்லை என்பது ஒருபுறமிருக்க, சேத மதிப்பீடுகள், புள்ளிவிவரங்கள், இழப்பீடுகள் எல்லாம் அலங்கோலமானவை. முறையான எந்தப் புள்ளிவிவரங்களும் அரசிடம் இல்லை.

2004 சுனாமிக்குப் பிறகு பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005), தேசியப் பேரிடர் மேலாண்மைக் கொள்கை (2009), தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்ட ஆவணங்கள் (2016) எல்லாம் வருகிறது. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் (NDMA) நடுக்கடல் புயல் தாக்குதல், புயல் மேலாண்மை குறித்து எவ்விதப் புரிதலும் இல்லை. (பக்.47) மீனவர்களுக்கு நவீனத் தகவல் தொடர்பு, மீட்புத் தொழில்நுட்பத்தில் பயிற்சியளித்து, பேரிடர் மீட்பில் அவர்களின் மரபறிவைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறார். (பக்.56) பல்வேறு வெள்ள, புயல் மீட்பு நடவடிக்கைகளில் மீனவர்களின் அளப்பரிய பங்கை அறிவதுடன், மனித நேயத்தை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். (பக்.64)

பெருந்தொழில் நிறுவனங்களின் சமூகக் கடப்பாட்டிற்காக (CSR – Corporate Social Responsibility) ஆண்டுதோறும் நிறைய தொகைகள் ஒதுக்கப்படுகிறது. இந்தியன் ஆயில். பாரத் பெட்ரோலியம், ஓஎன்ஜிசி போன்ற அரசின் நிறுவனங்கள் பட்டேல் சில நிறுவ 2850 கோடியை அளித்தன. ஆனால் புயல், வெள்ளப் பேரிடர்களில் மக்கள் பாதிக்கப்படும் நிகழ்வுகளில் இவை உதவ முன்வருவதில்லை. இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்காத, உரிய இழப்பீடுகள் வழங்காத மத்திய அரசு பட்டேல் சிலைக்கு 3000 கோடியைச் செலவிடுவது அரச வன்முறையாகத்தானே இருக்க முடியும்!

ஓவ்வொரு திணைநிலமும் தனித்தன்மை கொண்டது. நகரங்கள் தனித்துவமான் திணைச்சூழலை உருவாக்கியுள்ளது. பேரிடர் மேலாண்மை முறைகள் திணைநிலங்களின் வாழ்வியலோடு இணைந்து உருவாக்கப்பட வேண்டும். நாளடைவில் பேரிடர் மேலாண்மை நம் அன்றாட வாழ்வின், பண்பாட்டின் ஒரு பகுதியாகி விடவேண்டும்”, (பக்.72) என்று குஜராத் அடித்தள மக்கள் பேரிடர் மறுகட்டுமானத்தின் போது பண்பாட்டிற்கு ஒவ்வாத எல்லா முன்வைப்புகளையும் நிராகரித்ததைக் குறிப்பிடுகிறார். (பக்.72)

மீனவர்கள் கரை சேர்க்கும் அறுவடையில் ஃபார்மலின் நச்சினை தடவுவதில்லை. அதற்கான தேவை எழவும் இல்லை. ஆழ்கடல் மீனவர்கள் கூட மீன்களைத் துள்ளத்துடிக்க நொறுக்கிய பனிக்கட்டிகளிட்டு சேமிப்பறையில் வைத்து, அப்படியே கரையிறக்குகிறார்கள்”, (பக்.77) இடைநிலை வணிகர்களின் பேராசையைக் கண்டறிந்து தடுக்க வேண்டிய  அரசுத்துறைகளின் வேலைகளாகும். பங்கேற்பு / கூட்டுறவு முறையில் மீன் பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், தொழிலில் அடித்தட்டு மக்களை ஈடுபடுத்தும் மீன்வளத் திட்டம் காலத்தின் தேவையெனவும் வலியுறுத்தப்பட்டுகிறது. (பக்.78)

காஷ்மீரில் தீவிரவாதம் என்ற பெயரில் காணமலடிக்கப்படும் விதவைகளின் நிலை மிகவும் மோசமானது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, திரும்பி வருவார்களா என்பதை அறிய முடியாத நிலை எவ்வளவு கொடூரமானது? (பார்க்க: கஷ்மீரில் பாதி விதவைகள் – மு.குலாம் முகமது, வெளியீடு” வேர்கள், சென்னை) அதைப்போல வக்கற்ற அரசுகளால் காணாமற்போன கடலோடிகளை இழந்த குடும்பங்களின் (கடல் விதவைகள்) நிலையை சொல்லில் வடிக்க இயலாது. கணவனை இழக்கும் உறவு இழப்புத் துயரத்துடன் கூடவே, குடும்பத்தின் சுமையும் அப்பெண்களின் மீது விழுகிறது. அவர்களுக்கு உளநல ஆதரவும் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளை ஊட்ட வேண்டியதும் அவசியம். நைஜிரியப் பழங்குடி சமூகத்தில் ஒரு தாய் இறந்துவிட்டால் அந்தச் சமூகம் தாயை இழந்த மகனுக்குத் தாயாகி பராமரிக்கிறது. அத்தகைய சூழல் இங்கு அறவே இல்லை. (பக்.84)

பேரிடரைப் பெண்ணின் கண்களின் வழியாக நாம் இன்னும் பார்க்கத் தொடங்கவில்லை, (பக்.86), நெய்தல் சமூகங்களின் பொருளாதாரம் பெண்ணின் தோள் மீதுதான் உட்கார்ந்திருக்கிறது”, (பக்.87) இந்நிலையில் “விதவைகள் மறுவாழ்வு என்றாலே தையல், உணவுப் பண்டம் தயாரிப்பு போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்படுவது”, (பக்.89)  அபத்தம். ஒரு கிராமத்தில் ஒக்கி அபலைகள் 25 பேரும் தையல் கற்க, ஏற்கனவே இங்கு இருக்கும் 12 தையல் கலைஞர்களுடன் சேர்ந்து வாழ்வாதாரத்தை எப்படி பெறமுடியும், என்று வினா எழுப்புகிறார். (பக்.89)

மணற்கொள்ளை, எண்ணெய்க் கசிவு, இறால் பண்ணைகள், அனல், அணு மின்நிலையங்கள், வேதித்தொழிலகங்கள் போன்றவற்றால் நடக்கும் கடலழிப்பும், அலையாத்திக் காடுகளின் அழிவும் நூலில் விவாதிக்கப்படுகின்றன. தமிழகக் கடற்கரைகளில் எழுந்த இறால் பண்ணை எதிர்ப்புகளை, கடல் உயிரின வளர்ப்பு மசோதா – 2018 தகர்த்து, இறால் வளர்ப்பைச் சட்டப்பூர்வமாக்குகிறது.

கடலோடிகளின் மரபறிவு, கடலை வெறும் நீராய்ப் பார்ப்பதில்லை, அவர்களைப் பொறுத்தவரை கடலின் வரைபடம் என்பது நீர்முடிக்கிடக்கும் நிலமும்தான், ‘உயர் ஓத எல்லை’ என்று கடலின் நகர்விற்கு எல்லை வகுப்பது தொல்லியல், வரலாற்றுப் புரிதலோ அறிவியல் அடிப்படையோ அற்றது”. (பக்.106) என்கிறார்.

பருவநிலை மாற்றப் பேருரை நிகழ்த்தும் இயற்கை அன்பர்கள் வார இறுதியில் கடற்கரைக் குப்பைகளைப் பொறுக்குவதற்குப் பதிலாக சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை மக்களையும் கடலையும் ஊடறுத்து சீனப்பெருஞ்சுவர்போல நீண்ட பங்களாக்களில் குடியேறியுள்ள மேட்டுக்குடிகளிடம் இந்தக் கடற்கரை மணல்வெளி உங்களுக்கு மட்டுமானதல்ல என்று உணர்த்த வேண்டும் (பக்.117) என்று எழுதுகிறார்.

அரசியல் ரீதியான  அணிதிரட்டலுக்கு’ பா.ம.க.வை எந்தளவிற்கு முன்னுதாரணமாகக் கொள்ள இயலும் என்பது மிகவும் சிக்கலான ஒன்று. இதை அறிமுகத்தில் ஆதவன் தீட்சண்யா சுட்டுகிறார்.

பிரதிநிதித்துவம் சாராத அரசியல் பங்கேற்பு, அரசு இயந்திரத்தில் (கொள்கைத் தளங்களில்) பங்கேற்பு, பொதுச் சமூகத்துடன் உரையாடல் ஆகிய மூன்றையும்  கடற்கரைப் பூர்வகுடி மீனவர்கள் செய்ய வேண்டிய இடையீடுகளாக இனங் காண்கிறார். (பக்.125)

குஜராத் கலவரத்தின் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் தாக்கப்பட்டார்கள். நேரடியாகப் பாதிக்கப்பட்டார்கள். பல்வேறு விதமான வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்”, (பக்.83) என்று சொல்வது சரியாகுமா? இஸ்லாமியர்கள் என்று எழுதுவதில் என்ன சிக்கல் என்று தெரியவில்லை?

சாதிகளாய்ப் பிரிந்துகிடக்கும் மீனவ இனக்குழுக்களின் பண்பாட்டு ஒருமை, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து அவர்களின் வாழ்வாதார, வாழிடச் சிக்கல்களில் நிலவும் பொதுமை”, (பக்.25) எடுத்துக்காட்டப்படுகிறது.

மரபணு மாற்றப் பயிர்கள் தாய்மண்ணுக்குக் கேடு;

மதம் மாறிய மனிதர்கள் தமிழ் இனத்துக்குக் கேடு”, (பக்.67) என்பது போன்ற வெறுப்புணர்வு பரப்பல்கள் அடித்தட்டு மக்களிடத்திலும் வேர் பிடிக்க மதவெறி சக்திகள் பலவழிகளில் செயல்புரிகின்றன. இத்தகைய ஒன்றுதிரட்டல்கள் பழங்குடிகள், மீனவர்கள் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களிலும் நடக்கின்றன. இவற்றைக் களைய ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியமானதாகின்றது.

பூங்காவின் உள்ளே, கோடியக்கரை முனையை அடையாளம் காட்டும் பிரித்தானியர் கால நடுகல்லின் அருகே, சோழர் காலக் கலங்கரை விளக்கம் சிதைந்த நிலையிலும் கம்பீரம் குறையாமல் நிற்கிறது”, (பக்.42) இதிலென்ன கம்பீரம் இருக்க முடியும்? எல்லாம் ஆதிக்கம், வல்லாண்மையின் குறியீடுகள்தானே! சோழர்கள் ஆதிக்கம் மட்டும் சுகமாக இருக்குமா?

சொந்த மண்ணை இழந்து அகதிகளாய்ப் பிற நாடுகளில் வாழும் ஈழத்து முக்குவர்களிடம் நிலவும் ஆழமான இன அரசியல் புரிதலை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்”, (பக்.121) இன அரசியல் குறித்த எச்சரிக்கையும் தேவை. இவை இறுதியில் மத அரசியலில் ஒன்றிணையும் அபாயமும் இருக்கிறது.

கடலோடிகள் என்பது கடல் மீனவர்களை மட்டுமே குறிப்பதாக உள்ளது. மீன்பிடித்தல் என்பது தொல்மனிதர்களது தொழில். எனவே, இவர்கள் பழங்குடிப் பட்டியலுக்குள் வரவேண்டும் என்பது நியாயமானதே. ஆனால் வாக்ரிகள் போன்றவர்களை இன்னும் பழங்குடிப் பட்டியலுக்குள் கொண்டுவரவில்லை. உள்நாட்டு மீனவர்கள் நிலையும் மோசம்; அவர்களைப் பற்றிய குரலும் எழவேண்டும்; மீனவர்கள் ஒருங்கிணைப்பில் அவர்களையும் உட்படுத்த வேண்டும்.

மு.சிவகுருநாதன் (பன்மை, புக் டே, 2020)

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...