Wednesday, 12 October 2022

கடற்பசு என்னும் பாலூட்டி!


 சினைச் சுறவின் கோடு

 

ஹெர்மன் மெல்வில் எழுதிய ‘மாபி டிக்’ (1851) என்கிற நாவலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆழ்கடல் திமிங்கில வேட்டை பற்றிப் பேசுகிற புகழ்பெற்ற நாவல் இது. கடல் குறித்த தொன்ம நம்பிக்கைகள், கடல் பயண, சாகசக் கதைகள் எல்லா வயதினர்க்கும் சுவாரஸ்யமானவை. அவற்றின் நம்பகத் தன்மையைச் சரிபார்க்கத் தேவையில்லை. சங்க இலக்கியத்தில்,

சினைச்சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல்லணங்கினான்

என்றொரு வரி வருகிறது. சினைச் சுறா முள் வழிபாடு குறிப்பிடும் மீன் சுறா அல்ல, திருக்கை மீன் (skates). அது போலவே,

வலம்புரியீன்ற நலம்புரி முக்தம்

‘வலம்புரியொரு முத்தன்ன’

போன்ற வரிகளும். முத்துச் சிப்பிகளிலிருந்துதான் முத்துகள் கிடைக்கும், வலம்புரி சங்கிலிருந்தல்ல என்பதை சங்ககாலக் கவிஞர்கள் அறிந்திருக்கவில்லை. கவிதைக்குப் பொய் அழகுதான், சந்தேகமேயில்லை. ஜோ டி குரூசின் ‘ஆழி சூழ் உலகு’, கடிகை அருள்ராஜின் ‘கடல்நீர் நடுவே’ ஆகிய நாவல்களில் ஆழ்கடல் சுறா வேட்டை குறித்த வர்ணனைகளை வாசிக்கையில் நம்மைப் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஆனால், திமிங்கிலங்கள், ஓங்கில்கள் போன்ற பேருயிர்கள் மீன்களல்ல என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? போலவே, நம் கடல்கள் ஆரோக்கியமாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவ்வகைப் பேருயிர்கள்தான் காரணம் என்பதும்.

 

பாலூட்டிகள்

 

பாலூட்டிகள் பரிணாம அடுக்கின் உச்சத்தில் இருப்பவை. அவை கால்களின் உதவியால் இடம்பெயரும்; உரோமங்களாலான உடல் கவசம் கொண்டிருக்கும்; நுரையீரல்களால் சுவாசிக்கும்; குட்டிகளை ஈன்று பால் கொடுக்கும்; பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே அவை கடலிலிருந்து கரையேறி, நிலவாழ்க்கைக்குப் பழகிவிட்டிருந்தன.

 

பிறகு, அவைகளுக்குக் கடலில் என்ன வேலை? கடலை நோக்கிய பாலூட்டிகளின் மீள்வரவை அறிஞர்கள் ‘இரண்டாம் நிலை தகவு’ என்கிறார்கள். கடலாமைகளும் கடற்பாம்புகளும் அப்படி வந்தவைதான். கால்களோடு நிலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவற்றில் சில என்ன காரணத்துக்காகவோ மீண்டும் கடலுக்குத் திரும்பிவிட்டன.  கால்கள் மீண்டும் துடுப்புகளாயின (paddles), உரோமக் கவசம் காணாமல் போயின. இது ஒருநாள், இரண்டு நாள் சமாச்சாரமல்ல, கோடி வருடங்களின் கதை!

 

முதுகுநாண் விலங்குகளின் பரிணாமத்தில் ல சுவாரஸ்யமான திருப்பங்கள் நேர்ந்திருக்கின்றன. தாடைகள், இடப்பெயர்ச்சி உறுப்புகள், சுவாச உறுப்புகள், உடல் கவசம் (செதில், இறகு, உரோமம்) ஆகியவற்றின் உருவாக்கமும் மூளையின் வளர்ச்சியும் அதில் முக்கியமானவை. வேட்டை விலங்குகளுக்கு வலுவான தாடைகளும் இடப்பெயர்வு உறுப்புகளும் கூர்மையான புலன்களும்தான் வாழ்க்கைக்கான மூலதனம். ஆதிகால மீன்களுக்குக் கீழ்த்தாடை கிடையாது (Agnatha- jawless fishes). பிறகு குருத்தெலும்பு மீன்கள் (சுறா, திருக்கை) வந்தன. அதைத் தொடர்ந்து எலும்பு மீன்கள் வரவாயின. மீன்களின் தோள் துடுப்புகளே ஆமையின் கால்களாகவும், பறவையின் இறக்கைகளாகவும் மனிதனின் கைகால்களாகவும் உருமாறியிருக்கின்றன.

 

கடல்வாழ் பாலூட்டிகள்

 

நீர் வாழ்க்கைக்குத் தகவமைந்த பாலூட்டிகளைப் பொதுவாகக் கடல்வாழ் பாலூட்டிகள் என்று வகைப்படுத்துகிறார்கள். எனினும், அவற்றில் சில கழிமுகங்களிலும் நன்னீரிலும் வாழ்கின்றன (கங்கையில் சில சுறாக்களும் ஓங்கில்களும் வாழ்கின்றன). சீல், கடல் சிங்கம், பனிக்கரடி (Polar Bear), நீர்நாய் (Sea Otter) போன்றவை கடலிலும் நிலத்திலும் வாழ்பவை. இரை தேடவும், இனம்பெருக்கவும் இவை கரைக்கு வந்தே தீரவேண்டும். திமிங்கிலங்கள், ஓங்கில்கள், கடற்பசுக்கள் ஆகியவை பெருங்கடல்கள், கடல்கள், குடாக்களில் வாழ்வன. கடற்பசு பொதுவாக 10 மீட்டருக்குக் குறைவான ஆழமுள்ள பகுதிகளில் வாழ்கின்றன. திமிங்கிலங்கள் எத்தனை ஆழத்துக்குப் போனாலும் காற்றைச் சுவாசிக்க அவை அவ்வப்போது கடற்பரப்புக்கு வந்தாக வேண்டும். இந்தச் சிக்கல் மட்டும் இல்லையென்றால் இப்பாலூட்டியினங்களை அத்தனை எளிதில் வேட்டையாடி அழித்திருக்க முடியாது.




 

கடல்நீர் உள்ளேறிவிடாதவாறு நாசித்துளைகளை மூடிக்கொள்ளும் ஏற்பாடு, நீண்டநேரம் மூச்சுப்பிடித்துக் கடலுக்குள்ளே இருந்துகொள்ளும் தகவு, இதயத் துடிப்பின் வேகத்தைத் தணித்துக்கொள்ளும் தகவு,  எளிதில் மிதக்கும் தகவு, உப்புநீரைத் தாக்குப்பிடித்து உடல் திரவத்தின் நீர்மையைப் பராமரிக்கும் திறன், பசைத்தன்மை மிகுந்த பால்சுரக்கும் தகவு- இப்படி ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் அவற்றுக்கு உண்டு.

 

உயிர்வளியை மண்ணீரல், தசைகளில் அதிகமாய்ச் சேமித்துக்கொள்ளும். இவ்விலங்குகளின் இரத்தச் சிவப்பணுக்களும் (hemoglobin) தசைச் சிவப்பணுக்களும் (myoglobin) மிகுதியான உயிர்வளியைச் சேமித்துவைக்கும் அபாரத் திறன் கொண்டவை. உடலில் உயிர்வளி பற்றாக்குற்றை ஏற்படும்பொழுது மற்ற இரத்தக் குழாய்களை இறுக்கி வைத்துக்கொண்டு, அதிகமான உயிர்வளியை மூளைக்கும் இதயத்துக்கும் அனுப்புகின்றன. மிகுந்த பற்றாக்குறை நேர்ந்தால், உடலில் சேமித்து வைத்திருக்கும் கிளைக்கோஜன் (glycogen) என்னும் மாப்பொருளை உயிர்வளி - சாரா - சிதைவுக்கு (anaerobiosis) உட்படுத்தி, ஆற்றலை வினியோகிக்கும்.

 

பாலூட்டிகள் அறிவுக்கூர்மை மிகுந்தவை. ஓங்கில்கள் இரை, பாதுகாப்பு குறித்து ஒலியின் மூலம் தங்களுக்குள் செய்தி பரிமாறிக் கொள்கின்றன.  வவ்வால்கள் போல, திமிங்கிலங்கள் இடம்பெயர்வதற்கு சுற்றுப்புறத்தை ஒலிவருடல் முறையில் கணிக்கின்றன. ஒலி மாசு அவற்றின் இடப்பெயர்வைப் பாதிக்கின்றன.


 

சலிப்பான் தட்டு

 






பாலூட்டிகளின் உணவுப் பழக்கங்கள் விசித்திரமானவை. பேலீன்வேல் எனப்படும் ஒருவகை திமிங்கிலம் தாடைகளில் சீப்பு (Baleen plate) போன்ற சலிப்பான் தட்டுகளைக் கொண்டிருக்கும். வாயினை அகலத் திறந்து, கடல்நீரை உள்ளே இழுத்துக்கொண்டு, பிறகு தாடைகளை மூடி, சலிப்பான் தட்டுகள் வழியாகத் தண்ணீரை வெளியே தள்ளி, மிதவை உயிரினம் (zooplankton) உள்ளிட்ட சிறுசிறு உயிரினங்களைச் சலித்து விழுங்கும். தாடையில் பற்கள் அமைந்த திமிங்கிலங்கள் மீன்களை வித்தியாசமாய் வேட்டையாடும். சில திமிங்கிலங்கள் சேர்ந்து மீன்கூட்டத்தை நெருக்கியடித்து, ஒரு பந்து போலாக்கும்; திணறிநிற்கும் அம்மீன்கூட்டத்தை திமிங்கிலங்கள் எளிதில் விழுங்கிவிடும். சில திமிங்கிலங்கள் தம் நுரையீரல்களின் திறத்தால் தொண்டைக்குழியைப் பல மடங்கு விரித்துக்கொண்டு, வேகமாக முன்னேறி, அதிக அளவு இரையை விழுங்கும். வாய்ப்புக் கிடைத்தால் பெரும் மீன் கூட்டங்களை அதிரடியாகக் கரைநோக்கித் துரத்தி, அவ்வாறு கரையொதுங்கிய மீன்களை எளிதில் இரையாய்க் கொள்ளும். சில பாலூட்டிகள் சிப்பி, கணவாய், ஸ்குவிட் போன்றவற்றை இரையாய்க் கொள்ளும்.

 

திமிங்கிலங்கள் திறந்த கடற்பரப்பில் புழங்குபவை. ஆனால் ஸ்பெர்ம் வேல் என்னும் திமிங்கிலம் (மாபி டிக்கின் கதாபாத்திரம்) இரைதேடி 2500 அடி ஆழம் வரை மூழ்கிச் செல்கிறது. கடற்பசுக்கள் சில சமயம் 120 அடி ஆழம் வரை மூழ்கிச் செல்கின்றன. ஆழங்களுக்குச் சென்று திரும்பும் திமிங்கிலங்கள் நைட்ரஜன் உயிர்ச்சத்துகளை மேலே கொணர்ந்து மேற்கடலை வளப்படுத்துகின்றன (Whale pump).

 

திமிங்கிலங்கள் பெருந்தொலைவு வலசை மேற்கொள்பவை. பேலீன் திமிங்கிலங்கள் பாதுகாப்பான இடங்களில் குட்டிகளை ஈனும்பொருட்டு வெப்பமண்டலக் கடல்களுக்குப் போகின்றன. சாம்பல் திமிங்கிலம் 23,000 கி.மீ. தொலைவு வரை வலசை போகின்றன. சீல்களின் வலசை சூரிய, சந்திர இருப்பு, புவிக்காந்தவிசை, நீரோட்டம், காற்றுவிசை, நீரின் சுவை, வெப்பநிலை போன்ற காரணிகளால் வழிநடத்தப்படுகின்றன.


கடற்பசுக்கள்


 


 

கடற்பசு (டுகாங் டுகான்; பெருந்தொகுதி: பாலூட்டி; தொகுதி: சைரெனியா; குடும்பம்: டுகாங்கிடே; பேரினம்: டுகாங்; இனம்: டுகான்). நான்கு கோடி வருடங்களுக்கு முன்னால் கடலுக்குத் திரும்பிய தரைவாழ் விலங்கு.  தாவர உணவைச் சார்ந்து கடலில் வாழும் ஒரே பாலூட்டியினம் இது. ஆழம் குறைவான (<10மீட்டர்) கரைக்கடல் பகுதிகளில்- கடற்புல் படுகைகள், உட்கடல் தீவுகள், பவளப்பாறைகளுக்கிடையே அமைந்த பகுதிகள், அலையாத்தி வன வாய்க்கால்கள் போன்ற இடங்களில்- இவை வாழுகின்றன. புல்தழைகளை மேய்வதால் கடற்பசுக்கள் என வழங்கப்படுகின்றன. இந்தியா உள்ளிட்ட, 37 நாடுகளின் 128,000 கிலோமீட்டர் கரைக் கடலில் பரவலாக வாழும் இனம் இது.

 

கடல் வாழ்க்கைத் தகவுகள்

 

படகின் துடுப்பு போன்ற முன்னங்கால்கள் (துடுப்புகள்கள்), இருமுனையிலும் கூம்புபோல் சீரான உடல்; ஓங்கிலை ஒத்த வால் அமைப்பு, கீழ் நோக்கி அமைந்த தாடைகள் போன்றவை இவ்விலங்கின் தனித்துவமான அடையாளங்கள். எப்போதும் அடித்தரையில் தங்கி மேயவேண்டியிருப்பதால் கடற்பசுக்கள் அவற்றின் எடையை அதிகமாக வைத்திருக்க வேண்டியுள்ளது. கடற்பசுக்களின் எலும்புகள் மிகுந்த எடையுள்ளவை. தோலின் அடியிலிருக்கும் ப்ளப்பர் (blubber) என்கிற திண்ணமான கொழுப்பினால் அதிகரிக்கும் மிதப்புத் தன்மையைச் சமன் செய்வதற்கு இந்த ஏற்பாடு. ஓங்கில்கள் எப்போதும் கடலின் மேல் மட்டத்தில் மிதந்தும் மூழ்கியும் களித்துக் கிடப்பவை. அதற்கு ஏதுவாக அவற்றின் எலும்புகள் அடர்த்தி குறைந்தவையாக இருக்கின்றன.

 

கடற்பசுக்களுக்குப் பின்னங்கால்கள் இல்லை. குறுகிய தொலைவுகளுக்கு மணிக்கு 24கி.மீ. வேகத்தில் நீந்திச்செல்லும் திறன் கொண்டவை. உடல் அதிக பட்சம் 4மீ நீளத்தையும் 1500கிலோ எடையும் எட்டும். இதன் சகோதர இனமான ஸ்டெல்லார் கடற்பசு 10மீட்டர் நீளம் வரை வளரும்; எடை 11 டன் வரை. கி.பி.1768க்குப் பிறகு அந்த இனம் பூண்டோடு அழிந்துபோனது.

 

கடல்புல்லை மேய்வதற்கு ஏற்றவாறு, அதன் தாடையமைப்பும் கோரைப்பற்களும் அமைந்திருக்கின்றன. கடற்புல் போதுமான அளவு கிடைக்காத வேளைகளில் கடல் பாசிகளையும் இரையாய்க் கொள்கின்றன. அதன் உடல் எடையில் 15% அளவுக்கு அவைகள் அன்றாடம் இரை கொள்ளுகின்றன. மேற்குக் கடற்கரைக் கடற்பகுதியில் ஒரு கடற்பசுவின் வயிற்றில் 60 வகைத் தாவர உணவுகளை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.  

 

கடற்பசு அதிகபட்சம் 70 ஆண்டுகள் உயிர்வாழும் எனினும் மிகக் குறைவாகவே குட்டிகளை ஈனும். குட்டிகளை அவை பாலூட்டிப் பேணும். உலகெங்கும் கடற்பசுக்கள் வேகமாக அழிந்துவருகின்றன. டுகாங் டுகான் இனத்தின் சகோதர இனமான ஹைட்ரோடமாலிஸ் கைகாஸ், தீவிர வேட்டையின் காரணமாக 18ஆம் நூற்றாண்டிலேயே அழிந்துவிட்டது. 2009இல் இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் (International Union for Conservation of Nature- IUCN) டுகாங் டுகான்-ஐ அழிந்துவரும் இனமாகப் பட்டியலிட்டுள்ளது. பல்லாயிரம் வருடங்களாகக் கடற்பசுக்களை அதன் இறைச்சிக்காகவும் எண்ணைக்காகவும் வேட்டையாடும் வழக்கம் இருந்து வருகிறது. ஆஸ்திரேலியா, பசிஃபிக் தீவு போன்ற பகுதிகளில் கடற்பசு வேட்டைப் பண்பாடு இன்றும் நிலவுகிறது. கடற்புல் படுகைகளின் அழிவும் மீன்பிடி நடவடிக்கைகளும் கடற்பசுக்களின் அழிவுக்குக் காரணமாகின்றன. இழுவைமடியில் பயன்படுத்தப்படும் கிளறுபலகைகள் கடற்புல் படுகை, பவளப் பாறைகளைச் சிதைக்கின்றன. அழியும் இனங்களின் பன்னாட்டு வர்த்தக உடன்படிக்கை (Convention on International Trade in Endangered Species ) இவ்விலங்கின் இறைச்சி உள்ளிட்ட பொருட்களின்  வணிகத்தைத் தடை செய்துள்ளது. கரைக்கடலின் உணவுச் சங்கிலியில் கடற்பசு மிக முக்கியமான கண்ணி; பல்லுயிரியத் தொகுப்பிலும் தாவர உண்ணியான இப்பாலூட்டியினம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

 

பல்லுயிர்ச் செறிவின் கருவூலங்கள்

 

கடந்த செப்டம்பர் 21 அன்று தமிழ்நாடு அரசு பாக் நீரிணைப் பகுதியில் குறிப்பிட்ட 448 சதுர கிலோமீட்டர் கரைக்கடல் பரப்பினை கடற்பசு சேம இடமாய் அறிவித்திருக்கிறது.

 

தமிழ்நாட்டுக் கடற்கரைக்குச் சிறப்புத் தன்மைகள் பலவுண்டு: பழவேற்காடு ஏரி என்னும் இந்தியாவின் இரண்டாவது பெரிய உவர்நீர்ச் சூழலமைவு; பக்கிங்ஹாம் கால்வாய் என்னும் நீர்வழி; பிச்சாவரம், கிள்ளை அலையாத்தி வனங்கள், வேதாரண்யம் வனம். இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலாக, பல்லுயிர்ச் செறிவின் கருவூலங்களாய் அமைந்திருக்கின்ற மன்னார் வளைகுடா, பாக் நீரிணை என்கிற இரண்டு கடல்கள். அரபிக் கடலைப் போலல்லாமல் குறைந்த ஆழமும், மாறுபட்ட அடித்தரை அமைப்பும், சூழ்ந்திருக்கும் கரைநிலங்களின் அமைப்பும் தனித்துவமான சூழலியல் கட்டமைவுகளை வாரி வழங்கியுள்ளன. தெற்கு வெள்ளாறு, வைகை, தாமிரபரணி (பழையகாயல், புன்னைக்காயல்), மணிமுத்தாறு, அம்புலியாறு, குண்டாறு, அனுமன் நதி, உத்திரகோசமங்கை, கருமேனியாறு, கோட்டக்கரையாறு, நம்பியாறு, உப்பாறு, வைப்பாறு, வேம்பாறு போன்ற ஆறுகள் நன்னீரைக் கொண்டு சேர்ப்பதோடு கழிமுகங்களையும் உருவாக்குகின்றன.

 

ஒரு குளம் போன்ற தனித்துவமான அமைவிடம் காரணமாக, பாக் நீரிணையின் வட, தென் பகுதிகளிலிருந்து சேறு-சகதி ஏராளமாக அடித்துவரப்பட்டு, இங்கு படிந்து, உயிர்ச்சத்துகளைப் பெருக்கி, இக்கடலை மேலும் வளப்படுத்துகிறது. ஓத இடைப் பகுதி (intertidal area) தவிர, நான்கு முக்கியமான சூழலியல் கட்டமைவுகள் இப்பகுதிகளில் அமைந்துள்ளன: உவர்நீர்ச் சதுப்புகள், பவளப்பாறைகள் (137 இனங்கள்), கடற்புல் படுகைகள் (16 இனங்கள்), அலையாத்தி வனங்கள். தனித்துவம் வாய்ந்த இக்கட்டமைவுகள் 3500க்கு மேற்பட்ட கடலுயிரினங்களின் அரிதான வாழிடமாக இக்கடல்களை மாற்றியிருக்கின்றன. இங்கு காணப்படும் முக்கியமான விலங்குகளில் பாலூட்டிகளும் அடங்கும்.

 

கடல்வாழ் பாலூட்டியினங்கள்

உயிர்த்திருப்பது நம் தேவை

 

கடல்வாழ் பாலூட்டிகளின் சூழலியல் முக்கியத்துவம் என்ன? எண்ணிக்கையில் குறைந்தவை என்றாலும் உணவுச் சங்கிலியில் இவை முக்கியமான கண்ணி. இச்சங்கிலியின் கீழேயுள்ள கண்ணிகளான இரை உயிரினங்களின் (தாவர உண்ணி, ஊனுண்ணி, அனைத்துண்ணி உயிரினங்கள்) அடர்த்தியை ஒழுங்காற்றுவதன் மூலம் சூழலியல் கட்டமைவைச் சமன் குலையாமல் பராமரிக்கின்றன.

 

கடல்வாழ் பாலூட்டிகளைப் பாதுகாக்கத் தவறினால் கடல்களையே இழக்க நேரும். கடல்களை இழந்த பிறகு மனிதனுக்கு எதிர்காலம் ஏது?

 


 


 

 

 

 


Tuesday, 4 October 2022

கடல் சிதைவும் கடற்பசு உய்விடமும்



--------------------------

கடல் சூழலியல், பருவநிலை மாற்றம், புரத உணவு உத்தரவாதம், மீனவர் வாழ்வாதாரம்- இந்நான்கு கூறுகளையும் இணைத்து அணுகுவதுதான் நல்ல பலனைத் தரும்.

---------------------------


பாக் நிரிணையில் கடற்பசு பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை வனவுயிர் (பாதுகாப்பு) சட்டம்-1972இன் கீழ் 2022 செப்டம்பர் 21இல் ஓர் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

 

பாக் நீரிணை

கோடியக்கரை முதல் தனுஷ்கோடி வரையுள்ள, தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய, 250 கி.மீ. கடற்கரையைத் தழுவிக் கிடக்கிறது பாக் நீரிணை. நிலங்களால்  சூழப்பட்ட இக் குடா, வடக்கே வங்காள விரிகுடாவுடனும் தெற்கே மன்னார் வளைகுடாவுடனும் இணைந்து கிடக்கிறது. இக் கடலின் அதிகபட்ச ஆழம் 15மீட்டர். ஒரு குளம் போன்ற இதன் தனித்துவமான அமைவிடம் காரணமாக, வட, தென் பகுதிகளிலிருந்து ஏராளமாக அடித்துவரப்பட்டு, இங்கு படியும் சேறு-சகதியானது, உயிர்ச் சத்துகளைப் பெருக்கி, இக்கடலை வளப்படுத்துகிறது. பல சிற்றாறுகளும் இப்பகுதியில் கலக்கின்றன. குறைந்த ஆழம் காரணமாக தரை வரை போதுமான வெளிச்சம் கிடைக்கிறது. சைமோடோசியா போன்ற கடற்புற்கள் உள்ளிட்ட 143 தாவர இனங்களும், கடற்பாசிகளும், 580 மீனினங்கள், 11 வகையான பாலூட்டியினங்கள் என்பதாக, 3281 வகையான உயிரினங்களின் புகலிடமாய் விளங்குகிறது பாக் நீரிணை. பவளப்புற்று இனங்கள் மட்டும் 128 உள்ளன (மன்னார் வளைகுடாவில் 103 இனங்கள் மட்டுமே உள்ளன).

 

கடற்பசு சேம மண்டலம்

பாக் நீரிணை நான்குவகை சூழலியல் கட்டமைவுகளின் அற்புதமான கலவை- சதுப்புகள், கடற்புல் படுகைகள், பவளப் பாறைகள், அலையாத்திகள். தஞ்சாவூர்- புதுக்கோட்டைக் கரைக்கடல் பகுதிகளில் 12,250 எக்டேர் பரப்பில் கடற்புற் படுகைகள் உள்ளன. திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் கடற்கரைகளில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் (16 இனங்கள்), மீன்களின் இனப்பெருக்கத்துக்கும், இரைதேடலுக்குமான இடங்களாகவும், 156 உள்ளூர், வலசைப் பறவையினங்களின் புகலிடமாகவும் உள்ளன. அதோடு, கரைக்கடலை வளப்படுத்தும் காரணியாகவும் உள்ளன. பாக் நீரிணை, மன்னார்க் குடாவுக்கு இணையான மீன்வள முக்கியத்துவம் கொண்டது. இந்தியக் கடல்களில் டுகாங் (Dugong dugon) எனப்படும் கடற்பசு வாழும் மூன்று இடங்களில் ஒன்று பாக் நீரிணை. இதன் வட விளிம்பான கோடியக்கரையிலும், தென் விளிம்பான தனுஷ்கோடியிலும் 20,000த்துக்கு மேற்பட்ட வலசை, உள்ளூர்ப் பறவைகள் வாழ்வதாக ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. அதற்கு இணக்கமான பல்லுயிர்ச் செறிவு இப்பகுதிகளில் உள்ளது.

 

கடற்பசு என்னும் கடல்வாழ் பாலூட்டி

கடற்பசு (டுகாங் டுகான்; பெருந்தொகுதி: பாலூட்டி; தொகுதி: சைரெனியா; குடும்பம்: டுகாங்கிடே; பேரினம்: டுகாங்; இனம்: டுகான்). தாவர உணவைச் சார்ந்து கடலில் வாழும் ஒரே பாலூட்டியினம் இது. ஆழம் குறைவான (<10மீட்டர்) கரைக்கடல் பகுதிகளில்- கடற்புல் படுகைகள், உட்கடல் தீவுகள், பவளப் பாறைகளுக்கிடையே அமைந்த பகுதிகள், அலையாத்திவன வாய்க்கால்கள் போன்ற இடங்களில்- இவை காணப்படுகின்றன. இந்தியா உள்ளிட்ட, 37 நாடுகளின் 128,000 கிலோமீட்டர் கரைக் கடலில் பரவலாக வாழும் இனம் இது.  

படகின் துடுப்பு போன்ற முன்னங்கால்கள் (துடுப்புகள்கள்), ஓங்கிலை ஒத்த உடல் மற்றும் வால் அமைப்பு, கீழ்நோக்கி அமைந்த தாடைகள் போன்றவை இவ்விலங்கின் தனித்த அடையாளங்கள். கடற்பசுக்களுக்குப் பின்னங்கால்கள் இல்லை. கடல்புல்லை மேய்வதற்கேற்றவாறு, அதன் தாடையமைப்பும் கோரைப்பற்களும் அமைந்திருக்கின்றன. கடற்பசு அதிகபட்சம் 70 ஆண்டுகள் உயிர்வாழும் எனினும் மிகக் குறைவாகவே குட்டிகளை ஈனும்.

உலகெங்கும் கடற்பசுக்கள் வேகமாக அழிந்துவருகின்றன. டுகாங் டுகான் இனத்தின் சகோதர இனமான ஹைட்ரோடமாலிஸ் கைகாஸ், தீவிர வேட்டையின் காரணமாக 18ஆம் நூற்றாண்டிலேயே அழிந்துவிட்டது. 2009இல் இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் (International Union for Conservation of Nature- IUCN) டுகாங் டுகானை அழிந்துவரும் இனமாகப் பட்டியலிட்டுள்ளது. பல்லாயிரம் வருடங்களாகக் கடற்பசுவை அதன் இறைச்சிக்காகவும் எண்ணைக்காகவும் வேட்டையாடும் வழக்கம் இருந்து வருகிறது. ஆஸ்திரேலியா, பசிஃபிக் தீவு போன்ற பகுதிகளில் கடற்பசு வேட்டைப் பண்பாடு இன்றும் நிலவுகிறது. கடற்புல் படுகைகளின் அழிவும் மீன்பிடி நடவடிக்கைகளும் கடற்பசுக்களின் அழிவுக்குக் காரணமாகின்றன. இழுவைமடியில் பயன்படுத்தப்படும் கிளறு பலகைகள் கடற்புல் படுகை, பவளப் பாறைகளைச் சிதைக்கின்றன. அழியும் இனங்களின் பன்னாட்டு வர்த்தக உடன்படிக்கை (Convention on International Trade in Endangered Species ) இவ்விலங்கின் இறைச்சி உள்ளிட்ட பொருட்களின்  வணிகத்தைத் தடை செய்துள்ளது. கரைக்கடல் சூழலமைவின் உணவுச் சங்கிலியில் கடற்பசு மிக முக்கியமான கண்ணி; பல்லுயிரியத் தொகுப்பிலும் தாவர உண்ணியான இப்பாலூட்டியினம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

 

பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகள்

2003இல் ஒன்றிய அரசு பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகள் (Marine Protected Areas- MPA) திட்டத்தின்கீழ் 3% கரைக்கடல் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்திருந்ததுஇப்போது, சர்வதேச பல்லுயிரிய உடன்படிக்கையில் (Convention on Biological Diversity -CBD) இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அவ்வகையில் கடலோர, கடல் பல்லுயிர்ச் செறிவைக் காப்பதன் நிமித்தமாக இந்தியக் கடல்களின் 10% பரப்பைச் சேமப் பகுதியாக அறிவித்துப் பாதுகாப்பது இந்நாடுகளின் கடமையாகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்திய- ஜெர்மன் இருதரப்புக் கூட்டாண்மை அடிப்படையில்பாதுகாக்கப்பட்ட கடலோர, கடற்பகுதித் திட்டம்’ (Conservation and Management of Coastal and Marine Protected Areas- CMPAProject) உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில், பாக் நீரிணையில் குறிப்பிட்ட 448 .கி.மீ. பரப்பினை கடற்பசு சேமப் பகுதியாக (பார்வை: Dugong Conservation Reserve in Palk Bay / GO MS.165/22) தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது வரவேற்கத் தகுந்த முயற்சிதான். ஆனால், கடல் சூழலியல் பாதுகாப்பில் ஒன்றிய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் எப்படி இருந்திருக்கிறது?

 

பாக் நீரிணையின் மீன்வளம்

தஞ்சைக் கடற்கரையில் பருவம்தோறும் சீரான மீன் வரவு என்பது இப்போது இல்லைஎன்கிறார் அதிராம்பட்டினம் மீனவரும் செயல்பாட்டளருமான காளிதாஸ். இந்தப் பகுதிக்கு இரண்டு சீசன்கள்- மழைக்காலம், மழையற்ற காலம். கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்களில் செவல் மீன்கள்- குமுழா, கொய்யி, தேசப்பொடி, இறால் படும். ‘கொய்யி, குமுழாவெல்லாம் இப்போது வருவதில்லைஎன்கிறார் இவர். சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் சுறா, காளை, வவ்வால் வருகிறது. ‘சுனாமிக்குப் பிறகு இயற்கைப் போக்குகளைச் சரியாய்க் கணிக்க முடிவதில்லைஎன்கிறார்கள் அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள்.

பாக் நீரிணை மீன் உற்பத்தியாகும் இடம். காவிரியாற்றின் தண்ணீரைக் கொணரும் வடிகால்கள் பலவும் இங்கேதான்  கடலில் இணைகின்றன.அரை கிலோமீட்டர் கால் கிலோமீட்டருக்கு பெரியபெரிய வாய்க்காலெல்லாம் நல்ல தண்ணியக் கொண்டு வந்து கடல்ல சேக்குற இடம் இதுதான். இதுல அலையாத்திக்காடுக இருக்கு; சதுப்புநிலம். மீன் தங்கறதுக்கு, குஞ்சு பொரிக்கறதுக்கு, வளர்றதுக்கு ஏத்த இடம்என்கிறார் காளிதாஸ்.

ஆத்தங்கரை, அழகன்குளம், தேவிப்பட்டினம் கரைகளிலும் விசைப்படகுகள் டிராலிங் செய்கின்றன. இந்தப் பகுதிகள் மீன் உற்பத்திக் களங்கள். ஆற்று முகத்துவாரங்கள் நிறைய இந்தப் பகுதியில் அமைந்திருக்கின்றன.

 

இழுவை மடி தடை என்னவாயிற்று?

1962இல் இந்தோ- நார்வீஜியன் திட்டத்தில் இழுவை மடிகள் தரப்பட்டபோது காரல்பொடி (சில்வர் பெல்லீஸ்) வகைகளைத்தான் பிடித்தார்கள். காரல்பொடிகளின் உடலை மூடியிருக்கும் மாடி என்கிற ஜெல்லி போன்ற பொருள் (mucous) அந்த மீன்களை அறுவடைக்குப் பிறகு பல மணிநேரம் கெடாமல் வைத்திருக்கும். இன்றைக்கு இராமேசுவரம் தீவுக் கடலிலோ தூத்துக்குடியிலோ மாடி என்கிற பொருளை மருந்துக்குக்கூடப் பார்க்க முடியவில்லை.

இழுவைமடியுடன் இணைக்கப் பட்டிருக்கும் ஆட்டர் போர்டு என்னும் கிளறு பலகைகள் தரையைக் கிளறி வழித்தெடுத்து விடுகின்றன. சங்குகள் சுத்தமாகக் காணாமல் போயிற்று. ‘இரண்டு மூன்று வருடங்களுக்கு மன்னார் கடல்- பாக் நீரிணை பகுதியைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டால் போதும், மீன்வளம் புத்துயிர் பெறும்என்கிறார் பேரின்பம். முழுமையாக அழிக்கப்பட்டுவிட்ட வனத்தை மீள உருவாக்க நூறாண்டுகள் எடுக்கும். கடல் சூழலியலின் மீண்டெழும் திறன் அற்புதமானது; முழுவதுமாக அழிக்கப்பட்ட கடலை அப்படியே விட்டுவிட்டால் போதும், ஐந்தே ஆண்டுகளில் அதன் வள ஆதாரத்தை முழுமையாக மீட்டெடுத்துவிடும்.

இழுவைமடி, இரட்டைமடி, சுருக்குமடி ஒழிய வேறு சில ஆபத்தான மீன்பிடிமுறைகளும் புழக்கத்தில் உள்ளன. மன்னார்க் கடலில் வெடிவைத்து மீன்பிடிக்கும் வழக்கம் இருப்பதாக சூழலியல் செயல்பாட்டாளர் இராயன் குறிப்பிட்டார் (2008). பாக் கடற்கரைகளில் சில பகுதிகளில்கட்டுவலையைப் பயன்படுத்துகிறார்கள்.

சாதாரண வலைங்க அதுல மாட்டுற மீன மட்டுந்தான் புடிக்கும். லாஞ்சுகாரங்க (விசைப்படகு) நூறு மீனப் புடிக்கிறதுக்கு லட்சம் மீனைக்  கொன்னுடுறாங்க. அதுதான் இழுவைமடியோட வேலை. கடக்கரைல கட்டுவலைன்னு ஒண்ண இழுக்குறாங்க- ரொம்ப மோசமான வலை. இதைத் தடை செய்யணும்னு அதிகாரிங்களுக்கு எத்தனையோ மனுக்கொடுத்துட்டேன்- எந்த நடவடிக்கையும் இல்ல. இன்னின்ன மீன் அழிஞ்சிருக்குன்னு ஒரு பட்டியலே குடுத்திருக்கேன்.’ என்கிறார் காளிதாஸ்.

 

பாலிகீட் புழு அறுவடை

பாக் நீரிணை கடற்கரைப் பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும் உவர்நீர் இறால் பண்ணைகள் லிடோபெனேயஸ் வானமி என்கிற வெளிநாட்டு இறால் குஞ்சுகளை வளர்க்கின்றன. அப் பண்ணைகளில் வளர்ப்பு இறாலுக்கு இரையாக பாலிகீட் கடற்புழுக்களைத் திருட்டுத்தனமாகச் சேகரிக்கின்றனர். கடல்- ஏற்ற-வற்றப் பகுதியின் (intertidal water) உணவுச் சங்கிலியில் பாலிகீட் புழுக்களுக்கு முக்கியமான இடமுண்டு. வலசைப் பறவைகளுக்கு இரையாகவும் மீன்வளத்தைப் பெருக்கும் உயிரின வளமாகவும் இருந்துவரும் பாலிகீட் புழுக்களைச் சேகரித்துச் செல்வதால் மீன்வளம் குறைகிறது என்று உள்ளூர் மீனவர்கள் பலமுறை அரசிடம் புகார் அளித்து ஓய்ந்துபோயினர்; நாளிதழ்கள், வார இதழ்கள் இது குறித்து விரிவாக எழுதின. அரசுத் துறைகள் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை.

 

வற்றும் மீன்வளம்: தீர்வு என்ன?

தொண்டி மீனவர் சுப்பிரமணியன் (59) சொல்கிறார்:

மன்னார் வளைகுடாவிலயும் (பாக்-நீரிணை) கோடியக்கரையிலிருந்து இராமேஸ்வரம் தீவு வரை இருக்கிற கடக்கர அமைப்பு அழகானது. கரையில பொட்டல், அதுக்கு மேல புல்லு (கடற்கோரைகள்), அதுக்குமேல ஜல்லி, அதுக்குமேல மண்ணு, அதுக்குமேல சகதி (சேறு)- இந்த நாலு அமைப்பும் நம்ம வங்காள விரிகுடாவுலதான் இருக்கு... இதுதான் மீன் உற்பத்தியப் பெருக்குது.”

2014இல் தொண்டியில் அவரைச் சந்தித்தபோது பாக் நீரிணையின் மீன்வளத்தைப் பாதுகாக்க ஓர் அருமையான தீர்வைச் சொன்னார்:

இந்தக் கடல்ல எத்தன பேருன்னாலும், என்ன தொழில் வேணுன்னாலும் செய்யலாம், ஆனா இழுவைமடி போட்டு இழுக்கக்கூடாது- அப்படின்னு ஒரு சட்டத்த இந்த அரசாங்கம் கொண்டு வந்துச்சுன்னு வையுங்க, மீனவன்- இனிமே பொறக்கப் போற மீனவன் எல்லாருமே தப்பிச்சுக்கிர்லாம். இன்னும் இழுவைமடிய இழுத்துக்கிட்டே இருந்தா மீனவங்கற இனமே காணாமப் போயிடும்.”

2019இல் காளிதாசைச் சந்தித்து உரையாடியபோது அவர் சொன்னார்-

பாக் ஜலசந்தியோட மீன் உற்பத்தி முழுமையா அத்துப்போச்சு. அதற்கு ஒரு காரணம் இறால் பண்ணைகள்; இறால் பண்ணைய சட்ட விரோதமாத்தான் வச்சிருக்காங்க. இன்னொரு காரணம் இழுவைமடி, ரேஸ்மடி, சுருக்குமடி. கடல் வளத்தை அவங்க அழிச்சிட்டிருக்கிறாங்க. முன்னாடியெல்லாம் மீன் செவல் செவலா (கூட்டங்கள்) வரும், இப்ப அப்படி வர்றதில்லை. கடல்ல மீன் உற்பத்தி குறையிறதப் பத்தி அரசாங்கமும் கவலைப்படல, மீனவர்களுக்கு கவலைப்படத் தெரியல.”

இழுவைமடி விசைப் படகுகள்  கரைக்கடல் மீன்வளத்துக்குப் பெரிய அச்சுறுத்தல். ‘இரண்டு வருடம் அவகாசம் கொடுங்கள், இழுவை மடியைப் படிப்படியாய் நிறுத்திவிடுகிறோம்என்று 2008இல் சொன்ன இராமேஸ்வரம் மீனவர்கள் இன்றும் அதே பல்லவியைத்தான் பாடுகிறார்கள். 2014இல் தீராநதியில் இச்சிக்கல் குறித்து விரிவாய் எழுதியிருக்கிறேன் (கட்டுரை: கொம்பன் சுறாக்களும் மந்திரக்கோலும், தொடர்: மரண வியாபாரிகளின் தீவு). பாக் நீரிணை விசைப்படகுக்காரர்களைக் கேட்டால், எங்களுக்கு வேறு பிழைப்பு இல்லைஎன்கிறார்கள்.

உடனடியாக விசைப்படகுகளின் குதிரைத் திறனைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். அதனுடன்  டிராலிங் செய்யும் நாட்களைக் குறைத்துவிட வேண்டும்என்கிறார் பேரின்பம். 2014இல் சந்தித்தபோது சொன்னார்-

டிராலிங்கை உடனடியாக, ஒட்டுமொத்தமாக நிறுத்திவிடுவது சாத்தியமல்ல. அரசு முனைப்போடு படிப்படியாக மாற்று ஏற்பாடுகளுடன் கையாளவேண்டிய திட்டம் அது. இலங்கை மீனவர்களையும் டிராலிங் செய்ய அனுமதிக்கலாம். சவுதியில் ஆறுமாதம் டிராலிங் அனுமதிக்கிறார்கள், மீதி ஆறு மாதங்களில் கூடு தாழ்த்தலாம், தூண்டில் போடலாம், வலை போடலாம். நமது கடலில் இயங்கும் இழுவைமடிகளில் தூர்மடிக் கண்ணிகளை சிறுமீன்கள்/ குஞ்சுகள் எளிதில் தப்பித்துப் போக வசதியாகப் பெரிதாக்கியாக வேண்டும்; கண்ணிகளின் சாய்சதுர வடிவத்தைச் சதுரமாக ஆக்கவேண்டும். நமது தரப்பில் விசைப்படகுகளின் எண்ணிக்கையைக் குறைத்தாக வேண்டும். தமிழக- இலங்கை மீனவர்கள் மூன்று மூன்று நாட்களைப் பகிர்ந்து கொண்டு தொழில் செய்வது சாத்தியமில்லை. இங்கேயே நாட்டுப் படகுகளும் விசைப்படகுகளும் பெருத்த எண்ணிக்கையில் இருப்பதால் வாரத்தில் நான்கு- மூன்று நாட்கள் என்று பகிர்ந்து கொண்டு கடலுக்குப் போகிறார்கள். இந்தியக் கரைகளில் மூன்று கடல்மைல் எல்லை நாட்டுப்படகு/ கட்டுமர மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது போல அங்கும் விதிமுறைகள் இருக்கின்றன. அந்தக் கட்டுக்கோப்புகளை நமது மீனவர்கள் மதித்தாக வேண்டும்.”

பேரின்பத்தின் குறிப்புடன் மற்றொன்றையும் இணைத்துக் கொள்ள வேண்டும்; தமிழ்நாடு மீன்வள ஒழுங்காற்றுச் சட்டம் (1983) குறித்துள்ளபடி, பாரம்பரிய மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூன்று கடல்மைல் கரைக்கடல் எல்லைக்கு அப்பால் மட்டுமே விசைப்படகுகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

 

தடுமாறும் அரசு நிலைப்பாடு

இழுவைமடி, சுருக்குமடிகளுக்குக் கடந்த ஆண்டில் நீதிமன்றம் தடை விதித்தபோது இயந்திரப் படகு மீனவர்கள் கொந்தளித்தனர். அதில் மீனவர்கள் ஏராளமான பணத்தைக் கூட்டாக முதலீடு செய்திருப்பதாய்த் தெரிவித்தனர். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு தஞ்சாவூர் மீனவர்களைக் கேரளாவுக்கு அழைத்துச் சென்று சுருக்குமடி இயக்குவதற்குப் பயிற்சி அளித்ததை நினைவு கூர்ந்தார் காளிதாஸ் (2018):

சார், தமிழ்நாட்டில் சுருக்குவலைக்குத் தடை விதித்திருக்கிறார்கள், நீங்கள் எங்களுக்கு சுருக்குவலை இழுக்க ட்ரைனிங் கொடுக்கிறீர்களே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?’ என்று எங்களுக்குப் பயிற்சி கொடுத்த அதிகாரியிடம் கேட்டேன். அதிகாரி சமர்த்தாகப் பதில் சொல்கிறார்-  ‘எப்படி மீன் பிடிக்கலாம் என்று காட்டுவதுதான் எங்கள் வேலை, எங்கே போய்ப் பிடிப்பது என்று சொல்வது எங்கள் பிரச்சினை அல்ல’. பாக் ஜலசந்தி மீன் குவிந்து கிடக்கும் கடல். இன்று மீன் என்பதே அங்கு இல்லாமல் போய்விட்டது. சுருக்குவலைக்குத் தடை என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு.”

காளிதாசின் ஆதங்கம் நியாயமானது. ஒருபுறம் பயிற்சி கொடுத்துவிட்டு, மறுபுறம் தடை அறிவிக்கிற அரசை வேறு எப்படிப் புரிந்துகொள்வது?

சுனாமிக்குப் பிறகு, இராமேஸ்வரம் பகுதியில் வெளிநாட்டுக் கடற்பாசியான கப்பாஃபைகஸ் அல்வாரெசீ அறிமுகம் செய்யப்பட்டது. சேதுக் கால்வாயினால் வாழ்வாதாரத்தை இழக்கும் மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதாரமாக இப்பாசி வளர்ப்பு முன்வைக்கப்பட்டது என்பது நகைமுரண். கப்பாஃபைகஸ், அதன்உயிரியல் ஊடுவருவல்’ (bio-invasive) பண்பினால் அப்பகுதியிலுள்ள கடற்புல் படுகைகள்கடற்பாசிகள், பவளப்புற்று இனங்களின் அழிவுக்குக் காரணமாகியுள்ளனஒரு கட்டத்தில் (2007) கப்பாஃபைகஸ் வளர்ப்புத் திட்டத்தை மாநில அரசு கைவிட்டுவிட்டது. ஆனால், கடலில் ஏற்கனவே விதைக்கப்பட்டுவிட்ட அப் பாசியின் பரவலாக்கத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. பேய் மாதிரி வளரும் இனம் அது. புற்றுநோய் செல்களைப் போல, தண்ணீரிலிருக்கும் அத்துணை உயிர்ச்சத்துகளையும் உறிஞ்சியெடுத்துவிடும். சில தவறுகள் சரிசெய்ய முடியாதவை.

பாலுக்குக் காவல், பூனைக்குத் தோழன்என்பது போல, அந்தக்கால அரசுகள் ஒருபுறம் மன்னார்க் குடாவை கடலுயிர்க் கோளமாக அறிவித்துவிட்டு, மறுபுறம் சேதுக்கால்வாய்த் திட்டத்தையும் தொடங்கின.

 

மீன்பிடி தடைக்கால அறிவிப்பு பயன் தந்துள்ளதா?

மீன்பிடி தடைக்காலம் கிழக்குக் கடற்கரைகளின் விவாதத்துக்குரிய சிக்கல்களில் ஒன்று. ‘மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம்என்னும் கருத்தியலின் அடிப்படையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் விசைப்படகு மீன்பிடி தடையை அரசு நடப்பாக்கி வருகிறது. இத்தடையினால் மீன்வளம் பராமரிக்கப்பட்டு வருவதற்கான அறிவியல் அடிப்படை ஏதும் இன்று வரை முன்வைக்கப் படவில்லை. ‘அரசு மீன்வளத்தைப் பாதுகாப்பதாகப் பாவனை செய்கிறதுஎன்று மீனவர்களில் ஒரு தரப்பினர் சொல்கின்றனர்கடலுக்கு நன்னீர் வரத்தைப் பராமரிப்பதிலும், உவர்நீர் இறால் பண்ணைகளைக் கடற்கரைகளிலிருந்து அகற்றுவதிலும் அரசு அக்கறை காட்டவில்லைஎன்கிற மீனவர்களின் குற்றச்சாட்டில் உண்மையுண்டு. கஜாப் புயல் பேரிடருக்குப் பிறகு, 2019 பிப்ரவரியில் தஞ்சாவூர் விசைப்படகு மீனவர் பிரதிநிதி  தாஜுதீனைச் (கள்ளிவயல்தோட்டம்) சந்தித்தபோது மிக முக்கியமான குறிப்புகளைச் சொன்னார்:

தடை செய்யப்பட்ட மடிகளைப் பயன்படுத்துவதால் கடல் மீன்வளம் அழிகிறது என்று உரக்கப் பேசுபவர்கள் பன்னாட்டு மீன்பிடி கப்பல்கள், கடற்கரை இறால் பண்ணைகள், மாசுபடுத்தும் ஆலைகள், குறைந்துவரும் நன்னீர் வரத்து குறித்துப் பேசுவதில்லை. மீன்வளத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் இந்தச் சிக்கல்களுக்கு அரசும் முகம் கொடுப்பதில்லை; மீன்பிடி தடைக்காலம் இந்தியாவில் மட்டும் நடைமுறைப்படுத்தப் படுகிறது. டெல்டாவிலிருந்து கடலுக்குத் தண்ணீர் வந்துசேரும் காலத்தில் நிறைய மீன் உற்பத்தியாகும் என்று மூத்த மீனவர்கள் சொல்கிறார்கள். இந்த அறிவியல் உண்மையை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மீனவர்களோடு யாரும் கலந்தாலோசிப்பதும் இல்லை. கிழக்கு கடற்கரை முழுவதும் வனங்களை அழித்து இறால் பண்ணைகள் அமைக்க அரசு உடந்தை.”

 

கடலுயிர்க் கோளத் திட்டம் என்னவாயிற்று?

 மன்னார் வளைகுடாவின் 10500.கி.மீ. பரப்பு  ஏறாத்தாழ இரண்டு பதிற்றாண்டுகளுக்கு முன்னால் மன்னார் வளைகுடா கடலுயிர்க் கோளம் (Gulf of Mannar Marine Biosphere Reserve - GOMMBR) அறிவிக்கப்பட்டது. இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் 365 கி.மி. நீளக் கடற்கரைகளை உள்ளடக்கிய மன்னார் வளைகுடாவில் 21 சிறு தீவுகள் தவிர, பவளப்பாறைகள், கடற்புல் படுகைகள், அலையாத்திகள் உள்ளிட்ட பல்வேறு சூழலியல் கட்டமைவுகள் அமைந்துள்ளன. இங்கு 3600க்கு மேற்பட்ட தாவர, விலங்கு இனங்கள் இருந்தன. உலகின் பல்லுயிர்ச்செறிவு மிகுந்த கடல்களில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்த இப்பகுதி, கடுமையான சூழலியல் நெருக்கடிகளினால் அப்பெருமையை இழந்து நிற்கிறது. தூத்துக்குடி, இராமநாதபுரம் கடற்கரைகளை 2004 சுனாமியின் தாக்குதலிலிருந்து தப்புவித்த அதன் பவளப்பாறைகள் சேதுக்கால்வாய்த் திட்டம் தொடங்கப்பட்டபோது சிதைவுக்கு உள்ளானது.

 

எகிறும் வெப்பநிலை, உயரும் கடல் மட்டம்

பருவநிலை மாற்றம், உலகக் கடல்களின் பல்லுயிர்த் தொகையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக, உலகெங்குமுள்ள பவளப் பாறைகளுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் அழிவின் முத்தாய்ப்பாக, அவைகள் நிறம் மங்கி வருகின்றன. மன்னார், பாக் கடல்களைப் பொறுத்தவரை, அவற்றின் பல்லுயிர்ச்செறிவின் முக்கிய காரணிகள் அலையாத்தி, கடற்புற்கள் மற்றும் பவளப் பாறைகளாகும்பவளப் பாறைத் தொகுதிகளின் காரணமாகவே இங்கு மிகுதியான மீனினங்கள் இருந்தன. இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது.

கடல் மட்ட உயர்வு காரணமாக கடல்நீர் உள்ளேறிக் கொண்டிருக்கும் சூழலில், கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீரின் உவர்தன்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வட தமிழகக் கடற்கரைகளைப் போன்றே, தஞ்சாவூர், புதுக்கோட்டைக் கடற்கரைகளிலும் உவர்நீர் இறால் பண்ணைகளின் பெருக்கத்தினால் நன்னீர்ப் பற்றாக்குறை தீவிரப்பட்டிருக்கிறது.

 

பாக் விசைப் படகுகளுக்கும் மாற்று ஏற்பாடு

பாக் நீரிணை பகுதியில் இப்படி, பலதரப்பினரின் தவறான அணுகுமுறைகளால்  மீன்வள நெருக்கடி முற்றி வருகிறது. மன்னார்க் கடலின் சூழலியலைக் காப்பாற்றுவதற்கும் இலங்கை-இந்திய மீனவர் மோதலுக்குத் தீர்வு பெறுவதற்கும் ஒரே தீர்வு- விசைப்படகுகளைத் தொழிநுட்ப மேம்பாடு செய்து ஆழ்கடலில் வலை, தூண்டில் மீன்பிடித்தலுக்கு அனுப்புவதுதான் என்று மேற்சொன்ன கட்டுரைகளில் எழுதி வந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசு இராமேசுவரம் இழுவைமடி விசைப்படகு மீனவர்களுக்கு மாற்று வாய்ப்பாக ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தொடக்க நிலையில் ஏறத்தாழ 50 படகுகளை வழங்கியிருப்பதாய்த் தகவல். 

வலை, நெடுந்தூண்டில் மீன்பிடித்தலுக்காகத் தனித்துவமாய் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் படகு சாட்டிலைட் தொலைபேசி உட்பட முழுமையான தகவல் தொடர்பு, அடிப்படைப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. 74 அடி படகு என்றாலும் MMD என்கிற கடல் வணிகத் துறையின் ஒழுங்குமுறைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது இன்னொரு நற்செய்தி. கடல்நீரிலிருந்து பனிக்கட்டி தயாரிக்கும் இயந்திரம், கழிப்பறை, படுக்கையறை, எஞ்சின் அறை, டீசல் டாங்க், நன்னீர் டாங்க், மீன் சேமிப்பு அறையுடன் விளையாட்டுத் தளம் போல் விசாலமான டெக், இன்னும் பல வசதிகள். வழிச்சுமையில் பனிக்கட்டியைத் தவிர்க்க முடிந்ததில் படகின் எடையில் பாதி குறைய வாய்ப்புண்டு; சற்று அதிகமான வேகம் பயண நாட்களையும் எரிபொருள் செலவையும் குறைக்கும். இந்த இயந்திரத்தில் அவசரத் தேவைக்கு நன்னீர் எடுத்துக் கொள்ளவும் முடியும். மேற்குக் கடலில் 200 கடல்மைல் வரை சாட்டிலைட் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடிவதாக அங்குள்ள மீனவர்கள் சொல்கிறார்கள். இந்தப் படகுகளில் இராமேசுவரம் மீனவர்கள் கிழக்குக் கடலில் 120 கடல் மைல்வரை போய் வலைத் தொழில் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். நெடுந்துண்டில் தொழிலுக்குப் போவதென்றால் வேணாட்டு மீனவர்களை அழைத்துக் கொண்டு போகிறார்கள். அவற்றில் சில படகுகள் அரபிக்கடல் பகுதிக்கும் வருகின்றன. இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவதோடு, பாக் நீரிணை விசைப்படகுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்தில் இழுவைமடிகளை ஒட்டுமொத்தமாக மன்னார், பாக் கடல்களிலிருந்து ஒழித்தாக வேண்டும்.

 

கடலின் பயனாளிகள், பங்காளிகள்

கடல் சூழலியல், பருவநிலை மாற்றம், புரத உணவு உத்தரவாதம், மீனவர் வாழ்வாதார உத்தரவாதம் என்பதான நான்கு கூறுகளைக் குறித்தும் பல தரப்பினரும் கரிசனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நான்கும் செம்மையாய் இயங்குவதற்குச் சிறந்த வழி, அவற்றை இணைத்து அணுகுவதுதான்.

இறால் பண்ணைகளை மூட நேர்ந்தால் முதலாளிகள் வேறு தொழிலைப் பார்த்துப் போய்விடுவார்கள். மீன்பிடி கப்பல்களைத் தடை செய்ய நேருமெனில் அத் தரப்பினரும் வேறு வருவாயைத் தேடிப்போவார்கள். கடந்த காலங்களில் அவர்கள் அதைத்தான் செய்திருக்கிறார்கள். இலாபம் ஒழிய வேறெதுவும் அவர்களுக்குப் பொருட்டில்லை. பாரம்பரிய மீனவர்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்- விவசாயிகளைப் போல, அவர்களுக்கு வேறு போக்கிடமில்லை. கடலின் பயனாளிகளும் பங்காளிகளும் பராமரிப்பாளர்களும் அவர்கள். இந்த எதார்த்தத்தை அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும். திட்டங்கள் எதுவாயினும், அம்மக்களின் ஒப்புதலும் பங்கேற்பும் கிடைத்தால் சரியாக இருந்திருக்கும். ஐநாவின் உலக வேளாண் கழகம்பொறுப்பார்ந்த மீன்வள நடத்தை விதிகள்’ (FAO - CCRF 2009) என்கிற முக்கியமான ஆவணம், ‘கடல்வள மேலாண்மையில் பாரம்பரிய மீனவர்களின் நேரடிப் பங்கேற்பை அரசுகள் உறுதி செய்துகொள்ள வேண்டும்என வலியுறுத்துகிறது. இந்தியா இந்த ஆவணத்திலும் கையெழுத்திட்டுள்ளது.

 

சில கேள்விகள்

மன்னார்க் கடலுயிர்க் கோளத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகும் அக்கடல் அழிவைச் சந்தித்தது ஏன்? அது திட்டத்தின் பிழையா, நடப்பாக்கப் பட்ட முறையின் பிழையா? அல்லது, சார்ந்த துறைகள்/ பங்காளிகள் ஒருங்கிணைக்கப் படாததன் பிழையா? பலகோடிகள் செலவிட்டு நடப்பாக்கப்பட்ட அத் திட்டம் காகிதப் புலிதான் என்றால், பாக் நீரிணையில் கடற்பசு சேமப் பகுதி அறிவிப்பினால் மட்டும் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?

இது போன்ற கேள்விகளைக் கொள்கை வகுப்பவர்கள் எழுப்பிக் கொள்வதுதான் ஆரோக்கியமான அணுகுமுறையின் தொடக்கமாக இருக்கும்.

கடற்கரைகளில் அமைக்கப்படும் அனல்மின் நிலையங்களின் சாம்பல், அமிலக் கழிவுகள் பாக் கடல் சூழலியலுக்கு அச்சுறுத்தலாகிறது;  உவர்நீர் இறால் பண்ணைகளின் சட்ட மீறலான நடவடிக்கைகளை முந்தைய ஆட்சியாளர்கள் கட்டுக்குள் கொண்டுவரவில்லை. உவர்நீர் இறால் வளர்ப்பை மேலும் மேலும் விரிவாக்கும் முயற்சிகளே ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இப்போதைய தேவை- கடல் சூழலியலைக் காக்கும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள். முக்கியமாக, கடல் சார் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்பாடுகளில் அரசு கவனம் கொள்ள வேண்டும்

(கட்டுரையாளர் கடல் சூழலியல் ஆய்வாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: vareeth2021@gmail.com)

Revised: 101022

 

 

 

 


விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...